— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் வட்டாரங்களில் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம், அதனால் உருவான மாகாணசபை முறைமை பற்றியதோர் அருட்டுணர்வு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய இலங்கை அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும் மாகாணசபை முறைமையும் நீக்கப்பட்டு விடுமோ என்ற அங்கலாய்ப்புதான் அதற்குக் காரணம்.
இந்தக் கட்டத்தில், பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் வருவதற்குக் காரணமாயிருந்த இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இலங்கைத் தமிழர் தரப்பு எவ்வாறு கையாண்டது/கையாள்கிறது என்பதை மீள்பார்வை செய்வது பொருத்தமானது.
இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் அனுசரித்துப் போவதாகப் போக்குக் காட்டிவிட்டுப் பின்னர் அதனை எதிர்த்தமையும், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கைக்கு வந்து வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையினர் மீது போர் தொடுத்தமையும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஆர்.பிரேமதாச அரசாங்கத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு வரதராஜப் பெருமாளை முதலமைச்சராகக் கொண்ட வடக்கு கிழக்கு (இணைந்த) மாகாண அரசின் நிர்வாகத்தைக் குழப்பி இறுதியில் அதனைக் கலைக்க வைத்தமையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த பாரிய அரசியல் தவறுகளாகும்.
மட்டுமல்லாமல், இந்தியாவை இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாகக் கொள்ள வேண்டுமேயொழிய அதனைப் பகைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொலை செய்தமையும், இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்து அதன் அமுலாக்கலுக்குப் பங்களித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவர்களைச் சார்ந்த தோழர்கள் சிலரையும் சென்னையில் வைத்துப் படுகொலை செய்தமையும், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையெழுத்திட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தமிழ்நாட்டில் வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திக் கொலை செய்தமையும் புலிகள் புரிந்த விவேகமற்ற நடவடிக்கைகளாகும். இந்த நடவடிக்கைகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்விதமான நன்மையும் விளையவில்லை. எதிர்மறையான விளைவுகளே ஏற்பட்டன.
அமிர்தலிங்கம் அவர்களின் கொலை மரணத்திற்குப் பின்னர் காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் தலைமையிலான அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளாது புலிகளின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளைப் புதினம் பார்த்துக்கொண்டிருந்தமை புலிகள் விட்ட அரசியல் தவறுகளை விடப் பாரிய அரசியல் தவறாகும்.
தமிழர் தரப்பு (புலிகள் உட்பட) முழுமையாக இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போயிருந்தால் இப்போது குறைந்தபட்சம் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக இணைக்கப்பட்ட ஓர் ஒற்றை மொழி வாரி மாகாண அரசு நடைமுறையிலிருந்திருக்கும். வேறு சமூக பொருளாதார நன்மைகளையும் தமிழர்கள் அடைந்திருப்பார்கள். முள்ளிவாய்க்கால் அழிவு உட்பட பல பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையும் ஏற்பட்டிருக்கமாட்டாது.
அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது தமிழர் தரப்பு. அதுதான் போகட்டும். அதன் பின்னர் வந்த காலங்களிலாவது அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான காத்திரமான அரசியல் நடவடிக்கைகளைத் தமிழர் தரப்பு அதாவது தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் மேற்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை. கடந்த முப்பது வருட காலம் அழிவுகளுடனேயே தமிழர் தரப்பு காலத்தைக் கடத்தியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பும் ஆயுதமேந்திய புலிகள் ஒரு புறமிருக்க, தமிழர்களின் அரசியல் தலைமைகளான அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பின்னர் வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்த இரண்டு கூட்டமைப்பினதும் தலைமைக் கட்சியாக இருந்து ஆதிக்கம் செலுத்திய தமிழரசுக்கட்சிக்குமே உரியதாகும்.
இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாக விளங்கிய–நேச சக்தியாகவே எப்போதும் வைத்திருக்க வேண்டிய இந்தியாவைப் பகைத்துக் கொண்டது தமிழர் தரப்பின் பொறுப்பற்ற– விவேகமற்ற– புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ளாத தன்மையாகும். ஆனால், பல பட்டறிவுகளின் பின்னரும்கூட இலங்கைத் தமிழர் அரசியலில் இப்போது என்ன நடக்கிறது.
தற்காலத் தமிழ் அரசியலில் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தமிழ் ஊடகங்களால் குறிசுடப்பட்டுள்ள மூன்று அரசியல் கட்சிகள்தான் முக்கியமாகப் பங்கேற்றுச் செயற்படுகின்றன அவையாவன :
இரா. சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்).
இவற்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது ‘இரு தேசங்கள்; ஒரு நாடு’ எனும் கொள்கையை வரித்துக் கொண்டுள்ளது. அப்படியானால் தமிழீழத் தனி நாடுதான் இக்கட்சியின் இலக்கு என்றாகிறது. புலிகளைப் பகிரங்கமாக ஆதரிக்கும் கட்சி இது. எப்போதும் இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
அடுத்ததாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை எடுத்துக் கொண்டால் ‘வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி’ தான் தனது கொள்கையென வெளிப்படுத்தியுள்ளது. ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக நிராகரிக்கும் கட்சி இது. இக் கட்சியும் புலிகளை ஆதரிக்கும் கட்சி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்று இந்தியாவைத் தீவிரமாக எதிர்க்காவிட்டாலும், இந்தியாவை விமர்சிக்கின்ற– இந்தியா தவறு எனக் கூறுகின்ற கட்சியாகதான் இது உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் தலைமைக் கட்சியாக விளங்கும் தமிழரசுக்கட்சி ஒப்பீட்டளவில் ஏனைய இரு கட்சிகளான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை விடவும் பாராளுமன்ற அரசியலில் அதிக காலம் ஊறிப் போய்விட்ட காரணத்தால், அதன் இலக்கு ‘தனிநாடு’ தான் என்றோ அல்லது ‘சமஸ்டி’ தான் என்றோ வரையறுத்துக் கூறாமல் ‘பிளவுபடாத அல்லது ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான கௌரவமான ஒரு தீர்வு’ என்ற சொல்லாடல் மூலம் சரியோ? பிழையோ?ஒரு உறுதியான- தெளிவான- திட்டவட்டமான தீர்வினை முன்வைக்காமல் ஒரு வழுவழுப்பான-பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி பிழைத்துக் கொள்கின்ற ‘விலாங்கு மீன்’ போக்கையே தனது அரசியல் செல்நெறியாக வைத்துக் கொண்டிருக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோரைப் போல் புலிகளைப் பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாகப் புலிகளையே ஆதரிக்கிறது. புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பகிரங்கமான ஒன்று.
அன்றியும், 2001 இல் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதுடன், 2004 பாராளுமன்றத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப் புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்” என்ற வாசகங்களையும் உள்ளடக்கிய கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரா. சம்பந்தன் அவர்களின் பெயர் இல்லையென்றாலும் கூட, 2001இல் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் 22.10.2001 திகதியிட்டு ஊடகங்களுக்குக் கூட்டமைப்புச் சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கிய இரா. சம்பந்தன் அவர்களும் கையெழுத்திட்டுள்ளார். எனவே இடையில் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லையென்ற இரா. சம்பந்தன் அவர்களின் கூற்று பொய்யானதாகும்.
புலிகளை ஆதரிக்கும் இம் மூன்று ‘தமிழ்த் தேசியக் கட்சி’ களும் உளப்பூர்வமாகப் புலிகளை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது மாற்றுக் கட்சிகளைத் தேர்தலில் தோற்கடிப்பதற்கான தேர்தல் தேவைகளுக்காகப் பாசாங்கு காட்டுகிறார்களா அல்லது புலம்பெயர் புலிசார் அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ‘சன்மானம்’களுக்காகவேண்டிக் கூலிக்கு மாரடிக்கிறார்களா என்ற சந்தேகங்களும் இக்கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களிடையேயும் நிலவாமலில்லை.
எது எப்படி இருப்பினும். இந்த மூன்று கட்சிகளையும் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் புலிகளின் முகவர்களாக அல்லது புலிகளின் பதிலிகளாகத்தான் பார்க்கின்றன. இது சரியா? பிழையா? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கப்பால் இதுதான் இன்றைய யதார்த்தம். எதிர்ப்பதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும்கூட இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுடையவை என்ற யதார்த்தத்தை இன்றைய அரசியல் சூழலில் தமிழர் தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் ஆய்வு நோக்கில் இம்மூன்று கட்சிகளையும் கூட்டாகச் சேர்த்து ‘முதலாவது அணி’ என வைத்துக்கொள்வோம்.
அரசியல் கோட்பாட்டு ரீதியாகவும்- நடைமுறையிலும் புலிகளுக்கு எதிரானதும், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையும் மாகாண சபை முறைமையையும் உளப்பூர்வமாக அனுசரித்துச் செயற்படுகின்றதுமான அரசியல் கட்சிகளாகப் புலிசார் ஊடகங்களால் ‘துரோகிகள்’ பட்டம் சூட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை செயலாளர் நாயகமாகக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும், கலாநிதி.கா. விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபையும், சிவநேசதுரை சந்திரகாந்தனைத் (பிள்ளையான்) தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மற்றும் சிறிதரனை(சுகு)த் தலைவராகவும் வரதராஜ பெருமாளைச் செயலாளர் நாயகமாகவும் கொண்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் உள்ளன. இந்தக் கட்சிகள் சேர்ந்த அணியை ‘இரண்டாவது அணி’ என வைத்துக்கொள்வோம். இந்த இரண்டாவது அணியுடன் வேண்டுமானால் வெளியே நிற்கின்ற, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இந்திய அரசியலமைப்பு மாதிரியையே எப்போதும் வலியுறுத்தும் வீ.ஆனந்தசங்கரி அவர்களைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட தற்காலத்து தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புதிதாகப் பதிவு செய்யப் பெற்றுள்ள சந்திரகுமாரைச் செயலாளராகக் கொண்ட சமத்துவக் கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாகக் கூறப்போனால் நடைமுறையில் இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் இரண்டு பிரதான அணிகள்தான் உள்ளன. ஒன்று இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் பதின்மூன்றாவது அரசியல் சட்ட திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையும் மாகாணசபை முறைமையும் உளப்பூர்வமாக அனுசரித்துப் போகாத (முதலாவது அணி) எதிரணி. இது அரசியல் ரீதியாகப் புலிகளை ஆதரிக்கின்ற அணி. மற்றது இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையாக அமுலாக்கலையும் மாகாண சபை முறைமையையும் உளப்பூர்வமாக ஆதரிக்கும் (இரண்டாவது அணி) ஆதரவு அணி. இது அரசியல் ரீதியாகப் புலிகளை எதிர்க்கும் அணி. ஆனால் ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தல்களென்றாலும் சரி அல்லது மாகாண சபைத் தேர்தல்களென்றாலும் சரி அல்லது உள்ளூராட்சித் தேர்தல்களென்றாலும் சரி எல்லாவற்றிலுமே பெருவாரியான வடக்குக் கிழக்குத் தமிழர்கள் முதலாவது அணியையே இதுவரைக்கும் ஆதரித்து நிற்கிறார்கள். அதாவது புலிகளை ஆதரிக்கும் அல்லது புலிகள் ஆதரிக்கும் அணியையே பெரும்பான்மைத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள். இதனால் இரண்டாவது அணி அரசியல் பலம் குன்றியுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் பெறுபேறுகளை விடய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால். மேற்கூறப்பட்ட முதலாவது அணிக்கு மொத்தம் பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், டக்ளஸ் தேவானந்தாவைத் தலைமையாகக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதம் இரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும், பிள்ளையானைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டத்தில் ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவமே உண்டு. இரண்டாவது அணியைச் சேர்ந்த கலாநிதி விக்கினேஸ்வரனைத் தலைவராகக் கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபைக்கும், வரதராஜப் பெருமாளின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், சந்திரகுமாரின் சமத்துவக் கட்சிக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமே இல்லை. அதாவது இரண்டாவது அணிக்குப் பிரதிநிதித்துவ வலு இல்லை அல்லது போதாது.
இந்த நிலைமை, பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய விரும்பாது இழுத்தடிக்க எண்ணுகின்ற இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பாகவும், பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் உறுதிப்பாடும்- அரசியல் விருப்பமும்- தெளிவும் கொண்ட இந்தியாவுக்கும் அதன் ஆதரவு சக்திகளுக்கும் சங்கடமாகவும் பின்னடைவாகவும் உள்ளது. இதன்காரணமாகவே பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதில் மிகவும் மெத்தனமாக இந்தியா நடந்து கொள்கிறது.
இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 1987 இலிருந்து கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் இத்தகைய நிலைமைதான் நீடித்து வருகிறது. இந்த நிலைமை நீடிக்கும் வரை பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படவேமாட்டாது. இந்த நிலைமையை மாற்றும் உபாயம் பற்றி அடுத்த பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-58) பார்க்கலாம்.