நில்! கவனி!!

நில்! கவனி!!

        சிக்மலிங்கம் றெஜினோல்ட் 

கொவிட் 19 உங்களுக்கு, எனக்கு மட்டுமல்ல உலகெங்கும் உண்டாக்கியிருக்கும் புதிய வாழ்க்கைச் சவால்கள் கொஞ்சமல்ல. மிகச் சாதாரண மக்களிலிருந்து அரசுகள் வரையில் ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பதையெல்லாம் நீங்களும் அறிவீர்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் இந்த நெருக்கடி நிலையை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமலே திணறிக்கொண்டிருக்கின்றன. இதெல்லாம் ஒட்டு மொத்தத்தில் சாதாரணங்களையே கூடுதலாகப்பாதிக்கும். இதற்கு உதாரணமாக இங்கே இரண்டு கடிதங்கள். இவை காலத்தின் சாட்சியம். ஒரு கடிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவருடையது. மற்றது நம்முடையது. 

கடிதம் 01 

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் நான்  பணியாற்றி வந்த இதழ்  அச்சாகவில்லை. இந்நிலையில்  ஜூலை மாதம் இதழை நிறுத்துவதாக நிர்வாகம்  முடிவெடுத்துவிட்டது. இப்போது  எல்லா பக்கம் இருந்தும்  ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு என்ற செய்திகளே  வருவதால்,  நான் புதிதாக எங்கும் முயற்சி  செய்யவில்லை. ஊருக்கு  வந்துவிட்டேன். ஆனால், வரும் நாட்களில் ஊடகப் பணி இல்லை  என்றாலும், புதிய முயற்சிகள், இணையத்தளம் என என்வாசிப்பு ஆர்வங்களுக்கு தீனி  போடும் வேலைகளை  தொடர்ந்து செய்துகொண்டுதான்  இருக்கிறேன். 

ஊரில் எங்கள் அப்பா வழியாக எனக்கு வந்த நிலம் + என் தம்பி  பாகம் சும்மாதான் கிடந்தது. அதில்  மரங்கள் போட்டு ஒரு  தோட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே  முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஊரில்  தொடர்ந்து 2-3 நாட்களுக்கு மேல் இருக்க  முடியாததால் அது  நடக்கவில்லை. எனவே, இப்போது  அந்த முயற்சியில் உள்ளேன். 

ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வந்தேன்.  முதலில் ஊரில் இருக்கும் எங்கள்  பூர்வீக வீட்டைச் சரி செய்யும்  வேலைகளை  செய்துகொண்டுள்ளேன். அது  தைப் பொங்கலுக்கு முன்னால்  முடிந்துவிடும். அதன் பின்னர் தோட்டத்தில் வேலைகளை  தொடங்க வேண்டும். 

நான் சிறு வயதில் அறிந்து, பழகி  வைத்திருக்கும் விவசாயம் வேறு.  இப்போதுள்ள விவசாய முறைகள்  வேறு. இதில் எப்படிப்  பொருந்திக் கொள்வதென்று  திணறுகிறேன். வந்ததும் பூசணி,  உளுந்து பயிர் செய்தேன்.  இரண்டிலும் முழுமையாக  நட்டம். பூசணியில் வைரஸ் தாக்குதல் காரணமாக இலைகள்  மஞ்சளாகி, பின்னர்  சாம்பலாகிவிட்டது. 1.75 ஏக்கரில்  இருந்து 100 காய்கள் மட்டுதான்  கிடைத்தது. அதுவும் சிறிய  காய்கள். உளுந்தை களை  மூடிவிட்டது. அரை ஏக்கரில்  இருந்து ஒரு கிலோ உளுந்துதான்  கிடைத்தது. முருங்கை மரம்  வைக்கலாம் என்று 1500 செடிகள்  வாங்கினேன்.  அத்தனையும் பூச்சி சாப்பிட்டு  ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.  இந்த மூன்று முயற்சிகளும் பலன்  தராததால்தான், வீட்டு  வேலைகளை முடித்துவிட்டு, பின்னர் பார்க்கலாம் என தற்போது  தோட்டத்தில் எதுவும் செய்யாமல்  உள்ளேன்.  

சொட்டு நீர் பாசனம் அமைத்துவிட்டு, தென்னை – மா – கொய்யா  என  பல்வேறு வகை மரங்கள் வைக்க  திட்டம். இந்த மரங்கள்  வளர்ந்து  பலன் தருவது வரைக்கும்  இடையிடையே ஊடு பயிர்கள் செய்துவருமானம் எடுக்க முயற்சிக்க  வேண்டும். இரண்டு  வருடங்கள்  வரைக்கும் பார்ப்போம் என  நினைத்திருக்கிறேன். அதன் பின்னரும் தோட்டம் கை  கொடுக்கவில்லை என்றால்  மீண்டும் சென்னை சென்று வேலை தேடவேண்டும்.  

நீங்களும் விவசாயம் சார்ந்த  பணிகளில் இருப்பது தெரியும்.  ஜனவரியில் சென்னையில் பார்த்தபோது, நிலங்களை திருத்தும்  பணிகளை செய்து கொண்டிருப்பதாக சொன்ன ஞாபகம். பின்னர்  இது தொடர்பான  உங்கள்  ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்தேன்.  நீங்கள் எத்தனை பெரிய  பெரிய  நெருக்கடிகளை கடந்து வந்தவர்.  இந்த  காலகட்டத்தையும்  கடந்துவிடுவீர்கள். 

கொஞ்சம் சிரமப்பட்டாலும்  பின்வாங்காமல் இந்த காலகட்டத்தை கடந்துவிட்டால், ஒரு பிரகாசமான  எதிர்காலம் இருக்கலாம் என்ற  நம்பிக்கையுடன்தான் நான்  தோட்டத்தில் இறங்கியுள்ளேன்.  பார்ப்போம். 

கடிதம் 02 

நீங்கள் சொல்வதைப்போல  கொரோனா நம்மைப்  போன்றவர்களை நெருக்கடிக்குள்ளாக்கியது  மட்டுமல்ல, நம்மைப் பல  கோணங்களில் ஆழமாகச்  சிந்திக்கவும் வைத்துள்ளது.  நெருக்கடிகளுக்குள்ள பொதுவான  இயல்பிது. யுத்த கால  நெருக்கடிகளில் நாங்கள் வழமைக்கு மாறாக – ஆனால், அந்த  நிலைமையை வெல்வதற்கான  அல்லது தாக்குப் பிடிப்பதற்கான  முறைமைகளை உருவாக்கினோம்.  அப்படித்தான் உள்ளது  கொவிட் 19 நெருக்கடியும். 

நம்மைப்போன்றவர்கள்  பொருளாதார ரீதியில் தாக்குப்  பிடிக்கவோ பதிலாக அடுத்த  தளத்தை நிர்மாணிக்கவோ உடனடிச் சாத்தியம்      குறைந்தவர்கள். அல்லது இல்லாதவர்கள். அதனால் மரபார்ந்த  தொழில் – வாழ்க்கை நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.  எப்போதும் நெருக்கடியில் அல்லது கடைசியில் கை கொடுப்பது அது ஒன்றுதான். நெருக்கடி காலத்தில் கூட்டுறவுக் கடைகளில் போய் நிற்பதைப்போல. 

 ஆனால், ஒன்று பலரையும்  தங்களுடைய வேர்களை நோக்கியும்   கிராமங்களை நோக்கியும் செல்ல வைத்துள்ளது. வாழ்க்கையைக்   கூடத்தான். உங்களைப்போலவே எனக்கு தாயாரின் வழியான நிலம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. சாதி விலக்குத்  திருமணத்தினால் தொடர்புகள்,  உறவுகள் எல்லாம் விலகிய  நிலையில் அதை இதுவரையில் பெற முடியவில்லை. இப்போது  வேறு வழியில்லாமல் சட்டத்தின்படி  எனக்குரிய பங்கு வந்து  சேர்ந்திருக்கிறது. சட்டமும் ஒரு  வகையில் நமக்கு உதவுகிறது. நீதி  வழங்குகிறது எனும்போது ஆச்சரியம் வருகிறது. 

அந்த நிலத்தில் என்ன செய்யலாம்  என்று குழப்பம். எந்தப்  பயிரிடலுக்கும் இப்போதுள்ள  விவசாய முறைகளைக்  கொஞ்சமாவது கற்றுக்  கொள்ளவேண்டும். நீங்கள் சொல்வதைப்போல நாம் அறிந்த,  பழகிய விவசாயம் இன்றில்லை.     இடையில் நாம் விவசாயத்தைக் கை விட்டதைப்போல அதுவும் நம்மை விட்டு வேறு எங்கோ, எப்படியோ ஆகி விட்டது. 

கொரோனா நாட்களில் நானும் இங்கே பயிரிடல்களை  உற்சாகமாகச் செய்தேன். ஆனால்,  பங்கசு, வைரஸ் தொற்றுகளால்  அத்தனை செடிகளும் நாசமாகி  விட்டன. தொடக்கத்தில் செழித்து  மதாளித்து நம் உழைப்புக்கு  மதிப்பைத் தருவதைப்போல இருந்தது. நமக்கொரு எதிர்காலம் உண்டு  என நம்பிக்கையளித்தது. ஆனால்,  பூக்கும் பருவத்தில் மெல்ல மெல்லச் செடிகளில் வாட்டம் ஏற்பட்டு,  கத்தரி, பூசனி, வெண்டி, மிளகாய்  எல்லாமே நாசமாகி விட்டன. வெண்டி மட்டும் ஒரு முறை காய்த்தது. பூசணியில் ஒரேயொரு காய் மட்டுமே எடுத்தோம். 

இப்பொழுது சோளம் போட்டேன். அதுவும் பெரிய அளவுக்கு நல்ல      மாதிரி வந்திருக்கிறது என்றில்லை. ஏதோ  செய்ய வேணும்  என்பதற்காகச் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், சில விவசாயிகள் வெற்றிகரமாக அறுவடைகளைச் செய்கிறார்கள். அவர்கள்  இரசாயன மருந்தையும் உரத்தையும் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் தோட்டம் செழிப்பாக  இருக்கிறது. இது நமக்குப்  பொருந்ததாது, மட்டுமல்ல. அது கூடாது என்று புத்தி வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. அவர்களுக்கும்  இது கட்டுப்படியாகுமோ  தெரியவில்லை. மருந்துக்கும் உரத்துக்கும் செலவழித்துக் கொண்டு எப்படி லாபத்தைப் பெற முடியும்?  இதனால் அந்த நிலத்தில் எந்த மாதிரியான பயிரிடலைச் செய்வது    என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  

விவசாயத்தை ஏன் பலரும் விரும்பாதிருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. விவசாயம் சார்ந்த திணைக்களங்களும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களாலும் வெற்றிகரமாக விவசாயத்தை மாற்றியமைக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் மனிதர்களுக்கான உணவுக்கு விவசாயம் ஒன்றுதான் வழி. ஏன் விலங்குகளுடைய உணவுக்கும் கூடத்தான். 

எங்கள் ஊரும் ஏறக்குறைய உங்கள் பக்கம் போலத்தான். ஆனால்.     மலைகளில்லை. தென்னை நன்றாக வரும். தென்னைகளிலும் ஒரு     வகையான வைரஸ் தொற்றுண்டு.  காய்களை அது சிறுக்க  வைக்கிறது. அடுத்தது மரமுந்திரி.  அதற்கும் பேர் போனது எங்கள் ஊர். கொய்யா, முருங்கை போன்றவையும் நன்றாக வரும். சிலர் முருங்கைத் தோப்புகளை  வைத்திருக்கிறார்கள். பத்துப்  பன்னிரண்டு ஏக்கர்களில் என்று.  இப்பொழுது அது ஒன்றுதான் உடனடி வருமானத்துக்குச் சாத்தியமானது. ஆனால், அதற்கும் விமானப் போக்குவரத்து சீராக நடக்க வேண்டும். இந்த முருங்கைகள் பெருமளவுக்கும் இலைக்காகவே பயிரிப்படுவது. இலை ஏற்றுமதி இல்லை என்றால் அதுவும் நட்டமே. 

முருங்கைச் செய்கையில் ஈடுபடவும் ஒரு விருப்பம் உண்டு.  அடுத்த  சித்திரை மாதத்தில் கிணறை  அமைத்துக் கொண்டு எதையும்  தொடங்கலாம் என்றிருக்கிறேன்.  

இப்போது நமக்கு பொருத்தமான –  உதவக்கூடிய விவசாயத் துறையினரின் ஆலோசனைகளும்  உதவிகளும் தேவை. அதைக்  கண்டு பிடியுங்கள். இங்கே  அப்படியான இருவர் அண்மையில்  எனக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களுடைய  ஆலோசனைப்படி மண்ணின் இயல்பு, சூழல், சந்தை  போன்றவற்றுக்கு ஏற்ற  பயிரிடல்களைச் செய்யலாம் என்பதுதான் இறுதித் தீர்மானம்.  

உங்கள் பூர்வீக வீட்டைத் திருத்துவது மகிழ்ச்சியான சேதி. அது பல    நினைவிழைகளோடு பின்னப்பட்ட  ஒன்றல்லவா. இங்கே நாங்கள்  இருந்த வீடு, வளவு எல்லாமே  காடாகி விட்டன. 35 ஆண்டுகள்  அந்தப்பகுதியில் மக்களே இல்லை  என்றால் எப்படியிருக்கும்?  அதனால் இப்பொழுது காடழிக்கும் வேலையில் உள்ளேன். உங்கள்  வீட்டுக்கு ஒருநாள் வருவோம். காலம் வழி திறந்தால் எங்களிடத்திற்கு நீங்கள் வரவேணும். 

நீங்கள் ஆரம்பிக்கவுள்ள தென்னை, மா, கொய்யா பயிர்ச்செய்கை நல்ல ஐடியாதான். உண்டாக்கி விட்டால்  பிறகு கவனிப்பது மட்டுமே வேலை. நல்லமுறையில் கவனித்துக் கொண்டால் போதும்.  நிரந்தர  வருவாய் கிடைக்கும். வயதாகும்  காலத்தில் இந்த மாதிரியான  தொடர் வருமானத்துக்குரிய பயிரிடல்தான் பொருத்தமானது.               எல்லாமே ஒரு நம்பிக்கைதான். அதை விட நமக்கு வேறு என்னதான் வழி