ஆண்களின் விலங்குணர்வைப் பேசும் படம்

ஆண்களின் விலங்குணர்வைப் பேசும் படம்

 — ஆரதி — 

அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள குறும்படம் “பெண்ணுறுப்பு”. பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது பூஜா. இந்தப்படத்தை இப்பொழுது நீங்கள் இணையத்தளத்திலும் பார்க்கலாம். இதை, புகழ்பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மிகப் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கும் இந்தப்படம், ஏராளமான மதிப்புரைகள், விமர்சனங்களையும் கண்டு வருகிறது. அந்தளவுக்கு பார்வையாளர்களை ஈர்க்கிறது பெண்ணுறுப்பில் பேசப்படும் விவாதப் பொருள். 

வாய் பேசமுடியாத இளம் பெண்ணொருவரின் உள்ளுணர்தலே படத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக பெண்களைப் பொதுவாக ஆண்கள் நோக்கும் விதமே இங்கே மையம். 

எல்லா இடங்களிலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னை எப்படி நோக்குகிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கண்டுணரும்போது அவர்கள் மீது அவளுக்கு வெறுப்பேற்படுகிறது. யாரையும் நேசிக்கவோ நம்பவோ முடியாது என்ற நிலை. அவளுடைய தந்தையே இதில் விலக்கல்ல என்றாகிறது. இதனால் அடையும் உளப் பாதிப்பு, உளச் சிக்கல் குறித்த பார்வையை முன்வைக்கிறது படம். 

சந்திக்கும் அத்தனை ஆண்களும் தப்பானவர்களா? என்று நீங்கள் கேட்கலாம். அத்தனை பேரும் தப்பானவர்களாக இல்லாதிருக்கலாம். ஆனால், பெண்ணின் அனுபவம் அல்லது பெண்களின் நிலை என்பது எல்லோரிடத்திலும் (ஆண்களிடம்) எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதிகம் ஏன் நீங்கள் பெண்களாக இருந்தால் இதை உங்களால் மறுக்க முடியுமா? அல்லது உங்களுக்கு மகளோ சகோதரிகளோ இருந்தால் இந்த எச்சரிக்கை உணர்வு உங்களுக்குள் தொழிற்படுமா இல்லையா? 

எனவே பொதுவெளியில் பெண் எப்போதும் எந்தவொரு ஆணைக்குறித்தும் முதல் நிலையில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க முயற்சிக்கிறாள். இருக்க வேண்டியவளாகிறாள். நன்றாகப் பழகிய பின்னர் அவளுக்குக் குறித்த நபர் அல்லது சம்மந்தப்பட்ட நபர்கள் மீதும் அந்தச் சூழலின் மீதும் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படலாம். ஆனாலும் எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தப் பாம்பு தன்னுடைய வேலையைக் காட்டும் என்று அவளால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதனால் ஒரு குறைநிலை நம்பிக்கையோடு அல்லது உள்மறைந்திருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வோடுதான் எப்போதும் அவளிருக்கிறாள். இதுதான் யதார்த்தம். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 

பெண்ணுறுப்பு இந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்கள் என்ற அதிகார மையத்திலிருந்து பெண்கள் எப்படித் தம்மைக் காத்துக் கொள்ளவும் கட்டமைத்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது என்பதை. இது பெண்ணுடல் எதிர்கொள்ளும் நெருக்கடி என்பதால் இந்தப் படம் அந்த அரசியலைப் பேச முயற்சிக்கிறது. அதில் அது கணிசமான எல்லையைத் தொட்டுமுள்ளது. ஆண்களுக்குள்ளிருக்கும் பால்நிலை சார்ந்த உணர்வென்பது நாகரீகமற்றது, இன்னும் அது விலங்கு நிலையில் – நாகரீகமடையாத நிலையில்தான் உள்ளது என்பதை நிறுவுவதன் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது. இன்னும் அந்தப் பலவீனமான வன்மத்தை – உடலிச்சையின் கட்டுப்பாடற்ற நிலையை மன இச்சையாக பரிமாற்றம் செய்வதை இயக்குநர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறும்படம் என்ற எல்லையைக் கடந்து அடையாளத்தைக் கடந்து மிகப் பெரிய தாக்கத்தை – ஒரு முழுச்சினிமா அளிக்கக் கூடிய நிறைவை பெண் உறுப்புத் தருகிறது. 

கண் பார்வையற்ற ஒருவர் இந்தக் கதையைச் சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. மகிழ்ச்சியாக ஒரு நாளைத் தொடங்கும் பதின் பருவத்துப் பெண்ணின் குதூகலத்தோடு எல்லையற்ற பெரு வெளியில் தன்னுடைய சிறகுகளை விரித்து அவள் பறக்கத் துடிக்கிறாள். இந்த உலகத்தை அவள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தயாராக இருக்கிறாள். ஒரு உயிரி என்ற வகையில் இது இயல்பு. இது அதனுடைய உரிமையும் கூட என்பது அழகாகக் காண்பிக்கப்படுகிறது. 

மிக அருமையாக இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி கொப்பளிக்கும் ஆரம்பக் காட்சி அவளைக் குறித்து நமக்கு அறிமுகம் செய்யும் விதம் வேறு. ஆனால், படம் நகரத் தொடங்கும்போது அந்த நாள் எப்படிச் சிதைகிறது? அதில் நாமெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ எப்படிப் பொறுப்பாளிகளாக இருக்கிறோம். நாமறிந்தும் அறியாமலும் நமக்குள் தொழிற்படும் மிருக நிலை அல்லது வன்ம உணர்வுகள் எப்படியானவை என்பதை அடுத்தடுத்த காட்சிகள் சொல்லிக்கொண்டு செல்லும்போது நாம் அடைகின்ற உணர்வு வேறு. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் பால் நிலை சார்ந்தும் அதன் காரணமாகவும் பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் எப்படி? எவ்வளவாக உள்ளன என்று தெரியும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் (Sexual படம் நகர நமக்குள் (ஆண்களாக இருந்தால்) கேள்விகளும் குற்றவுணர்ச்சியும் மேலெழத் தொடங்குகின்றன. இந்த உள் விசாரணைகளை நமக்குள் உருவாக்குவதே படத்தின் நோக்கம். அதில் வெற்றி கிட்டுகிறது என்றே உணர்கிறேன். 

பெண்ணுடல் எதிர்கொள்ளும் சவால்கள், பெண் உளம்கொள்ளும் நெருக்கடிகள் என்ற வகையில் பெண்ணுடல், உள அரசியலை முன்னிறுத்துப் பேசும் பெண் உறுப்பு நம் பார்வைக்கும் திறந்த உரையாடலுக்குமானது. இதைக் குறித்த நேர்நிலைப் பார்வைகள் அவசியம். அது நம்முடைய சமூகத்தை வளப்படுத்தும். பார்க்கவும் உரையாடவுமான தொழிற்படுதலுக்காகப் பெண் உறுப்பைப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும்.