சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (16)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (16)

   — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

‘இது என் கதையல்ல,  என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 

1970 ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சராக இருந்தவர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அவர்கள். அமைச்சுக்களுக்கும், அரச திணைக்களங்களுக்கும் ஆட்சேர்க்கும் விடயத்தில், அதுவரை இருந்து வந்த நடைமுறையில் நல்லதொரு மாற்றத்தை அவர் கொண்டுவந்தார். க.பொ.த. சா/தரம் மற்றும் உயர்தரத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தவர்களில், தேவைப்படுத்தப்பட்ட தகைமைகளைக் கொண்டிருந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதிக புள்ளிகளைப் பெற்றவர்களை கணனி மூலம் தெரிவுசெய்யும் முறையை 1971 ஆம் ஆண்டில் அவர் அறிமுகப்படுத்தினார்.  

க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம், மொழி உட்பட நான்கு பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக இருந்தாலும், அடிப்படைத் தகுதியுடன் விசேட சித்தி, திறமைச் சித்திகளை அதிக பாடங்களில் பெற்றிருந்தவர்களுக்கும், உயர்தரத்தில் சித்தி பெற்றிருந்தவர்களுக்கும், பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களுக்கும், அவ்வவற்றுக்கான புள்ளிகளின் அடிப்படையியிலான முன்னுரிமையின்படி  வேலை வழங்கப்பட்டது. 

1971 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பில் முதலாம் வருடத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது நானும் அதற்கு விண்ணப்பித்திருந்தேன்.  

அந்தக்காலத்தில் அரசாங்க உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு தேவைப்பாடு. ஆனால், இந்த முறையின்படி வயதுக் கீழ் எல்லை 17என்று கேட்கப்பட்டிருந்தது. அதனால்,  18 வயதை அடைந்திராத எனக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு  கிடைத்தது.   

1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் எனக்கு எழுதுவினைஞர் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து கடிதம் வந்தது. அதற்குச் செல்வதற்கு எனது பாடசாலை விலகல் சான்றிதழ் தேவைப்பட்டது.  

அதற்காக, அப்போது அரசினர் கல்லூரியின் அதிபராக இருந்த சின்னத்துரை அவர்களை, அவரது அலுவலகத்தில் மகிழ்ச்சியோடு சந்தித்தேன். விடயத்தைக் கேட்டதும் அவர் தரமுடியாது என்று மறுத்தார். எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. “ஏன் இப்ப உத்தியோகத்துக்குப் போகப் போகின்றீர்?எனக்குத் தெரியும் உங்களுடைய வகுப்பில இருக்கிறவங்கள் எல்லாரும் டொக்டராக வரவேண்டும் என்று நான் நினைக்கிறன். அதிலயும் பட்டிருப்பிலயிருந்து வந்த நீங்கள் மூன்று பேரும் கட்டாயம் டொக்டரா வருவீங்கள். வேலைக்குப் போகும் எண்ணத்தை விட்டுப்போட்டுப் போய்ப் படியும்.” என்று சொன்னார்.  

நான் தயங்கியபடியே… “இல்லை..சேர்…அது..வ..ந்து…” 

ஏன் உமக்குப் படிக்கிறது விருப்பமில்லையோ, அல்லது, படிப்புச் செலவுக்குக் காசு இல்லையோ?நான் தாறேன். காசு நான் தாறேன். நீர் படிக்வேண்டும். லீவிங்க் சேட்டிஃபிகேற் தர முடியாது. உம்முடைய எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டாம்…”  என்றெல்லாம் சொல்லி ஒரேயடியாக மறுத்து விட்டார்.  

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடந்ததயெல்லாம் அம்மாவிடம் போய்ச் சொன்னேன். “சரி, அவர் அப்பிடிச் சொன்னா நீ ஏன் கவலைப்படுறா.. மகன். அவர் சொன்னமாதிரிக் கேள். நீ படி. வேலைக்குப் போகவேணாம்” என்று அம்மா சாதாரணமாகச் சொன்னா. 

அடுத்தநாள் மிகவும் குழப்பமான மனநிலையுடன் கல்லூரிக்குச் சென்றேன். கச்சேரியில் எழுதுவினைஞர் உத்தியோகம் கிடைப்பது சாதாரணமானதல்ல. அரசியல்வாதிகளின் “கோட்டா” அடிப்படையில் அரச உத்தியோகங்களுக்கு ஆட்சேர்ப்பு நடந்து கொண்டிருந்த அந்தக்காலத்தில் பொதுநிர்வாக அமைச்சில், இணைந்த சேவைகளின் கீழ் எழுதுவினைஞர் வேலை, அதுவும் சொந்த மாவட்டத்தில் நியமனம் கிடைக்கிறது! அதுவும் என்னைவிட வயதில் மூத்தவர்களான எத்தனையோ படித்த இளைஞர்கள், எனது ஊரிலும் கூட, வருடக்கணக்காக உத்தியோகத்திற்காக அலைந்து திரிந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், வேறெவ்வித செலவுமின்றி, வெறும் 65 சதம் பெறுமதியான முத்திரைச் செலவுடன் மட்டும் அனுப்பிவைக்கப்பட்ட  விண்ணப்பத்திற்கு அப்படியொரு வேலை கிடைப்பது வியப்பிற்குரிய விடயமாகவே இருந்தது. 

 எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். இதயத்தில் கனமான அழுத்தம் எகிறிக்கொண்டிருந்தது. இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறதே என்ற பெருமிதம் ஒருபுறம். திறமை இருந்தும், மேலும் படிக்க விருப்பம் இருந்தும் உயர்கல்வி பெறமுடியாமல் போய்விடுமோ என்ற தாங்கொணா வருத்தம் மறுபுறம் வாட்டி வதைக்க, வகுப்பில் போய் அமர்ந்தேன்.  

எங்கள் தாவரவியல் ஆசிரியர், கணபதிப்பிள்ளை அவர்களை மதிய இடைவேளை நேரத்தில், மலசலகூடம் செல்லும் வழியில் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. எதிர்பாராதவிதமாக, அப்போது எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவரிடம் எனது பிரச்சினையைக் கூறினேன். “அப்படியா? ” என்று சொல்லி அப்படியே என்னை அணைத்துக்கொண்டு அதிபரின் அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அங்கே அன்றையதினம் அதிபர் சின்னத்துரை அவர்கள் பாடசாலைக்கு வந்திருக்கவில்லை. உப அதிபர் சிவனேசராசா அவர்கள் பதில் கடமையில் இருந்தார். அது எனது நல்ல காலமோ இல்லை கெட்ட காலமோ, இன்னும் அதில் எனக்குத் தெளிவில்லை. 

விடயத்தைக் கேட்டதும் என்னைப் பாராட்டி, எனக்கு வாழ்த்துக்களைக் கூறினார். அடுத்த பதினைந்து நிமிடங்களில் பாடசாலை விலகல் கடித்தை நற்சான்றுகளோடு, எனக்கு வழங்கினார். எனது விடயத்தில் அதிபரின் செயற்பாடும், உப அதிபரின் செயற்பாடும் எதிரும் புதிருமாக இருந்ததை நான் கண்டேன். ஆனால், இருவருமே எனது எதிர்காலத்திற்கு நல்லதை செய்யும் நல்லெண்ணத்துடனேயே செயற்பட்டார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன். 

கணனி மூலம் தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யும் அந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு திணைக்களங்களுக்கு எழுதுவினைஞர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற நேர்முகத்தேர்வுக்கு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளையும் சேர்ந்த விண்ணப்பதாரிகள் வந்திருந்தார்கள். அவர்களில் நான்கில் மூன்று பகுதியினர் பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களிலும் பெரும்பான்மையினர் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் கல்விகற்றவர்களாக இருந்தார்கள். இந்தத் தகவல் பின்னர், மட்டக்களப்பு கச்சேரியில் நான் கடமையாற்றும்போது எனக்குத் தெரியவந்தது.  

கச்சேரியில் நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்த நாளில் இருந்து ஏறத்தாழ ஒருமாத காலத்திற்குள் பதினொரு திணைக்களங்களில் இருந்து ஆட்சேர்ப்பிற்கான நேர்முகத் தேர்வுக் கடிதங்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன. அவையெல்லாம் கொழும்பிலும், மட்டக்களப்பிலிருந்த வேறு திணைக்களங்களிலும் நியமிக்கப்படுவதற்கானவை. நான் கச்சேரியில் பணியாற்றுவதையே விரும்பியதாலும், சில கடிதங்கள் கச்சேரியில் நியமனம் கிடைப்பது உறுதியானதன் பின்னரும், மற்றயவை நியமனம் கிடத்ததன் பின்னருமே கிடைக்கப்பெற்றதாலும் வேறெந்த நேர்முகத் தேர்வுக்கும் நான் சமுகமளிக்கவில்லை. 

நேர்முகத் தேர்வு நடைபெற்று இரு வாரத்தில் எனக்கு நியமனக் கடிதம்  கிடைத்தது. 

1972 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதியிலிருந்து ஆட்பதிவுத் திணைக்களத்தில் நியமனம். அது உத்தியோகத்திற்கான நியமனமாக மட்டுமல்ல, எனது ஆசைகளை அடக்கி, கனவுகளைக் கானல்நீராக்கி, வாழ்க்கைப்பாதையின் திசையினை மாற்றியமைத்த நியமனமாகவும் அமைந்தது. 

இலங்கை அரசாங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட ஆட்களைப் பதிவுசெய்வதற்கான திணைக்களத்தின் தலைமைச் செயலகம் கொழும்பு5, கெப்பெட்டிபொல மாவத்தையில் அமைந்திருந்தது. அதன் மாவட்டக் கிளை அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபரின்கீழும், கச்சேரிகளில் இயங்கின. 

மட்டக்களப்புக் கச்சேரி வளாகத்தினுள் இடமில்லாமையால், பொது நூல்நிலையத்திற்கு எதிரே மேற்குப்பக்கமாக இருந்த கட்டிடத்தொரடரின், மேல் மாடியில், விற்பனை அபிவிருத்தித் திணக்களத்திற்கு அடுத்ததாக இருந்த கட்டிடத்தில் ஆட்பதிவுத் திணைக்களம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எங்கள் அலுவலகத்திற்குக் கீழ் கோணர் பார் என்ற பெயரில், மதுவிற்பனை நிலையம் இருந்தது. (சரியாக இடத்தை அடையாளப்படுத்துவதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறேன்) 

எஸ்.எம். சக்கரியாஸ், எம்.கே.சங்கரதாஸ் என்னும் இரண்டு உதவி ஆணையாளர்களையும், ஏழு எழுதுவினைஞர்களையும், இரண்டு சிற்றூழியர்களையும் கொண்டதாக ஆட்பதிவுத்திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகம் அமைந்தது. ஒவ்வொரு உதவியரசாங்க அதிபர் அலுவலகத்திலும் இந்தத் திணைக்களைத்தின் உத்தியோகத்தராக ஒவ்வொரு எழுதுவினைஞர் நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்புத் தலைமை அலுவலகத்தில் வி.குகதாசன், சி. கோகர்ணலிங்கம், க. சிவலிங்கம், பிரேமா திருநாவுக்கரசு, ராஜீவி ஜீவானந்தம், இராசநாயகம், ஆகியோரும்  சு.ஸ்ரீகந்தராசா ஆகிய நானும் பணியில் அமர்த்தப்பட்டோம். எல்லோரிலும் வயதில் இளையவனாக நான் இருந்தேன். (18 வயது) மற்றும் அலுவலக சிற்றூழியர்களாக ஜோர்ஜ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கடமை புரிந்தனர். 

அப்போது மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக, மகிபால முதலிகே வில்ஃப்ரெட் ஸ்ரான்லி குணரெத்ன என்பவர் இருந்தார். மேலதிக அரசாங்க அதிபராக  பி.பாலச்சந்திரன் அவர்களும், தலைமையக உதவி அரசாங்க அதிபராக எம்.அந்தோனிமுத்து அவர்களும் இருந்தனர். 

தினமும் பாடசாலைப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த நான், வேலை கிடைத்த பின்னரும் அதே பாடசாலைப் பேருந்தில் சில மாதங்கள் என் பயணத்தைத் தொடர்ந்தேன். பின்னர் நானாக அந்த வழக்கத்தை மாற்றிக்கொண்டேன். எழுதுவினைஞர் உத்தியோகத்தர்களுக்கான மாதச் சம்பளம் 250 ரூபாவில் ஆரம்பிக்கும். முதல் மாதச் சம்பளம் குறைமாதம் காரணமாக 165 ரூபா கிடைத்தது. அந்த, முதல் மாதச் சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்தபோது, பொங்கியெழுந்து என் கண்களைக் குளமாக்கிய கண்ணீர் என் பார்வையை மறைத்துவிட்டதால். அம்மாவின் முகத்தில் வெளிப்பட்ட உணர்வை என்னால் பார்க்க முடியவில்லை.  

நினைவுகள் தொடரும்…