கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)

கிழக்கு வெளிக்க….கீழ்வானம் சிவக்க…. (காலக்கண்ணாடி 20)

— அழகு குணசீலன் — 

கிழக்கு வெளிக்க…….!  கீழ்வானம் சிவக்க………!! 

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் வெளிவந்த இரு ஊடக செய்திகளை காட்சிப்படுத்த முனைகிறது இவ்வார காலக்கண்ணாடி. 

இது சூடாறிய  பழைய சோறுதான் என்றாலும் இன்றைய தமிழர் அரசியலில் சுவை குறையாதது. கிழக்கிற்கும் பிடித்தமான பாரம்பரியம். 

கடந்த, சம, எதிர்கால அரசியல் சூழலையும், போக்கையும், நோக்கையும் குறித்து நிற்பதனால் இவை மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் முக்கியமானவை. 

செய்தி 1:  செங்கலடி இரகசிய சந்திப்பு. 

செய்தி 2:  கிளிநொச்சி ஊடகச் சந்திப்பு. 

வந்த வேகத்தில் மறைந்த செய்தி! 

கருணா அம்மானும், சாணக்கியன் எம்பி.யும் செங்கலடியில் சந்தித்தார்கள் என்பதுதான் அந்த முதற்செய்தி. 

இச் செய்தி வந்த வேகத்தில் மறைந்து போனது. தேர்தல் காலத்தில் ஆளுக்காள் கடும் விமர்சனங்களை எதிரெதிராகச் செய்திருந்தவர்கள் இவர்கள். 

இருவேறு அரசியல் தளத்தில் நின்ற இவர்கள் ஏன் சந்தித்தார்கள், இதன் பின்னணி என்ன என்ற கேள்வி மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் எழுந்தது.  

இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரில் எவரும் மறுப்பு தெரிவித்தாகவோ, விளக்கம் கொடுத்ததாகவோ செய்திகள் இல்லை. 

ஆனால் அவதானிகள் மத்தியில் சந்திப்பு பற்றிய உண்மை, பொய்க்கு அப்பால் சில ஊகங்கள் இருந்தன. ஒன்று மட்டக்களப்பில் பிரதேசசபைகள் எதிர்நோக்கிய பாதீட்டு அரசியல் நெருக்கடி தொடர்பான ஊகம். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உபதலைவருக்கும்,  பட்டிருப்பின் முன்னாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருக்குமான அரசியல் சார்ந்த அல்லது தனிப்பட்ட உறவாகவும் இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கருணா அம்மானும், சாணக்கியனும் பிள்ளையானையும், வியாழேந்திரனையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள்.  

இதனால் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற எதிர் அரசியல் தந்திர உபாயமாக இருக்குமோ? என்றும் சந்தேகங்கள் எழுந்தன. 

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. எதிரியின் எதிரி எனக்கு நண்பன்.  

கிளிநொச்சியில் கருணா அம்மான் 

இந்த நிலையில்தான் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த கருணா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து செயற்படும் தனது விருப்பத்தை தெரிவித்தார். இது  அந்த இரண்டாவது செய்தி. 

இக்கருத்துக்கு வலுவூட்டும் வகையில் மாவை சேனாதிராஜாவுக்கும் தனக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தன்னால் உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார். 

இங்கு மற்றொரு ஊகம் பிறக்கிறது. இது விடயமாகப் பேசி வெள்ளோட்டம் ஒன்றை விடவே கருணா அம்மான் சாணக்கியன் எம்.பி.யைச் சந்தித்தாரா? என்பதே அந்த அடுத்த ஊகம். 

இதுவிடயமாக மாவையும், தமிழரசு தலைமையும் அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமையும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் தமிழரசின் சிவஞானம் அவர்களும் சிறிதரன் எம்.பி.யும் தமது கருத்துக்களை வெளியிட்டனர். 

பொதுவாகப் பார்த்தால் அவர்கள் கருணா அம்மானை தங்கள் கட்சியில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கான காரணத்தை அவர்கள் தமிழர் அரசியல் பாணியில் சொல்லியும் உள்ளார்கள். 

கட்சியொன்றில் ஒருவர் இணைய விரும்புவது அந்நபர் சார்ந்த உரிமை. அதே போன்று சேர்ப்பதும்,  சேர்க்காமல் விடுவதும் கட்சியின் உரிமை என்று விட்டுவிடலாம். இந்த இடத்தில் தமிழரசின்  முக்கியஸ்தர்கள் கூறிய காரணங்களின் பக்கம் காலக்கண்ணாடி திரும்புகிறது. 

கருணா அம்மான்  VS  முரளிதரன் 

இந்தக் குட்டித் தலைப்பை பார்க்க கிரிக்கெட் போஸ்டர் மாதிரி உள்ளது என்று நீங்கள் நினைப்பது கண்ணாடியில் விழுகிறது. இல்லவே இல்லை.  

கருணா அம்மான் முத்தையா முரளிதரனுக்கு எதிராக பந்து வீசவில்லை. 

அம்மான் இங்கு பந்து வீசுவது வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக. 

இதைச் சொன்னது  சிவஞானம் & சிறிதரன். காட்சியைக் காட்டுவது மட்டும்தான் கண்ணாடி. 

திரு.சிவஞானம் இப்படிச் சொன்னார் : “விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியமல்ல”. 

இது சிறிதரன் பிரபல சர்வதேச ஊடகமொன்றின் தமிழ்ச் சேவைக்கு சொன்னது : “இரு காலகட்டங்களில் அவதானிக்கிறேன்.  கருணா 2006க்கு முன், முரளிதரன் 2009க்குப் பின். அவர் புலிகளில் இருக்கும் போது ஆற்றிய பணிக்கான மரியாதையும் அந்தஸ்தும் தமிழர்கள் மத்தியில் இன்றும் உள்ளது.” 

“இது தராசின் இருபக்கங்களிலும் உள்ள படியைப் போன்றது” என்று கருணா அம்மானை ஒரு தட்டிலும் மறுதட்டில் விநாயகமூர்த்தி முரளிதரனையும் போட்டு நிறுத்தலளவை கற்பிக்கிறார் சிறிதரன். 

இந்தப் புள்ளியில் காலக்கண்ணாடியில் பல விம்பங்கள் விழுகின்றன. 

தராசும் சக பாராளுமன்ற அரசியல்வாதிகளும். 

சிறிதரன் அவர்களே! உங்கள் தமிழரசு வீட்டுக்குள்  இப்படி பலர் இருக்கும் போது கருணாவை மட்டும் நீங்கள் நிறுப்பது ஏன்? 

1. மண்டையன் குழு சுரேஷ்  VS  கந்தையா பிரேமச்சந்திரன் 

2. செல்வம் VS அமிர்தலிங்கம் அடைக்கலநாதன். 

3. ஜனா VS கோவிந்தன் கருணாகரன். 

 4. சித்தார்த்தன் VS தருமலிங்கம் சித்தார்த்தன். 

இவர்கள் அனைவரும் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு கருணா அம்மானை விடவும் அதிக பங்களிப்பை செய்ததால் உங்கள் தராசில் நிறைகூடியவர்களாக நிறுத்தீர்களா? 

இந்தியப் படைக்கால அராஜகங்களை விடவும், இந்திய மேலாதிக்கத்திற்கு துணை போனதைவிடவும்  சுரேஷ், ஜனா, செல்வம், சித்தார்த்தன் போராட்டத்திற்கு அளித்த பங்களிப்பால் குறைந்து நிற்கிறார்களா? 

அப்படியானால் இவர்கள் மீதும், இவர்கள் சார்ந்த அமைப்புக்கள் மீதும் விடுதலைப்புலிகள் தடைவிதித்தது குறித்தும், துரோக அமைப்புக்களாக அறிவித்தது குறித்தும் உங்கள் வீட்டின் கருத்துத்தான் என்ன? இவர்கள் போராடும்போது தண்டனை விதிக்கப்பட்டவர்கள். கருணா விடயம் அப்படி அல்ல. 

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் இறங்க, இவர்கள் EPRLF, TELO, ENDLF இணைந்து திறி ஸ்டார் என்ற கூட்டில் தலைமன்னாரில் இறங்கியது ஏன்? மறந்து போனது. 

வரதராஜப் பெருமாளின் தமிழீழப் பிரகடனம் அவரைக்கப்பலில் ஏற்ற இவர்களில் பலர் சிறிலங்கா அரச படைகளுடன் இணைந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டது தெரியாதா? தெரிந்தும் மறைத்துக் கதைகட்டுகிறீர்களா? வவுனியாவில் மாணிக்கதாசன், மட்டக்களப்பில் மோகன், ராசிக் இவர்களை எல்லாம் மன்னித்து விட்டீர்களா? 

உமாமகேஸ்வரன் மாலைதீவு அரசைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிய, அன்றைய  அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் அரவணைப்பில் புளட் கொழும்பில் வந்து இறங்கியதை ஏன் மறந்தீர்கள். 

இவர்களை எல்லாம் நிறுத்த தராசு கருணாவை நிறுத்த அதே தராசு தானா? சில வியாபாரிகள் ஒரு கள்ளத்தராசும் வைத்து நிறுப்பார்கள். உங்கள் அரசியல் வியாபாரத்திற்கும் அப்படி ஒரு கள்ளத் தராசு வைத்திருக்கிறீர்களா? 

அளவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு செக் பண்ண வந்தால் அகப்பட்டு விடுவீர்கள். கவனம்! அகப்பட்டால் மாமியார் வீடுதான். உங்கள் சட்டவாதி சுமந்திரனாலும் காப்பாற்றமுடியாது போகும். அவர் அரசாங்க பக்கம்தான் பேசுவார். 

கருணா அம்மான் முரளிதரனான கதை! 

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட  கருணா அவ் அமைப்பின் மட்டக்களப்பு. அம்பாறை மாவட்ட தளபதியாக உயர்ந்து இருந்தவர். 

இவரின் தலைமையிலான படையணிகள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட களத்தில் அடைந்த இராணுவ வெற்றிகளைவிடவும் வடக்கு, வன்னி போர்க்களத்தில் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோர்வேயின் சமாதான முயற்சிக் காலத்தில் வெளி நாடுகளில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில்  புலிகளின் படைத்தரப்பு சார்பாக கருணா அம்மான் முக்கிய பாத்திரம் வகித்தார் என்றே கூறவேண்டும். 

இந்த நிலையில்தான் மின்னாமல், முழங்காமல் இடி விழுந்தாற்போல் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு என்ற செய்தி உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

பிளவுக்கான காரணத்தை கருணா அம்மான் வடக்கு தலைமையினால் கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்று கூறினார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் வழங்கப்பட்டிருந்த முக்கிய பொறுப்புக்களும், பதவிகளும் ஒப்பீட்டளவில் போதுமானவை அல்ல என்பது கருணாவின் குற்றச்சாட்டு. 

மாறாக விடுதலைப்புலிகள் கருணாவின் கருத்தை மறுத்து கருணாவின் பிரச்சினைக்கு வேறு காரணங்களைக் வெளியிட்டனர்.  

புலிகளின் புலனாய்வுப்பிரிவின் தகவல்களின் படி கருணா இயக்க நிதியில் மோசடி செய்ததாகவும், அவரின் தனிப்பட்ட தவறான தொடர்புகளும் காரணம் என்று அறிவித்தனர். 

இவை புலிகளின் இயக்க நடைமுறைகளுக்கு மாறானவை என்பதால் அவரை வன்னிக்கு விசாரணைக்கு வரவழைத்ததாகவும், ஆனால் அவர் தனது தவறுகளை மறைக்க, வடக்கு, கிழக்கு பிரச்சினையை சாட்டாகக் கூறுகிறார் என்றும் அறிவித்தார்கள். 

விளைவு  : இருதரப்பு மோதல்களால் விடுதலையை நேசித்த பல போராளிகளையும், ஆதரவாளர்களையும், புத்திஜீவிகளையும் தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது.  

உண்மையில் இந்த பிரிவு வடக்கு கிழக்கு மக்களையும் பிரித்து விட்ட ஒரு நிகழ்வு. இதனை மீளவும் ஒட்டுதல் என்பது சகல தரப்பிற்கும் ஒரு பெரும் சவால். கடந்த 15ஆண்டுகாலப் பகுதியில் இது இன்னும் விரிவடைந்துள்ளது. 

இந்த நிலையில் கருணா அம்மான் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படத் தொடங்கி, பல அரசாங்கப் பதவிகளையும் ஏற்ற நிலையில் அவரின் இயக்க பதவிநிலைப் பெயரான கருணா அம்மான், இயற்கை பெயரான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரை முதன்மைப்படுத்தி நிற்கிறது. அல்லது இரண்டும் இணைந்து புழக்கத்தில் உள்ளது. 

இந்தப் பெயர்களையும் அதற்குப் பின்னணியில் உள்ள அரசியலையும் பிரித்து நிறுக்கிறார் சிறிதரன். ஆனால் தமிழரசார் ஏன் மற்றைய சகாக்களை நிறுக்காமல் கருணாவை மட்டும் நிறுக்கிறீர்கள் என்பதே இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வியாகும். 

வெளிக்க……..!  சிவக்க………..!! 

கருணா அம்மான் புலிகளில் இருந்து வெளியேறி கிழக்கு மாகாணத்தை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் கட்டி எழுப்ப போவதாகவும், இதன் அடிப்படையிலேயே ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தனது பிரவேசம் என்றும் கூறியிருந்தார். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. எனினும் அதிகப்படியான வாக்குகளை அம்மான் பெற்றிருந்தார். 

முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், எனப்பல தரப்பட்டோரும் ஆதரித்தனர். இது அம்மான் மீதும், அவர் கடந்த 15 ஆண்டுகளாகக் கூறிவரும் கிழக்கு அபிவிருத்தி சார் அரசியல் மீதும் கொண்ட ஈடுபாடும் நம்பிக்கையுமாகும். 

நிலைமை இப்படியிருக்க தன் மீது மக்களும், சிவில் அமைப்புக்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணையும் விருப்பத்தை கருணா வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயம் எந்த வடக்கு கிழக்கை புறக்கணிக்கிறது என்று கூறினாரோ அதே வடக்குடன் இணைவதற்கும், சமரசம் செய்வதற்கும், வடக்கு தலைமையின் கீழ் அரசியல் செய்வதற்கும் கருணா விரும்புகிறார். 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று சில மாதங்களே கடந்திருக்கின்ற நிலையில், தேர்தல் சூடு இன்னும் முழுமையாக ஆறவில்லை. தேர்தல் அரசியல் கிராமங்களை கூறுபோட்டுள்ளது. 

தேர்தல் கால பகையும், முரண்பாடுகளும், மனதைவிட்டு அகலவில்லை. 

இவற்றில் ஒருபகுதி அம்மான் என்ற பெயரால் ஏற்பட்டவை. அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவால் ஏற்பட்டவை. 

இந்த நிலையில் கருணா அம்மானின் கிளிநொச்சி அறிவிப்பு உண்மையில் கிழக்கு மக்கள் சார்ந்த அரசியலில், அவர் கொண்ட கொள்கையில் நெஞ்சுறுதியையும் நேர்மைத்திறனையும் கொண்டுள்ளாரா? அல்லது தளம்புகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 

சொல்லிலும் செயலிலும் அரசியல் அறத்தை மக்கள் தேடுகிறார்கள்.! 

கிழக்கு வெளிக்குமா …? 

கீழ்வானம்  சிவக்குமா……? 

இது கிழக்கு மக்களின் ஆதங்கமும் கேள்வியும்.