— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
அண்மையில் (06/07.01.2021) இருநாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் கூறிய கூற்றுகள் இப்பத்தியின் கவனத்திற்குள்ளாகிறது.
* ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமும் நீதியும் சமாதானமும் கொண்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம்.
* பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தம் உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்த விடயம். இது பதின்மூன்றாவது திருத்தம் உட்பட இலங்கை அரசின் வாக்குறுதிகளுக்கு அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வின் பொருத்தப்பாடுடையது.
இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்தக் கூற்றுகள் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்கு ‘மலை’ யைக் கொண்டு வரப்போகிறது என்பது போலத் தமிழ் ஊடகங்கள் வழமைபோல் இதனை ஊதிப் பெருப்பித்துச் செய்திகள் வெளியிட்டன. போதாக்குறைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பாராளுமன்றத்தில் இக்கூற்றுகளுக்காக ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் சட்டத் திருத்தம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது 1987 நவம்பர் 14 இல் ஆகும். இது நிறைவேற்றப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அதாவது சுமார் முப்பத்திமூன்று வருடங்களாகப் பதவியிலிருந்த அத்தனை இந்தியப் பிரதமர்களும் ஜனாதிபதிகளும் அவ்வப்போது இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராஜதந்திரிகளும்–பிரதிநிதிகளும் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல் செய்ய வேண்டுமென்றே கூறிவருகிறார்கள்.
வார்த்தைப் பிரயோகங்கள் வேறுபட்டிருக்குமேயொழிய அனைவரினதும் கூற்றின் சாராம்சமும் ஒன்றுதான். ஆகவே, ஜெய்சங்கர் அவர்களின் கூற்றுகள் தமிழ் ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்குமளவுக்கு விசேடமானவையல்ல. புதியனவுமல்ல. பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே அரசியல் விருப்பத்துடன் அர்த்தமுள்ளவிதத்தில் முழுமையாக இன்னும் இலங்கை அரசாங்கங்களினால் அமுல் செய்யப்படவேயில்லை. இந்தியாவும் இதுவரை அதற்கான முழுமையான காத்திரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் மீது பிரயோகித்ததுமில்லை. இந்தியாவின் மென்போக்கான இராஜதந்திர ரீதியான சொற்பிரயோகங்கள் யாவும் இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்குகள்தான்.
இந்தியாவுடன் கலந்துரையாடி 2012 இல் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திலும்கூட பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும்படிதான் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இவற்றிற்கெல்லாம் இதுவரை இலங்கை அரசாங்கங்கள் எதுவும் அசைந்து கொடுக்கவில்லையென்பதே அனுபவமாகும். மாறாக, பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள், மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பறித்தெடுக்கப்பட்டுள்ளன அல்லது ஐதாக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இன்னும் ஒருபடி மேலே சென்று பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் கீழ் உருவான அதிகாரப் பகிர்வு அலகான மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்ய யோசிக்கிறது.
பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் இதுவரை முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய தரப்புகள் மட்டுமல்ல தமிழர் தரப்பும் காரணமாகும். இது ஏற்கனவே இப்பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்திலிருந்து அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியோ அல்லது தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தக் கட்டத்திலும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்யும்படி இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை அரசாங்கத்தின் மீதோ அல்லது இந்திய அரசாங்கத்தின் மீதோ அழுத்தம் கொடுக்கும் எந்த விதமான வெகுஜன நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) ‘பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்’ என்ற பழமொழிக்கிணங்க அவ்வப்போது சந்தர்ப்பங்களுக்கேற்ப பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் பற்றி உதட்டளவில் உச்சரித்துக் கொண்டதோடு தனது இராஜதந்திர (?) அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டது. காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்ற பின்னர் தங்களுக்கு வாக்களித்த உள்ளூர்த் தமிழ்மக்களின் சமூக பொருளாதார அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்த–அதன் முழுமையான அமுலாக்கலைக் குழப்பிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் சொற்கேட்டுத்தான் நடக்கிறது.
இலங்கை–இந்திய சமாதான ஒப்பந்தத்தை உளப்பூர்வமாக அனுசரித்து அதனை இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய செயற்பாடுகளின் ஆரம்பப்படியாக ஏற்றுச் செயற்பட எத்தனித்த தமிழ் அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் ‘துரோகிகள்’ எனப் பட்டம் சூட்டும் அரசியல் கலாசாரத்தையும் உளவியலையும் புலிகள் தங்கள் பிரச்சாரத் தந்திரத்தின் மூலமும் யந்திரத்தின் மூலமும் தமிழ் மக்களிடையே கட்டி வளர்த்து வைத்துள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடந்த காலங்களில் இதற்குத் துணை போயின.
அதனால், இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக அனுசரித்து அதனை அரசியல் விருப்பத்துடன் அமுலாக்க எண்ணும் தமிழ் அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பெருவாரியாக ஆதரிப்பதாயில்லை.
ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்குத் தமிழர்களால் பெருவாரியாக ஆதரிக்கப்பட்டுத் தற்போது ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என குறிசுடப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எவ்வளவுதான் தங்களை ஜனநாயகவாதிகள்–மிதவாதிகள்– அஹிம்சா வாதிகள் என வெளிக்காட்டினாலும் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் சரி–பிழை, நியாயம்–அநியாயங்களுக்கு அப்பால் இவர்களைப் புலிகளின் முகவர்களாக அல்லது புலிகளின் பதிலிகளாகத்தான்– பசுத்தோல் போர்த்திய புலிகளாகத்தான் பார்க்கின்றன. இவர்களும் அவ்வாறே நடந்தும் கொள்கிறார்கள். இவர்கள் என்னதான் ‘பிளவுபடாத இலங்கை’ ‘ஐக்கிய இலங்கை’ எனக் கூறி வந்தாலும் புலிகளை ஆதரிக்கும் இவர்கள் மீது ‘பிரிவினைவாதிகள்’ என்ற பிம்பமே படிந்திருக்கிறது. அது சரியா? பிழையா? என்பது ஒரு புறமிருக்க இதுதான் உண்மை நிலை. இந்த நிலைமை நீடிக்கும் வரை பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்வதில் இலங்கை அரசாங்கமோ அல்லது இந்திய அரசாங்கமோ காத்திரமான ‘கரிசனை’ எதுவும் காட்டப்போவதில்லை.
எனவே, இந் நிலைமையை மாற்ற வேண்டுமாயின் இலங்கைத் தமிழர்களுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன.
(1) இலங்கையில் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சகல தமிழ் அரசியற் கட்சிகளும் அதனோடிணைந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் புரிந்துணர்வின் அடிப்படையில் கூட்டாக முன்வந்து பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யும்படி நிலத்திலும் புலத்திலும் மேற்கொள்ளும் வெகுஜன நடவடிக்கைகளினூடாக இலங்கை அரசாங்கத்தின் மீதும் இந்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அல்லது
(2) முதலாவது வழி சாத்தியப்படவில்லையாயின், எதிர்காலத்திலாவது ஜனநாயக ரீதியிலான தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள், இந்திய–இலங்கை சமாதான ஒப்பந்தத்தை உளப்பூர்வமாக அனுசரித்து அதனை முழுமையாக அமுல் செய்ய அரசியல் விருப்பம் கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிக்கச் சங்கற்பம் கொள்ள வேண்டும். அதாவது இந்த அணி அரசியல் பலம் பெற வேண்டும்.
இந்த இரண்டில் ஒன்று நடை பெறவில்லையானால் தமிழ் மக்களின் எதிர்காலம் ‘பழைய குருடி கதவை திறடி’ தான்.