— சிக்மலிங்கம் றெஜினோல்ட் —
ஒரு காலம் “விடுதலை அரசியலே வேதம். அதற்கான போராட்டமே முக்கியமானது” என்று உச்சத் தொனியில் முரசறைவதைப்போல வாதிட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், அண்மைக்காலமாக “இனி அபிவிருத்தியே தேவை. அதுவே சரிப்படும். இல்லையென்றால் நாம் இன்னும் பலவீனப்படுத்தப்பட்டுத் தோற்கடிக்கப்படுவோம். நான் அரசியலைப் பற்றிக் கதைப்பதையும் விட அபிவிருத்தியைப் பற்றியே கதைக்க விரும்புகிறேன்” என்று சொல்லி (பாடம் நடத்த)த் தொடங்கியிருக்கிறார்.
இது உங்களுக்கும் புதிதல்ல. எனக்கும் புதிதில்லை. இப்படி ஆயிரம் குரல்களைக் கேட்டிருப்பீர்கள். இந்த மாதிரிப் பலரைக் கண்டிருப்பீர்கள். ஆகவே இதொன்றும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது. கவுண்டமணி சொல்வதைப்போல “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா”என்று கடந்து சென்று விட வேண்டியதுதான் என்று நீங்கள் யோசிக்கக் கூடும். ஆனால், அப்படிக் கடந்து சென்று விடக் கூடாது. செல்லவும் முடியாது.
அரசியலிலும் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அது தவிர்க்க முடியாத ஒன்றே. மாற்றம் நிகழாமல் எதுவுமேயில்லை. அப்படி நிகழவில்லை என்றால்தான் பிழை. அது தேக்கமாகி விடும். தேக்கம் வளர்ச்சியின்மையையே குறிக்கும். ஆகவே வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் நாம் மாற்றத்தை உள்வாங்கியே ஆக வேண்டும்.
ஆனால், அந்த மாற்றம் சரியானதாக, நேர்மையானதாக, அடிப்படைகளை உடையதாக, நியாயமானதாக இருக்க வேண்டும். அதையே கால மாற்றம் என்கிறார்கள். கால, தேச வர்த்தமானங்களை உள்வாங்கிய மாற்றம் அது. பதிலாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரிக் குத்துக் கரணம் அடிக்கும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
தனிப்பட்ட நலன்களுக்காக நியாயப்படுத்தல்கள் ஏற்புடையதல்ல. அப்படி இருக்குமானால் அது மாற்றமாக – வளர்ச்சியாக, முன்னேற்றமாக இருக்காமல், ஏமாற்றமாக – எதிர்மறையாக – வீழ்ச்சிக்குரியதாகவே அமையும்.
இதனால்தான் மாற்றம் என்ற சொல்லாடலைக் குறித்துக் குழப்பமும் அதனையிட்ட சந்தேகங்களும் மக்களுக்கு உண்டாவது. இதைப்போல தங்கள் நலனுக்காக மாற்றங்களையே விரும்பாமல் இருப்போரும் உண்டு. அவர்களும் மக்கள் விரோதிகளே. காலப் பகையாளிகளே. இதைப்பற்றியெல்லாம் விரிவாகப் பேசலாம். பேசவேண்டும்.
இப்போது நம்முடைய நண்பர் சொன்ன அபிவிருத்தியைப் பற்றிக் கொஞ்சம் கவனிக்கலாம்.
“அபிவிருத்தி” என்றொரு தரப்பும்“ அரசியல் உரிமை” என்றொரு தரப்புமாக இரண்டு வழிகளில் – இரண்டு வார்த்தைகளில் – இரண்டு அடையாளப்படுத்தல்களில் தமிழ் மக்களுடைய அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு தரப்பும் ஒன்றை ஒன்று பழித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் மக்களிடம் வேலை செய்கின்றன.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தரப்புக்கும் குறிப்பிட்டளவு தொகை மக்கள் ஆதரவளிக்கிறார்கள். அப்படியென்றால் இரண்டு கருத்து நிலைக்கும் பொதுவெளியில் இடமுண்டு. இது இரண்டும் தேவை அல்லது இரண்டையும் தேவை எனக் கொள்வோர் நம்முடைய சூழலில் உண்டு என்று அர்த்தமாகிறது.
ஆனால், இந்த இரண்டும் தனித்தனியான இரண்டாகும். இதற்கு அப்பால் இவை இரண்டையும் இணைத்துச்செல்லும் ஒரு அரசியல் தேவை. அதை முன்னெடுப்போர் வேண்டும்.
அவர்கள் பலமடைய வேண்டும். அவர்கள் அதற்காக அரசியலை முன்வைத்துச் செயற்படக் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.அதற்கான ஆதரவை மக்கள் நிச்சயமாக வழங்குவார்கள். ஏனென்றால், அதுதான் தமிழ்ச் சமூகத்துக்குத் தேவையே தவிர, தனியே அபிவிருத்தி என்ற ஒருமைப்படுத்தப்பட்ட அரசியல் அல்ல. அது தனியே ஒற்றை வழிப்பாதை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகள் தொடக்கம் வாழும் உரிமைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதொரு சமூகத்துக்கு ஏற்புடையதல்ல.
ஏறக்குறைய 2015 இல் இந்த வழிமுறையைப் பின்பற்ற முனைந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதிலும் முழுமை நிலைத்தன்மை உருவாகவில்லை. அதற்கிடையில் பிறகு வந்த ஆட்சி மாற்றத்தினால் இது தொடரவும் இல்லை. வளரவும் இல்லாமல் போய்விட்டது.
இப்போதுள்ள அரசாங்கம் அபிவிருத்தி என்ற சொல்லை மந்திரக் கயிறாக்கி எல்லாப் பிரச்சினைகளுக்கும் அந்தக் கயிற்றைக் கட்டித் தீர்வைக் கண்டு விடலாம் என்று கனவு காண்கிறது. ஆனால், அது சொல்வதைப்போல இலங்கையில் மேற்கொள்ளப்படுவது அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கான ஆரம்பநிலை வேலைகள் மட்டுமே. உட்கட்டுமான விருத்திகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அவ்வளவுதான். அதைச் செய்யும் முறை கூடத் தவறானது. உண்மையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பதும் அபிவிருத்திச் சிந்தனை என்பதும் பன்முகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் உரியது. அனைத்துத் தரப்பின் பங்கேற்பும் அனைவருக்கும் உரித்துடையதுமாகும். அதிலேயே விடுதலைக்கான அடிப்படைகளும் அதற்கான பண்புகளும் உண்டு. முக்கியமாக சமூக பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியோடு சூழல் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே அபிவிருத்தியாகும்.
இந்த அடிப்படையில் இங்கே அபிவிருத்திக்கான செயற்பாடுகளோ அல்லது முன்னோட்டங்களோ மேற்கொள்ளப்படுகிறதா? இல்லையே!
இங்கே நடப்பதெல்லாம் அதன் பேரிலான அரசியல். மக்களுடைய பணத்தில், மக்களுக்கான பணத்தில் தமக்கான அரசியலையே ஆளும் தரப்பினர் செய்கின்றனர். இதில் எந்த ஆளும் தரப்பும் விலக்கல்ல. எந்த அதிகாரத்தரப்பும் இதிலிருந்து விலகவுமில்லை. அதாவது சனங்களின் காசில் – சனங்களுக்கான காசில் தமது அரசியலை (அந்த அரசியலே தவறானதுதான்) செய்கிறார்கள்.
மீள் குடியேற்றத்திலிருந்து இப்போது வரையில் யாரோதான் நமக்கு என்ன வேணும் என்று யோசிக்கிறார்கள். அவர்களே நமக்கானதையெல்லாம் திட்டமிடுகிறார்கள். நம்மிடம் அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசுவதுமில்லை. கேட்பதுமில்லை. அங்கிருந்து திட்டங்கள் வரும். அதற்கான காசும் வருகிறது. அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மட்டுமே இங்கே நம்முடைய வேலையாக உள்ளது. இது கூட ஒருவகையில் நம்முடைய சுயத்தையும் சுயாதீனத்தையும் அழிப்பதுதான்.
பசிக்கு உணவு வேண்டும் என்பது உண்மை. ஆனால் எதை எப்படிச் சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை. இதைத்தான் நீங்கள் உண்ண வேண்டும். இதுதான் உங்களுக்கு உணவு. இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வது எந்தளவுக்கு நியாயமானது?
இதைப்பற்றி நண்பரிடம் சொன்னேன். அவர் எழுந்து கதவைச் சாத்தி விட்டு உள்ளே சென்று விட்டார்.
சற்று நேரத்தின் பின் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. “சுத்தி வளைச்சுப் பேசாமல் உங்களுக்கு என்ன தேவை எண்டு சொல்லுங்கோ. ஒன்றும் பிரச்சினையில்லை. செய்யலாம்” என்றார்.
இதை என்னவென்று சொல்வது?