பெரியார் – அறிதலும் புரிதலும்  (பாகம் – ஒன்று)

பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)

— விஜி/ஸ்டாலின் —  

இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில்   அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. 

வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும்,  சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. 

அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு  பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் மிக அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் பெரியாராகவே அது இருந்து வருகின்றது.  

யாரிந்த பெரியார்? என்று ஈழத்திலே இன்றைய இளந்தலைமுறையினரிடத்தில்  கேட்டால் கடவுளை எதிர்த்தவர், வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர், என்கின்ற நுனிப்புல் மேய்கின்ற  வண்ணமான  பதில்களே பெரும்பான்மையாக கிடைக்கின்றன.   

மனிதகுல விடுதலையின் குறியீடு 

ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் மேடை முழக்கங்களில், மனித உரிமைகளுக்கான  குரல்களில்,  பெண்ணுரிமை வாதிகளின் முன்னெடுப்புகளில்,  சுரண்டல்களுக்கெதிரான இடதுசாரிகளின் போராட்டக் களங்களில், சமூக நீதிக்கான அறைகூவல்களில், தமிழ் தேசியவாதிகளின் மொழியுணர்வு கோரிக்கைகளில், மத  சிறுபான்மையினரின் நசுக்கப்பட்ட குரல்களில் அனைத்திலுமே பெரியார் என்னும் பெயர் முன்னிறுத்தப்படுகின்றது.   பெரியார் இறந்து சுமார் (48 வருடங்கள்) அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் நாட்டில் உருவாகுகின்ற எந்தவொரு அரசியல்/சமூக செயற்பாட்டு   இயக்கமேனும் பெரியார் என்னும் பெயரை  கடந்து செல்ல முடியாத நிலைமை இன்றுவரை தொடர்கின்றது. சுருங்கச்சொன்னால் மனிதகுல விடுதலையின் ஒட்டுமொத்தக் குறியீடாக தமிழ்நாட்டில் பெரியார் கொண்டாடப்படுகின்றார். “கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவேயில்லை”யென்று தன் வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்த ஒரு மனிதனை 99 வீதம் இறைபக்தியால் நிரம்பி வழியும் தமிழ் நாட்டுமக்கள் கொண்டாடுவதன் இரகசியந்தான் என்ன? அவர் தமிழ் நாட்டு மக்களுக்காக அப்படி என்னதான் செய்தார்? எதனைதான் விட்டுச் சென்றுள்ளார்?   

தொண்டு செய்து பழுத்த பழம்  

 தூயதாடி மார்பில் விழும்  

 மண்டைச் சுரப்பை உலகு தொழும்  

 மனக்குகையில் சிறுத்தை  எழும்”.  

என்று பெரியாரை சிலாகிப்பார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.  

1879 ல் பெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.இராமசாமி  என்னும் இயற்பெயரை கொண்ட பெரியார்  95 வயதுவரை வாழ்ந்தவர். 

இளவயது 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தான் இளவயதில் வகித்துவந்த ஈரோடு உள்ளுராட்சி மன்றத்தலைவர் பதவி உட்பட 28 கெளரவ பதவிகளை இராஜினாமா செய்தவர். இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாடு தலைவராக இருந்து காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கதர் இயக்கம், மதுவிலக்கு போராட்டம் என்பவற்றை தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து முன்னின்று நடத்தியவர். 

சமய சம்பிரதாயங்களின் பெயரால் பெண்கள் மீது இழைக்கப்பட்டுவந்த சமூகக்கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்பி அதனுடாக பெண்களை அணிதிரட்டுவதிலும் போராடச் செய்வதிலும் பாரிய வெற்றிகண்டவர். பெண்ணடிமைத்தனத்தை பூண்டோடு ஒழிப்பதில் அவர் காட்டிவந்த சிரத்தையை மதித்து பெண்கள் மாநாடொன்றில் அவருக்கு வழங்கப்பட்ட கெளரவ பட்டமே அவருக்கு பெரியார்‘ என்னும்  நிரந்தர பெயராயிற்று.   

மூத்த சத்தியாக்கிரகி 

கேரளம் வைக்கம் மகாதேவர் ஆலயத்தின் பெயரில் இடம்பெற்ற தீண்டாமை கொடுமைகளுக்கெதிராக நீண்ட சத்தியாகிரகத்தினை நடாத்தி அதில் வெற்றியும் கண்டவர். இதனாலேயே அவர் ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுகின்றார். அப்போதெல்லாம் காந்தி இந்தியாவில் தனது சத்தியாக்கிரக வழிமுறைகளை தொடங்கியிருக்கவில்லை. என்பது சுவாரசியமான வரலாற்று செய்தியாகும்.  

அக்காலத்தில் கோலோச்சிய சாதிய கொடுமைகள் மீதும் அதனை பாதுகாக்கும் புராண இதிகாசங்கள் மீதும் கடவுளின் பெயரால் நடைபெற்றுவந்த அநீதிகள் மீதும் கடுமையான கேள்விக்கணைகளை தொடுத்தார். அதன்காரணமாக கண்ணெதிரே இடம்பெறும் தீண்டாமை கொடுமைகளையிட்டு   காந்தியாருடன் சமரசமற்ற  வாத பிரதிவாதங்களில் ஈடுபடநேர்ந்தது. இறுதியில் அவருடன் முரண்பட்டு இந்திய தேசியகாங்கிரஸில் இருந்து வெளியேறினார்.  

சுயமரியாதை இயக்கம் 

அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பகுத்தறிவு மற்றும் சமதர்ம பிரச்சாரங்களை முன்னெடுப்பதை தீவிரமாக்கினார். அவற்றுக்காகவே பல மாநாடுகளை தமிழகமெங்கும் நடாத்தினார்.  

தனது சிந்தனைகளையும்,  செயற்பாடுகளையும்  மக்களிடம் பரவலாக  எடுத்துச்  செல்வதற்காக  குடியரசு, ரிவோல்ட் (ஆங்கிலம்), பகுத்தறிவு, ஜஸ்ட்டிஸ் (ஆங்கிலம்), விடுதலை, உண்மை, தி மொடர்ன் ரஷனிஸ்ட் (ஆங்கிலம்) போன்ற பல்வேறுபட்ட   வாராந்த, மாதாந்த இதழ்களை வெளியிட்டார். 

பார்ப்பனரல்லாதாருக்கான சமூக சமத்துவத்துக்காக போராடிவந்த நீதிகட்சியில் சேர்ந்தியங்கி அதன் தலைவராகவும் பின்னர் திராவிட இயக்கத்தின் ஸ்தாபகராகவும், தலைவராகவும் இறக்கும் வரை பணியாற்றினார். இவர் உருவாக்கிய திராவிட இயக்கப் பாரம்பரியமே  பல்வேறு கிளைகளாகி இன்றுவரை தமிழ் நாட்டு அரசியலில் நிராகரிக்கமுடியாத சக்திகளாக இருந்துவருகின்றன.  

1937ஆம் ஆண்டு  கட்டாய ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் அறிஞர்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளையும் கிளர்ச்சிகளையும் செய்தார். சுமார் மூன்று ஆண்டுகள் இடைவிடாது நடந்த இப்போராட்டங்களின் காரணமாக ஹிந்தி திணிப்பு வாபஸ் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . 

வைக்கம் போராட்டம், மது விலக்கு மறியல் போராட்டம், ஹிந்தி திணிப்புக்கெதிரான போராட்டம் என்பவற்றின்போதும் ‘பெரியாரின் பொன் மொழிகள்’ என்னும் நூல் வெளியீட்டுக்காகவும் கூட பல்வேறு தடவைகளில் வருடக்கணக்கான சிறைவாசங்களை அனுபவித்தார்.  

பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கான ஒதுக்கீட்டு விடயத்தில் திருத்தம் கோரி பெரியார் நடத்திய கிளர்ச்சிகளின் பலனாகவே இந்திய அரசியல் யாப்பானது 1951ல் முதன்முதலாக திருத்தத்தை கண்டது என்பது பெரும் சாதனையே.   

சர்வதேச ரீதியாக கப்பல் பயணங்கள் மட்டுமே இருந்துவந்த காலங்களில் இங்கிலாந்து,  ஜெர்மனி, ரஸ்யா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கெல்லாம்  அரசியல்தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புரட்சிகர சக்திகள் போன்ற பலதரப்பட்டவர்களையும் சந்தித்தும் உரையாடியும் பல்வேறுவிதமான அனுபவங்களை பெற்றுக்கொண்டார்.  

உலகப்புகழ்பெற்ற காரல்மாக்சின்  ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை 1931ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக தமிழாக்கம் செய்து வெளியிட்ட பெருமைக்குரியவர் இந்த பெரியாரேயாகும்.  

பெரியாரின் அரசியல் போராட்டங்களும் களப்பணிகளும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பல்வேறு விதமான மாறுதல்களுக்கு அடிகோலின. அதேவேளை  மாக்சிஸம், தேசியம், சாதியம்,   கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கைகள்,  பெண்ணுரிமை, கல்வி முறைமை, தமிழ் மொழி சீர்திருத்தம், மாநில உரிமைகள்,  சமூகநீதி, மதசார்பின்மை என்று விரிகின்ற அவரது எழுத்துக்களும் சிந்தனைகளும் பரந்து விரிந்த நவீன பார்வைகளால் செதுக்கப்பட்டவையாகும். எதிர்காலம் பற்றிய அவரது   எதிர்வுகூறல்களும் முன்மொழிவுகளும்  இன்றுவரை பலராலும் ஆச்சரியமானவையாக   விதந்தோதப்படுகின்றன.   இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கையிலும் மத, மொழி சிறுபான்மையினராகிய நாம் எதிர்கொள்ளுகின்ற அரசியல்,சமூக சிக்கல்களுக்கு விடைகாண பெரியாரின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் நிச்சயம் வழிவகுக்கும் வல்லமைகொண்டவையாகும். 

இவ்வாறாகவெல்லாம் இந்திய அளவில் காந்தி, நேரு, அம்பேத்கார், ஜின்னா என்று பலதரப்பட்ட ஆளுமைகளுடன் சரிநிகர் சமனாக அரசியல் களம்கண்ட பெரியார்மட்டும் ஈழத்தை  பொறுத்தவரை எப்படி முக்கியத்துவம் இழந்து போனார்?  ஏன் அதிகம் அறியப்படாது போனார்?  

குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களில் எத்தனையோ இந்திய அறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் நம்நாட்டு பாடவிதான குழுவினர்கள் ஏன்  புது உலக தீர்க்கதரிசிதென்கிழக்கு ஆசியாவின் சோக்ரடீஸ்அறியாமைமூடநம்பிக்கைஅர்த்தமற்ற சம்பிரதாயம்இழிந்த வழக்கங்கள் என்பவற்றின் கடும்  எதிரி”  என்று யுனஸ்கோவால் புகழுரைக்கப்பட்ட பெரியாரை மட்டும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்? என்கின்ற கேள்விகள் எழுப்பப்படவேண்டிய காலமிது.   

(தொடரும்—)