சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)

சும்மா கிடைத்த சுதந்திரம் (?) ! (காலக்கண்ணாடி 21)

   — அழகு குணசீலன் — 

1948 முதல் தொடரும் பழைய பல்லவி 73வது வருடமாகவும் தொடர்கிறது. 

பெப்ரவரி நான்காம் திகதி மீண்டும் ஒருமுறை இலங்கை அரசு சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது என்பதுதான் அது. 

இந்தியாவிற்கு இருட்டில் கிடைத்தது போன்று இலங்கைக்கு சும்மா கிடைத்த சுதந்திரம்  இது.  

இதனாலோ என்னவோ சுதந்திரம் என்ற, பலகோணங்களில் திருப்பி திருப்பி அர்த்தத்தை  தேடலாகத் தருகின்ற இந்த வார்த்தையின் அர்த்தத்தை இலங்கைச் சமூகமும் அரசியலும் புரிந்து இருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது. 

சுதந்திரம், விடுதலை, புரட்சி என்று சமூக, பொருளாதார, அரசியல் உள்ளீடுகளை சுமந்து நிற்கின்ற இந்த வார்த்தைகள் வாயால் வெறுமனே உச்சரித்து விட்டு கடந்து செல்வதற்கானவை அல்ல. 

சுதந்திரம், விடுதலை, புரட்சி என்ற வார்த்தைகள் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்து தனியாக அடையாளப்படுத்துவது அரிதோ அப்படித்தான் அவற்றிற்கான தனி வரைவிலக்கணங்களை காண்பதும் அரிதிலும் அரிது. 

திட்டவட்டமாக சுதந்திரம் என்பதன் கருத்து இதுதான் என்று ஒரு வரையறைக்குள் குறுக்கி ஒரு வரைவிலக்கணம் கூறமுடியாது. அப்படிக் கூறினால்  அது சுதந்திரம் என்ற வார்த்தையின் வியாபகத்தை குறுக்குவதாக அமைந்துவிடும். 

இதனால், சுதந்திரம் பற்றி சமூகவிஞ்ஞானிகள் குறிப்பிட்ட சில கருத்துக்கள் காலக்கண்ணாடியில் பட்டுத் தெறிக்கின்றன. இவை சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரங்களை வெளிப்படுத்துகின்றன. 

“யார் மற்றவர்களின் சுதந்திரத்தை மறுக்கின்றார்களோ அவர்களும் சுதந்திரமானவர்கள் அல்ல.” -ஆபிரகாம் லிங்கன். 

“சுதந்திரம் என்பது ஒருவர் விரும்புவதைச் செய்வதல்ல. மாறாக அவர் விரும்பாததை செய்யாமல்இருப்பது”. -ரூசோ. 

“யார் பாதுகாப்புக்காக சுதந்திரத்தை கைவிடுகின்றார்களோ, இறுதியில் இரண்டையும் இழக்கின்றார்கள் ” — பிராங்கிளின். 

“உண்மையான சுதந்திரம் என்பது சமத்துவத்தை தவிர வேறொன்றும் இல்லை”.  — கோட்பிரிட் சோய்மே 

“துப்பாக்கியில் இருந்து அதிகாரம் பிறக்கிறது. பாதுகாப்பு உறுதித்தன்மை சுதந்திரத்தை விடவும் முக்கியமானது ” — மாவோ சேதுங். 

இந்தக் காட்சிகள் வாசகர்கள் சுதந்திரம் குறித்த பன்மைத்தன்மையை விளங்கிக் கொள்வதற்கு ஒரு அடிப்படையாக அமையலாம். 

இவை சுதந்திரம் என்ற சமுத்திரத்தில் ஒரு சில துளிகள் மட்டுமே. 

முதலாளித்துவத்தில் சுதந்திரம் கட்டாக்காலி! 

குடிமக்களின் அடிப்படை இறைமையான சுதந்திரம்  தத்துவார்த்த அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்கப்படுகின்ற ஒரு போக்கு பொதுவாக காணப்படுகின்றது. 

முதலாளித்துவ தாராள பொருளாதாரக் கட்டமைப்பில் சுதந்திரம் கட்டுப்பாடுகள் அற்ற தனிமனித, சமூக செயற்பாடாக காட்டப்படுகிறது. இதனை கட்டாக்காலி சுதந்திரம் என்று குறிப்பிடலாம். 

“சுதந்திரம் என்பது சுயமாக தீர்மானம் எடுத்தல் அல்லது கட்டாயப்படுத்தல்கள் இன்றி பல வாய்ப்புக்களுக்கு இடையே தேர்வு செய்தல்” என்றும் கொள்ளப்படுகிறது. 

இங்கு சுதந்திரமானது சுயநிர்ணயம் : அதாவது கருத்து சுதந்திரம், விரும்பும் சுதந்திரம், தேர்வு  சுதந்திரம், கையாளும் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், கற்கைச் சுதந்திரம், மதசுதந்திரம், ஊடகசுதந்திரம், உடன்பாட்டுச் சுதந்திரம்………..இப்படி தொடர்கிறது. 

“ஒரு நாளில் காலையில் எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையும் உன்னால் சுயமாக  சகலதையும் தீர்மானிக்க முடியுமானால் அன்றைய பொழுது உனக்கு சுதந்திரமானது.” 

மேலே கூறப்பட்ட. இவை முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் அரசியல் அமைப்புக்களில் வரிக்கு வரி அழுத்தமாக கூறப்பட்டிருப்பவை. 

இதன் அர்த்தம் நடைமுறையில் இந்த நாட்டு குடிமக்கள் எல்லோரும் சுதந்திரமானவர்கள் என்பதல்ல. இது வெறும் காகித ஆவணம். 

எது எவ்வாறாயினும் இறுதியில் பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிப்பதாக உள்ளது. இந்த நிலையில் ஒரு ஜனநாயக நாட்டில் பொருளாதார சமத்துவம் இல்லையேல் அரசியல் அமைப்புக்கள் குறிப்பிடுகின்ற சுதந்திரங்கள் மக்களுக்கு வெறும் எட்டாக்கனியாகவே இருக்கும். 

இதனால்தான் மானிட சுதந்திரம் அல்லது விடுதலை என்பது உண்மையில் சமத்துவம் என்றும் இது சமூக, பால், பொருளாதார சமத்துவம் சார்ந்தது என்றும் கூறப்படுகின்றது. வர்க்க சமநிலை அற்ற ஒரு சமூகத்தில் சுதந்திரமானது சமூகத்தில் சமமாக இருக்கமுடியாது. 

இங்கு நிலவும் கட்டுப்பாடற்ற கட்டாக்காலி கொள்கை சுதந்திரம் சகல குடி மக்களுக்கும் சமமாக இருப்பதை பாதுகாக்கத் தவறுகிறது. 

சோஷலிசத்தில் சுதந்திரம் கடிவாளம்! 

“துப்பாக்கியில் இருந்து அதிகாரம் பிறக்கின்றது”! 

மாமேதை மாவோவின் வார்த்தைகள் இவை. ஒரு புரட்சி என்பது ஒரு கலகம். வன்முறையூடாக ஒரு வர்க்கம் மற்ற வர்க்கத்தை வீழ்த்துவது.  

இங்கு சுதந்திரமானது ஜனநாயக வியாக்கியானத்தில் இருந்து வேறுபட்டது. 

பாதுகாப்பும், உறுதித்தன்மையும் சுதந்திரத்தை விடவும் முக்கியமானவை. மார்க்சிய அணுகுமுறைகளில் முதலாளித்துவ ஜனநாயகம் கூறுகின்ற கட்டாக்காலி சுதந்திரத்திற்கு இடமில்லை. 

யார் பாதுகாப்பை உணர்கிறார்களோ அவர்கள் சதந்திரமாகச் செயற்படமுடியும்.  

யாருக்கு அளவுக்கதிகமான கட்டாக்காலி சுதந்திரம் உள்ளதோ அவர்கள் அதன் மூலம் மற்றவர்களை பாதிப்படையச் செய்வர். 

பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்டங்கள், கண்காணிப்புக்கள், தணிக்கைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் உண்டு. இவை தனிநபரின்-சமூகத்தின் சுதந்திரங்களை ஒப்பீட்டளவில் ஜனநாயக சூழலைவிடவும் மட்டுப்படுத்தும். ஆனால் மறுபக்கத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். 

கட்டுப்பாடுகள் அற்ற கட்டாக்காலி முதலாளித்துவ சுதந்திரம் சமூகத்தில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி சமத்துவமற்ற சுதந்திரத்திற்கு வழிவகுக்கின்றது. 

மார்க்சிய அணுகுமுறைகளில் சகல சமத்துவங்களும் முதன்மையாக உள்ளதால் பாதுகாப்பு என்ற நெறிப்படுத்தல் ஊடாக சமசுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்று வாதிடப்படுகின்றது. இந்த நெறிப்படுத்தலை இங்கு கடிவாளம் என்று குறிப்பிடலாம். 

இலங்கையில் இரு வேறு கண்ணாடிகள். 

சுதந்திர(?) இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் வரலாற்றையும், தமிழ் குறுந்தேசியவாத அரசியலையும் உற்று நோக்குகின்ற போது இருதரப்பினரும் இருவேறு கண்ணாடிகளைப் போட்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். 

இதனால்தான் ஒரு பகுதியினர் சுதந்திரம்(?) கொண்டாட மறு பகுதியினர் கரிநாள் அனுட்டிக்கின்றனர்.  

தமிழர் தரப்பு சிங்களவருக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பெற்ற சுதந்திரத்தை தங்களோடு பங்கிடாமல், தங்களையும் சுதந்திரத்தின் பங்காளிகளாகக் கொள்ளாமல் தனியாக அனுபவிக்கின்றனர் என்று பார்க்கின்றனர். 

சிங்களவர்களோ உலகில் எங்களுக்கு உள்ள ஒரே நாடு இதுதான். எங்கள் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள எங்களுக்கு இல்லாத அதிக சுதந்திரத்தை தமிழர்கள் அனுபவிக்கின்றனர் என்று நினைக்கின்றனர். 

இது அவரவர் கண்ணாடிகள் காட்டுகின்ற  பொய்மை.  

இருதரப்பு அரசியலும் கட்சி அரசியல் நலன் சார்ந்து புனைந்த கதை. 

இலங்கையில் தனிச்சிங்கள சட்டம்கொண்டு வரப்பட்டபோது இந்த முரண்பாடான பார்வை வெளிப்பட்டது. 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கல்விக் கொள்கை தமது நிர்வாகத்திற்கு தேவையானவர்களை உற்பத்தி செய்வதாக இருந்தது.  

இதற்கு கொழும்பும், யாழ்ப்பாணமும் ஆங்கிலக் கல்வி தொழிற்சாலைகளாக இருந்தன. 

சனத்தொகை விகிதாசாரத்தில் அதிக பங்கு வகித்த பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், யாழ்குடாநாட்டிற்கு வெளியே வாழ்ந்த தமிழ், முஸ்லீம், மலையக சிறுபான்மை மக்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையும் சிங்கள தேசியவாதிகளை உசுப்பிவிட தனிச்சிங்கள சட்டத்தை நிறைவேற்றி பெற்ற சுதந்திரத்தின்,(?) பலனாக சிங்களமக்களுக்கு காட்டினர். இதனூடாக பிரித்தானிய ஆட்சியில் தமிழர்கள் அளவுக்கதிகமான பங்கைப் பெற்றிருந்ததை அரசியல் ரீதியில் வெளிப்படுத்தினர். 

இந்தப் புள்ளியில் இருந்தே இரு வேறு கண்ணாடிகளூடாக சுதந்திரம் பார்க்கப்பட்டது.  சுதந்திரம் தமது உரிமைகளைப் பறித்து சிங்களவர்களுக்கு கொடுத்துவிட்டது என்று தமிழர்கள் எண்ணத் தொடங்கினர். இதன் விளைவுதான் தமிழர்களுக்கு கரிநாள். சிங்கவர்களுக்கு சுதந்திரநாள். 

காலனித்துவ ஆட்சி நிர்வாகத்தின் வசதிக்காக முற்றிலும் வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் பண்புகளைக் கொண்ட இரு தேசிய இனங்களைக் கொண்ட இரு தேசங்கள் இணைக்கப்பட்டன.  

விளைவு: ஒன்றிணைந்த இலங்கைத்தீவில் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை பெரும்பான்மை விழுங்கிக் கொண்டது. சோல்பரி அரசியலமைப்பில் தொங்கிக் கொண்டிருந்த சிறு பாதுகாப்பையும் குடியரசு அரசியலமைப்பு பறிக்க கரிநாளும் சுதந்திரநாளும் இலங்கைத்தீவில் இருநாடுகள் என்பதை இன்னும் ஒருமுறை உறுதியாக்கியது. 

தமிழர்களும், சிங்களவர்களும் அருகருகே அமைந்திருக்கின்ற சமாந்தர தண்டவாளத்தில் இனவாதத்தை சுமந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். 

ஒன்றிணைந்த வாழ்விற்கான கனவு கலைந்து தொலைகிறது. 

நாகரிகமாக நுழையும் நவகாலனித்துவம் ! 

சும்மா கிடைத்த சுதந்திரத்தின் பின் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் பெரும் ஆட்டம் காணத்தொடங்கியிருக்கின்ற காலம் இது. 

காலத்திற்கு காலம் ஆதிக்க சக்திகள் வெவ்வேறு வடிவங்களில் நாகரிகமாக சுயாதீன நாடுகளில் தலையிடுவது வரலாறாக உள்ளது. 

சமகாலத்தில் உலகமயமாக்கல் தாராள பொருளாதார முதலீட்டுக் கொள்கை மற்றும் உள்நாட்டு  இன, மத, சமூக மோதல்களைப் பயன்படுத்தி இலகுவாக நவகாலனித்துவம் நுழைந்துவிடுகிறது. 

இன்றைய இலங்கையில் பொருளாதாரம் சார்ந்து வெளிப்படையாக சீனாவும், இந்தியாவும் தங்கள் ஆதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளன. 

மறுபக்கத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குபவர்கள் போன்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் களத்தில் இறங்கி உள்ளனர். 

ஆதிக்க சக்திகள் சர்வதேச, பிராந்திய அமைப்புக்களை விலைக்கு வாங்குவது நவகாலனித்துவத்தின் ஒரு யுக்தியாக உள்ளது. இதனால்தான் அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம் ஐ.நா அமைப்புக்கள் பலவற்றிற்கான நிதிவழங்கலை குறைத்தபோது சீனா நிதிவழங்கலைச் செய்து ஐ.நா அமைப்புக்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டது. 

அரசியல் விவகாரங்களை பொருளாதாரம் நிர்ணயிக்கும் காலம் இது. 

யுத்தம் ஒன்று நடக்கும்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு ஆயுதங்களை விற்பதும், பயிற்சிகளை வழங்குவதும் இந்த நாடுகள்தான். 

அதேவேளை மக்கள் அழியும் போது மனித உரிமைகள்பற்றி அறிக்கை ஒன்றைவிட்டுவிட்டு தங்கள் வியாபாரத்தை செய்வதும் இவர்கள்தான். 

எல்லாம் முடிந்த பின் போர்க்குற்றம், ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிவிசாரணை என்றெல்லாம் தமது முகவர் அமைப்புக்களுக்கூடாக உள் நுழையும் நவகாலனித்துவம். 

இதில் வேடிக்கை என்னவென்றால் போரின் பங்காளிகள் இவர்களை இனம்காணாமல் அல்லது கண்டும் சுய அரசியல் இலாபத்திற்காக கூவி அழைக்கிறார்கள்.  

இதன் மூலம் கொஞ்சம் மிஞ்சி இருக்கிற சுதந்திரத்தையும் அவர்கள் கையில் கொடுத்துவிட்டு  எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் எஜமான்களே என்று நவ அடிமைகளாய் அவர்களின் காலடியில் விழுகிறார்கள்.    

இதை கரிநாள்காரரும் செய்கிறார்கள். சுதந்திரக்காரரும் செய்கிறார்கள். 

இதை சுதந்திரத்திற்காக போராடியவர்களும் செய்கிறார்கள். போராட்டத்தை அழித்த அடக்குமுறையாளர்களும் செய்கிறார்கள். 

விடுதலை கேட்ட இனமும் செய்கிறது. விடுதலையை மறுத்த இனமும் செய்கிறது. 

சுதந்திரத்தின் அருமை, பெருமை தெரியாதவர்களுக்கு, மற்றவர்களின் சுதந்திரத்தை மறுத்து, தங்கள் சுதந்திரத்தையும் இழந்தவர்களுக்கு சுதந்திரம் வேண்டுமாம்…….? 

ஆக! சுதந்திரமா? அது என்ன சாமான்?? கிலோ என்ன விலை ???  

இறுதியாக, சுதந்திரம் பிரியர்களுக்கு…………..! 

” உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்காக நான் போராடுவேன் ” வோல்ரயர்.