தமிழ், அறபு ஆகிய மொழிகளுக்கிடையிலான சமரசத்தில் பிறந்த அறபுத் தமிழ்

தமிழ், அறபு ஆகிய மொழிகளுக்கிடையிலான சமரசத்தில் பிறந்த அறபுத் தமிழ்

   — ஏ.பீர் முகம்மது — 

ஆங்கில நெடுங்கணக்கிலுள்ள இருபத்தாறு எழுத்துக்களையும் முழுமையாகவோ பகுதியாகவோ பயன்படுத்தும் மொழிகள் இன்றைய உலகில் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவ்வாறே அறபு எழுத்துக்களை வரிவடிமாகப் பயன்படுத்தும் பல மொழிகளும் உள்ளன. வேறு மொழிகளிலிலிருந்து எழுத்துக்களைப் பெற்றாலும்கூட அம்மொழிகள் தனது இலக்கியத்தாலும் இலக்கணத்தாலும் கலாசாரப் பிணைப்புகளாலும் தனியொரு மொழியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால் அறபுத் தமிழ் என்பது இவற்றிலிருந்து வேறுபட்ட மொழி மரபைக் கொண்டது.                                                    

அறபுத் தமிழ் என்பது அறபு லிபியில்(அறபு எழுத்தில்) தமிழை எழுதும் மொழி சார்ந்த விடயமாகும். இந்த மொழி இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நீண்டகாலமாக பாரிய அளவில் பாவனையில் இருந்துள்ளது. வேதநூலான பைபிள் அறபுத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது என்ற தகவல் அறபுத் தமிழின் முக்கியத்துவத்தை எண்பிக்கும்.

அ) அறபுத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்                             

ஆ) அது மொழியின் வகைக்குள் அடங்குமா?                          

 இ) தமிழ் மொழிக்கும் அறபு மொழிக்கும் இடையிலான சமரசம்                              

ஈ)  அறபுத் தமிழ் இலக்கியம்  

என்பவற்றை மையமாகக் கொண்டதே இக்கட்டுரையாகும்.   

அறபு மக்கள் சங்ககாலம் தொடக்கம் தென்னிந்தியா இலங்கை போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகின்றது. பிற்காலத்தில் இஸ்லாத்தின் தோற்றத்துடன் இப்பிரதேசங்களில் அறபுக் குடியேற்றங்கள் ஏற்பட்டன. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் பேசிவந்த நிலையில் அவர்களின் நாளாந்த சமயக் கடமைகளில் அறபு மொழியின் தேவை உணரப்பட்டது. எனவே இலக்கியச் செழுமை கொண்ட தமிழ் மொழிக்கும் அதேபோன்ற இலக்கிய வளம் கொண்ட அறபு மொழிக்குமிடையே நிகழ்ந்த கலாசாரத் தழுவலின் விளைவே அறபுத் தமிழின் தோற்றமாகும்.  

முஸ்லிம்கள் தமது கருத்து வெளிப்பாட்டு ஊடகமாக தமிழைப் பயன்படுத்திய அதேநேரம் கலாசார தனித்துவத்தைப் பேணும் எழுத்து முயற்சிகளுக்கு அறபு லிபியைப் பயன்படுத்தினர். போர்த்துக்கேயத் தளபதி ஒடோராடோ பார்போசா என்பவரின் இலங்கை முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட மொழிகள் பற்றிய குறிப்பு அறபுத் தமிழின் முக்கியத்துவத்தையே நிறுவுகின்றது  

போத்துக்கீசரின் வருகையில் ஆரம்பித்து ஒல்லாந்தரின் ஆட்சி முடிவுறும் வரையான காலம் இலங்கை முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைளுக்குப் பாதகமாகவே இருந்தது. அத்துடன் அறபுத் தமிழில் எழுந்த இலக்கிய ஏடுகளும் கையெழுத்துச் சுவடிகளும் அழிந்து போகவும் காரணமாயிற்று. எனினும் 1796இல் ஆங்கிலேயரின் ஆட்சியுடன் அறபுத் தமிழ் மரபுரீதியான மொழி என்ற கோலத்துடன் எழுச்சி பெறத் தொடங்கியது.  

அறபுத் தமிழ் ஒரு மொழியா?    

இன்னுமொரு விடயம் அறபுத் தமிழ் ஒரு மொழியா என்பது. அறபுத் தமிழ் தனக்கென தனியான இலக்கண அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழ்மொழியின் இலக்கணத்தையே முழுமையாகப் பின்பற்றி, அதுவே தனது இலக்கணமாகவும் கொண்டு வழக்கில் இருந்து வந்தது. எனவே அறபுத் தமிழ் என்பது மொழியல்ல அதுவொரு கிளை மொழி என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும். 

பிறதொரு விடயமும் இங்கு பேசப்பட வேண்டியுள்ளது.  

அறபு நெடுங்கணக்கில் இருபத்தெட்டு எழுத்துகள் உள்ளன. அவற்றுள் பதினெட்டு எழுத்துகளின் ஒலிப்புக்கு இசைவான எழுத்துகள் தமிழில் இல்லை. எடுத்துக் காட்டாக  டீ என்ற ஆங்கில எழுத்தொலிக்குச் சமமான ஒலியுடைய அறபு எழுத்து உண்டு. ஆனால் தமிழில் அவ்வாறான எழுத்து இல்லை. Bus என்பதை பஸ் என்றே எழுத முடியும்     

அதேபோல தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளில் எ, ஒ ஆகிய இரண்டு உயிர் எழுத்துகளுக்கும்  ங, ச, ஞ, ட, ள, ழ, ண, ர, ற, ப, க  ஆகிய பதினொரு மெய்யெழுத்துகளுக்கும் (மொத்தம் 13 எழுத்துகள்) இசைந்த ஒலியுடைய எழுத்துகள் அறபியில் இல்லை. எடுத்துக்காட்டாக மணம் என்ற சொல்லில் உள்ள ண என்ற எழுத்துக்கு இசைவான ஒலிப்புள்ள எழுத்து அறபியில் இல்லை.  

எனவே அறபுத் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் அமுலுக்கு வந்தது. அறபு எழுத்துகளுடன் மேலதிகமாக புள்ளிகளைச் சேர்த்து பன்னிரெண்டு புதிய எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. இத்திருத்தத்தின் காரணமாக அறபுத் தமிழில் நாற்பது எழுத்துகள் உள்ளன. 

அறபுத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவலும் உண்டு. 

செழுமை கொண்ட இனிய மொழிகளான தமிழ் மொழியும் அறபு மொழியும் இணைந்ததால் அறபுத் தமிழ் இலக்கியத்தின் மேன்மை சடைத்து வந்தது.  

இலங்கையில் முதன்முதலாக  1868 இல் மீசான் மாலை என்னும் நூல் பேருவளையிலிருந்து வெளிவந்துள்ளது. இறுதியாக  1938 இல் 24 பக்கங்களுடன் இருபத்தைந்து சத விலையில் கொழும்பிலிலிருந்து ஒரு நூல் வெளிவந்ததாக எஸ்.எச்.எம் ஜெமீல் எழுதிய பதிவு உள்ளது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான அறபுத் தமிழ் நூல்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

1870 இல் இந்தியாவிலிருந்தும்  1890 இல் இலங்கையிலிருந்தும் பத்திரிகைகள் வெளியாகியுள்ளன. குர்ஆனும் ஹதீசும் மொழிபெயர்க்கப்பட்டன 

இலங்கை முஸ்லிம்களுள் கொழும்பு ஆலிம், கசாவத்தை ஆலிம், எம்.சி.சித்திலெப்பை ஆகியோர் அறபுத் தமிழில் அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். இம்மொழியில் ஆகக் கூடிய நூல்களை வெளியிட்டவர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆவார். இலங்கையைச் சேர்ந்த அறபு மொழி அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள் எழுதிய அறபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம்‘ என்ற கட்டுரையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர் அறபுத்தமிழில் மதீனத்துன் நுஹாஸ் என்னும் நாவலை வெளியிட்டுள்ளார். பாரசீக மொழியின் தழுவலான இந்நாவல் 1900 இல் முகம்மது சுலைமான் என்பவரால் கொழும்பில் வெளியிடப்பட்டது‘ எனக் கூறியுள்ளார். பின்னர் இந்நாவல்  1979இல் தாமிரப் பட்டினம் என்னும் பெயரில் வெளிவந்தது. 

அறபுத் தமிழுக்கும் தான்சானிய நாட்டுப் பழங்குடி மக்கள் பேசும் சுவாஹிலி மொழிக்குமிடையே தொடர்புகள் இருக்கலாம் என்று அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் குறிப்பிடுகின்றார்.   

குர்ஆன் அறபு மொழியில் அருளப்பட்டதாகும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தது அறபு நாட்டிலாகும். அவர் பேசியதும் அறபு மொழியே. அது மட்டுமல்லாமல்லாமல் நாளாந்த வாழ்க்கையில் பின்பற்றப்படும் மார்க்க நடைமுறைகள் சிலவற்றிலும் அறபு மொழிப் பயன்பாடு கட்டாயமானதாகும். எடுத்துக்காட்டாக தொழுகையின்போது சில ஓதுதல்கள் அறபு மொழியிலேயே பயன்படுத்த வேண்டும். எனவே உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களிடையே அறபு மொழிக்கென தனியானதொரு புனிதத் தன்மை கிடைத்து வருகின்றது. 

முஸ்லிம் பிள்ளைகள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற முன்னரோ அல்லது சம காலத்திலோ குர்ஆனை வாசிக்கக் கற்றுக் கொள்வார்கள். இதன் ஆரம்பமாக அறபு எழுத்துக்களின் அறிமுகமும் உச்சரிக்கும் முறையும் வாலாயமான பின்னர் பாவனையில் உள்ள தமிழ்ச் சொற்களை அறபு லிபியில் எழுதி வாசிப்புப் பொறிமுறைக்குள் கொண்டு வந்த பின்னரே குர்ஆனை வாசிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். இதற்கென சிறுவர்களுக்கான வாசிப்பு கைநூல் ஒன்றின் ஊடாக குர்ஆனை ஓதுவதற்கான பயிற்சி வழங்கப்படும். அக்கைநூலில் சொற்களை அறிமுகம் செய்வதற்காக அறபுத் தமிழும் பயன்படுத்தப்படும். இன்றும்கூட இதே முறையே பின்பற்றப்படுகின்றது.                   

ஒரு காலத்தில் வட கிழக்குக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையிலான சிங்கள மொழிப் பரவலை தடுத்தமையின் பெரும் பங்கு அறபுத் தமிழுக்கு உண்டு. அச்சுக்கலையின் தோற்றத்துடன் அறபுத் தமிழின் உபயோகம் நழுவத் தொடங்கி இன்று அறபுத் தமிழில் நூல் வெளியிடுதல் போன்ற பரிச்சயத்தில் ஒருவர்கூட இலங்கையில் உள்ளாரா என்பது கேள்விக் குறியாகும். எனினும் இந்தக் கட்டுரை எழுதப்படுவதன் நோக்கம் வரலாற்றுக்கு சில தகவல்களை வழங்குவது மட்டுமேயாகும்.