மாங்குளம் மாநகர் – கருகிய கனவு

மாங்குளம் மாநகர் – கருகிய கனவு

—  சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

கி.பி. 1990களில் நல்லூர் வளாகத்தில் விடுதலைப் புலிகளினால் தமிழீழக் கண்காட்சி நடத்தப்பட்டதைச் சிலராவது இன்னும் நினைவில் வைத்திருக்கக் கூடும். அதில் முக்கியமான ஒன்று மாங்குள நகர்த்திட்டம். வடக்கின் அபிவிருத்தி, சமனிலையான நிர்வாகப் பரவலாக்கம், தொடர்பாடல், குடிசனப்பரம்பல் ஆகியனவற்றை மனதிற் கொண்டு இந்தத் திட்டத்தைப் புலிகள் முன்மொழிந்திருந்தனர். 

முக்கியமாக, வடக்கிற்கான பெருநகரொன்றை உருவாக்குவதற்குரிய விரிந்த நிலப்பரப்பும் நீர்வளமும் மாங்குளத்தில் உண்டு. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களையும் குறுக்கும் மறுக்குமாக இணைக்கும் (வவுனியா –கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மறுபக்கமாக முல்லைத்தீவு, மன்னார்) பெருஞ்சாலைத் தொடர்பும் புவியியல் அமைவும் மாங்குளத்தையே சாத்தியமாக்குகின்றன. யாழ்ப்பாணத்துக்குள் அடர்த்தியடைந்து கொண்டிருக்கும் மக்களை இழுவிசைப்படுத்தக் கூடிய அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து தள்ளுவிசைப்படுத்தினால் அதைக் கொள்ளக் கூடிய நிலவெளி மாங்குளத்திலேயே உள்ளது. மேலும் பொருளாதார மையங்களை உருவாக்குவதற்குப் பொருத்தமான இடத் தெரிவாகவும் மாங்குளம் அடையாளம் காணப்பட்டது. 

இதெல்லாம் எழுந்தமானமான எடுகோளல்ல. ஆய்வு ரீதியான முடிவு. இது தனியே புலிகளினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவோ திட்டமோ அல்ல. அந்த எண்ணக்கருவை அப்போது முன்னிறுத்தியவர்கள் பொருளியல் மற்றும் சமூகவியல், சுற்றாடல், நகர அபிவிருத்திசார் அறிவுத்துறையினரே. இது பொருத்தமுடையது, வரவேற்கக் கூடியது, சரியானது எனப் புலிகளும் இதை அங்கீகரித்திருந்தனர்.  

இந்தக் கருதுகோளை இன்றும் பரந்த மனதோடு வரவேற்பவர்கள் உண்டு. அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் சிறப்பான எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்போர். அதனால் இதை அடிக்கடி நினைவுறுத்திப் பேசுகின்றனர். ஆனால், அவர்களால் எதையும் செய்ய முடியாது. ஏனென்றால் தீர்மானம் எடுபதற்கு அவர்களிடம் அதிகாரமில்லை. 

ஆனால், அரசும் புலிகளை அரசியல் முதலீடாக்கும் சக்திகளும் இதைச் சுலபமாகவே மறந்து விட்டன. இல்லையென்றால் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிந்த பிறகு மாங்குளத்தைப் பற்றி இப்படி ஒரேயடியாக மறந்திருப்பார்களா? அரசாங்கம்தான் தமிழ் மக்களின் விடயங்களில் அசிரத்தையாகவும் ஒத்துழையாமலும் இருக்கும் எனலாம். தமிழ்த்தரப்பினர் அப்படியிருக்க முடியுமா? 

உங்களுக்குத் தெரியும், புலிகள் இல்லை என்ற பின்னர் உடனடியாகவே எல்லாம் தலைகீழாகின என்பதை. அதில் மாங்குளமும் ஒன்றாகியது. மாங்குள நகர்த்திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. இப்பொழுது மாங்குளத்தில் மாடுகள் படுத்து உறங்குகின்றன. பெரியதொரு படைமுகாமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையும் உள்ளன. மாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட பெருமளவு காணி மந்தும் புதருமாகிக் காடு பத்திப்போயுள்ளது. அதில் ஒரு பகுதியில் இப்பொழுது யார் யாரோவெல்லாம் எதையோவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். மீதியும் விரைவில் காணாமல் போய் விடும். அப்படிப் போனால் நல்லது என்று நேர்த்தி வைப்போரும் உண்டு. இல்லையென்றால், மாங்குளத்துக்குப் போய் அங்கே வேலை செய்ய வேண்டும் அல்லவா! அது எவ்வளவு றிஸ்க்கான காரியம்? 

மாங்குளத்தில் நிர்மாணித்திருக்க வேண்டிய மாகாணசபைக் கட்டிடத்தை 2010 இல் அவசர அவசரமாக கைதடியில் நிறுவினார்கள் டக்ளஸ் தேவானந்தாவும் அப்போதைய ஆளுநராக இருந்த ஜீ.ஏ.சந்திரசிறியும். மாகாண சபைக் கட்டிடத்தை மட்டும் நிறுவி விட்டு அதன் கீழான அமைச்சுகளையும் ஏனைய பணிமனைகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள குச்சொழுங்கைகளுக்குள் உள்ள வீடுகளுக்குள் வைத்துக் கொண்டனர். இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகினார்கள் ஏனையோரெல்லாம். குறிப்பாக அதற்குப்பிறகு ஐந்து ஆண்டுகள் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆட்சி நடத்தியவர்களும் மாங்குள நகராக்கத்தைப் பற்றியும் மாகாணசபையை மாங்குளத்துக்கு இடம் மாற்றவதைப் பற்றியும் சிந்திக்கவேயில்லை. எல்லோருக்கும் தமிழீழக் கனவு கைதடிப் பாலத்துக்கு உள்ளேதான். மிஞ்சிப் போனால் ஆனையிறவுக்குள்ளேயே! 

இப்பொழுது மாங்குளத்தில் நகர நிர்மாணத்துக்கென அடையாளம் காணப்பட்ட காணிகளெல்லாம் பலராலும் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் அரசியல் அதிகாரமுள்ள தரப்புகளின் கைவிசை உச்சம். இதைக் கண்டும் காணாமலிருக்கின்றனர் அரச அதிகாரிகள். இப்படியே போனால் எதிர்காலத்தில் எந்தக் கொம்பராலும் மாங்குளத்தை நிமிர்த்தவே முடியாது. மட்டுமல்ல, இதை விட வேறொரு பொருத்தமான இடத்தை வடக்கின் புதிய நகருக்குத் தெரிவு செய்யவும் முடியாது. அப்படி வேறொரு இடமோ வேறொரு திட்டமோ இருந்தால் அதை அவர்கள் சொல்ல வேண்டும். 

ஆனால், 1990 இல் படையினரிடமிருந்து  மாங்குளத்தை விடுவிப்பதற்காகப் புலிகள் சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் கொஞ்சமல்ல. அப்போதங்கே கரும்புலியாக லெப் கேணல் போர்க் வெடித்துச் சிதறினார். 65 க்கு மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர். பலர் கை, கால், கண் எனத் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர். இதற்கு முன்பு நான்கு மாதங்களாக நீடித்த முற்றுகையிலும் குறிப்பிட்டளவு போராளிகள் தம்முயிரைத் தியாகம் செய்திருந்தனர். இவை எவற்றுக்கும் இன்று எந்த மதிப்புமில்லை என்றாகி விட்டது! ஏனெனில் இந்தத் தியாகத்தைப் புரிந்து கொள்ளவோ இந்த மாதிரித் தியாகம் செய்யவோ தயாரில்லாதவர்களின் யுகம் இது. என்பதால்தான் எல்லாமே தலைகீழாகி வருகின்றன. 

இப்போதுள்ள சூழலில் மாங்குளத்திலோ அல்லது அதை அண்மித்த பிரதேசங்களிலோ புதிய குடியேற்றத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிடலாம். அதற்கான சூழலும் சாத்தியப்பாடுகளும் அதிகமாக உண்டு. இதற்கான வாய்ப்புகளையும் தமிழ்த்தரப்பினர் அரசாங்கத்துக்குத் தாராளமாகவே வழங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் நாவற்குழியிலும் நடந்தது. அங்கே இருந்த காணியை ஏற்கனவே காணியற்ற சனங்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருந்தால் இன்று அங்கே பௌத்த விகாரை முளைத்திருக்குமா? சிங்களக் குடியேற்றம் பற்றிய விவகாரம் வந்திருக்குமா? இதைப் புத்திபூர்வமாகச் செய்யாமல் விட்டு விட்டு பிறகு அழுது புரள்வதாலும் கூக்குரலிடுவதாலும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. வெற்றிடங்களை விட்டு வைத்தால் அந்த வெற்றிடங்களில் தேவையற்ற விடயங்களே நிரம்பும் என்பது பொது விதி. இதுவே மாங்குளத்திலும் நடக்கும். நடக்கப்போகிறது. இதற்கு ஒரு அடையாளமே அழகிய பிரமாண்டமான பௌத்த விகாரை. 

இதற்குப் பிறகு அழுது புலம்புவதால் என்ன பயன்? 

இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது? யாரிடம் சொல்லி ஆறுவது? தீர்க்க தரிசிகளும் தியாகிகளும் தலைவர்களும் இல்லாத வெறும் தரிசாகி வருகிறதா தமிழ்ச்சமூகம்? தூர நோக்கோடு செயலாற்றக் கூடிய ஆற்றலர்களை எப்படி இத்தனை விரைவாக இழந்தோம்?  

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சூழல் எப்படி இருந்தது என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு விசயத்திலும் எத்தனை பெரிய ஆற்றல் வெளிப்பாடுகள். போரில், உட்கட்டுமான விருத்தியில், சமூகப் பாதுகாப்பில், பண்பாட்டு நெறிமுறைகளில், நிர்வாகத்தில், சனங்களுடைய வாழ்க்கை முறையில், நம்பிக்கையில், சூழல் பாதுகாப்புப் பற்றிய பிரக்ஞையில், அதற்கான செயற்பாடுகளில், மக்கள் மீதான நேசிப்பில், மக்களுக்காகத் தம்மை அர்ப்பணிப்பதில், தாயகம் பற்றிய கனவில், அந்தக் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் என அனைத்திலும் எவ்வளவு ஆற்றலர்களைக் கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம். அதை வைத்துத் தானே இன்னும் இந்த அரசியல் வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று ஒரு முதிய போராளி சொல்வது தவறில்லை.

இன்றோ!?