— வீர வர்மன் —
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக தமது அவயவங்களை இழந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு செயற்கையாக அவயவங்களை பொருத்தும் செயற்பாட்டை கண்டிகப் நிறுவனம் 2007ம் ஆண்டில் மிகத் தீவிரமாக அதாவது மாதத்திற்கு 100 செயற்கை உறுப்புக்கள் என்ற வகையில் உருவாக்கி மட்டக்களப்பு பார் வீதியில் சகல வசதிகளுடன் செயற்கைப் பாதம் பொருத்தும் செயல்பாட்டை சிறப்பாக நடத்தி வந்தது.
அவயவங்கள் பொருத்தப்பட வேண்டியவர்கள் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, நடை பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஒரு நவீன வைத்திய சாலையாகவே இது இயங்கி வந்தது. இங்கே வேலை செய்த தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு மூன்று வருடங்கள் கற்கைநெறி ஒன்று இந்த நிறுவனத்தின் முழுமையான செலவுடன் வழங்கப்பட்டது.
இங்கு பெரும் சம்பளத்துடன் இந்த செயற்கை அவயவம் பொருத்தம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வேலை செய்தனர். உதவியாளராக மூன்று பேர் வேலை செய்தனர். மேலும் யுத்த பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு தேவை அதிகமாக இருந்ததால் செயற்கை அவயவங்களை பொருத்த அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்தும் அதிகமான பயனாளிகள் மட்டக்களப்புக்கு வந்து பயனடைந்தனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த படியால் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருந்தது. இதேவேளை அரசின் சுகாதார அமைச்சுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு மேற்படி செயற்கை அவயவம் பொருத்தும் பிரிவானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முழுமையாக கையளிக்கப்பட்டது.
2011-ம் ஆண்டிலேயே சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இது கையளிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குரிய மூலப் பொருட்களும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல நிறுவனத்தில் வேலை செய்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களும் விசேட அனுமதிமூலம் அரசின் உத்தியோகத்தராக வைத்தியசாலைக்கு உள்வாக்கப்பட்டனர். மேலும் உதவியாளர் மூவரும் கூட உள்வாக்கப்பட்டனர்.
ஆனால், மிகவும் சிறப்பாக அதாவது ஒரு மாதத்தில் 100 பேருக்கு செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டு வந்த நிலைமையானது அரசுக்கு கையளிப்பு செய்தபின் கவலைக்கிடமாக மாறிவிட்டது. அரசில் உள்வாங்கப்பட்டதும் அனைவரின் அர்ப்பணிப்பும் கடமைக்கு வேலை செய்வதாக மாறியது. பொதுமக்கள் செயற்கைக் கால் பொருத்துவதற்கு வந்தால் “இங்கு இது இல்லை அது இல்லை” என்று சொல்லி வெளியே சென்று வாங்கி வா என கூறப்பட்டது.
உத்தியோகத்தர்களின் பினாமி என்று நம்பப்படும் ஒரு பெயரில் தனிப்பட்ட கடை ஒன்றும் வைத்தியசாலைக்கு வெளியே உருவாக்கப்பட்டது.
தற்போது இரண்டு தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர் பொலன்நறுவை வைத்தியசாலைக்கு மாற்றம் பெற்று சென்றுவிட்டார். அடுத்த உத்தியோகத்தர் தாய்லாந்தில் தற்போது கொலசிப் கிடைத்து சென்றுள்ளார்.
அனைவரும் முன்னேற்றம் காண மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள செயற்கை அவயவங்கள் பொருத்தும் பிரிவு மட்டும் எதுவித முன்னேற்றமும் இல்லாது, இறங்குமுகமாகச் சென்றுள்ளது.
சரி இப்போது நமது பிரச்சினைக்கு வருவோம்; இன்று இந்த நிலைமைக்கு யார் காரணம்? நிர்வாகத் திறமையற்ற வைத்தியசாலை நிர்வாகமா? அல்லது வைத்தியசாலை அபிவிருத்தியில் அக்கறையற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழுவா?, அல்லது இதுவரை காலமும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களா? யாரைக் குறை சொல்வது?. கையாலாகாத மக்களே இதற்கு காரணமா?, அண்மையில் கூட ஒரு மக்கள் பிரதிநிதி சமூக உத்தியோகத்தரை அணுகி செயற்கை பாதம் பெற முடியுமா? என வினவியதாகத் தகவல். கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல் இருந்தது இது.
தற்போது வைத்தியசாலையில் எவருக்கும் செயற்கைக் கால் பொருத்த முடியாத நிலையே இருப்பதுபோல தெரிகிறது. ஆனால் தேவையான இயந்திரங்கள் அனைத்தும் உள்ளன. காரணம் மூலப்பொருட்கள் இல்லை ஆனால் வெளியில் செய்யப்படுவது இங்குள்ள எந்திரம் மூலம் செய்யப்படுவதாகவும். மூலப்பொருள் வெளியில் தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டு வேலை நடக்கிறது.
போரினால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளை மிக அதிகமாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில், இருந்த வசதி இல்லாது போவதும், அந்த மாவட்டத்தின் தேவைக்கென சிறப்பு அடிப்படையில் உள்வாங்கப்பட்டவர்கள் அங்கிருந்த பணிமாற்றம் பெற்றுபோவது எந்த அடிப்படையில் நியாயம். ஒரு நிறுவனத்தால் சிறப்பு அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டு, தேவை கருதி உள்வாங்கப்பட்டவர்களை வேறு மாவட்டத்துக்கு தாரை வார்த்துவிட்டு நிற்பது மருத்துவத்துறை நிர்வாகத்துக்கு நியாயமா? உற்பற்திப் பொருள் இல்லையானால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவ முன்வரவேண்டும். அதைவிடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை கைவிடுவது அல்லது மூலப்பொருளை வாங்கி வாங்கள் என்று கூறுவது எந்தவகையில் இலவச மருத்துவ சிகிச்சைக்கு பொருந்தும்.
பணம் இல்லாதவர்களுக்கு எதுவும் இல்லை. இயந்திரம் உள்ளது மூலப்பொருள் இல்லை, சுகாதார அமைச்சானது மூலப்பொருளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். சரி இதுவரை (கடந்த அரசாங்க காலத்தில்) எதுவும் சரியாக நடக்கவில்லை. இனியாவது, பிள்ளையார் சுழியை யாராவது போட்டால் மக்களுக்கு நல்லது. முன்னாள் போராளிகளுக்கும் நல்லது.
அவர்களது உணர்வுகளைப் புரிந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.