— வேதநாயகம் தபேந்திரன் —
1998 ஜனவரி ….
அப்போது திருகோணமலையின் பழந்தமிழ் கிராமமான வெருகல் – ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலகத்தில் முதல் நியமனத்தில் அரசபணியாற்றுகிறேன்.
ஈச்சிலம்பற்று பாடசாலை அதிபர் மதிபாலசிங்கம் சேரின் திருமண நிகழ்வுக்காக மட்டக்களப்புக்குச் செல்கிறேன். மட்டக்களப்பு மண் அப்போது தான் முதல் தரிசனம். அதனால் ஆர்வ மேலீட்டுடன் விடுப்புப்பார்க்கிறேன்.
இரவுச் சாப்பாட்டுக்காகக் கொத்து றொட்டி சாப்பிடக் காத்தான்குடிக்குப் போவோமென நண்பர்கள் அழைத்தார்கள்.
காத்தான்குடியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் பார்ப்பதற்கு மிகவும் ஆவல் கொண்டுசென்றேன்.
இஸ்லாமிய சகோதரர்களின் சமையல் கைவண்ணம் எப்போதுமே தனித்துவமானது.
நண்பர்களுடன் வயிறாரக் கொத்து றொட்டியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ”கொக்கோ கோலா கொண்டுவாருங்கள்” என நண்பர்கள் ஓடர்செய்தார்கள்.
கொக்கோ கோலாவைக் குடித்தேன். வழமையான சுவையைக் காணவில்லை.
”கொக்கோ கோலாக் கொம்பனிஸ் டிரைக்கெல்லோ செய்யினம். உங்களுக்கு எப்படிக் கொக்கோ கோலா கிடைச்சது. ருசியும் வித்தியாசமாயிருக்கு” எனக் கடை முதலாளியைக் கேட்டேன். இது எங்கட காத்தான்குடியில் செஞ்ச கொக்கோகோலா என்றார். எனக்கு அது ஒரு புதினமாக இருந்தது.
”என்ன நீங்கள் காத்தான்குடியில செய்ததோ என்றேன்.” நாங்கதான் செஞ்சது. எந்த ஒறிஜினல் பொருளுக்கும் டூப்பிளிகேட் அடிப்போம்.
தப்பித்தவறி நம்ம ஜனாதிபதி சந்திரிகா அம்மா காணாமல் போனாக்கூட அவவமாதிரி அஞ்சு பேரை அடிச்சு விடுவோமென்றார்.
எனக்கு அவர்களின் பதில் மேலும் வியப்பைத் தந்தது. அது அவர்களின் தனித்துவமான திறமை.
அது மட்டுல்ல அவர்கள் பரம்பரை பரம்பரையாகக் கைத்தொழில் விற்பன்னர்கள்தான்.
அதனால் தான் காத்தான்குடியைக் குட்டி ஜப்பான் என அழைப்பார்கள்.
காத்தான்குடிக்கும் எங்களது யாழ்ப்பாணத்தின் காரைதீவுக்கும் (தற்போது காரைநகர் ) பெரிய ஒற்றுமைகள் உள்ளன.
”காகம் பறக்காத ஊருமில்லை. காரைதீவான் (காரைநகரான்) போகாத ஊருமில்லை” என்றொரு பழமொழி 1983 இற்கு முன்பு பிரபலமானது.
அது போல ”காகம் பறக்காத ஊருமில்லை. காத்தான்குடியான் போகாத ஊருமில்லை” என்றொரு அனுபவமொழி அங்கு பிரபலமானது.
இந்த இரு ஊர் ஆள்களும் வியாபாரம் செய்வதற்காக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று கடை அமைப்பார்கள்.
அது போல தமது கடைகளுக்கு வந்து பொருள்கள் வாங்குவோர் 500 ரூபாவுக்கு வாங்கினால் என்ன, 5000 ரூபா, 15000 ரூபா, 50000 ரூபாவுக்கு வாங்கினால் என்ன ஒரே மாதிரியான மரியாதையைத்தான் கொடுப்பார்கள்.
ஒரு பொருள் வாங்க வந்த வாடிக்கையாளரிடம் இங்கிதமாகக் கதைத்துப் பல பொருள்களை சகாய விலையில் விற்றுவிடுவார்கள்.
இவர்களது கடைகளில் ஓகோவென்று வியாபாரம் நடப்பதற்கும் இவர்கள் வசதியாக வாழ்வதற்கும் இது ஒரு காரணமெனலாம்.
யாழ்ப்பாணத்தில் காணி உறுதிகளில் சிலவற்றை ஜப்பான் உறுதியெனச் சொல்லும் வழக்கமுள்ளது.
காணி ஒன்றின் போலியான உறுதியை ஜப்பான் உறுதி என்பார்கள். யாழ்ப்பாணத்தைவிட இச்சொல் வன்னிப்பகுதியில் குடியேற்றத் திட்டங்களில்தான் அதிகமாக உள்ளது.
அங்கு ஒரு காணிக்கு ஒறிஜினல் பேமிட்டை (அனுமதிப் பத்திரம்) ஒருவர் வைத்திருப்பார். அது தன்னுடைய காணியெனப் போலியான உறுதியை இன்னொருவர் வைத்திருப்பார். அதனைக்காட்டி இது தனது காணிதானெனச் சண்டித்தனம் விடுவார்.
போர் முடிந்ததற்குப் பின்னான காலப்பகுதியில் காணிக் கச்சேரிகள் வழக்குகள் மூலமாக ஜப்பான் உறுதிகள் பலவற்றிற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது.
காணிகளின் உரிமையாளர்கள் இல்லாத இடங்களில் ஜப்பான் உறுதிக்காரர்கள் கெட்டித்தனமாக காணியை ஆட்சிசெய்து வருகின்றனர்.
இந்திய அமைதி காக்கும் படை 1987 யூலை இறுதி முதல் 1990 முற்பகுதி வரைவடக்கு கிழக்கில் இருந்தார்கள்.
அப்போது யாழ்ப்பாணத்தில் அவர்கள் Made in Japan எனக் குறிக்கப்பட்ட இலத்திரனியல் பொருள்கள் மீது தீராதகாதல் கொண்டார்கள். அதுவும் 1989 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தாம் தாயகம் திரும்பி முற்றாக அகலப்போகின்றோமென்ற கட்டத்தில் வீதியோர ரோந்து போகும் போது நகரக்கடைகளில் ஜப்பானியப் பொருள்களை வாங்கத் தொடங்கினார்கள்.
இவர்களது ஜப்பானிய மோகத்தைக்கண்ட எம்மவர்கள் சிலர் கொரியா, தாய்வான் பொருள்கள் மீதும் மேட் இன் ஜப்பான் என்ற ஸ்ரிக்கரைப் போலியாக ஒட்டி விற்றுக் காசாக்கினார்கள்.
யாழ்ப்பாண மக்களில் மச்ச மாமிசம் உண்போர்களில் மிகப் பெரும்பான்மையானோர் கடல் மீன்களைத் தான் உண்பார்கள்.
குளத்து மீன் வகைகள் இவர்களுக்கு ஹறாம். அதாவது விலக்கப்பட்டது. பிரதானமாக ஜப்பான் (திலாப்பியா) எனப்பட்ட மீனைச் சாப்பிடமாட்டார்கள்.
ஜப்பானியப் பொருள்களில் தீராத மோகம்கொண்ட யாழ்ப்பாணத்தவர்களில் பெரும்பான்மையானோர் ஜப்பான் மீனைத் தீண்டத்தகாததாகவே பார்த்தார்கள்.
காரணம் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின் தங்கியிருந்த மக்கள் தமது வறுமை காரணமாக வயிற்றுப் பசி போக்க ஜப்பான் மீன்களை உணவாக்கினார்கள்.
உண்மையில் இந்த மீன்கள் போசணைப் பெறுமானம் கூடியவை. ஆனால் தீண்டத்தகாத ஒரு மீன் வகையாகப் பார்க்கப்பட்டது.
கிராமங்களில் டூப்பிளிகேட் பொருள்களைத் திறம்படத் தயாரிக்கத் தெரிந்தவர்களுக்கும், தொழிநுட்பங்களில் விண்ணனாக இருப்போருக்கும் ஜப்பான் என்றொருபட்டப் பெயர் சொல்லும் வழக்கமுள்ளது.
1977 இல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் திறந்தபொருளாதாரக் கொள்கை முறை அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது ஜப்பான் பொருள்கள் இலங்கையின் சந்துபொந்தெல்லாம் நிறைத்து நின்றது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் குற்றவாளிக் கூண்டில் நின்றது. அப்போது இலங்கையின் அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜப்பானுக்குச் சார்பாகப் பேசிய ஒரேயொரு உலகத் தலைவராக இருந்தாராம்.
அதனால் தான் ஜப்பான் அரசாங்கங்கள் இலங்கை மீது கரிசனை கொண்டு உதவியதாகவும் கதை உண்டு. ஆனால் அது முழு உண்மையல்ல.
உதவியென்ற பெயரில் முழு இலங்கையையும் தனது திறந்த சந்தையாக ஜப்பான் பயன்படுத்தி நன்றாக இலாபமீட்டியது.
குட்டி ஜப்பானில் ஆரம்பித்து வெகுதூரம் வந்துவிட்டேன். ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் முடிந்து ஜப்பான் அதில் தோல்விகண்ட பிறகு, தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அந்த நாடு கடுமையாக உழைத்தது. அனைத்து பொருட்களையும் அது உருவாக்கி விற்க முனைந்தது. அதில் போலிகளும் அடக்கம். அதனால், ஆரம்பத்தில் ஜப்பான் பொருள் என்றால் மோசமான அல்லது போலியான பொருள் என்ற பெயர் உலகெங்கும் அதற்கு கிடைத்தது. அந்தப் பெயரை மாற்ற பின்னர் ஜப்பான் உழைத்தது. இன்று அதன் வரலாறே மாறிப்போய்விட்டது. அந்த மகத்துவந்தான் நாம் போலிகளுக்கு ஜப்பான் சாமான் என்று ஆரம்பத்தில் சொல்லத்தொடங்கியது, அது பின்னர் மாறியது. ஆகவே நமது குட்டி ஜப்பான்களும் இனி வந்துள்ள மாற்றங்களைப் பயன்படுத்தி கடுமையாக உழைத்து தம்மை நிலை நிறுத்த வேண்டும்.
இத்துடன் நிறைவு செய்வோம். சுபம்