— ஏ.பீர்முகம்மது —
இலங்கையின் எழுபத்து மூன்றாவது சுதந்திர தினம் 04.02.2021 ஆகும். தேசிய கீதம் முக்கியத்துவம் பெறும் நிகழ்வு அது.
எனவே தேசிய கீதம் தொடர்பில் குறிப்பாக அதன் தமிழ் மொழி பெயர்ப்பினை செய்தவர் யார் என்பது தொடர்பில் இக்கட்டுரை நகர்கின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் மக்களிடையே நாட்டுப்பற்றை உருவாக்கும் விசுவாசத்தில் உலக நாடுகள் தேசிய கீதம் போன்றவற்றை அறிமுகம் செய்தன. முக்கிய நிகழ்வுகளில் அது இடம் பிடித்தது.
இந்தப் போக்கு ஐரோப்பா கடந்து இந்தியா வந்தபோது அங்கே சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதன் தாக்கம் இலங்கையிலும் காணப்பட்டது. இந்தப் புள்ளியிலிருந்துதான் இலங்கையின் தேசிய கீதத்தின் வரலாறு ஆரம்பமாகின்றது.
இலங்கை சுதந்திரமடையும் தருணத்தில் 04.02.1948 இல் பாடப்படுவதற்காக தேசிய கீதம் எழுதும் போட்டியை லங்கா காந்தர்வ சபா ஏற்பாடு செய்தது, இந்தப் போட்டியில் ஆநந்த சமரகோன் கலந்துகொண்டார். தேசிய கீதத்தை சிங்கள மொழியில் எழுதியவர் இவரே. கலைஞர், கவிஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல்திறன் கொண்டவர்.
இவர் 1940 இல் காலி மகிந்த கல்லூரியில் கடமையாற்றிய காலத்தில் தேசப்பற்றை உரமூட்டி வளர்க்கும் நோக்கில்
பாடலொன்றை எழுதினார். அதனோடு வேறு சில பாடல்களையும் உள்ளடக்கி “கீத குமுதினி” என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதிலிருந்த மேற்படி பாடலையே போட்டிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரது பாடல் தெரிவு செய்யப்படவில்லை.
பாடலைத் தெரிவு செய்யும் நடுவர்களாக கடமையாற்றிய பி.பி.இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க ஆகிய இருவரும் எழுதிய ‘ஸ்ரீலங்கா மாதா பல யச மகிமா’ என்று தொடங்கும் பாடலே சுதந்திர தினத்தில் (1948) தேசிய கீதமாகப் பாடப்பட்டது.
நடுவர்களாக இருந்தவர்களின் பாடலே தெரிவு என்று பலத்த விமர்சனம் மேற்கிளம்பிய நிலையில் அப்பாடல் ஒதுக்கப்பட்டு 1940 களில் இருந்து மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கிய ஆநந்த சமரக்கோன் எழுதிய கீதமே 1949 1950 சுதந்திர தினங்களில் பாடப்பட்டது. 1952 இல் இருந்தே உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பாடல் அமுலுக்கு வந்தது.
ஆநந்த சமரகோன் எழுதிய தேசிய கீதத்தை இலவசக் கல்வியின் தந்தை என்று அறியப்பட்ட சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? மு.நல்லதம்பிப் புலவர் என்றே இன்று வரை உறுதியாக நம்பப்பட்டு வருகின்றது.
எனினும் பயிற்சியில் இருக்கும் மேற்படி தகவலில் புள்ளி அளவிலான மாற்றுக்கருத்தும் உள்ளது.
என்.சரவணன் என்பவர் தினக்குரல் பத்திரிகையில் 22.03.2015 இல் தேசிய கீதம் தொடர்பில் எழுதிய கட்டுரை பின்வருமாறு பதிவு செய்கிறது
“தமிழில் இதன் மொழிபெயர்ப்பை செய்தவர் அப்போதைய பிரதி கல்வி அமைச்சர் கெ. கனகரத்தினம் என்கிற ஒரு ஊகம் இன்னமும் நிலவுகிறது. ஆனால் 1958 இல் புலவர் நல்லதம்பி இறந்த பின்னர் அவர் குறித்த கல்வெட்டு நினைவு நூலிலும் தேசிய கீத்தை தமிழ் படுத்தியவர் புலவர் நல்லதம்பி என்றே இருக்கிறது. ஆனால் உத்தியோக குறிப்புகளில் கெ.கனகரத்தினத்தின் பெயரே உள்ளது”
என்.சரவணனின் எழுத்திலான மேற்படி பந்தியில் இடம் பெற்றுள்ள ‘உத்தியோக குறிப்புகளில் என்ற சொல் அவதானத்திற்குரியது.
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கன்னங்கராவும் தமிழ் செய்த கனகரத்தினமும் அருகருகே அரசியல் களத்தில் இருந்தவர்கள். எனவே ஆங்கிலத்தை அவரும் தமிழை இவரும் கையிலெடுத்திருக்க வாய்ப்புண்டு.
சுதந்திர சதுக்க கட்டடத் திறப்பு விழாவின்போது பாடவென ஒரு வர்த்தமானி (04.02.1949) மற்றும் உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற வெளியிடப்பட்ட (22.11.1951) வர்த்தமானி என இரண்டு வர்த்தமானிகள் வெளியாகி இருந்தன. எனவே யார் எதை மொழிபெயர்த்தார்கள் என்ற கேள்வியும் உண்டு. (வர்த்தமானி குறிப்பிட்டு மொழிபெயர்ப்பு செய்தல்)
நல்லதம்பிப் புலவர் 1950 இல் மொழி பெயர்த்தார் என்ற தகவல் உண்டு. ஆனால் 1940 களில் இருந்து சமரகோனின் கீதம் அறிமுகமாகியிருந்தது.
சுதந்திரம் கிடைத்தபோது தேசிய கீதம் தொடர்பில் ஏற்பட்டிருந்த ‘சிக்கு முக்கு’ ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
எனவே தமிழ் மொழி பெயர்ப்பாளர் தொடர்பில் கருத்து மாறுபட வாய்ப்புண்டு.
யார் தமிழ் மொழி பெயர்ப்பாளர் என்ற கேள்வி உறுதிப்படுத்தப்பட்ட குறிப்புகள் என்ற சொற்களைச் சுமந்து கொண்டு நமக்கு முன்னால் வந்து நிற்கிறது.