பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

— விஜி/ஸ்டாலின் — 

காந்தியும் பெரியாரும்  

பெரும் தனவந்த குடும்பத்தில் பிறந்து பல்வேறு கெளரவங்களோடும் செல்லப்பிள்ளையாக வாழ்ந்துவந்த ஒரு இளைஞன் எப்படி பகுத்தறிவாளனாக மாறினான்? லட்சோப லட்சம் பக்தகோடிகளின் வாழ்நாள் கனவான காசி யாத்திரையும் கடவுள்களின் மடாலயங்களுமே அந்த ராமசாமி என்னும் இளைஞனை பகுத்தறிவாளனாய் மாற்றுவதில் பெரும் பங்குவகித்தன என்று சொன்னால் நம்புவீர்களா?   

பெரியார் தனது 25 ஆவது வயதிலே துறவு கொள்ளும் நோக்கோடு காசிப்பயணம் மேற்கொண்டபோதே அவரது சிந்தனையில் பகுத்தறிவு என்னும் தீப்பொறி மூண்டது. காசி செல்லும் வழிகளிலும் தங்கிச் சென்ற மடங்களிலும் இதுவரை காலமும் ஒருபோதும் அறிந்திராத பிராமணியக் கொடுமைகள் பலவற்றை அவர் நேரிடையாகக் காணவும் அனுபவிக்கவும் நேர்ந்தது. கடவுளின் பெயரால் பிராமணரல்லாதோர் மீது திணிக்கப்படும் சாதி வெறி, தீண்டாமை, போன்ற சமூகக்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள அவரது மனது இடந்தரவில்லை.  

துறவு கொள்ளும் எண்ணத்தை துறந்து வீடுவந்து சேர்ந்த அவர் மீண்டும் அன்றாட வாழ்வில் கவனங்கொண்டார். இளம் வயதிலேயே தந்தையாரை இழக்கவேண்டி வந்தமையால் குடும்பப் பொறுப்பு மிக்கவராக மாறவேண்டிய நிலைவந்தது. தந்தையின் வியாபார விடயங்களை பொறுப்பெடுத்தார். தந்தையாரின் செல்வாக்கு காரணமாக ஈரோடு நகரத்தில் பல்வேறுபட்ட கெளரவ பதவிகள் இவரை தேடிவந்தன. ஈரோடு நகரமன்ற தலைவராகவும், கெளரவ மஜிஸ்திரேட்டாகவும் நியமனமானார்.  

அவ்வேளைகளில்தான் இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்று இந்திய தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டங்கள் பெரியாரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. இந்திய சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் மட்டுமன்றி காந்தியாரின் ‘தீண்டாமைக் கொடுமைகள்’ ஒழியவேண்டும் என்கின்ற பிரச்சாரங்களினால் பெரியார் சற்று அதிகமாகவே கவரப்பட்டார்.   

1919ஆம் ஆண்டு காலப்பகுதியில் பஞ்சாப்பில் இடம்பெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பெரியாரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கியது. பிரிட்டிஸாசாரின் அப்பட்டமான அந்த மனித உரிமை மீறலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நகர மன்ற தலைவர், கெளரவ மஜிஸ்ரேட் போன்ற பதவிகள் உட்பட தான் வகித்துவந்த 28 கெளரவ பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு இந்திய சுதந்திரத்துக்காக போராடும் வண்ணம் தேசிய காங்கிரசில் இணைந்தார். 

பெரியாரின் வரவு இந்திய தேசிய காங்கிரசின் சுயராஜ்ய கொள்கைகளை தமிழ் நாடு முழுக்க விரிவாக்குவதில் முக்கிய பாத்திரம் வகிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரத்துக்கான ஒத்துழையாமை இயக்கம், கதர் ஆடை பிரச்சாரம், மதுவிலக்கு போன்றவற்றுக்கான போராட்டங்களை தமிழ் நாட்டின் மூலை மூடுக்குகளெல்லாம் கொண்டு சென்றவர் பெரியார்தான். தனது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் போன்றவர்களையும் மதுவிலக்கு போராட்டத்தில் இணைத்து பெண்களை போராட வருமாறு அறைகூவல் விடுத்தார். அரசியலுக்கு வந்தபின்னர் மாளிகை கட்டிக்கொண்டவர் அல்ல பெரியார். தனது மாளிகை போன்ற வீட்டையே தமிழ் நாடு காங்கிரசின் தலைமையகமாக பயன்படுத்த தானமாக கொடுத்தவர் அவர். காந்தியார் தமிழ் நாட்டுக்கு வந்தபோது அங்கிருந்துதான் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை அறிவித்தார். வேகமாகவும் கடுமையாகவும் கட்சிப்பணிகள் ஆற்றியதன் விளைவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக 1921லும் தலைவராக 1922லும் பெரியார் முன்னிலைக்கு வந்தார். 

அதேகாலத்தில் இலங்கையிலும் இந்திய தேசிய காங்கிரஸைப் போன்றே பூரண சுதந்திரக் கோரிக்கையுடன் தீண்டாமை கொடுமைகளையும் ஒழிப்பதை நோக்காக கொண்டு ஓர் இயக்கம் செயற்பட்டு வந்ததமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இளைஞர்(மாணவர்) காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட இவ்வியக்கத்தினரும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களால் கவரப்பட்டு அவரை இலங்கைக்கு அழைத்திருந்தனர். அதன்படி காந்தியார் 1927ல் இலங்கைக்கு வருகை தந்து உரையாற்றியிருந்தார். தாழ்த்தப்பட்ட  சாதியினருக்கு பாடசாலை மறுப்பு, ஆலய தரிசனங்கள் மறுப்பு, தேநீர்கடைகளில் தனியான ‘மூக்குப்பேணிகள்’ என்று யாழ்ப்பாணத்திலும்  சாதிக்கொடுமைகள் தலைவிரித்தாடிய காலங்கள் அவை.  

வைக்கம் (ஈழவர்) போராட்டம்  

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் செயற்பட்டு வந்த காலங்களில்தான் கேரளத்தில் இருந்த வைக்கம் மகாதேவர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர் (கேளரத்தில் ஈழவர் என்றும் தமிழ்நாட்டில் நாடார்கள் என்றழைக்கப்படுபவர்கள்)  மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நடந்து செல்ல முடியாதவாறு தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. கோவில் நுழைவை எண்ணிக்கூட பார்க்கமுடியாத நிலையில் கோவில் சுற்று வீதியில் நடப்பதற்கான உரிமை கோரியே இப்போராட்டம் நடத்தப்பட்டது. நாளுக்கு நாள் கைதாகும் சத்தியாகிரகிகளால் சிறைக்கூடங்கள் நிரம்பிக்கொண்டேயிருந்தன. காந்தியார் கூட ‘வைக்கம்’ வந்து இருதரப்பாரையும் சமரசம் செய்து போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயன்றும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் போராட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட நேர்ந்தது.  

சிறையிலிருந்தவாறு கடிதங்கள் மூலம் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு நடத்துமாறு கோரி தமிழ் நாட்டிலிருந்த பெரியாருக்கு அழைப்பு விட்டனர் அவர்கள். அதன்பெயரில் பெரியார் வைக்கம் சென்று சத்தியாகிரகம் செய்தார்,  உரையாற்றினார், பத்திரிகைகள் மூலம் இச்செய்தியை வெளியுலகுக்கு கொண்டுவந்தார். அதனால் அவரும்  சிறையிலே தள்ளப்பட்டார். பெரியார் சிறையிடப்பட்டதும் தமிழ் நாட்டிலிருந்து காங்கிரசின் ஏனைய தலைவர்களும் நாகம்மையாரும், கண்ணம்மாளும் வைக்கம் வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு மாதகாலத்தின் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார் மீண்டும் சத்தியாகிரகத்துக்கு தலைமையேற்றார். மீண்டும் சிறை கிடைத்தது. நாலுமாதங்களின் பின்னர் மீளவும் வெளியே வந்து போராட்டத்தை கையிலெடுத்தார். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் (1924 மார்ச் 30 – 1925 நவம்பர் 23)  தொடர்ச்சியாக நடந்த இப்போராட்ட காலத்தில் சுமார் 140 நாட்கள் பெரியார் வைக்கத்திலேயே காலம் கழித்துள்ளார்.  

இறுதியாக வேறு வழியேதுமின்றி குறித்த கோவில் வீதிகள் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டன. இந்த ‘வைக்கம்’ வெற்றியே கேரளத்தில் மட்டுமல்ல தமிழ் நாடு மற்றும் வட மாநிலங்கள், ஏன் இலங்கையிலும் (1960களில்) கூட பின்னர் வந்த காலங்களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு போராட்டங்களின் வெற்றிக்கான உத்வேகத்தை அளித்தது எனலாம். இத்தகைய வெற்றியொன்றின் நாயகனாக இருந்தமையால்தான் பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படலானார். இன்றுவரை ‘வைக்கம்’ நகருக்கு சென்று வருபவர்கள் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள அங்கே “பெரியார் நினைவகம்” ஒன்று பலவிதமான ஆவணங்களுடன்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

வகுப்புவாரி இடஒதுக்கீட்டு கோரிக்கை  

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய காங்கிரசில் இணைந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட காலங்களிலும் கூட சாதி எதிர்ப்பையே முன்னிறுத்தி செயலாற்றுவதிலேயே பெரியார் தீவிர கவனங்கொண்டிருந்தார். காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டவேளைகளிலும் பகுத்தறிவு கொள்கைகளையே பிரச்சாரம் செய்தார். சாதியெதிர்ப்பு, தீண்டாமையெதிர்ப்பு போன்றவற்றில் காங்கிரஸ் காட்டிவந்த சிரத்தையின் போதாமையையிட்டு கட்சி நிர்வாக கூட்டங்களில் அடிக்கடி கேள்வியெழுப்பினார். காந்தியாருடன் பல்வேறு விதமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டார்.  

தேச விடுதலை என்பது தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும் விடுதலையடைவதாய் இருக்கவேண்டும் என்றும் வெறுமனே வெள்ளையர் கையிலிருந்து பார்ப்பன மேட்டுக்குடிகளின் கரங்களுக்கு அதிகாரம் கைமாறுவதால் சுதந்திரம் கிடைத்துவிடாது என்றும் வாதிட்டார். 

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் மிகவும் கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். உயர்கல்வி கற்பதற்கும் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் மூலம் கல்வி கற்றோருக்கு வாய்ப்புகள் மிக அரிதாகவே இருந்தன. சமஸ்கிரதமும் ஆங்கிலமும் கற்ற பிராமணர்களே அரச உத்தியோகங்கள் அனைத்திலும் நிறைந்திருந்தனர். 

இந்நிலையில்தான் தொடர்ச்சியாக ஐந்து காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர் அல்லாதவர்களுக்குரிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோல்விகண்டார் பெரியார். சமூகநீதி இன்றி பொருளாதார சமத்துவம் சாத்தியமில்லை, பொருளாதார சமத்துவம் இன்றேல் சுதந்திர காற்றை எல்லோரும் சமமாக சுவாசிக்க முடியாதது என்று உறுதியாக நம்பினார்.  

1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில் இறுதி முயற்சியாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தபோதிலும் அதிலும் அவரால் வெற்றிகொள்ளமுடியவில்லை. தீண்டாமையை மட்டும் அகற்றிவிட்டு சாதிய ஏற்றத்தாழ்வுகளை பாதுகாக்கும் காங்கிரஸினதும் காந்தியாரினதும் பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரால் முடியவில்லை. 

தனது முதற்கடமையான தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புக்கு இந்த தேச விடுதலைகோரும் தேசியவாதிகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை  என்றுணர்ந்தார். அதன்காரணமாகவே இறுதியில் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார்.   

ஒரு கட்டத்தில் 1931ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதமிருந்தார். அவ்வேளை கோடிக்கணக்கான மக்களின் அரசியலுரிமையை விட ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல என்று   தயங்காது சொல்லுமளவுக்கு காந்தியாரின் வர்ணாச்சிரம ஆதரவு கொள்கை மீது சீற்றம் கொண்டிருந்தார். 

ஆனால் காந்தி ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது  (1948- ஜனவரி- 30) பதறிப்போன பெரியார் பார்ப்பனிய சிந்தனை கொண்டிருந்த ஆபத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டார் காந்தியார் என்று எழுதியதோடல்லாமல், “இந்த மண்ணுக்கு காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும்” என்று கோரிக்கைவிடுத்தார்.  

(தொடரும்)