தாடி ஒரு அடையாளம்…..

தாடி ஒரு அடையாளம்…..

    — வேதநாயகம் தபேந்திரன் — 

”ஆடிக்குப் பின்னால் ஒரு ஆவணி.  இந்தத் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணி” 

1980 களின் முற்பகுதியில்  ஆனந்தவிகடனில் வாசித்த ஒரு  கேலிக்காட்டூன் கவிதை. 

காதல் தோல்வியின் அடையாளமே ‘தாடி’ தானென ஒருகாலம்  இருந்தது.  

எமது காலத்தில் தாடி  வைத்துக்கொண்டால் ஒருவர் தீராத  சோகத்துடன் இருக்கின்றார் என்பதே கருத்து. 

அது போல எடுத்த சபதத்தை முடிக்கும் வரையில் தாடி மீசை மழிக்காத ரோசக்காரர்களையும் கண்டுள்ளேன். 

சைவ சமயத்தில் தாடி வைப்பது துறவிகளுக்குரிய ஒரு அடையாளமாகக் காணப்பட்டது.  சித்தர்கள், யோகிகள், ஞானிகள் தாடியுடன்தான் இருப்பதாக வரலாறு சொல்லுகின்றது. 

அண்மைய வருடங்களாக எமது இளைஞர்கள் அதிகமானோருக்குத் தாடிவைப்பதில் பெரிய விருப்பம் உள்ளது. 

தாடி வளருமளவுக்கு ரோமம் இல்லாதோர் ”எனக்கு இந்த  ஸ்ரைலில் விருப்பம் இல்லை” என புலுடா அறிக்கை விட்டுத்தான்  தப்பிக்கொள்ளலாம். 

சிலருக்கு உண்மையாகவே விருப்பம் இல்லைத்தான். 

கிளீன் சேவ் எடுத்துத்  ரிப்ரொப்பாக நடமாடுவதை நிரந்தரமாகக் கொண்டோரும் உள்ளனர்.  

இளைஞர்களின் ஸ்ரைல் உலகத்தில் தலைமுடி, மீசை, தாடி தொடர்பாகக் காலத்துக்குக்காலம் புதுஸ்ரைல்கள்  வரும்.  பழையன கழியும். 

அது போல நடை. உடையிலும் புதுப்புது ஸ்ரைல்கள் வரும். 

கம்யூனிச சித்தாந்தத்தின் தந்தை கார்ல்மாக்சும் ஒரு தாடிக்காரர்தான். 

கியூபாவின் விடுதலைக்குப் போராடி வென்ற பிடல் காஸ்ட்ரோ,  சே குவேரா போன்ற தலைவர்களும் தாடியுடன்தான் வாழ்ந்தார்கள். 

ஏங்கெல்ஸ், ஹோசி மின், ஜோசப்ஸ்ராலின் போன்றோரும் தாடி வைத்திருந்தார்கள். 

லெனின் குறுந்தாடி வைத்திருந்தார். 

தாடி என்பது உலகிலுள்ள  புரட்சிக்காரர்களின் அடையாளமாகக் காலாதி காலமாகப் பார்க்கப்படுகின்றது. 

1971 ஏப்பிரல் 05 ஜே.வி.பிபுரட்சியின் போதும் றோகண விஜேவீர உட்பட இயக்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் தாடிக்காரர்களாகவே காணப்பட்டார்கள். 

பின்பு 1987 இல் இந்திய  அமைதிகாக்கும் படைகளின் வருகையைக்  கண்டித்து மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி ரி 56  துப்பாக்கியுகத்தை உருவாக்கிய  போதும் தாடிக்கார இயக்கமாகவே காணப்பட்டார்கள். 

1989 நவம்பரில் கண்டி  உலப்பனையில் றோகண விஜேவீர கைது செய்யப்பட்டபோது தாடி மீசை ஏதுமின்றித்தான் இருந்தார். 

கிளீன்சேவ் ஆளாகத் தன்னை  உருமாற்றிக்கொண்டு மறைந்து வாழ்ந்துள்ளார்.  

எமது மண்ணில் தமிழீழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள்  உருவான காலத்தில் ஈபிஆர்எல்எவ் எனப்பட்ட  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உட்படப் போராளிகள் பலர் தாடி வைத்துக்கொண்டார்கள். 

அதனால் தாடிக்கார இயக்கமென்ற  ஒரு பெயரும் ஈபிஆர்எல்எவ்வுக்கு இருந்தது. 

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தா எப்போதும் தாடியுடன்தான் இருப்பார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மன்னார் தளபதியாக  இருந்த விக்ரர், திருகோணமலைத் தளபதியாக  இருந்த புலேந்தி அம்மான் ஆகியோர் தாடிக்காரர்களாக அறியப்பட்டனர். தலைவர் வே.பிரபாகரனும் இந்தியப் படைகள் இருந்த காலத்தில் தமிழகத்தின் வை.கோபாலசாமியை வன்னிக்காட்டினுள்  சந்தித்தபோது மட்டுமே தாடி வைத்திருந்தார். 

விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் தாடியை விரும்பி வைத்தார்கள் என்பதனைவிட தலைமுடி  வெட்டுதல்,  முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட நேரமில்லாமல் போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டார்கள் என்பதே பொருந்தும். 

அவுஸ்திரேலியாவின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரிக்கி பொன்டிங் மீசையுடன் இணைந்த தாடியை ஒரு புது ஸ்ரைலில் விட்டார். 

அது உடனேயே பொன்டிங் ஸ்ரைல் என உலகம் முழுவதும்  பற்றிப்படர்ந்தது. 

பொன்டிங்கட் என்ற பெயரில்  இளசுகள் மட்டுமல்ல நடுத்தரங்களும் பழசுகளும் கூட தாடி வைத்துக்கொண்டார்கள். 

தற்கால கிரிக்கெட் வீரர்களில் தென்னாபிரிக்காவின் ஹசீம்  அம்லா, இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆகியோர் தான் பெரிய தாடியுள்ளோராகக் காணப்படுகின்றனர். 

இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி  கூட வெண்மையாக மெல்லியதாடி  ஒன்றை வைத்துள்ளார். 

இலங்கையில் ஜனாதிபதியாகப்,பிரதமராகப் பதவிவகித்த சிங்களத் தலைவர்கள் யாருமே தாடி வைத்ததாக அறியப்படவில்லை. 

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனும் தாடியுடன்தான் இருப்பார்.  சாவகச்சேரித் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினம் தாடியை நிரந்தரமாக வைத்துக்கொண்டார். 

வாடா என் மச்சி வாழைக்காய்ப் பச்சி ,  உன் உடம்பைப் பிச்சிப் போட்டிடுவன் பச்சி புகழ் ரி.ராஜேந்தரும் ஒரு நிரந்தரத் தாடிக்காரர். 

அதிலும் ஒரு பகடி என்னவென்றால் அவர் இரட்டை வேசத்தில்  நடித்த ஒரு படத்தில் கூட இரு ரி.ர்களும்  தாடிதான். 

பாடகர் கே.ஜே.ஜேசுதாசும் ஒரு நிரந்தரத் தாடிக்காரர். 

சைவ முறையில் கொள்ளி வைத்தல் கடமையைச் செய்த ஒருவர்  அந்தியேட்டி முடியும் வரையில் தாடிமீசையை மழிக்காமல்  இருப்பார்கள்.  

இதுவும் ஒருவகை விரதமாகும். 

அது போலகந்த சஸ்டி  விரதமிருப்போர் விரதகாலத்தில் தாடி, மீசையை மழிக்கமாட்டார்கள். 

பெண்சாதி கருவுற்றால் சில கணவர்மார் தாடி வைப்பதும் வழக்கம். 

இவை தாடிவைக்கும் ரெம்பறறிக் (தற்காலிக) காலங்கள். 

இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுவோரில் தாடி மீசையை  நிரந்தரமாக வைத்திருக்கும் மார்க்கமுள்ளோரும் உள்ளார்கள்.  ஒசாமா பின் லேடன் உட்பட பல தாடிக்காரப் பிரபலங்கள் உள்ளனர். 

முஸ்லீம்களில் மீசையை மழித்துத்  தாடியை மட்டும் பெரிதாக விடுவோரும் உள்ளார்கள். 

இந்தியாவில் சீக்கிய மதத்தைப் பின்பற்றும் சீக்கியர்கள்  தமது வாழ்நாளில் தலைமுடி வெட்டுதல்,  தாடி மீசை வழித்தலைச் செய்யமாட்டார்கள். தமது உடலில் உள்ள ரோமங்கள் உதிர்ந்தால்  தங்களது உடல் பலவீனப்பட்டுப் போகுமென்பது அவர்களது நம்பிக்கை. 

இது உண்மைபோலும். இந்தியாவில் நம்பர் வன் பலசாலிகள்  அவர்கள்தானோ. 

நிரந்தரமாகத் தலைப்பாகை கட்டித் தமது தோகைக்கூந்தலை அதனுள் மடக்கிக்கொள்வார்கள். 

இந்திய கிரிக்கெற் அணியில்  விளையாடும்போதும், இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும்போதும் தலைப்பாகை கழட்டமாட்டார்கள்.  

இந்தியாவின் சுதந்திர, குடியரசுத் தினங்களில் அணிவகுப்பில் கூடத் தலைப்பாகை வைத்துக்கொண்ட சீக்கிய வீரர்கள் இருப்பார்கள். 

எல்லோருமே ஒரே சீராக  இருக்கும்போது தலைப்பாகைகள் ஆங்காங்கே தெரிவது பார்க்கச் சற்றுச் சிரமமாகத்தானிருக்கும்.  ஆனால் அது அவர்களது உரிமை. 

சீக்கியர்களான கியானிஜெயில் சிங் இந்திய ஜனாதிபதியாகவும்,  மன்மோகன்சிங் பிரதமராகவும் பதவி வகித்துள்ளனர். 

இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் தென் பிராந்தியத் தளபதியாக இருந்த திபேந்திரசிங்கும் ஒரு சீக்கியர்தான். 

இந்திய சனத்தொகையில் சீக்கியர்கள் 4 வீதமாக இருந்தாலும்  இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் சீக்கியர்கள் 15 வீதமாக இருப்பதாகஅறிகிறேன். 

இந்தியாவில் 30 மாநிலங்கள் இருந்த போதும் ஐபிஎல் கிரிக்கெற்றில் 8 மாநிலங்களது பெயர்களைக்கொண்ட  அணிகள்தான் விளையாடுகின்றன.  

அதில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பும்  ஓன்று. 

தமிழகத்தை ஒருகாலம் ஒரு கலக்குக்கலக்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனது தாடி மீசையும் பிரபலமானது. 

சூர்யா நடித்துப் பிரபலமான சிங்கம் படத்தைத் தொடர்ந்து சூர்யா ஸ்ரைல் தாடி பிரபலமானது. இளைஞர்கள் பலர் அந்த ஸ்ரைலுக்கு மாறினார்கள். 

1987 இல் கமலஹாசன்  நடிப்பில்வந்த சத்யா படத்தில் கமல் தாடி, மீசை, தலைமுடி ஆகியவை ஒரே அளவினதாக இருக்கத்தக்கதான ஸ்ரைலில் வருவார். அதுஅப்போது சத்யா கட் என இளைஞர்களிடையே பிரபலம் பெற்றது.   

தாடி தொடர்பாகச் சினிமாப் பாடல்களும் வந்துள்ளன. 

சினிமாவில் கதாநாயகனது சோகத்தைக் காட்டத் தாடியுடனான காட்சிகளைத்தான் பெரும்பாலும் அமைப்பார்கள். 

இப்படியே சொல்லிக்கொண்டு  போனால் தாடியின் வரலாறு நீண்டு  கொண்டேபோகும்.