— வேதநாயகம் தபேந்திரன் —
”புகையிலை வித்துப் போட்டுக் காசுதாறன்? இந்த வருசம் புகையிலை வித்த பின்பு மூத்தவளின் கலியாணத்தை வைப்பம்”
இது யாழ்ப்பாண விவசாயிகளுக்கிடையில் ஒரு காலத்தில் பிரபலமாக நடந்த உரையாடல்கள்.
புகையிலையைக் காசுப் பயிராக வளர்த்து நன்மையடைந்த பல்லாயிரம் விவசாயிகள் இருந்தனர்.
புகையிலைச் செய்கையை ஊக்குவிப்பதில்லை என்ற கொள்கை அரசாங்க மட்டத்தில் கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்ததனால் தற்போது விவசாயத்தில் புகையிலையின் வகிபாகம் குறைவடையத் தொடங்கி விட்டது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஜேர்மனியில் சிகரெட் “டொச் மார்க்” நாணயத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் உண்டு.
ஹிட்லர் பொதுமக்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதற்காக நாணயத்தாள்களைத் தாராளமாக அச்சிட்டு வழங்கினார். அதனால் பணத்தின் பெறுமதி குறைந்தது. பணத்துக்குப் பதிலாக அருமையாகக் கிடைத்த சிகரெட் நாணயமாகப் பயன்பட்டதாம்.
மக்களின் ஏற்புடமை தானே நாணயம் என்பது.
எமது நாட்டிலும் சிகரெட் பாவனையாளர்களின் தொகை வெகுவாகக் குறைந்து கொண்டேவருவதாகத் தான் புள்ளி விபரங்கள் காட்டுகின்றது.
பொது இடங்களில் சிகரெட் புகைத்தல் கூடாதென்ற சட்டம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவது பிரதான காரணமாக இருக்கலாம்.
சாராயம் குடிக்கும் பழக்கத்தை மனம் வைத்தால் கைவிடலாம். ஆனால் சிகரெட் குடிக்கும் பழக்கத்தை அவ்வாறு விட முடியாது என்கின்றனர் சிகரெட் பாவனையாளர்கள்.
ஆனால் இரண்டுமே உடல் நலத்திற்குக் கேடானவை.
சிகெரட் குடித்தால் தான் வயிற்றாலபோகும். சிகரெட் குடித்தால் தான் ஐடியாவரும். இப்படியான உளவியல் உடையோர் இருந்தார்கள். தற்போதும் இருக்கிறார்கள்.
தற்காலத்தில் வெளியாகும் திரைப்படங்களில் சிகரெட் குடித்தல், மதுபானம் அருந்தும் கட்டங்கள் வரும்போது அவை உடல் நலத்திற்குக் கேடானது என்ற வசனம் காட்டப்படுகின்றது.
அதிலும் திரைப்படங்கள் ஆரம்பமாகும் போது முதலாவதாக தமிழ், ஆங்கில மொழிகளில் இவை உடல் நலத்திற்குக் கேடானவை என்ற பரப்புரை காட்டப்படுகின்றது.
புகையிலை பயிரிடுவதனைப் பிரித்தானியர்கள் தான் இலங்கையில் அறிமுகப்படுத்தினார்கள்.ஆபிரிக்க நாடுகளில் இருந்து புகையிலை விதை நாற்றுகளைக் கொண்டு வந்து தோட்டச்செய்கையில் பரம்பரை அனுபவமுள்ள யாழ்ப்பாண மண்ணில் அறிமுகம் செய்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் விளைந்த புகையிலையை வத்தைகளில் ஏற்றி விற்பனைக்காக இந்தியாவின் கேரளாவுக்கு யாழ்ப்பாண விவசாயிகள் கொண்டு சென்றனர்.
அங்குள்ள கோழிக்கோடு எனுமிடத்தில் விளையும் வாழை இனத்தைக் கொண்டுவந்து இங்கு பயிரிட்டார்கள்.
கப்பலில் வந்தமையால் கப்பல் பழமெனவும், கோழிக் கோட்டிலிருந்து வந்தமையால் கோழிக்கோட்டுப் பழமெனவும் அழைக்கப்பட்டது.
கேரளாவில் யாழ்ப்பாணத்தவர்களின் புகையிலையை வாங்கும் வர்த்தகர்கள் ஒரு முறை யாழ்ப்பாணம் பார்க்க வரப்போகின்றோமென வந்தார்களாம். வந்து பார்த்த பின்பு தங்களது கேரளாவை ஒத்த காலநிலை தான் இங்கும் உள்ளது. அதனால் புகையிலை விதைகளைத்தாருங்கள், நாம் அங்கு எமது கேரளமண்ணில் விதைக்கப் போகின்றோம் என்றார்களாம்.
யாழ்ப்பாணத்து விவசாயிகள் பார்த்தார்களாம் ”அட எங்கட பிழைப்பில் மண் விழப் போகின்றது” என்று தந்திரமாக புகையிலை விதைகளை அவர்களுக்குத் தெரியாமல் தாச்சியில் வறுத்து விட்டுக் கொடுத்தார்களாம்.
மலையாளிகள் அவற்றை ஆசையுடன் எடுத்துச் சென்று தமது மண்ணில் விதைத்தார்களாம். ஒரு விதையும் முளைக்கவில்லையாம்.
அதனை யாழ்ப்பாண விவசாயிகளுக்குக்கூற ”இது எங்கள் யாழ்ப்பாண மண்ணில் மட்டும் தான் முளைக்குமென நினைக்கின்றோம்” எனக்கூறினார்களாம் என்றொரு பழைய கதை உண்டு.
பிரித்தானிய சிலோன் ரூபாக்கோகொம்பனி தொடர்பாக மிக நீண்ட வரலாறு உண்டு.
மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ருபாக்கோவிலிருந்து புகையிலைப் பயிர் பரவியதாக வரலாறு உண்டு.
இலங்கையில் 1960 களில் பீகொக் (மயில்), நெவிக்கற், கப்ஸ்ரன், திறீரோசஸ் ஆகிய சிகரெட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இந்தச் சிகரெட்டுகளுக்குப் பில்ரர் இல்லை. அதாவது சிகரெட் சொண்டில்சு சுடாதபடி இருக்கும் ஒரு வகைப் பஞ்சுக்கட்டை எனலாம்.
பின்னாளில் போரெசஸ் எனும் சிகரெட்டுக்கே பில்ரர் முதன்முதலில் அறிமுகமானது.
பில்ரர் இல்லாத காலத்தில் சிகரெட்டின் அடிப்பகுதி வரை புகைத்துச் சொண்டைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர்.
தொடர்ந்து சிகரெட் புகைப்போரது சொண்டு கறுப்பாக வரும். பில்ரர் இல்லாத காலத்தில் சொண்டு முழுமையான கறுப்பாகவே வரும்.
பில்ரர் வந்த காலத்தில் சொண்டு கறுப்படையும் தன்மை குறைவடைந்தது.
முன்னாளில் நெவிக்கற் எனப்பட்ட சிகரெட் பின்னாளில் கோல்ட் லீவ் என்ற பெயருடன் பில்ரர் வைத்ததாக புழக்கத்தில் வந்தது. அத்துடன் பிறிஸ்ரல் எனும் சிகரெட்டும் பாவனையில் இருந்தது.
1980 களில் பிறிஸ்ரல் சிகரெட்டே பிரபலமாக இருந்தது. தற்போது அந்த இடத்தைக் கோல்ட்லீவ் சிகரெட் பிடித்துவிட்டது.
புலம்பெயர் தேசங்களில் உள்ள வகைவகையான சிகெரெட்டுகளும் உள்ளுரில் அவ்வப்போது புழக்கத்திற்குவரும்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை வரும் போது சிகரெட், சாராய வகைகளுக்கு விலையைக் கூட்டி ஒரு பகுதி நிதியீட்டத்தைச் செய்யும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் பீடி சுற்றுதல் தாவடி, மானிப்பாய், ஆனைக்கோட்டை ஆகிய கிராமங்களில் குடிசைக் கைத்தொழிலாக இருந்தது.
அது போல பீடிக்கு லேபல் ஒட்டுதலும் பரவலான குடிசைக் கைத்தொழிலாக இருந்தது.
இந்தியாவிலிருந்து பீடிப் புகையிலை இறக்குமதி செய்து பீடியைச் சுற்றினார்கள்.
ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த சேலம் பீடி பிரபலமாக இருந்தது.
ஆர்விஜி பீடி, யாழ்ப்பாணம் சின்னத்துரை அன்ட் பிரதர்ஸ் நிறுவனத்தின் கல்கி பீடி, மகாராஜா நிறுவனத்தினரின் ராஜா பீடி, நீதிராஜா என்பவரின் யானை பீடி என்பவை பிரபலமாக இருந்தன.
சின்னத்துரை அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முதலாளி சின்னத்துரை இதனால் கல்கி சின்னத்துரையெனவும் அழைக்கப்பட்டார்.
ஆரம்ப காலத்தில் பீடிக்கு லேபல் ஒட்டுதல் இருக்கவில்லை. பின்னாளில் ராஜா பீடிக்கு நூலுக்கு மேலாக லேபல் ஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஏனையோரும் லேபல் ஒட்டும் பழக்கத்தைக் கொண்டு வந்தார்கள்.
சுருட்டுச் சுற்றும் கைத்தொழிலும் பெரியதொரு கைத்தொழிலாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இருந்தது.
ஒரு காலத்தில் சுங்கானில் புகைக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. வயது மூத்தபெண்கள் கூடச் சுங்கானில் புகைத்தார்கள்.
சந்து பொந்துக் கடைகளில் எல்லாம் சுறுசுறுப்பாக நடைபெற்ற சிகரெட், சுருட்டு, பீடி வியாபாரங்கள் தற்போது மிகவும் குறைவாகவே நடைபெறுகின்றதெனலாம்.
காலமாற்றம் சிகரெட், சுருட்டு, பீடி குடிப்போரது தொகையைக் குறைத்துவிட்டது. இது உடல் ஆரோக்கியம் குறித்த நல்லதொரு விழிப்புணர்வு எனலாம்.