— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
“இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
1973ஆம் ஆண்டு!
களுவாஞ்சிகுடியின் கலை வரலாற்றில் மட்டுமன்றி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கலை வரலாற்றிலும் ஒரு மைல் கல்லைப் பதித்த வருடம் அது.
இளம் நாடக மன்றத்தின் நாடகங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிகவும் செல்வாக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியதன் காரணமாக, ஏன் நாம் ஒரு நாடக விழாவை நடாத்தக்கூடாது என்கின்ற சிந்தனை என் மனதில் உதித்தது. குறிப்பாக, என்னோடு எப்போதுமே உடல் இரண்டு உயிர் ஒன்றாகப் பழகியவனும், எனது மைத்துனன் முறையானவனுமான சா.ஸ்ரீஸ்கந்தராசாவுடன் (கறுத்த ஸ்ரீ) என் எண்ணத்தைப் பகிர்ந்தேன். நண்பர்களைக் கலந்தாலோசித்தேன். அதன் விளைவாக, இளம் நாடக மன்றத்தின் கூட்டத்தில் “மாபெரும் நாடக விழா” ஒன்றினை நடாத்துவதென்று தீர்மானம் எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து மன்றத்தின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் எறும்பைவிடச் சுறுசுறுப்பாக கால நேரம் பார்க்காமல் உழைத்தார்கள்.
நாடகங்களை மட்டுமன்றி அவர்களையும் நெறிப்படுத்துவது எனது முழு நேர வேலையாயிற்று. மட்டக்களப்பு கச்சேரியில், ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஓர் எழுதுவினைஞராக அரசாங்க உத்தியோகத்தில் இருந்த எனக்கு, உத்தியோகம் பகுதிநேர வேலையாகவும், நாடக விழா முழுநேர வேலையாகவும் இருந்தது. இருந்தது என்று சொல்வதை விட, அப்படி நான் ஆக்கிக்கொண்டேன் என்பதே பொருத்தம்.
இப்போது உள்ளதைப்போல ஊருக்கு ஊர், கலாசார மண்டபங்களோ, கல்யாண மண்டபங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. இப்பகுதியில் பாடசாலைகளில் கூட மேடையுடன் கூடிய பிரார்த்தனை மண்டபங்கள் இருந்ததில்லை. ஆனானப்பட்ட, பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலும் கூட, சிதைந்து கிடந்த சின்னதொரு மேடையுடன் திறந்தபடியான மண்டபம்தான் ஒன்று இருந்தது. அதனால் திறந்த வெளியில் அரங்கினை அமைத்துத்தான் விழாக்கள் நடாத்தப்பட்டன.
ஒரு பெரிய நாடக விழாவை நடாத்துவததென்றால் மிகுந்த பணச்செலவு ஏற்படும். திறந்த வெளியில் இலவசமாக நடாத்தினால் செலவை ஈடுகட்ட முடியாது. எனவே அனுமதிக் கட்டணச் சீட்டுக்களை விநியோகிப்பதுதான் சிறந்த வழி என்று முடிவெடுத்தோம். அதிலும் ஒரு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. அனுமதிக்கட்டணம் வசூலிக்கப்பட்டால் திறந்த வெளியில் நடாத்த முடியாது. கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் அனுமதிக்கப்படத்தக்க விதமாக தற்காலிக கொட்டகையினை அல்லது சுற்றிவர மறைப்புத் தடுப்பு வேலிகளை அமைக்கவேண்டும். இப்படியான விடயங்களையும், அவற்றுக்கான செயற் திட்டங்களையும் அன்றாடம் அலசி ஆராய்ந்துகொண்டே நாடக விழாவுக்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.
பல்வேறு நிர்வாக ஒழுங்குகளுடன், நாடகங்களைப் பயிற்றுவிக்கும் பணியிலும், நாடக விழாவை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளிலும் எனது நெறிப்படுத்துதலின் கீழ் பல குழுக்கள் இயங்கின. இளம் நாடக மன்றத்தின் பொருளாளர், கு.ஜெ.அருள்ராஜா, அனுமதிச் சீட்டுக்களை உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க, உறுப்பினர்கள் ஐந்து குழுக்களாக அவற்றைப் பட்டிருப்புத் தொகுதி முழுவதும் சென்று விற்பனையில் ஈடுபட்டனர். ஒப்பனை, அரங்க நிர்மாணம், காட்சியமைப்பு என்பவற்றை (சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அமரரான) சா.கருணானந்தன் தலைமையில் ஒரு குழு கவனித்துக்கொண்டது.
நந்திவர்மன் காதலி என்ற வரலாற்றுக் கதையை நாடகமாக நடிப்பது நல்லதென சா.ஸ்ரீஸ்கந்தராசா முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான வசனங்களை முன்னாள் அதிபர், பண்டிதர் அமரர் க. கந்தையா சேர் எழுதியதுடன், நெறியாள்கை மேற்பார்வையினையும் செய்தார்.
இளம் நாடக மன்றத்தின் மிகப் பிரபல்யமானதும், இன்றுவரை பேசப்படுவதுமான ‘கற்பனையில் தேவலோகம்” நாடகமும் விழாவில் இடம்பெற வேண்டுமென்ற உறுப்பினர்களின் விருப்பமும் நடை முறைப்படுத்தப்பட்டது. நகைச்சுவை கலந்ததும், சமூகத்திற்கான படிப்பினைகள் நிரம்பப்பெற்றதுமான அந்த நாடகத்துடன், இன்னும் ஒரு நகைச்சுவை நாடகத்தையும் அரங்கேற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறவே, “தம்பியாடி இது” என்ற நாடகத்தை நான் எழுதினேன். அதன் பிரதான பாத்திரத்திற்கு அதுவரை மேடையேறியிராத புதுமுக நடிகரான செல்லமாணிக்கம் அருளானந்தத்தைத் தெரிவு செய்தேன். அவர் நந்திவர்மன் காதலி நாடகத்திலும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார். அந்தநாடகத்தினை நாங்கள் பழகிக்கொண்டிருக்கும்போது அவரிடம் இருந்த நகைச்சுவை உணர்வினையும், திறமையையும் இனம்கண்டு கொண்டமைதான் அவருக்குத் “தம்பியாடி இது?” நாடகத்தின் முக்கிய பாத்திரத்தினைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருந்தது.
நாடகங்களில் காட்சி மாற்றங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய இடைவேளை, விழாவின் விறுவிறுப்பைத் தொய்யவிடுவதைத் தவிர்ப்பதற்காக எங்கள் இளம் இசைக்குழுவின் மூலம் ஓர் இசை நிகழ்ச்சியினையும் ஒழுங்கு செய்திருந்தோம். க.கிருபைராஜா, க.ஞானசிங்கராசா, ம.கங்காதரன், இ.கீர்த்தி, வ.சோமசுந்தரம், குமார் முதலியோர் நாடக விழாவில் இடம்பெற்ற அந்த இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்.
பெண்கள் நாடகங்களில் நடிப்பது அந்தக்காலத்தில் அபூர்வமான விடயம். ஆண்களே பெண் வேடங்களில் நடிப்பார்கள். எங்கள் இளம் நாடகமன்றத்தில் கவர்ச்சியான, மிகச்சிறந்த பெண் பாத்திர நடிகராக ந.கருணானந்தராசா விளங்கினார். மற்றும் கி.மகாதேவன், அ. நித்தியரூபன் ஜேம்ஸ், ஜீவா ஆகியோரும் அசல் பெண்கள் போலவே பெண் பாத்திரமேற்கும் திறமையான நடிகர்களாக இருந்தார்கள். ஆனால், நாடகவிழாவில் மேடையேற்றப்படும் நாடகங்களில் பெண் பாத்திரங்களுக்குப் பெண்களே நடிக்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நந்திவர்மன் காதலி நாடகத்தில் அதனை முழுமையாகச் செயற்படுத்தினோம். அதற்காக ஊரிலுள்ள பெண்களில் பாத்திரப் பொருத்தமுள்ள சிலரை அணுகினோம். அப்போது ரமணி அக்கா நந்திவர்மனின் மனைவியாக நடிப்பதற்கு இணங்கினார். ஆனால், தந்தையாரிடம் சம்மதம் பெறுவது எங்கள் பொறுப்பு என்று கூறினார். ரமணி அக்காவின் தந்தை யார்? தமிழரசுக்கட்சித் தலைவரும், அப்போதைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சீ.மூ.இராசாமாணிக்கம் அவர்கள். அவரிடம் எப்படிக்கேட்பது? அவரிடம் மட்டற்ற மதிப்பு வைத்திருந்த எனக்கு இந்தவிடயத்தைக் கேட்பதற்குச் சற்று அச்சமாகத்தான் இருந்தது. அதேவேளை அவருக்கு என்னில் அன்பும், நல்ல அபிப்பிராயமும் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் தயங்காமல் கேட்கும் தைரியம் வந்தது,
நண்பர்கள் இருவரைக் கூட்டிக்கொண்டு அவரிடம் சென்று, மிகவும் பெளவியமாக விடயத்தை எடுத்து விட்டேன். உடனே அவர் பலத்துச் சிரித்தார். சிரித்துக்கொண்டே, “ஸ்ரீ, உங்கட நாடகங்களுக்கு இருக்கிற நல்ல பெயரைக் கெடுக்கப் போறீங்களா? அவளுக்கு எங்க நடிக்கத் தெரியும்? அவள் நல்லா நடிக்க மாட்டாள்” என்றார்.
ஆனால் இறுதியில் தன் இசைவைத்தந்தார். நந்திவர்மனுக்கு மனைவியைத் தவிர ஒரு காதலியும் இருந்தாள். அந்தக் காதலி பாத்திரத்திற்கு, வ. புஸ்பராணியை (குளோறி) அவளின் தாயாரின் சம்மதம் பெற்று நடிக்க வைத்தோம். இன்னுமொரு பெண்பாத்திரமான நந்திவர்மனின் மனைவியின் தோழியாக க.கமலாவை நடிக்க வைக்க, ஜெயராஜா (போதகர்) அண்ணன் மூலமாக பெற்றோரின் அனுமதியைப் பெற்றோம்.
இந்த நாடகத்தில் ஆண் கதாபாத்திரங்களில், நந்திவர்மனாக நானும், தளபதியாக பா.அரங்கநாதன், நந்திவர்மனின் எதிரிகளான நான்கு சகோதரர்களாக மு.புலேந்திரன், சா.ஸ்ரீஸ்கந்தராசா, கு.ஜெ.அருள்ராசா, செ.அருளானந்தம் ஆகியோரும், நந்திவர்மனின் மகனாக க.சுரேந்திரனும் (வவி) பாத்திரங்களை ஏற்றிருந்தோம். குருக்கள் மடத்தைச் சேர்ந்த மா.ராதா இந்த நாடகத்தில் அரசவைக் காட்சியில் ஒரு நடனம் ஆடினார்.
நந்திவர்மன் காதலி ஒரு வரலாற்று நாடகம். நந்திவர்மன் என்ற மன்னன் தமிழ் மொழியில் தன் உயிரினும் மேலாகப் பற்று வைத்திருந்தவன். அவனின் உண்மையான காதலி தமிழ்தான். தமிழுக்காக அவன் தன் உயிரையே கொடுத்தவன்.
அரசவைக் காட்சிகள் இடம்பெறும், வரலாற்று நாடகங்களுக்குத் தேவையான மேடை அலங்காரங்களுக்குப் பொருத்தமான அழகான வண்ணத்திரைச் சீலைகளை வாடகைக்கு எடுக்கக்கூடிய இடம் ஒன்று ஆரையம்பதியில் இருந்தது. ஒரு பெரியவர், கலைஞர் ஊதியத்தை நோக்கமாகக் கொள்ளாமல் கலைச் சேவை புரிந்துவந்தவர் தனது வீட்டில், படுதாக்கள் எனப்படும் அத்தகைய திரைச்சீலைகளை வைத்திருந்தார். அவற்றில் எங்களுக்குத் தேவையான சிலவற்றைத் தெரிந்தெடுத்துக்கொண்டோம்.
பாடசாலையின் விசாலமான விளையாட்டு மைதானத்தைச் சுற்றவர நான்கு பக்கங்களையும் மறைத்து அடைத்து, வெளியரங்கை உள்ளரங்காக மாற்றுவதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்குகள் தேவைப்பட்டன. வயலில் சூடு வைப்பதற்கும், கதிர் தூற்றுவதற்கும், நெல்லைக் காயவைப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும் விசாலமான படங்குகள் பெரும்பாலும் போடியார்களிடம் இருக்கும். எங்கள் வீட்டிலும் அப்பப்பாவிடம் நான்கு படங்குகள் இருந்தன. பக்கத்து ஊர்களில் எல்லாம் அவ்வாறான படங்குகள் உள்ள இடங்களை உசாவி அறிந்துகொண்டோம்.
குருக்கள்மடம், பழுகாமம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, மண்டூர், கொக்கட்டிச்சோலை முதலிய இடங்களில் இருந்த அந்தப் படங்குகளைக் கொண்டுவந்து சேர்த்தோம். அவற்றையும் அவற்றுக்காக நடப்படவேண்டிய தென்னை மற்றும் பனம் கைமரங்களையும் கொண்டுவருவது, அரங்கினை அமைப்பது பின்னர் மீண்டும் அவற்றை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைப்பது ஆகியவற்றைத் இளம் நாடக மன்றத்தின் தனியொரு குழு செயற்படுத்தியது.
நாடக விழாவுக்கு இராசமாணிக்கம் அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார். முன்வரிசையில் அமர்ந்து இறுதிவரை கண்டு களித்தார். இப்போதெல்லாம் நடைபெறுவதைப்போல பத்துப் பதினைந்து பேரை மேடையில் ஏற்றவும் இல்லை. மாலை மரியாதை செய்யவும் இல்லை. வீணாக நேரத்தை விரையமாக்கவும் இல்லை. அது எங்கள் கொள்கையாக இருந்தது என்பது மட்டுமன்றி, ஆகக்குறைந்ததாக இராசமாணிக்கம் அவர்களுக்காவது மாலை அணிவித்து வரவேற்றிருக்கலாம் என்று ஒரு விதிவிலக்கைக்கூட நாங்கள் கைக்கொள்ளாமைக்கு வேறொரு காரணம் இருந்தது. அடுத்த அத்தியாயத்தில் அதனைப்பற்றிய குறிப்பு வரும்.
எமது வேண்டுகோளுக்கிணங்க, தலைவர் இராசமாணிக்கம் அவர்கள் முதலாவது அனுமதிச் சீட்டைக் கிழித்துப் பார்வையாளரை உள்ளே அனுமதித்து, விழா அரங்கைத் திறந்து வைத்தார்.
அந்த நாடகவிழாவை நடாத்தியது ஒரு வரலாற்றுச் சாதனை என்றே சொல்லவேண்டும்.
நந்திவர்மன் காதலி நாடகத்தில் இறுதிக்காட்சியில் பாடையில் நந்திவர்மன் (நான்) படுக்கிறான். காடவன் நூறாவது பாடலைப் பாடுகிறான். பாடல் முடியத் திடீரென்று பாடையில் தீ மூண்டு பற்றியெழுகிறது. நந்திவர்மன் அந்த தீயில் எரிந்து மாள்கிறான். இந்தக் காட்சி தத்ரூபமாக அமைவதற்காக பாதியாகப் பிளந்த தென்னம் பாளைகளில் பெற்றோலை ஊற்றி, அவற்றை நந்திவர்மன் படுக்கும் பாடைக்கு பக்கத்தில் பார்வையாளர் பக்கம் வைத்திருந்தோம் உரிய நேரத்தில் யாரும் பார்க்க முடியாதவாறு அதற்கு நெருப்பிட ஒருவருக்குப் பயிற்சியளித்து வைத்திருந்தோம். கடைசிப்பாடல் முடிந்ததும் கச்சிதமாக நெருப்பு எழுந்தது, காட்சி சிறந்தது. பார்வையாளர்களின் எதிரலைகளில் நாடகத்தில் அவர்கள் மனமொன்றி இரசித்தமை தெரிந்தது.
ஆனால்…. நந்திவர்மன் எரிவதைக் காட்ட நாங்கள் வைத்த அந்த நெருப்பு எழுந்த வேளையிலே…… மேடையின் பின்னால் நின்றிருந்த பனை மரத்தின் உச்சியும் பற்றி எரிந்தது. ஒருகணம் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அது காட்சிச் சிறப்பிற்காக நாங்கள் செய்த வேலை என்று நினைத்தார்கள். சிலர் எங்களின் நாடக உத்தியாக எண்ணிப் பாராடியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலர் அது ஒரு முட்டாள்தனம் என்றும், அபாயமான அந்த வேலையை ஏன் நாங்கள் மேற்கொண்டோம் என்று, அக்கறையோடு விமர்சித்தார்கள் என்றும் பின்னர் எங்களுக்குத் தெரிய வந்தது.
ஆனால்…. பனைமரத்தில் நாங்கள் தீ மூட்ட வில்லை. அது எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? யார் மூட்டிய தீ, அது?
அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
(நினைவுகள் தொடரும்)