வடக்கு: நீர் எங்கே?

வடக்கு: நீர் எங்கே?

  — கருணாகரன் — 

“வடக்கின் நீர் ஆதாரமும் பங்கீட்டுக் கொள்கையும் அதன் பயன்பாட்டு உத்திகளும்” என்ற ஆய்வு நூலொன்று மக்கள் சிந்தனைக் களத்தினால் கடந்த வாரம் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்துறையில் நெடுங்காலம் பணியாற்றிய யாழ் பல்கலைக்கழக பொறியியற்துறை விரிவுரையாளர் எஸ். சிவகுமார் இதை எழுதியிருக்கிறார்.  

வடக்கில் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஒன்று நீர்ப்பயன்பாடும் நீர்ப்பங்கீட்டுக்கொள்கையுமாகும். வடக்கில் மட்டுமல்ல, உலகிலேயே சர்ச்சைக்குரிய – தீர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது நீர் விவகாரம்.  

அடுத்த உலகப்போர் நிகழுமாக இருந்தால் அது நீர் விவகாரத்துக்காகத்தானிருக்கும் என்று அறிஞர்களும் ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். பிரபஞ்சத்திலேயே நீருள்ள ஒரேயொரு கிரகம் பூமி மட்டும்தான். அதனால்தான் பூமியில் உயிரினங்கள் உள்ளன. இதுவே பூமிக்குச் சிறப்பு. வேறு எந்தக்  கிரகத்தில் நீர் உண்டென்று அறிவதற்காக கோடிக்கணக்கான டொலர்களைச் செலவழித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு நீர் முக்கியமானது. இதனால்தான் “நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு” என்று வள்ளுவரும் சொன்னார். இதையெல்லாம் மனதிற் கொண்டே சிவகுமார் இந்த ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். 

வடக்கின் நீர் ஆதாரம் 

நூலில் முக்கியமான ஒன்று வடக்கின் நீர் ஆதாரம் பற்றிய விவரங்கள். நீரைப் பெறக்கூடிய ஆறுகள் எத்தனை? அந்த ஆறுகள் எங்கெங்கே உள்ளன?அவற்றிலிருந்து ஆண்டுதோறும் பெறக்கூடிய நீரின் அளவு என்ன? சராசரி மழை வீழ்ச்சி எவ்வளவு? இந்த ஆறுகளிலிருந்து இப்பொழுது சேமிக்கப்படும் நீரின் அளவு என்ன? அந்தக் குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் எவை? இன்னும் சேமிக்கக் கூடிய நீரின் அளவு எவ்வளவு? இதன் மூலம் நிலத்தடி நீரின் வளம் எவ்வாறுள்ளது? வீணாகக் கடலில் போய்ச் சேரும் நீர் எவ்வளவு? இப்படி வடக்கின் நீராதாரத்தைப் பற்றிய விவரங்களை திரட்டித்தந்துள்ளது இந்த நூல். 

நீர்ப் பங்கீடு 

அடுத்த பகுதி, இந்த நீரின் பங்கீட்டுக்கான கொள்கை பற்றியதாகும். நம்முடைய பொது அறிவிலும் அவதானிப்பிலும் நீர்ப் பயன்பாடு என்பது விவசாயத்துக்கும் குடிநீருக்கும் என்ற அளவிலேயே உள்ளது. கொஞ்சம் விரிவாகப் பார்க்கின்றவர்கள், நாளாந்தப் புழக்கத்துக்கும் நீர் வேணும் என்பார்கள். அதற்கு அப்பால் தண்ணீரைப் பற்றிச் சிந்திப்போர் குறைவு. ஆனால் நீர்ப்பயன்பாடு இவ்வாறு சுருங்கியதல்ல. அது பன்முகம் கொண்டது. விவசாயம், குடிநீர், நாளாந்தப் புழக்கம், தொழிற்துறை எனப் பலவற்றுக்குமானது. இவை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நீர் தேவை என்பது உலகக் கொள்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலவற்றுக்கும் நீர் தேவை என்பதால் இதில் சர்ச்சைகள் எப்போதுமுண்டு. 

இரணைமடுக்குளத்திலிருந்து (கிளிநொச்சியிலிருந்து) யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு போவதைப் பற்றிய சர்ச்சை இதில் ஒன்று. இந்தியாவில் பாலாறு, காவிரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படாமலே நீளும் பிரச்சினைகள். தமிழ்நாடும் கேரளாவும் தமிழ் நாடும் கர்நாடகாவும் இந்தப் பிரச்சினையினால் தொடர்ந்தும் முரண்பாட்டுக் கொண்டேயிருக்கின்றன. மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமிடையில் கலவரங்கள், வன்முறைகள் அவ்வப்போது இதனால் வெடிப்பதுமுண்டு. இதனால் பாதிக்கப்படுகின்றோரின் தொகை லட்சத்துக்கும் மேல். 

மகாவலி நீர்? 

இப்படி உலகமெங்கும் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினைகள் ஏராளமுண்டு. ஆனால் நமக்கு (இலங்கையில்) இது வேறு மாதிரி– விநோத நிலையில் – உள்ளது. மாகாவலித் தண்ணீர் வேண்டாம் என்கின்றனர் வடபகுதித் தமிழர்கள். இதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம், மகாவலித் தண்ணீர் திட்டத்தோடு இன விகிதாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து அதிகாரச் சமனிலையைக் குறைக்கும் குடியேற்றம் வந்து விடும் என்பது. அதாவது மகாவலித் தண்ணீரின் நன்மைகளை விட தீமைகள் அதிகமாகி விடும். அதன் அபாயம் பெரிது என்பதாகும். 

ஆனால் இதை மறுத்துரைப்போர் உள்ளனர். அவர்களுடைய கருத்தின்படி “இதொரு தேவையற்ற அச்சம். இந்த உலகத்தில் தண்ணீரை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? வடக்கிலே தண்ணீருக்குப் பல இடங்களில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாடாய்ப்படுகிறார்கள். மன்னாரில் இலுப்பைக் கடவை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் மெலிஞ்சிமுனை வரையில் பல நூறு ஊர்கள் வரட்சியில் வாடுகின்றன. அங்கே குடிப்பதற்கே தண்ணீரில்லாமலிருக்கும்போது, மகாவலித் தண்ணீரை வேண்டாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதற்கு மகாவலித் தண்ணீரை வேண்டாம் என்கின்றவர்கள் என்ன பதிலைத் தரப்போகிறார்கள்?” என்பது நியாயமான கேள்விகளே. 

இது  மறுக்க முடியாத உண்மையே. இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் (குடிதண்ணீர்) கொடுக்க முடியாது என்று விவசாயிகள் சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்கின்ற காரணம், தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்துக்குத் தண்ணீர் போதாது என்பதாகும். குறிப்பாக சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படும் என்பதாகும். 

விவசாயி மனநிலை 

ஆனால், குறைந்தளவு நீரைப் பயன்படுத்திப் பயிர்ச்செய்கையைச் செய்ய முடியும். விவசாயிகளுக்குப் பாதிப்பில்லால் நீரைக் கொண்டு செல்ல முடியும் என்று பல அறிஞர்களும் சொல்லி வருகிறார்கள். இதைக் கேட்கும் நிலையில், நம்பும் அறிவில் விவசாயிகள் இல்லை. பொதுவாகவே விவசாயிகளின் உளநிலை அப்படித்தானிருக்கும். காரணம், உலகமெங்கும் விவசாயிகளின் நிலை வரவர மோசமாகிக் கொண்டு செல்வதேயாகும். அரசுகள் விவசாயிகளைச் சுரண்டிப் பிழைக்கின்றன. அல்லது அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கின்றன. 

ஆனால் விவசாயிகளே மக்களுக்குச் சோறு போடுகிறார்கள். சோறு என்பது தனியே சோற்றை மட்டும் குறிப்பதில்லை. அவர்களே உணவைக் கொடுக்கிறார்கள். வேறு எதுவும் இல்லாமலிருக்கலாம். உணவில்லாமல் உயிர் வாழ முடியுமா? அப்படி உயிரைக் காப்பாற்றுகின்ற, நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்ற, வாழ்க்கையைக் கொடுக்கின்ற விவசாயிகளை அரசும் அதிகாரத் தரப்புகளும் கவனத்திற் கொள்ள வேண்டும். 

குறைந்தளவு நீரைப் பயன்படுத்திக் கூடுதலான விளைச்சலையும் வருவாயையும் பெறலாம் என்றால் அதற்கு விவசாயிகள் தயாராகக் கூடும். ஆனால், இதற்கான ஏனைய உத்தரவாதங்கள் அவசியம். ஏனென்றால், ஆட்சியாளர்கள் மாறும்போது, அரசாங்கம் மாறும்போதும் உடனடியாகப் பாதிக்கப்படுவது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுமே. தங்களுக்கு ஏற்றவாறு சடுதியாக மாற்றங்களைச் செய்வதாலும் அதனால் மாற்றமடையும் பொருளாதாரக் கொள்கையினாலும் இந்தப் பாதிப்பு நிகழ்கிறது. இதனால்தான் விவசாயிகள் தங்களுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்கிறார்கள். தவிர, அவர்களுக்குப் பழகிய தொழிலைச் செய்வது இலகுவாகவும் உள்ளது. அதோடு நெல் விவசாயத்தில் சிரமங்கள் அதிகமில்லை. விளைச்சலையும் மூன்று மாதங்களில் பெற்று விடலாம். 

ஆனால் நீர்ப்பயன்பாடும் நீர்ப்பங்கீடும் தனியே  விவசாயத்துக்கு மட்டுமானதல்ல. அது குடிநீர், நாளாந்தப் புழக்கத்துக்கான நீர், கைத்தொழில் துறைக்கான நீர், கால்நடைகளுக்கான (மேய்ச்சல் தரையின் பராமரிப்பு உள்பட) நீர், காடு மற்றும் வான்பயிர்களுக்கான நிலத்தடி நீர்ச்சேகரிப்புக்குரிய நீர் எனப் பலவாறாகப் பங்கீடு செய்யப்பட வேண்டியது என்ற புரிதல் விவசாயிகளுக்கும் வேண்டும். பிறருக்கும் அந்த அறிவு அவசியம். இதையே சிவகுமார் வலியுறுத்துகிறார். அப்படியில்லை என்றால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டுமல்ல, சமூக பொருளாதார வளர்ச்சியும் நிகழாது. 

இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என்ற ஐம்பூதங்களும் (இயற்கையின் மாபெரும் ஐந்து அம்சங்களும்) அனைவருக்கும் சொந்தமானவை. அனைத்துக்கும் தேவையானவை. இதை யாரும் தனியே உரிமை கொண்டாட முடியாது. ஆகவே இதற்குரிய பொதுக் கொள்கை –பயன்பாட்டு முறையும் பங்கீட்டுக் கொள்கையும் சரியாக வகுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

கிளிநொச்சியில் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்விலேயே சிறிய சலசலப்பு ஒன்று ஏற்பட்டது. இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதை இந்தப் புத்தகம் ஆதரிக்கிறது என்றவாறாக விவசாயிகள் தரப்பிலிருந்து சிலர் அபிப்பிராயப்பட்டனர். ஆனால், அவர்களால் ஒரு முறையான – நீதியான நிர்ப்பங்கீட்டுக் கொள்கையை இதுவரையில் முன்வைக்க முடியவில்லை. குறிப்பாக இரணைமடு, கல்மடு, அக்கராயன், வன்னேரி உட்பட ஒன்பது நீர்ப்பாசனக் குளங்கள் கிளிநொச்சியில் மட்டும் உண்டு. இந்தக் குளங்களிலிருந்து ஒரு குறிப்பிட்டளவு விவசாயிகள் மட்டுமே தண்ணீரைப் பெறுகிறார்கள். ஏனைய விவசாயிகளுக்கு இந்தக் குளங்களின் நீரில்லை. அவர்கள் ஆழ்துளைக் கிணறுகளையே நம்பியிருக்கிறார்கள். ஆகவே இதிலேயே ஒரு சரியான –முறையான நீர்ப்பங்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அடுத்தது, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீருக்கான வழிகளும் காண்பிக்கப்படவில்லை. 

இந்தப் பிரச்சினை ஆழமும் நீளமும் கூடியது. இந்தப் புத்தகம் தனியே கிளிநொச்சியையோ, இரணைமடுவையோ முன்னிறுத்திப் பேசவில்லை. முன்பு குறிப்பிட்டுள்ளதைப்போல, வடமாகாணம் முழுவதிலுமான நீராதாரத்தை மையப்படுத்திப் பேசுகிறது. அதைப்போல அனைத்துத் துறைகளுக்குமான –அனைத்துத் தேவைகளுக்குமான நீர்ப்பங்கீட்டையும் முன்வைக்கிறது. இந்த வகையில் இது ஒரு காலத்தின் தேவை கருதிய வெளிப்பாடே. 

இதற்கு சிந்தனைக்குழாம் ஒரு கவனத்திற்குரிய உரையாடலுக்கான வாசலைத்திறந்துள்ளது.