— வேதநாயகம் தபேந்திரன் —
றெக்க கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள், ஆசை வச்சு ஏறிக்கொடி ஐயாவோட பைக்கில்………
சைக்கிள் தொடர்பாக வந்த சினிமாப் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பணக்கார வாகனமாக இருந்த சைக்கிள் அந்த நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான நாடுகளில் ஏழைகளின் வாகனமாக மாறிவிட்டது.
இருபத்தோராம் நுற்றாண்டின் முதல் 10 வருடங்களில் இலங்கை போன்ற நாடுகளில் சைக்கிள் மட்டும் வைத்திருப்போர் ஏழைகளாகப் பார்க்கப்பட்டனர்.
எமது நாடு மட்டுமல்ல அன்றும் இன்றும் உலகெங்குமுள்ள ஒரே கேள்வி.
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? அதற்கு என்னென்ன செய்யவேண்டும் ?
இவை மனிதர்களது தேடல்களில் ஒன்றாகத் தொடர்கின்றது.
நாடு முழுவதும் சைக்கிள் பாவனையைக் கூட்டுதல் அதற்குரிய தீர்வுகளில் ஒன்றாகக் கூறலாம்.
சமதரைகளைப் பெருமளவில் கொண்டுள்ள எமது நாட்டில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கலாம்.
1990 களுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வின் அச்சாணியாகச் சைக்கிள் இருந்துள்ளது. இலங்கையில் வீட்டுக்கு வீடு சைக்கிள் நிற்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் அடையாளம் காணப்பட்டது.
1990 க்கும் 1996 இற்கும் இடையில் பொருளாதாரத்தடை இருந்த காலத்தில் எரிபொருள்களது வருகை முற்றாகவே இல்லையெனும் நிலை இருந்தது.
சைக்கிள்கள்தான் அக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கின.
வவுனியா மாவட்டத்தில் யாழ் கண்டி வீதியில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகிலிருந்து நொச்சிமோட்டைப் பாலம் வரையான பிரதேசம் யுத்த சூனியப் பிரதேசமாக இருந்தது.
அங்கு உயிரைப் பணயம் வைத்துச் சைக்கிளில் பயணிகளை ஏற்றி இறக்கி உழைத்தவர்கள் இருந்தார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து கேரதீவுசங்குப்பிட்டிப் பாதை ஊடாக 1990,91 வரையும், கொம்படி ஊரியான் பாதை ஊடாக 1992,93 ஆம் வரையும், கிளாலிப்படகு மூலமாக 1993,94,95,96 வரையும் சைக்கிளில் வவுனியாவுக்குச் சென்றார்கள்.
கடுமையான பொருளாதாரத்தடை இருந்த காலத்தில் வவுனியாவில் பொருள்களை வாங்கி வந்து விற்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பாக சைக்கிள் திருத்தும் கடைகள் ஊருக்கு ஊர் மூலைக்கு மூலை இருந்துள்ளன.
அக்கடைகளில் சைக்கிள்களை வாடகைக்குக் கொடுத்து உழைத்தார்கள்.
சைக்கிளில் வாழைக்குலைகள் கட்டி கடை கடையாகக் கொண்டு சென்றுகொடுக்கும் ஒரு தொழில் இருந்தது.
பாடசாலைப் பிள்ளைகளைச் சைக்கிளில் ஏற்றி இறக்கி வருமானம் ஈட்டிய தொழிலும் நடந்தது.
எனது சிறு பராயத்தில் சின்னச் சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓடினேன்.
எனது பதின்ம வயதில் சக மாணவர்கள் நண்பர்களுடன் பாடசாலைக்கும், ரியூசனுக்கும் சைக்கிளில் போகும் போதும் வரும் போதும் அது ஒரு தனியான சந்தோசத்தைத் தந்தது.
பதின்ம வயதுக்குரிய பருவ உணர்வுகள் எட்டிப் பார்க்கும் போது சைக்கிள் சந்தோசச் சவாரியாகவே இருந்தது.
சக மாணவிகளை மாணவர்கள் சைட் அடிப்பதற்குச் சைக்கிள் போல வசதியான வாகனம் ஏதுவுமில்லை.
பின்னாளில் வசதி கூடக் கூட சைக்கிள் பிடித்த இடத்தை மோட்டார் சைக்கிள் பிடித்தது.
தற்போது பரவலாகக் கார், வான் பாவனை அதிகரித்து விட்டது.
ஆனால் சைக்கிள் ஓடிய காலத்தில் இருந்த உடல் ஆரோக்கியம் தற்போது இல்லை.
ஒரு காலத்தில் பணக்கார வருத்தங்கள் எனப்பட்ட சலரோகம், இரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரோல் ஆகியவை தற்போது சாதாரணர்களுக்கும் வரும் வருத்தமாகி விட்டது.
உடற்பயிற்சிக்குரிய வாய்ப்பு மிகவும் குறைந்து போனமை, உடற்பயிற்சி தரக்கூடிய மாவிடித்தல், விறகு கொத்துதல், காணிப் பராமரிப்பு போன்ற வேலைகளுக்கு இடமில்லாமல் போய் இயந்திரங்கள் அவ்வேலைகளைப் பொருப்பேற்றுக் கொண்டன.
அதே வேளை எமது நாட்டில் அதிக மோட்டார் வாகனப் பாவனை காரணமாக ஒவ்வொரு 6 மணித்தியாலத்திற்கும் ஒருவர் வீதி விபத்துகளால் இறக்கின்றார்.
இதன்படி வருடாந்தம் சராசரியாக 1460 பேர் இறக்கின்றனர்.
வேகமாக ஓடுகின்ற தேவை உள்ள வாழ்க்கையைக் குறைத்துச் சைக்கிள் பாவனையைக் கூட்டுவதற்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களைச் செய்தல் வேண்டும்.
அரசாங்கம் சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்படும் பாலங்களின் கரையாக சைக்கிள் பாதைக்கென இடம்விடுகின்றனர்.
இதேபோலப் பெரு வீதிகள், நகரங்களில் சைக்கிளுக்கெனத் தனியாக ஒரு பாதைவிடுவதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
சைக்கிள் பாவனையால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பல உண்டு.
சைக்கிள் ஓடுவது சிறந்த உடற்பயிற்சி. வாகனங்களது இறக்குமதிகளுக்குச் செலவழிக்கும் பல பில்லியன் அந்நியச் செலாவணியை மீதப்படுத்தலாம்.
வீதி விபத்துகளில் இறப்போர்கள், காயப்படுவோர், அங்கவீனமடைவோர் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதைக் குறைக்கலாம்.
நகரங்களில் வாகனத் தரிப்பிடங்களுக்கெனப் பெருமளவில் ஒதுக்கப்படும் நிலப்பரப்பைக் குறைக்கலாம். அதனை வேறு உற்பத்தி முயற்சிகளுக்குப் பயன்படுத்தலாம்.
பெருநகரங்களில் தனித்தனி வாகனங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் பயணம் செய்து பெரும் வீதிப் போக்குவரத்து நெருக்கடியை உருவாக்குகின்றனர். இதனால் உற்பத்தித் திறன்மிக்க மனித மணித்தியாலங்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
சைக்கிளில் ஆறுதலாகப் பயணம் செய்யும் போது பதற்றம் இல்லாமல் செல்வதனால் மன உளைச்சல் இல்லாத நிலை உருவாகி மனநலம் உயரும்.
வாகனங்களில் அடைபட்டுச் செல்வதைவிட இயல்பான காற்றோட்டம், வெளிச்சம் உள்ள நிலையில் பயணிக்கும்போது உடலுக்கு ஆரோக்கியமான இயற்கையின் அரவணைப்புக்கிடைக்கும்.
நெதர்லாந்து ( ஹொலாண்ட்) சைக்கிள் பாவனையில் உலகில் முன்னோடியான ஒரு நாடாக உதாரணம் காட்டப்படுகிறது. அந்த நாட்டின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி எமது நாடும் சைக்கிள் பாவனையைக் கூட்டவேண்டும்.
தனித்தனி நபர்கள் தனித்தனி வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து சைக்கிள்களில் செல்வதற்குரிய ஊக்குவிப்பை வழங்குதல் வேண்டும்.
சைக்கிள் பாவனையை மக்களின் வாழ்வியலுடன் இணைத்தாகச் செய்யவேண்டியது அரசாங்கக் கொள்கையில் உள்ளடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போதல் என்பது கூட நவீன பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு உத்தியாகும்.