எனக்காகவா நான்..?        (சிறுகதை)

எனக்காகவா நான்..? (சிறுகதை)

— அவுஸ்திரேலியாவிலிருந்து பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — 

கனிமொழிக்குத் தனது தலை துண்டுதுண்டாக வெடித்துச் சிதறுவது போல இருந்தது. உடலிலுள்ள குருதியெல்லாம் ஓடிவந்து இதயத்தினுள் உறைந்து விட்டதைப்போலவும், குருதியிழந்து விறைத்துப்போன உடல் செயலிழந்த மரக்கட்டையாகிவிட்டதைப் போலவும் இருந்தது. தன் இளமைக்காலத்திற்குள்ளேயே இதுவரை எவ்வளவோ சோகங்களை அனுபவித்தும், சுமைகளைத் தாங்கியும் பழகிவிட்ட கனிமொழிக்கு இப்போது அதிர்ச்சியோடு வந்த துன்பம் ஒரு கணத்திலேயே தாங்கொணாதபடி அவளின் இதயத்தைத் தாக்கிவிட்டது. முன்னர் அவள் பட்டதுயரெல்லாம் தன்சொந்த நாட்டில், தான் பிறந்துவளர்ந்த ஊரில் வாழ்ந்தபோது ஏற்பட்டவை. ஊராரும் உறவினரும் அங்கே சூழ இருந்தார்கள். இப்போது இங்கே, அந்நிய நாட்டில் அவளுக்கு வந்திருக்கும் அதிர்ச்சியான துன்பத்தைச்  சொல்லிப் பகிர்ந்துகொள்ளக்கூட யாருமே இல்லாத நிலை. அவளுக்குப் பயமாகவும் இருந்தது. 

கனிமொழியின் தந்தை ஒரு வர்த்தக நிறுவனத்தை நடாத்திவந்தார். கொழும்பிலிருந்து பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்து அவற்றை மட்டக்களப்பில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதும், மட்டக்களப்பில் உற்பத்தியாகும் பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி கொழும்பில் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதும் அவரது நிறுவனத்தின் வர்த்தகம். நல்ல இலாபம் கிடைத்தது. பலருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தார். அத்துடன் அவரது நேர்மையும், எல்லோருடனும் அன்பாகப் பழகும் பண்பும் அவருக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் தேடித் தந்திருந்தது. அவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட மற்றுமொரு வர்த்தகர் தொழில்போட்டி காரணமாக அள்ளிவைக்க வேண்டிய இடத்தில் அள்ளி வைத்துவிட்டார். அதனால் ஒருநாள் இனம் தெரியாத நபர்களால் அவர் கடத்தப்பட்டதாக செய்தி வந்தது. அவ்வளவுதான். அதன்பிறகு அவரது உயிரற்ற உடல் காட்டுப்பகுதியொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அவர் காணாமல் போன நாள் முதல் அவரைக் கண்டுபிடிப்பதற்காக எவரெவருக்கோ எல்லாம் என்று கொடுத்த பணம் இலட்சக் கணக்கில் ஆரம்பித்துக் கோடிக்கணக்காகி அவர்களது குடும்பச் சொத்துக்களைக் கரைத்து அவர்களை வீதிக்குக் கொண்டு வந்தது. அவர்களது வீட்டை விற்கவேண்டி ஏற்பட்டது. பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த அவளின் தம்பி, இனியவனை நாட்டுச் சூழ்நிலையும், வீட்டு நிலைவரமும் வெகுவாகப்பாதித்தன. அதனால், படிப்பை விட்டுவிட்டு வெளிநாடு போவதற்காக மிச்சம் மீதியிருந்த அவர்களது நகைகளை விற்று கொழும்பில் ஒரு முகவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தான். ஒருநாள் அவன் தங்கியிருந்த விடுதியில் இருந்து இளைஞர்களையெல்லாம் குண்டுவைக்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் பேரில் அள்ளிக்கொண்டு போனார்கள். அதன் பிறகு அவன் திரும்பிவரவேயில்லை. எங்கே சென்று விசாரித்தாலும் அப்படியொருவர் கைதுசெய்யப்படவேயில்லை என்ற தகவலே கிடைத்தது. 

ஓரு வருடத்திற்குள்ளேயே தந்தையையும், மகனையும் இழந்த அந்தக் குடும்பம் நிலை குலைந்தது. தாங்கொணாத சோகம் தாயை மாதக்கணக்கில் படுக்கையில் போட்டுவிட்டது. தாயையும் வயதுக்கு வந்த இரண்டு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு கனிமொழியின் தலையிலே விழுந்தது. வாழ்வில் துன்பம் என்பதை என்னவென்றே அறியாதவாறு வளர்ந்த கனிமொழிக்குத் தந்தையின் இழப்பினால் துன்பமே வாழ்வாகியது. தாயைக் குணமாக்கி எழுந்து நடமாட வைப்பதற்குள் அவள் பட்ட வேதனைகளும், எதிர் நோக்கிய சவால்களும் செல்வச் செழிப்போடு வளர்ந்த அந்த இருபத்திநான்கு வயதுப் பெண்ணுக்கு மிகவும் அதிகமானது. சமாளித்தாள். தாயைத் தன் மகளாகப் பேணினாள். அவளின் தந்தையோடு வர்த்தக உறவு வைத்திருந்த கந்தையா முதலாளி தன் கடையில் அவளுக்குக் காசாளர் வேலை கொடுத்தார். உண்மையில் அது அவளுக்காகவே உருவாக்கப்பட்ட வேலை. நன்றாயிருந்த நண்பரின் குடும்பம் நலிந்துபோய்க் கிடப்பதைத் தாங்க முடியாமல் அவர்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று அவர் செய்த உதவி அது.  

அந்த வேலையில் கிடைத்த குறைந்த வருமானத்தில் வறுமையிலும் செம்மையாகத் தங்கைகளை வழிநடத்தினாள். இந்த நிலையில்தான் கந்தையா முதலாளி மூலமாக அவுஸ்திரேலியாவில் இருந்து அவளுக்குத் திருமணச் சம்பந்தம் வந்தது. கந்தையா முதலாளியின் ஒன்றுவிட்ட தமக்கையின் மகன்தான் சந்திரன். தாயையும் தங்கைமாரையும் விட்டுவிட்டுப் போகவேண்டிவரும் என்பதால் கனிமொழி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஓருபோதும் தன்னால் முடியாது என்று அவள் மறுத்துவிட்டாள். கடைசியில் அவள் அவுஸ்திரேலியாவுக்குப் போனால் தங்கள் வறுமைக்கு விடிவு வரும் என்றும், தங்கைமாருக்கும் ஒரு வழிபிறக்கும் என்றும் இல்லாவிட்டால் இப்படியே எல்லோருடைய எதிர்காலமும் சூனியமாவே போய்விடும் என்றும் தாய் வற்புறுத்தியதால் அரைமனதோடு அவள் சம்மதித்தாள். ஓரு வருடத்திற்குள்ளேயே அவள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டாள். அவர்களது குடும்ப நிலைமைகளை நன்கு புரிந்துகொண்டு மாப்பிள்ளை சந்திரனும் தாயும் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.  

சந்திரன் அவளோடு மிகவும் அன்பாகப் பழகினான். அவனது தாயும் மருமகள் மாமியார் போலன்றி அவளுக்கு ஒரு தாய்போலவே நடந்துகொண்டாள். இலங்கையிலுள்ள தனது குடும்பத்தினரின் வீட்டுத்தேவைகாக கேட்டபோதெல்லாம் சந்திரன் பணம் கொடுத்தான். அத்துடன் அவள் வேலையில் சேர்ந்ததும் அவளது சம்பளத்தில் ஒரு சதத்தையும் அவன் கேட்டதில்லை. அவளது சம்பளப் பணம் முழுவதையுமே அவளின் குடும்பத்திற்கு அனுப்பும்படி அவன் கூறியபோது அவள் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள். 

அவளின் மாமியார் அருகே வந்து அவளின் தலையைத் தடவிக்கொண்டே, “இதென்ன பிள்ளை. எங்களிட்டை இருக்குது. அங்க, அதுகள் பாவம். இனியும் கஸ்டப்படக்கூடாது. அதோடை அவங்க ஆர்? உனக்கு அம்மா எண்டால் அவனுக்கு மாமிதானே. நாளைக்கு எனக்கு ஒண்டு எண்டால் நீ உதவி செய்ய மாட்டியோ?” என்று சொல்லவும் அவனைக் கட்டிக்கொண்டு நின்றவள் அப்படியே தாவி மாமியாரின் கால்களில் விழுந்து “ஐயோமாமி. அப்பிடிச் சொல்லாதீங்க.. நீங்க எனக்குத் தெய்வம்” என்று சொல்லி அழுதாள். 

தனக்குக் கிடைத்த நல்வாழ்வை எண்ணிக் கனிமொழி பலமுறை ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறாள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஆறு மாதங்கள் வரை கனிமொழி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எதிர்காலமே இருளாகிவிட்டதாகத் தத்தளித்துக் கொண்டிருந்த தனக்கும் தனது தாய்க்கும் சகோதரிகளுக்கும் இப்படியொரு நல்வாழ்வு கிடைத்தமை அவளுக்குச் சிலவேளைகளில் நம்பமுடியாத வியப்பைத்தந்தது. ஆனால் அவளது அந்த மகிழ்ச்சிக்கு இவ்வளவு விரைவில் முற்றுப்புள்ளி வரும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.  

அன்று தொலைபேசி மணி அடித்ததும் மாடியில் தனது அறையில் இருந்த கனிமொழி சந்திரனாக இருக்கும் என்று ஓடிச்சென்று அதை எடுத்தாள். கீழே வரவேற்பறையில் இருந்த சந்திரனின் தாயாரும் அங்கேயிருந்த தொலைபேசியை எடுத்தாள். மறுபக்கம் ஒரு பெண்ணின்குரல். ஹாய்! ஹலோ அன்ரி ஹவ் ஆர் யூ? என்று கேட்டது. யாரோ தன் மாமியாருக்குத் தெரிந்தவளாக்கும் என்று நினைத்துக்கொண்டே தொலைபேசியை வைத்துவிடக் கனிமொழி முயலும்போது மாமியார் அந்தப் பெண்ணை ஆங்கிலத்தில் கோபமாகத் திட்டுவது அவள் செவிகளில் விழுந்தது. 

என்ன நடக்கிறது? யாரது என்று அறியும் மன உந்துதலால், கனிமொழி தொலைபேசியை வைக்காமல் தொடர்ந்து செவிமடுத்தாள். அவர்களது தொலைபேசி உரையாடல் நடைபெற்ற ஒவ்வொரு கணத்துளியும் அதில் வெளிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியைக் கொடுத்தது. 

 “ஏய்! உனக்கு என்னவேணும். நீ இங்க கதைக்கக்கூடாது என்று எத்தின தரம் உனக்குச் சொல்றது. சந்திரனோட நீ இனிமேல் தொடர்பு வைக்கக்கூடாது எண்டு நான் எத்தின தரம் சொல்லியிருக்கிறன். அவனுக்குக் கலியாணம் முடிஞ்சி நாங்க நிம்மதியா இருக்கிறம். நீயும் உங்கட ஒரு சீனாக்காறனைப் புடிக்கவேண்டியதுதானே.. நாயே..” இப்படியெல்லாம் மாமியார் அவளுக்குத் திட்டியும் அவள் சற்றும் கோபப்படாமல் பேசினாள். 

“அன்ரி.. நான் சந்திரனோட கதைக்கிறத்துக்காக இப்ப எடுக்க இல்லை. அவர் இரவு முழுதும் இங்க என்னோடதான் இருந்தவர். அவரோட மொபைலை இங்க விட்டுட்டுப் போயிட்டார். அதைச் சொல்லத்தான் எடுத்தனான். என்ன… அன்ரி.. என்ன அன்ரி.. நீங்க எதுவும் தெரியாதமாதிரிக் கதைக்கிறீங்க? உங்களுக்கு ஒரு தமிழ் மருமகள் தேவை எண்டு அவருக்குக் கலியாணம் கட்டிக்கொடுத்தீங்க. அதுக்கு நான் ஏதாவது எதிர்ப்புக் காட்டினேனா? நான் நினைச்சிருந்தா சந்திரன் உங்கட பேச்சக் கேட்காம என்னையே கலியாணம் செய்ய வச்சிருப்பன். எனக்கு சந்திரன் வேணும். என்ர பிள்ளைக்கு அப்பா வேணும். அதுக்காக அவர என்னைக் கலியாணம் செய்யச் சொன்னேனா? உங்களுக்கு ஏதாவது கஸ்டம் கொடுத்தேனா? சந்திரனிட்ட இருந்து ஒரு சதமாவது கேட்டேனா? உங்கட விருப்பப்படி அவருக்குக் கலியாணம் செய்ய அவர விட்டுக்கொடுத்த எனக்கு நீங்க இப்படிக் கதைக்கலாமா? சந்திரன் சொன்னார் உங்கட மருமகள் கனிமொழி மிகவும் நல்லவள் எண்டு. உங்கட மருமகளைச் சந்திரன் மதிக்கிறார். ஆனா என்னைத்தான் அவர் காதலிக்கிறார்.” இதைக் கேட்டதுமே கனிமொழிக்குத் தலை சுற்றியது. இதுவெல்லாம் உண்மைதானா? வெறும் கனவாக இருந்துவிடக்கூடாதா என்ற நப்பாசையும் இதயத்தின் ஒரு மூலையில் கடுகளவு கருக்கொண்டு மறைந்தது.   

முதலிரவன்றே சந்திரன்மேல் அவளுக்குச் சந்தேகம் வந்தது. முதலிரவில், முதன் முதல் அவளோடு அவன் நடந்துகொண்ட முறையில் அவனுக்கு ஏற்கனவே மிகுந்த அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். என்னதான் திருமணம் நடந்திருந்தாலும் முன்னர் அதிகம் பழக்கம் இல்லாத தன்னோடு முதன்முதலில் அந்த உறவில் ஈடுபடுவதற்கான எந்தவித தயக்கமும் இல்லாமல், ஏற்கனவே பலதடவைகள் தன்னோடு உறவுகொண்டவன்போல மிகவும் சாதாரணமாக அவன் நடந்துகொண்டமை அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது. அறைக்குள் வந்தான். கதவைச் சாத்தினான். “எப்படி இருக்கிறாய்” என்று ஆங்கிலத்தில் கேட்டான். கட்டிலில் படுத்தான். சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான். அருகே வரச்சொல்லி அழைத்தான். அவளைத் தன்பக்கம் இழுத்து அணைத்தான். விளக்கை அணைக்கக்கூட இல்லை. வெளிச்சத்திலேயே தன் பசியைத் தீர்த்துக்கொண்டான். பின்னர் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். இவ்வளவுதான் கனிமொழியின் முதல் இரவு. 

அன்றைக்கே நெஞ்சில் முள் ஒன்று தைத்ததைப் போன்ற வலியொன்றை அவள் உணர்ந்தாள். ஆனால், வெளிநாட்டில் வாழ்பவர்கள் திருமணத்திற்கு முன்னர் அப்படியிப்படித்தான் இருப்பார்கள் என்று தன்னைச் சமாதானப் படுத்திக்கொண்டாள். 

திருமணம் நடைபெற்ற நாளிளிருந்து, நாளாக, நாளாக அவளில் அன்பும், ஆசையும் அக்கறையும் கொண்டவன் போலவே அவன் நடந்துகொண்டமையால் முதலிரவில் அவளுக்கு எழுந்த சந்தேகம், அந்த ஏமாற்ற உணர்வு மெல்ல மெல்ல அவளது நெஞ்சைவிட்ட அகன்று விட்டது.  

திருமணம் நடந்த புதிதில் தாமதிக்காமல் அலுவலகத்திலிருந்து நேரே வீட்டுக்கு வந்துவிடுவான். அடிக்கடி அவளை வெளியே அழைத்துச்செல்வான்.  

கடைத்தெருக்கள், கடற்கரைகள்,  பூங்காக்கள் என்றிப்படி எங்கெல்லாமோ கூட்டிச்சென்று விதம்விதமான பரிசுப்பொருட்களை, அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும், வாங்கிக் கொடுப்பான். 

ஆனால், சில மாதங்களில் அவனது போக்கில் சில மாறுதல்களை அவள் உணரத் தொடங்கினாள். இரவில் அடிக்கடி அவன் வீட்டுக்குத் தாமதமாக வரத் தொடங்கினான். அவள் காரணம் கேட்காமலேயே அவன் ஏதேதோ காரணங்களை அவளிடம் கூறினான். அவை ஏற்றுக்கொள்ள முடியாதவையாக அவளுக்குத் தோன்றினாலும் அதுபற்றி அவள் எதுவுமே பேசியதில்லை. சில நாட்களில் இரவு முழுவதுமே எங்கோ தங்கிவிட்டு மறுநாள் மாலை அலுவலகம் முடிந்து வழமையாக வருவது போல வருவான். தொலைபேசியில் தொடர்புகொண்டால் அலுவலக நண்பர்களுடன் ஒரு விருந்து என்றும், தான் சிறிது மது அருந்திவிட்டதாகவும் அதனால் கார் ஓட்டமுடியாது என்று, நண்பனின் வீட்டில் நிற்பதாகவும், காலையில் வருவதாகவும் சொல்வான். அடிக்கடி அப்படி வீட்டுக்கு வராமல் விடுவது வழக்கமாகியது. அவன் எதையோ தன்னிடம் மறைக்கிறான் என்று அவளது உள்ளுணர்வு கூறினாலும் வீட்டில் இருக்கும்போது அவன் அவளில் காட்டும் பரிவிலும் பாசத்திலும் அவளது சந்தேகங்களெல்லாம் கரைந்துவிடும். 

சிலவேளைகளில் காரணமில்லாமல் அவன் அவளுடன் எரிந்த விழுந்தாலும் அவளுடன் அன்பாகவேயிருந்தான். இலங்கையிலுள்ள அவளின் குடும்பத்தார்மேல் உண்மையான அக்கறை காட்டினான். இடிந்து சிதைந்து கிடக்கும் அவளது தாயாதி வீட்டைத் திருத்துவதற்கு அவள் கேட்காமலேயே பணம் அனுப்பினான். அவளின் கடைசித் தங்கைக்கும் ஒரு காணி வாங்கி வீடுகட்டிக் கொடுக்கவெண்டும் என்று அடிக்கடி அக்கறையோடு சொல்லிக்கொண்டிருந்தான். 

என்ன இருந்தாலும் அவன் இன்னொருத்தியைக் காதலிக்கிறான் என்பதை அவளால் தாங்க முடியவில்லை. அவளைக் காதலித்ததுடன் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கும்போது தன்னைக் கலியாணம் செய்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எவ்வளவு நல்லவராகத் தன்னை நம்பவைத்துக் கொண்டிருக்கும் இருக்கும் தன் மாமியார் இப்படிச் செய்திருக்கிறாரே என்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

மாமியாரிடம் சென்றாள். “மாமி. உங்கள நான் என்ர அம்மாவுக்கும் மேலாக நினைச்சன். ஏன்மாமி.. நீங்களும் ஒரு பொம்பிளைதானே? நாங்க ஒண்டுக்கும் வழியில்லாத ஏழைகளாகிவிட்டம் எண்டுதானா நீங்க இப்பிடிச் செய்தனீங்க? ஒரு காலத்தில நாங்களும் பணக்காரராகத்தான் இருந்தம். அப்பாவ அந்தப் பாவிகள் கொலை செய்தாங்கள். அதனாலதான் நாங்க ஏழையாகினம். நீங்க இப்பிடி என்ர வாழ்க்கையப் பாழாக்கிப் போட்டீங்களே மாமி…” என்று அழுதாள். 

“இஞ்சபார் கனிமொழி!. உனக்குக் கெடுதல் செய்யவேணும் எண்டு நான் ஒருபோதும் நினைக்கல்ல. கேள் பிறண்ட் இல்லாத பெடியங்கள் இங்க யாருமே இல்ல. இந்த நாட்டில அது சர்வ சாதாரணம். இங்க மட்டுமில்ல. நம்மட நாட்டிலயும் இப்ப அப்படித்தான். அதெல்லாம் ஒரு வயதுக்குத்தான். அதுக்காக சாதிசமயம் பார்க்காம அதுகளையெல்லாம் கலியாணம் செய்ய முடியுமா பிள்ளை?” 

கனிமொழி எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தாள். சந்திரனின் தாய் தொடர்ந்தாள். 

“இவனும் அப்படித்தான். அந்தச் சீனாக்காரி இவனோட ஒண்டாப் படிச்சவள். அதில வந்த பழக்கந்தான்…” 

“நீங்க என்ன கதைக்கிறீங்க? அவங்களுக்குள்ள இருக்கிறது வெறும் பழக்கம் மட்டுந்தானா? ஒரு பிள்ளையும் இருக்குதே. அது உங்களுக்கும் தெரியும்.” 

“பிள்ள!. பிள்ளை பிறக்கிறதொண்டும் இங்க பெரிய விசயமில்ல. கலியாணத்துக்குப் பிறகு எல்லாம் சரியாகிப்போகும் எண்டுதான் நான் நினைச்சன். இப்ப என்ன, அவன் உன்னில அன்பாகத்தானே இருக்கிறான். நீ கேட்டபடியெல்லாம் நடக்கிறான். உங்களின்ர குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறான். பிறகேன் நீ கவலைப்படுறாய்? நீதான் அவனைத் திருத்த வேணும்” 

இதற்கு மேலும் அங்கு நிற்க அவள் விரும்பவில்லை. இப்படிச் சொல்லுகின்ற தன் மாமியார் முன் இனியும் நின்றால் மரியாதை கெட்டுவிடக்கூடிய வகையில் தான் ஏதாவது கதைத்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். பொத்துக்கொண்ட வந்த கோபத்தையும், பீறிட்டுக்கொண்டு வந்த அழுகையையும் அடக்கிக்கொண்டே மாடிக்குச் சென்று தன் அறையில் கட்டிலில் குப்புற விழுந்து அழுது தீர்த்தாள். எவ்வளவு நேரம் அவள் அப்படி அழுதுகொண்டிருந்திருப்பாள் என்று அவளுக்கே தெரியாது. அப்படியே அயர்ந்து படுத்துவிட்டாள். அது நித்திரையென்று சொல்ல முடியாது. மனமும் உடலும் சோர்ந்துவிட்டதால் ஏற்பட்ட இயலாமையால் அப்படியே கிடந்தாள். 

அவளது தலையை யாரோ தடவும் உணர்வில் திடீரென எழுந்தாள். சந்திரன்! அவள் தன் முகத்தை மறுபக்கம் திருப்பிப் படுத்துக்கொண்டாள். 

“கனிமொழி! அம்மா இப்ப எல்லாம் சொன்னா. இனி உன்னிட்ட நான் ஒண்டையும் மறைக்க விரும்பயில்ல. நானும் லின்னும் படிக்கக்குள்ள இருந்தே பழக்கம். அது காதலாக மாறிச்சு. இங்க அம்மா ஒரே எதிர்ப்பு. எனக்கு அம்மாவில எவ்வளவு பாசம் எண்டு உனக்குத் தெரியும். அதே நேரம் லின்னும் மிச்சம் நல்லவள். அவள் நல்லவளோ இல்லையோ அவளோட நான் உறவு வைச்சிற்றன். அம்மாவுக்காகத்தான் உன்னைக் கலியாணம் செய்தனான். அதுக்காக உன்னை நான் வெறுக்கயில்லை. நீ நல்லவள். உன்னை எனக்கு நல்லாப் பிடிக்கும். உன்னை நான் கைவிட மாட்டன். ஆனால் லின்னை நான் இழக்க முடியாது. ஏனெண்டால் அவள் எனக்காக எவ்வளவோ விட்டுத் தந்திருக்கிறாள். நீ எனக்கு மனைவி எண்றதில எந்தப் பிரச்சினையும் இல்லை. உனக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டன். ஆனால். லின்னை என்னால் மறக்க முடியாது. அவள்ற தொடர்பைத் துண்டிக்க முடியாது. நீ படிச்சவள். தயவுசெய்து என்னைப் புரிஞ்சுகொள். இவ்வளவுதான் நான் சொல்ல முடியும்” என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றுவிட்டான்.  

கனிமொழியால் எதுவும் பேச முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒவ்வொன்றாகத் தனக்குள்ளேயே எண்ணியெண்ணித் துடித்துக்கொண்டிருந்தாள்.  

“என்ன இது? தாயும் மகனும் இப்படிச் சொல்றாங்க. தங்கட சுயநலத்துக்காக என்ர வாழ்க்கையை,… என்ர வாழ்க்கையை மட்டுமா? அந்த லின்னிட வாழ்க்கையையும் வெறும் விளையாட்டுப்போல நினைக்கிறாங்களே. நல்லவங்க நல்லவங்க எண்டு எல்லாரிட்டயும் பேரெடுத்துக்கொண்டு இப்படி வஞ்சகமாக நடக்கிறாங்களே. என்னை ஏமாத்திப் போட்டாங்களே. இவங்களைக் கடவுள் மாதிரி எண்ணிக்கொண்டிருக்கிற என்ர அம்மாவுக்கும், தங்கைச்சிகளுக்கும் இதெல்லாம் தெரிஞ்சால்… ஐயோ! அவங்க எப்படித் தாங்கப் போறாங்க? ”  

பொங்கிவந்த அழுகையை அவளால் தடுக்க முடியவில்லை. மீண்டும் அழுது தீர்த்தாள். இரவு முழுவதும் அழுவதும், அடிக்கடி எழுவதும், மீண்டும் பொத்தென்று படுக்கையில் விழுவதுமாக இருந்தாள். மறுநாள் காலை பொழுது விடிந்தபோது அடுத்து என்ன செய்வதென்று அவளது மனதில் தீர்மானம் ஒன்று தோன்றியது. இனியும் சந்திரனுடன் வாழ அவள் விரும்பவில்லை. ‘சந்திரனின் காதலும், பாசமும் லின்னுடன்தான். தன்னிடம் அவருக்கிருப்பது வெறும் அனுதாபம்தான். கணவனின் வெறும் அனுதாபத்தின்மேல் குடும்பம் நடத்துவதற்குத் தான் ஒன்றும் உணர்வுகளற்ற மரக்கட்டையல்ல’ என்று கனிமொழியின் உள்ளம் கொதித்து விறைத்தது. 

குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டுத் தன் வழமையான கடமைகளில் ஈடுபட்டாள். சந்திரன் வீட்டிலே இல்லை என்று தெரிந்தது. தன்னிடம் கதைப்பதற்கு அவனுக்குத் தயக்கமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வழமைக்கு மாறாகத் தன்னிடம் சொல்லாமலே வேலைக்குப் புறப்பட்டுவிட்டான் என்று நினைத்தாள். அவள் அதை எதிர் பார்க்கவுமில்லை. முடிந்தவரைக்கும் அவனது முகத்தில் விழிக்காமல் விடுவதையே அவள் விரும்பினாள். மாமியார் அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். அது கனிமொழியின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அறிவதற்கான முயற்சியாக இருந்தது. ஓரிரண்டு வார்த்தைகளில் மிகச் சாதாரணமாக அவருக்குப் பதில் கூறினாள் கனிமொழி. அவள் அலுவலகத்துக்கு வெளிக்கிட்டதைக் கண்ட சந்திரனின் தாய், “என்ன பிள்ளை இண்டைக்கு வேலைக்குப் போகப் போறீங்களோ?” என்று கேட்டாள். 

“ஓம்.” 

“இல்ல.. நேற்றெல்லாம் நீங்கள் சரியாக் குழம்பிப் போனீங்கள். சாப்பிடவுமில்ல. இண்டைக்கு லீவு போட்டிட்டு நில்லுங்களன்” உண்மையான அக்கறையோடுதான் அவர் சொன்னார். 

“எனக்கொரு குழப்பமும் இல்ல. நான் போயிற்று வாறன்.” என்று முகம் பார்க்காமலே பதில் சொல்லிவிட்டு கனிமொழி அலுவலகத்திற்குப் புறப்பட்டாள். அலுவலகத்தில் அவளுடன் வேலை செய்யும் விஜி அவளுக்கு நல்ல சிநேகிதி. அவளிடம் தனக்கு நடந்தவைகளை ஒன்றும் விடாமல் கூறினாள். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவளின் கணவன் ஒரு சட்டத்தரணி. மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை நடாத்துகிறார். அவரிடம் தன்னை அழைத்துச் செல்லும்படி கனிமொழி விஜியைக் கேட்டாள்.  

“ஏன்? என்ன செய்யப் போகிறாய்?” விஜி கேட்டாள். 

“வேறென்ன? விவாகரத்துத்தான்!” 

“கனிமொழி! நல்லா யோசி. குடும்பம் என்கிறது சாதாரண விசயமில்ல… திடீரெண்டு அப்படியெல்லாம் முடிவெடுக்கக் கூடாது.”  என்றெல்லாம் விஜி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 

கனிமொழி ஒரே முடிவோடுதான் இருந்தாள். “விஜி உன்னால எனக்கு உதவி செய்ய முடியுமா இல்லையா. அதை மட்டும் சொல்லு. என்னுடைய முடிவில மாற்றமில்ல. அதைப்பற்றி எதுவும் பேசாத” 

விஜி தனது கணவனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டாள். சில நிமிடங்களில், மறுநாள்  பிற்பகல் நான்கு மணிக்கு கனிமொழிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஜி கூறினாள். கனிமொழி அவளைத் தன்னுடன் வரமுடியுமா என்று கேட்டாள். விஜி சம்மதித்தாள். கனிமொழி மறுநாள் வேலைக்கு விடுமுறை போட்டாள். விஜி தான் நேரத்தோடு வேலையிலிருந்து வெளிக்கிட்டு கனிமொழியை வீட்டுக்கு வந்து தனது காரில் கூட்டிச்செல்வதாகக் கூறினாள். 

அன்று இரவு முழுக்கச் கனிமொழியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. ஆனால் விவாகரத்து என்ற தீர்மானத்தில் மாத்திரம் அவளுக்கு எவ்வித குழப்பமும் இருக்கவில்லை. 

தனது எதிர்காலத்தை நினைத்து அவளது மனதிலே பயம் சூழ்ந்து கொண்டாலும், ஏதோ ஒருவித நிம்மதியை அவள் உணர்ந்தாள். நிம்மதியற்ற மகிழ்ச்சியை விட நிம்மதியுடனான துன்பம் எவ்வளவோ மேலானது என்று நினைத்தாள். தான் விவாகரத்துக் கேட்டு வழக்குப் போட்டதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அதன் எதிர் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதையெல்லாம் முன்னேற்பாடாக கனிமொழி எண்ணிப்பார்த்தாள். 

“சந்திரன் என்ன சொல்வார்? சிலவேளை அவரது அடிமனதில் சந்தோசம் எழலாம். இனிமேல், தான் லின்னைக் கலியாணம் செய்வதைத் தாய் தடுக்க மாட்டாள் என்று அவருக்கு நிம்மதி வரலாம். தாய்க்காக ஒரு திருமணம், தனக்காக ஒரு திருமணம். ம்…. இடையில் நான்தான் பலியாடு. மாமியார் என்ன நினைப்பார்? எதையாவது நினைத்துவிட்டுப் போகட்டும். அம்மாவும் தங்கச்சிமாரும் என்ன செய்வார்கள்? விதியை நொந்து வேதனைப்படுவார்கள். வேறென்ன செய்ய முடியும் அவர்களால்? எனது முடிவுக்கான காரணம் என்மேல் அவர்களுக்குக் கோபத்தையோ வெறுப்பையோ வர விடாது.”  

தாயையும், தங்கைகளையும் நினைக்கும்போதெல்லாம் துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. விம்மி, விம்மி அழுகை வெடித்தது. அன்று மாலை சந்திரன் வீட்டுக்கு நேரத்துடனேயே வந்துவிட்டான். கனிமொழியோடு கதைப்பதற்கு அவன் பலமுறை முயன்றான். அதை உணர்ந்துகொண்ட கனிமொழி வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டாள். 

மறுநாள் காலை பத்து மணியாகியும் கனிமொழி எழுந்திருக்கவில்லை. மாமியார் கலவரமடைந்தார். கனிமொழியின் அறைக்கதவைத் தட்டி எழுப்பினார்.  “ பிள்ளை.. கனிமொழி… நேரமாச்சு எழும்புங்க. வேலைக்குப் போகல்லயோ?”அவள் வேலைக்குப் போகவேண்டுமே என்பது மாமியாரின் கவலை அல்ல. வழமைக்கு மாறாக கனிமொழி இன்னும் எழுந்திருக்கவில்லை என்றதும் அவருக்கு மனதிலே ஒருவகைக் கிலி பிடித்துவிட்டது. அதனால்தான் எழுப்பிப் பார்த்தார்.  

“நான் வேலைக்குப் போகல்ல” உள்ளே படுத்திருந்தவாறே பதில் சொன்னாள் கனிமொழி. 

“ங்ஆ.. அப்ப சரி படுபிள்ளை” பதற்றம் பறந்துவிட்ட நிம்மதியோடு அவர் அவ்விடத்தைவிட்டு அகன்றார். 

கனிமொழி படுக்கையிலிருந்து எழுந்தாள். அன்று பிற்பகல் நான்கு மணிக்கு சட்டத்தரணியிடம் என்னென்ன சான்றிதழ்களைக் கொடுக்க வெண்டும் என்று அவளுக்குத் தெரியாது. என்றாலும் அவளுக்குத் தோன்றிய வகையில் தனது பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, திருமணச் சான்றிதழ் என்பவற்றை எடுத்துத் தயாராக வைத்தாள். 

மனதிலே ஆயிரம் சிந்தனைகள் அலைமோதிக்கொண்டிருந்தாலும் எதுவும் நடக்காததைப்போல வழமையான தன் வீட்டு அலுவல்களில் ஈடுபட்டாள். மதிய உணவுக்குப் பின்னர் அறைக்குள் சென்று படுத்தவள், அசதி மிகுதியால் அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள். 

“கனிமொழி…பிள்ளை… கனிமொழி..” மாமியார் கதவைத்தட்டி எழுப்பியதும் திடீரென்று எழுந்து கதவைத் திறந்தாள். மாமியார் கையில் தொலைபேசியுடன் நின்றுகொண்டிருந்தார். “கனிமொழி உங்கட அம்மா..” என்று சொல்லிக்கொண்டே, அவர் தொலைபேசியில் கனிமொழியின் அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தார். 

“ஓமோம்.. கனிமொழி இந்தா நிக்கிறா…. நீங்க ஒண்டுக்கும் யோசியாதீங்க. எல்லா விபரத்தையும் கனிமொழியிட்டச் சொல்லுங்க. சந்திரனிட்ட நாங்க சொல்லுறம். இந்த இடத்தை விட்டுராதீங்க. காசைப்பற்றியோசிக்க வேண்டாம். கேட்டதைக் குடுக்கத்தானே வேணும். இப்போதைக்கு இருக்கிற வீட்டை எழுதிக் குடுங்க பிறகு வேணுமெண்டால் புதிசாகக் கட்டிக்குடுக்கலாம்…. இந்தா கனிமொழி நிக்கிறா கதையுங்க…” எதைப் பற்றிக் கதைக்கிறார்கள் என்று அறியும் ஆர்வத்தின் உச்சத்திற்கு வந்துவிட்ட கனிமொழியிடம் மாமியார் தொலைபேசியைக் கொடுத்தார். 

“அம்மா…!” 

 “கனிமொழி!… எப்பிடி இருக்கிறா மகள்? என்னெண்டாப் பிள்ள…தேன்மொழிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு. மாப்பிள்ளைய உனக்குத் தெரியும். உன்னோட படிச்சவர். சிவலிங்கம் வாத்தியார்ர மகன், அரவிந்தன். இப்ப எஞ்சினீயரா இருக்கிறார். உனக்குத் தெரியுந்தானே. அவங்க எல்லாருக்கும் நல்ல விருப்பம். அவங்களாத்தான் கேட்டவங்க. ஆனா.. அவருக்கு ரெண்டு தங்கச்சிமார் இருக்கிறதால…. சீதனம் பத்து லட்சம் கேட்குறாங்க… அதுதான்…” 

“பத்து இலட்சமா…திடீரெண்டு…என்னெண்டம்மா…” 

“அதுதான் உன்னோட கதைச்சிற்றுச் சொல்லுறதா அவங்களுக்குச் சொல்லியிருக்கிறன். இப்ப உன்ர மாமி.. அதொண்டும் பிரச்சினை இல்லையாம்.. கட்டாயம் செய்யட்டாம்…. எண்டு சொன்னவ… அதுக்குப் பிறகுதான் எனக்கு பாரம் குறைஞ்சமாதிரி இருக்கு…. நீ என்ன சொல்றா பிள்ள…. தேன்மொழிக்கும், மணிமொழிக்கும் உன்னப்போல நல்ல வாழ்க்கை கிடைச்சிற்றா நானும் நிம்மதியா அப்பாட்டப் போய்ச் சேர்ந்திருவன்… என்ன மகள்.. ஒண்டும் பேசாம இருக்கிறாய்…?” 

“…ம்.. ஒண்டுமில்ல.. என்னப்போல வாழ்க்கை அவளுகளுக்கு வரவேணாம் அம்மா” சொல்லும்போதே பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் கனிமொழி. 

“என்ன மகள் ஏன் அப்பிடிச் சொல்லுறாய்..?” 

“இல்லம்மா என்னப்போல வெளிநாட்டு வாழ்க்கை அதுகளுக்கு வேணாம். பிறகு அங்க உங்கள ஆரம்மா கவனிக்கிற…. அதைத்தான் சொன்னேன்..” கனிமொழி சமாளித்தாள்.  

“அதுதான்…. இது ஊரோட மாப்பிள்ளை… நல்ல…பெடியன்… தாய் தகப்பன் நல்ல ஆக்கள். உனக்குத் தெரியுந்தானே…. தேன்மொழிக்கும் விருப்பம்…. அதுதான்.. அவரிட்டக் கதைச்சு ஒரு நல்ல முடிவைச் சொல்லு பிள்ளை.” 

“…ம்…..” கனிமொழியிடம். நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. “அவ…. ரிட்டக் கதைக்கவா… சரி…. கதைக்கிறன்” 

“உன்ர மாமி ஓம் எண்டு சொல்லிற்றா….. நீ ஒருவார்த்தை சொன்னாத்தானே மகள் நான் ஆகவேண்டியதைப் பார்க்கலாம்…” 

“அதுதான் அவ சொல்லிற்றாதானே…. பிறகென்ன உங்கட விருப்பம் போலவே செய்யுங்க..” சற்று எரிச்சலாகவும், ஆமோதிப்பதைப் போலவும் சொன்னாள் கனிமொழி. 

“அது போதும் பிள்ள…. அப்ப சரி. நான் வைக்கிறன். மாமியிட்டச் சொல்லு..” 

கனிமொழியின் தாய் தொலைபேசியை வைத்துவிட்டாள். கனிமொழியின் தலை சுற்றியது. அப்படியே கட்டிலில் சென்று அமர்ந்தாள். இனம்புரியாத தோல்வியொன்று வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டதைப்போன்ற உணர்வு நெஞ்சை அழுத்தியது. ஏதோ நினைவு வந்தவளாக நேரத்தைப் பார்த்தாள். மணி மூன்றைத் தாண்டிக் கொண்டிருந்தது. 

ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல எழுந்து தன் அறைக்குள் சென்றாள். விஜியின் கைத்தொலைபேசியில் அவளைத் தொடர்புகொண்டாள். தொடர்பு கிடைத்ததும் விஜியே கதைக்கத் தொடங்கிவிட்டாள். 

“ ஹலோ.. கனிமொழி! நான் இப்ப அங்கதான் வந்துகொண்டிருக்கிறன். இன்னும் அரைமணித்தியாலத்தில வந்திருவன்.” 

“இல்ல.. நீ இங்க வரவேணாம்.” 

“அப்ப நீ அங்க நேரே வாறியோ?” 

“இல்லை. அதுக்கு அவசியமில்லை. உன்ரை அவரிட்ட நான் வரல்ல எண்டு சொல்லு.” 

“ஏன்…ஏதாவது…சுகமில்லையா? வேற டேற் எடுக்கவா?” 

“இல்ல..அதுக்கு அவசியமில்ல..” 

“அப்ப விவாகரத்து?” 

“செய்யுறதாக இல்லை. அவரோடதான் இருக்கப் போறன்.”  

“ கனிமொழி..நீ…?” 

“தயவுசெய்து இப்ப ஒண்டும் கேட்காத… நான் பிறகு நேரில சொல்றன். எல்லாம் என்ர தலைவிதி.” 

தொடர்பைத்துண்டித்த கனிமொழி, பீறிட்டெழுந்த அழுகையை அடக்கிக்கொண்டு, தொலைபேசியை வைத்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள். 

(யாவும் கற்பனை)