அநகாரிக தர்மபாலவின் கோட்பாட்டை மார்க்ஸிசத்துக்கு நெருக்கமானதாக காண்பித்தவர்கள்

அநகாரிக தர்மபாலவின் கோட்பாட்டை மார்க்ஸிசத்துக்கு நெருக்கமானதாக காண்பித்தவர்கள்

— வி. சிவலிங்கம் — 

இலங்கையின் அரசியல் வரலாற்றுப் போக்கில் தற்போது சிங்கள பௌத்த இனமையவாதம் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சகல சமூகங்களும் அதன் தாக்கத்தை உணர்கின்றன. சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதம் என்பது அதன் ஜனநாயக எல்லைகளைக் கடந்து இனவாதம் என்ற எல்லைக்குள் பிரவேசித்துள்ளது. இவற்றை வரலாற்று அடிப்படையில் அதன் போக்கை உணர்த்தி வருவதன் அடிப்படைகளை இக் கட்டுரை தருகிறது.  

சிங்கள பௌத்த அடிப்படைகளைக் கொண்ட இனவாத அரசியல் அநகாரிக தர்மபால இனது தேசியவாதத்திலிருந்து ஆரம்பமாகியதாக குறிப்பிட்டோம். அவரது தேசியவாதம் படிப்படியாக சிங்கள முதலாளித்துவ பிரிவினரின் அரசியலாக படிப்படியாக மாற்றமடைந்தது.  

அதுவே ஐ தே கட்சியின் போக்கிலும் பிரதிபலித்தது. 

அநகாரிக தர்மபால 

 கடந்த கட்டுரையில் அநகாரிக தர்மபாலவின் அரசியல் மார்க்ஸிச கோட்பாடுகளுக்கு நெருக்கமாகச் செல்வதாக குணதாஸ அமரசேகர கருதியதாகக் குறிப்பிட்டிருந்தோம்.  

அவை பற்றிய சில விபரங்களோடு தொடரலாம். அமரசேகர 80 களில் ‘ அநகாரிக தர்மபால ஒரு மார்க்ஸிஸ்ட்’என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். அந்தக் கட்டுரையானது ஏற்கனவே குறிப்பிட்ட இன்னொரு ஆளுமையான நளீன் டி சில்வா இன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. ஏனெனில் நளீன் டி சில்வா நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழுவில் 2001ம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார். ஆனால் காலப் போக்கில் மார்க்ஸிஸம் என்பது மேற்குலக யூத சிந்தனையின் விளைபொருள் எனவும், அதனை ஏற்றுக் கொள்வது என்பது மேற்குலக கலாச்சார ஏகபோகத்திற்குள் மேலும் இறுக்கிச் செல்லும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.  

அமரசேகரவின் பௌத்தமும் மார்ஸிசமும் 

ஆனால் அமரசேகரவின் விவாதங்கள் பௌத்தமத சிந்தனைகளை நெருங்கியதாக அமைந்தன. சிங்கள மக்களின் தேசிய அடையாளம் என்பது பௌத்த மதத்துடன் நன்கு இணைக்கப்பட்டதாக அமைந்தது. அவர் மார்க்ஸிஸத்துடன் பௌத்த மதத்தின் போதனைகளை இணைத்திருப்பது அதாவது  பௌத்த மதத்தின் மனிதநேய அம்சங்களை மேலும் வளப்படுத்தும் நோக்கமே எனக் கூறப்படுகிறது. அதாவது பௌத்த மதம் என்பது சமூகங்களின் மதம் எனவும், அதன் இலக்கு என்பது மனிதனையும்,சமூகத்தையும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் சமூக நோக்குடையது எனவும் இங்கு மதத்தைத் தெரிவுசெய்வது சமூகத்தின் தெரிவே தவிர தனிநபருக்கு உரியது அல்ல எனவும் கூறுகிறார். புத்தபிரான் தனது சமூக மாற்றத்தின் இலக்கு என்பது அதனுள் காணப்படும்’நான்’, ‘எனது’ என்ற அவாவுகளிலிருந்து மனிதனை மீட்டெடுப்பதாக அமைந்தது எனவும், அதுவே கம்யூ. சமூக கட்டுமானத்தின் நோக்கமும் முரண்பாடுகளற்ற சமூக உருவாக்கமே எனவும் பொருத்தி விவாதிக்கிறார். அவரின் விளக்கப்படி மார்க்ஸிஸம் என்பது மதத்திற்கு எதிரானது அல்ல எனவும், அது பௌத்த மதம் போன்று மனித நேய சமூகத்தை உருவாக்க உதவுவதாகவும், வர்க்கப் பிளவுகள் உள்ள சமூகத்தில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கி பௌத்த தர்ம ஆட்சிக்கான அடித்தளங்களையிடுவதாக  கூறுகிறார். இவ் விவாதங்கள் ஜே வி பி இனருக்கு உகந்ததான உள்நாட்டு நிலமைகளுக்கு ஏற்ப மாற்றிய மார்க்சிச விளக்கங்களாக சீனாவில் காணப்படுவது போன்ற நிலைக்குப் படிப்படியாக மாற்றமடைந்தன. இதனால் அவர்களின் மார்ஸிஸ விளக்கங்கள் இவரது விளக்கங்களுக்குச் சமாந்தரமாகச் சென்றன. நாம் ஜே வி பி இனரின் மாற்றங்களை பிறிதொரு தருணத்தில் தனியாகப் பார்க்க முடியும். அமரசேகரவின் விளக்கங்கள் மத சம்பந்தமாக இருந்த போதிலும் அவற்றோடு அரசியல் எவ்வாறு இணைக்கப்பட்டு வருகிறது? என்பதை விளங்கிக் கொள்வதே  எமது பிரதான நோக்கம் என்பதால்  அவற்றை இனிப் பார்க்கலாம். 

‘தேசிய சிந்தனை’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்களில் கடந்தகால வரலாறு முக்கிய பங்கை வகிக்கிறது. கடந்தகால வரலாற்றிற்கு வழங்கப்படும் வியாக்கியானங்களே இப் புதிய சிந்தனைக்கான அடித்தளங்களாகும். ஒரு புறத்தில்’ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை? ‘ என தமிழர் தரப்பில் கூறப்படுவது போல சிங்கள தரப்பிலும் அவ்வாறான ஆழமான கருத்துக்கள் உள்ளன. இத் தேசிய சிந்தனை என்பது சிங்கள சமூகத்தின் இலக்கியம், கலை வடிவங்கள், பழக்க வழக்கம், அரசியல் கோட்பாட்டு விளக்கங்கள் என ‘தேரவாத பௌத்தத்தின் நிழல்கள்’ சகல பரப்புகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவை ‘ நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை’ வரை வியாபித்து வருகிறது. 

தேரவாத பௌத்தத்தின் நிழல்கள்‘ 

இதன் ஆரம்பமாக கடந்த 2000ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் ‘ சிங்கள பௌத்த பெரும்பான்மை’ இன் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்ததாக வரலாறு எழுதப்படுகிறது. இவ்வாறாக வர்ணிப்பதன் மூலம் சிங்களப் பெரும்பான்மையினரிற்கும், இக் கோட்பாடுகளுக்குமிடையே இறுக்கமான, நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. தனியான ஒற்றைத்தன்மை படைத்த சிங்கள  கலாச்சாரத்தின் கீழ் சகல மக்களும் சகவாழ்வு நடத்தியதாகக் கூறி, அதே போலவே அதே கலாச்சாரத்தின் ஆதிக்கத்தின் கீழ் இன்னமும் வாழ முடியும் என்பதாகக் கட்டமைக்கப்படுகிறது.  

இந்தக் கருத்தியல்களில் நாட்டின் வரலாற்றில் தேசிய சிறுபான்மை இனங்கள் ஏற்கனவே தத்தமது அடையாளங்களுக்கு ஆபத்து நேராமல் இணக்கத்துடன் வாழ்ந்ததாகவும், அதற்கு பௌத்த மதம் வழி செய்துள்ளதாகவும் விபரிக்கப்படுகிறது.  இதற்கு ஒரு படி மேலே சென்று தமிழ் மக்கள் அவ்வாறு இலங்கைக்குள் தொடர்ந்து வாழ்ந்தால் தமிழ் நாட்டுக் கலப்பற்ற தனி இலங்கைத் தமிழ் கலாச்சாரத்தை உருவாக்க முடியம் என நளீன் டி சில்வா கூறுகிறார்.  

பிரச்சினையான சிங்கள- பௌத்தம் 

‘சிங்கள – பௌத்த’ என்ற சொற் பதம் குறித்து அமரசேகரவிற்குப் பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது தனது சிந்தனைகள் சிங்கள மக்களுக்கென மட்டுமல்ல, தமிழ் மக்களும் பாதிக்கப்படாமல் இருத்தல் அவசியம் என எண்ணுவதால் ‘சிங்கள- பௌத்த’சொற்பதம் பொருத்தமற்ற ஒன்று எனவும் வேறொரு சொற்பதம் தேவை எனக் காண்கிறார். அதாவது இலங்கை என்பது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பிரிவினர் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் தத்தமது கலாச்சாரம், அடையாளம் போன்றவற்றை விஸ்தரித்து செழிப்பாக வாழ முடியும். அதற்கான இடைவெளி அங்குண்டு என்றே கூற விழைகிறார். இதனை இன்னும் சற்று விரிவாக அணுகினால் சிங்கள மக்கள் மத்தியில் வெவ்வேறு மொழிகளையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுபவர்கள் வாழ்கிறார்கள் என்பதையும் மொத்தத்தில் அனைவரும் ஆரம்பத்தில் சிங்களவர்களே என்பது அவரது விளக்கமாக அமைகிறது.  

இதன் காரணமாகவே இலங்கையின் அரசியல் வரலாற்றினை 2000ஆண்டுகளுக்குப் பின்னிருந்து ஆரம்பிக்கிறார்கள். இடைக்காலத்தில் நாட்டின் போக்கினை மாற்றிய ஐரோப்பிய குடியேற்ற ஆட்சியாளர்களால் ஏற்பட்ட மாற்றங்களை தற்காலிக மாற்றங்களாகவே விளக்க முயற்சிக்கின்றனர். இதற்கான அடிப்படைகளாக இலங்கையின் முதற் குடிகள் என்போர் வட இந்தியாவிலிருந்து வந்த இளவரசர் விஜயனோடு அதாவது மகாவம்சம் தரும் விளக்கத்திலிருந்து அந்த விபரங்கள் ஆரம்பிக்கின்றன.  

மகாவம்சக் கருத்து 

குணதாஸ அமரசேகரவின் கருத்தியலின் அடிப்படைகளுக்கு மகாவம்சமே பிரதான மூல விளக்கமாகும். அதன் பிரகாரம் பார்க்கையில் சிங்கள மக்கள் என்போர் வந்தேறு குடிகள் அல்ல என்பதாகவும். தாமே அதன் முதற் குடிகள் என்பதாகவும்,பேரரசர் அசோகாவின் மகன் மகிந்த பௌத்த மதத்தை இலங்கைக்கு எடுத்து வந்த போது இலங்கையில் தேவநம்பிய தீசன் ஆட்சி செய்ததாகவும் பௌத்த மதத்தின் வரலாறு ஆரம்பிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் இலங்கையில் வாழ்ந்த வெவ்வேறு பிரிவினரை இணைக்க பௌத்த மதமே செயற்பட்டது எனவும்,அதனடிப்படையில் இலங்கை முழுவதும் பௌத்த மதமே பரவியிருந்ததாக வரலாறு எழுதப்படுகிறது.  

இந்தக் கருத்தியலின் அடிப்படையில் அவதானிக்கையில் பௌத்த மதம் என்பது ஏனைய மதத்தவரின் அடையாளங்களைக் கரைத்து அவற்றை ஓர் ஒற்றைப் பரிமாண  நிலைக்கு மாற்றியதென்பது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவிலிருந்து பௌத்த மதம் எடுத்து வரப்பட்டபோது பல மதங்களும், பல மொழிகளும் பேசும் மக்கள் வாழ்ந்துள்ளதையும், அதன் பின்னர் நாடு முழுவதும் பௌத்த மதம் பரவியிருந்ததாகவும் கூறும் வாதங்கள் தற்போதைய மைய நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது ஒரு புறத்தில் தம்மை ஜனநாயகவாதிகளாகக் காட்டி சகல இனப் பிரிவினருக்கும் இடமுண்டு எனக் கூறுவதும்; இப் பிரிவினர் வரலாற்றின் பிரகாரம் சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்குள் இதர மதங்களும், மொழிகளும் எதிர்காலத்திலும் செயற்பட முடியும் என வாதிப்பதும் மறு புறத்தில் காலப் போக்கில் சிறுபான்மை இனங்களின் அடையாளங்கள் கரைந்து செல்வதற்கான கருத்தியலை அடையாளப்படுத்துவதும் இவ் விளக்கங்களுக்குள் காணப்படுகின்றன.  

முதற்குடிகளான தாமே நாட்டின் கட்டுமானப் பொறுப்பாளர் 

இவ் விவாதங்களினூடாக தாமே நாட்டின் முதற் குடிகள் என்பதை மட்டுமல்ல, தாமே நாட்டின் ஆட்சிக் கட்டுமானத்தின் பொறுப்பாளர்கள் அல்லது உடமையாளர்கள் என்பதும் புலப்படுத்தப்படுகிறது. இதுவே இன்றைய அரசியல் போக்கின் வடிவமாக மாற்றம் பெற்று வருகிறது. அதாவது பெரும்பான்மையினரே நாட்டின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை ஒரே நாடு, ஒரே சட்டம் என உணர்த்தப்படுகிறது. அதன் பிரகாரம் நாட்டின் ஐக்கியத்தையும், அதன் போக்கையும் தீர்மானிப்பவர்கள் சிங்கள – பௌத்தர்களே என்பதும், அவர்களே நாட்டில் வாழும் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களின் வளர்ச்சியையும். அடையாளங்களையும் பாதுகாப்பவர்கள் என்பதாகவும் விளக்கப்படுகிறது. சிங்கள – பௌத்த ஆதிக்கமே நாட்டின் போக்கைத் தீர்மானிக்கும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.  

சிங்கள பௌத்த தேசியவாதத்தில் சிறுபான்மைகளுக்கு இடமுண்டா? 

நாம் இவ் விவாதங்களினூடாக சில பிரச்சனைகளை நோக்கலாம். உதாரணமாக, சிங்கள – பௌத்த ஆதிக்கம் என்பது இதர தேசிய சிறுபான்மை இனங்களின் செயற்பாடுகளுக்குப் போதிய இடைவெளியை ஏற்படுத்துமானால் அமைதியை நாம் காணலாம் என விவாதிக்க முடியும். அதற்கான உதாரணமாக மேற்குலக கிறிஸ்தவ நாடுகளில் இதர மதங்களுக்கும்,கலாச்சாரங்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது போன்ற ஒரு ஏற்பாடு என விளக்கலாம். ஆனால் வௌ;வேறு கலாச்சாரம் மற்றும் அடையாளங்களையுடைய சிறுபான்மை மக்கள்  ஓர் பெரும்பான்மைக் கலாச்சாரம், அடையாளத்திற்குள் வாழ்வது என்பதும், வெவ்வேறு கலாச்சாரங்கள் வெவ்வேறு கலாச்சாரங்களுடன் சகவாழ்வு நடத்துவது என்பதும் வெவ்வேறானவை. அத்துடன் சிங்கள – பௌத்த ஆதிக்கத்திற்குள் வாழும் இதர சமூகங்கள் அல்லது மதங்கள் தமக்கென சமத்துவத்தைக் கோர முற்படின் அதாவது பௌத்த மதத்தின் அமைதிக்கு பங்கம் தரும் விதத்தில் செயற்பட்டால் முடிவு எவ்வாறாக அமையும்?  

கடந்த சில காலங்களாக தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளாக அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு மற்றும் பல வகையான யோசனைகள் பல்வேறு நாடுகளாலும், அமைப்புகளாலும் மகிந்த காலத்தில் முன்மொழியப்பட்டன. அவ் வேளையில் தாம் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை எனவும். உள்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றவாறான உள்நாட்டில் உருவாகும் தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் மகிந்த தரப்பினர் அடிக்கடி தெரிவித்தனர். இதுவே மேற்கு நாடுகளின் அணுகு முறைகளுக்கு எதிரான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தீர்வாக காணப்படுகிறது.  

சிங்கள – பௌத்த அரச உருவாக்கம் 

சமீப காலமாக புதைபொருள் ஆய்வு என்ற பெயரில் தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள பல சைவ ஆலயங்களும், அவற்றின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு நாடு முழுவதும் பௌத்தம் நிலவியதாக நம்பும் நிலை ஏற்படுத்திய நிலையிலும், அவை மதம் மாற்றப்பட்டதாக அல்லது தமிழர்களே பௌத்த மதத்தைத் தழுவினார்கள் என்ற வரலாறுகளும், பல இந்து விக்ரகங்கள் பௌத்த விகாரைகளில் இப்போதும் வழிபாட்டில் காணப்படுவதும் இவ்வாறான கருத்தியலின் பின்னால் இயக்கப்படுவதை நாம் காணலாம்.  

இஸ்ரேலிய பாணி 

இலங்கை என்ற தேசத்தின் முதற் குடிகள் சிங்களவர் எனவும். அவர்களே பௌத்த மதத்தை மிக நீண்ட காலமாகப் பாதுகாத்தும், பின்பற்றியும் வருபவர்களாகவும் வரலாற்றின் துணையுடன் அதாவது மகாவம்சத்தின் உதவியுடன் வாதிக்கின்றனர். இவ்வாறான அணுகுமுறையை இஸ்ரேல் நாட்டின் சமீபகால அணுகுமுறைகளில் நாம் காணலாம். பாலஸ்தீனம் என்பது முதலாவதாக பைபிள் நூலில் குறிக்கப்பட்டுள்ள யூதர்களின் நிலம் அதாவது கடவுளால் யூதர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் என அவர்கள் விவாதிப்பதும், அதன் அடிப்படையில் பாலஸ்தீனத்தின் அராபியர்களின் நிலங்களை அபகரிப்பதும், அம் மக்களை அகதிகளாக அந்நிய நாடுகளுக்கு துரத்துவதும், பாலஸ்தீனர்களின் தொடர்ச்சியான இருப்பிடங்களைத் தடுத்து இடையிடையே யூதர்களின் குடியேற்றங்களை நிறுவி அம் மக்களின் செறிவின் தொடர்ச்சியைத் தடுத்து திறந்த  சிறைக்கூடங்களாக மாற்றுவதும் தொடர்வது போலவே, புதைபொருள் ஆய்வு என்ற பெயரிலும் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் தரைகள் விவசாயம் என்ற பெயரிலும் கையகப்படுத்துவதும் தொடர்கிறது. 

இங்கு புத்தமத வருகையுடன் சிங்கள மக்களை இணைத்து அவர்களே அம் மதத்தைப் பாதுகாத்தார்கள் எனவும்,கௌதம புத்தரின் போதனைகளைப் பாதுகாத்த புனித பூமியாகவும் இலங்கை வர்ணிக்கப்பட்டு இவ் வரலாற்றினை யூதர்களின் விவாதங்களோடு பொருத்தி இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசம் என இன்றைய இஸ்ரேலிய அரசு கூறுவது போல கருத்தியல் எடுத்துச் செல்லப்படுகிறது.  

இத் தேசிய சிந்தனை உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நளீன் டி சில்வாவின் கருத்துப்படி வெவ்வேறு தரப்பினரின் ஆதிக்கத்திற்குள் சிக்கியிருந்த இலங்கையை துட்டகெமுனு என்ற அரசனே ஒன்றாக்கி சிங்கள – பௌத்த அரசாக உருவகித்தான் எனவும், அன்று முதல் இலங்கை என்பது ஒரு சிங்கள – பௌத்த ஒற்றை அரசாகவே மிளிர்ந்தது என அவர் குறிப்பிடுகிறார்.  

பின்வரும் பின்புலங்களை இன்றைய விவாதங்களோடு பொருத்திப் பார்ப்பது அவசியமாகும். அதாவது சிங்கள – பௌத்த அரசு என்பது மூன்று பிரதான தூண்களில் தங்கியுள்ளதாக அதுவும் பேரரசர் அசோக சக்கரவர்த்தி காலத்தில் நிர்வாகம் எவ்வாறிருந்ததோ அதே போலவே இலங்கையிலும் ஆட்சிக் கட்டுமானம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.  

அந்த மூன்று தூண்களாக அரசர், மகா சங்கம், மக்கள் என்பனவே அவைகளாகும். இவை மூன்றும் இலங்கையின் 2000ம் ஆண்டுகால வரலாற்றிலும் தொடர்ந்ததாக விவாதிக்கின்றனர். இன்றைய இனவாதிகளில் சிலரும் இலங்கையில் கடந்த 2400 வருடங்களுக்கு மேலாக பெரும்பான்மையினரின் மதமாக பௌத்தமே இருந்துள்ளது எனவும்,அவ்வாறாக ஒரே நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக ஒரே மதத்தைப் பின்பற்றிய வரலாறு உலகில் எங்கும் இல்லை எனக் கூறி அவ்வாறான பிரசித்தி பெற்ற வரலாறு இலங்கையினுடையது எனவும், பின்னர் குடியேற்ற ஆதிக்க காலத்தில் அதன் தொடர்ச்சி அறுக்கப்பட்டதாக விபரிக்கின்றனர். அதாவது குடியேற்ற ஆதிக்க காலம் என்பது ஓர் சிறிய காலப் பகுதியாகக் கூறி விடுபட்ட காலத்திலிருந்து தொடரலாம் என்பதே இன்றைய வாதமாகும். இவர்கள் அவ்வாறாக குடியேற்ற ஆட்சிக் காலத்தை ஏன் தற்போது தவிர்த்துச் செல்கிறார்கள்?   

துட்டகைமுனுவும் கோத்தபாயவும் 

இந்த வரலாற்று விவாதங்களில் பிரதான பங்கு துட்டகைமுனுவின் ஆட்சிக்கு வழங்கப்படுகிறது. அதாவது எல்லாளனுக்கும், துட்டகைமுனுவிற்கும் நடைபெற்ற யுத்தத்தினை பிளவுபட்டிருந்த இலங்கையை இணைப்பதற்கான யுத்தமாகவே விபரிக்கின்றனர். இவ்வாறான விளக்கங்களே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அதனை இரண்டாவது சுதந்திரத்திற்கான போராட்டமாக,பிளவுபட்ட இலங்கையை இணைக்க எடுத்த முயற்சி என விளக்க முயற்சிக்கின்றனர். இதன் பின்னணியிலேயே தற்போதைய ஜனாதிபதி தனது பதவிப் பிரமாணத்தினை துட்டகைமுனுவின் மரண சமாதியான ‘ருவான் வெலிசாயா’ இல் எடுத்தது அதற்கான ஓர் அடையாளமாகவே அதாவது மீண்டும் இலங்கையின் பெரும்பான்மையினரின் பௌத்த மத ஆதிக்கம், நாட்டின் ஒருமைத் தன்மை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் செய்தியாகும். 

இவ் வரலாற்றின் பின்னணியிலேயே இலங்கை என்பது எப்போதும் ஒற்றை ஆட்சிக்குள் செயற்பட்டதாகக் கூறும் வாதங்களாகும். இத் தேசிய சிந்தனையின்படி அரசர் துட்டகைமுனு ஒற்றைத் தன்மையான சிங்கள – பௌத்த அரசை ஸ்தாபித்து அதன் பிரகாரம் ராஜ்யசபை அல்லது அரச சபை ஒன்றினை உருவாக்கியதாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கென ஒரு அரசோ அல்லது பிரதேசமோ இருந்ததில்லை என்பதையும் உணர்த்துகின்றனர்.  

இவ்வாறான கருத்து மூலங்களை அடிப்படையாக வைத்தே சமீபகாலமாக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பாரம்பரிய தாயகங்கள் என்ற கோட்பாட்டினை மறுத்து வருகிறார். ஒருவேளை இவை இந்திய – இலங்கை ஒப்பந்த விளக்கங்களுக்கு முரணாக அமைந்தாலும் அல்லது 13வது திருத்தத்தினை அரசியல் யாப்பிலிருந்து நீக்கத் தடைகள் இருப்பினும் கொள்கை அடிப்படையில் அதுவே அவர்களது நிலைப்பாடு ஆகும். இப் பிரச்சனையில் நளீன் டி சில்வா தமிழர் பிரச்சனை குறித்த நிலைப்பாடு என்பது அது பிரித்தானிய ஆட்சியாளர்களாலும்,தமிழ்த் தேசியவாதிகளாலும் உருவாக்கப்பட்ட இனவாதம் என்பதாகும். ஆனால் அமரசேகரவின் பார்வை வேறுவிதமாக அமைகிறது. அதாவது இலங்கைச் சமூகத்தினை சமத்துவத்தின் அடிப்படையிலான ஓர் மனிதநேய சோசலிஸ்ட் சமூக உருவாக்கமாகவும் அதனை பௌத்த சோசலிசம் என வர்ணிக்க முற்படுகிறார்.       

சிங்கள – பௌத்த ஆதிக்கத்தின் கடந்தகால வரலாற்றை இவ்வாறு விபரித்துள்ள இச் சிந்தனையாளர்கள் இன்றைய ஆட்சிக் கட்டுமானத்தையும் வரலாற்றோடு இணைத்து விளக்குகின்றனர்.  அசோக சாம்ராஜ்ய உருவாக்கம் போலவே இலங்கையிலும் அமைந்ததாக விபரிக்கின்றனர். அதாவது சிங்கள – பௌத்த அரசு மூன்று தூண்களில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும்,அவை அரசர், மகாசங்கம், மக்கள் என்பவை எனவும் விளக்குகின்றனர். இவ்வாறான விளக்கமும்,அணுகுமுறையும் தற்போது அறிமுகப்பட்டிருப்பதை நாம் காணலாம். உதாரணமாக அரசர் காலங்களில் பிக்குகள் என்போர் அரசருக்கு அறிவுரை கூறுதல், எதிர்கால அரசர்களை உருவாக்குதல், வளர்த்தெடுத்தல் போன்ற நேரடி அரசியலுக்கு அப்பால் செயற்பட்டதாக விளக்கப்படுகிறது. இவ்வாறே தற்போது மகாசங்கம் நாட்டின் மிக முக்கிய தீர்மானங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

அவ்வாறெனில் கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்படவேண்டும் எனக் கூறிய இந்தத் தரப்பினர் தற்போது அளிக்கும் விளக்கமென்ன? ஜனாதிபதி என்பவர் அரச நிலைக்கு உயர்த்தப்படுகிறாரா?  

(தொடரும்)