AMERICA FIRST !,  MAKE  AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)

AMERICA FIRST !, MAKE AMERIKA GREAT!! (காலக்கண்ணாடி – 19)

—- அழகு குணசீலன்—-

அமெரிக்க ஜனநாயகம், நாகரிகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், கருத்தாக்கம் குறித்து பல கோணங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்ற காலம் இது. 

ஆட்சியாதிக்கம், அரசியல் பலம், பொருளாதார பலம், ஆயுதபலம் எல்லாம்  நாங்கள்தான் என்று ஆட்டம்போட்ட தேசத்ததில் அருவருப்பானஅரசியல். 

ஜனாதிபதி ட்ரம்ப்  எடுத்த முடிவுகளும், அவரது செயற்பாடுகளும் வெளிநாட்டுக் கொள்கையும், சர்ச்சைக்குரியவையாக ஆரம்பம் முதல்லே இருந்தன.  

சுற்றாடல் பாதுகாப்பு, நேட்டோவிற்கான நிதி, ஐ.நா.விற்கான நிதி,  ஒபாமாவின் வைத்திய காப்புறுதி திட்டத்தை தொடர்தல், மெக்சிகோ எல்லை மதில், அமேரிக்கா கறுப்பினத்தவரின் அடிப்படை உரிமைகள் அனைத்திலும் அவரின் போக்கு முரண்பாடானதாகும். 

சீனா, ரஷ்யாவுடனான உறவுகள் மட்டுமல்ல ஐரோப்பாவுடனான உறவுகளும் முன்னர் எப்போதும் இல்லாதவாறு விரிசல் அடைந்துள்ளன. 

உலகின் முதலாளித்துவ சக்தியான அமெரிக்காவில்  ஒரு கலப்பு பொருளாதார மாதிரியை உருவாக்கப் பார்க்கிறார் ட்ரம்ப். 

அதாவது அமெரிக்க ஏற்றுமதிக்குக்கும் முதலீட்டிற்கும் கட்டுப்பாடற்ற திறந்த கொள்கை. இறக்குமதிக்கும், வெளிநாட்டு முலீட்டிற்கும் கட்டுப்பாடுகள் கொண்ட மூடிய கொள்கை. தேசிய பொருளாதாரப் பாதுகாப்பு என்று கூறப்படுகிறது. இது 1970களில் பெரும்பாலான மூன்றாம் மண்டல நாடுகளில் இருந்த பொருளாதார மாதிரிக்கு ஒப்பானது என்று கொள்ளலாம். 

‘AMERICA FIRST.!  MAKE AMERICA GREAT!!’ 

என்ற ட்ரம்ப்பின் தேர்தல் வாசகங்களால் அமெரிக்க வலதுசாரிகளும், மத, இன பாகுபாட்டாளர்களும் நன்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். 

உள்நாட்டில் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வேலையின்மை, வறுமை, பொலிஸ் அராஜகம்,  இனவாதம், கொரோனா என்பன  கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தொடர்கின்றன. 

இந்த நிலையில் 2021 ஜனவரி 6ம் திகதி புதன்கிழமையன்று அமெரிக்க காங்கிரஸ் வளாகத்தில் இடம்பெற்ற கலவரங்கள் அரசியலில் அநாகரிகமானவை. அமெரிக்க ஜனநாயகத்தில் கறை படிந்த அத்தியாயம்.  

ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்ததில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தும் நிராகரித்தும் வந்தார். தேர்தல் வாக்களிப்பில் தில்லுமுல்லுகள் இடம்பெற்றன என்பது அவர் வாதம். 

ஆனால் அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை என்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். ட்ரம்ப் அவர்களை நம்புவதாக இல்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயன்றார். 

இந்த நிலையில்தான் கடந்ந புதன்கிழமை காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் கூடி உத்தியோகபூர்வமாக புதிய ஜனாதிபதி ஜோ பைடனை அங்கிகரிக்க இருந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு கப்பிட்டல் வளாகத்தில் கலவரம் ஏற்படுத்தினார். வன்முறையில் ஒரு பொலிஸ் உட்பட ஐவர் பலியாகினர். 

 ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகளின் மடிக் கணினிகள் களவாடப்பட்டன. அபகரிக்கப்பட்டுள்ளன. உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கலகக்காரர்களோடு கலககக்கார்களாக பல குடியரசுக்கட்சி அரசியல்வாதிகள் கலவரத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். 

கலக்காரர்களை உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்று ஜனநாயக்கட்சியினர் வர்ணிக்கின்றனர். 

குடியரசுக் கட்சியினரின் இந்த ஜனநாயக மறுப்பும், வன்முறைப் போக்கும் ஜனநாயகக்கட்சியினருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றும் முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு பல அழுத்தங்களை ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கொடுத்தனர். சமூக ஊடகங்கள் ட்ரம்ப் இன் தொடர்புகளைத் துண்டித்தன. ருவிற்றர் முழுமையாகத் துண்டித்தது. ஆனால் ட்ரம்ப் அசையவில்லை. 

கிடைக்கின்ற தகவல்களின் படி இந்தத் தடையை ஜேர்மனியின் அதிபர் ஆஞ்சலா மேர்க்கல் மட்டுமே கண்டித்துள்ளார். ஒருபுறம் இது கருத்துச்சுதந்திர மறுப்பு என்று கூறும் அவர், மறுபுறம் ஒரு நாட்டின் தலைவரின் தகவல் தொடர்பாடல் உரிமையை ஒரு நிறுவனத்தின் முதலாளி/நிர்வாகி தீர்மானிக்க முடியுமா என்று கேட்கின்றார். இது அரசியல் அதிகாரம் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்பது அவர் வாதம். 

பழையவர் கழிதலும் 

புதியவர் புகுதலும்  

அமெரிக்க அரசியல் அமைப்பு – தேர்தல் சட்டங்களின் படி நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெறுவது வழக்கம். 

இத்தேர்தலில் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்பதும் எப்போதும் உள்ள ஒன்று. தோல்வியுற்ற ஜனாதிபதி அரசியல் நாகரிகத்துடன் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறுவதும், அதிகாரத்தை கையளிப்பதும் மரபு. 

இங்குதான் பிரச்சினையே தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தான் தோல்வியுற்றால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ட்ரம்ப் கூறிவந்தவர். 

அவர் பதவியில் இருந்து விலகி புதிய ஜனாதிபதியை அங்கிகரிக்க மறுத்து தமது குடியரசுக்கட்சியின் தீவிரவலதுசாரிகளை பின்னணியில் ஊக்குவித்து புதன்கலவரத்திற்கு காரணமாக  இருந்து உள்ளார். 

இந்த நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப்பை பதவியில் இருந்து அகற்றும் மாற்றுவழிகளை ஜனநாயகக் கட்சியினர் ஆராய்ந்தனர். இதன்படி 

 மூன்று வழிகளில் காய்கள் நகர்த்தப்பட்டன. 

-வியூகம் 1:  குடியரசுக்கட்சியின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அவர்களே தமது ஜனாதிபதியை சுயமாக பதவி விலக-காரியாலயத்தில் இருந்து வெளியேறத் தூண்டுதல். 

வியூகம் 2:  உதவிஜனாதிபதி, அமைச்சரவையின் ஆதரவுடன் ஜனாதிபதியை  அதிகாரத்தில் இருந்து அகற்றல். 

வியூகம் 3: காங்கிரஸில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து அவரைப் பதவியில் இருந்து நீக்குதல்/ காரியாலயத்தில் இருந்து அகற்றுதல் 

இந்த வியூகங்கள் மூன்றும் அரசியல் அமைப்பின் 25வது திருத்தத்தின் பிரகாரம் சட்டரீதியான நடைமுறைகள் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்பின் போது வன்முறைகள் ஏற்படலாம் என்பதால் கப்பிட்டல் வளாகத்தில் 15,000க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பார்க்க வளாகம் யுத்தக் களம் போன்று காட்சியளிக்கின்றது.  

தேவை ஏற்படின் ஊரடங்குச் சட்டமும், அவசரகாலநிலையும் பிரகடனம் செய்யப்பட வாய்ப்பிருந்தது. பதவி ஏற்பு விழா கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றது. 

அமெரிக்க காங்கிரஸ் 

அமெரிக்க காங்கிரஸ் இருசபைகளைக் கொண்டது.  ஒன்று பிரதிநிதிகள்சபை. மற்றையது செனற்சபை. ஜனாதிபதியை அகற்றுவதற்கு இருசபைகளிலும் பெரும்பான்மை தேவை. 

பிரதிநிதிகள் சபை 435 உறுப்பினர்களையும், செனற்சபை 100 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 

தற்போதைய நிலைமைகளின்படி பிரதிநிதிகள் சபையில் 222 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், 211 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். பிரதிநிதிகள் சபையில் இரு இடங்கள் வெற்றிடமாக உள்ளன. தேவையான பெரும்பானமை 218. 

100 உறுப்பினர்களைக் கொண்ட செனற்றில் 48ஜனநாயகக் கட்சியினரும், 50 குடியரசுக் கட்சியினரும், 2 சுயேட்சை செனற்றர்களூம் உள்ளனர். தேவையான பெரும்பான்மை 51. 

முதல் இருவியூகங்களும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்து கொண்ட ஜனநாயகக்கட்சியினர் மூன்றாவது வியூகத்தையே நம்பியிருந்தனர். 

முதல் இரண்டு வியூகங்களுக்கும் ஒத்துழைக்க குடியரசுக் கட்சியும், உபஜனாதிபதியும் தயாராக இல்லை. இதனால் காய் மூன்றாவது வியூகத்திற்கு நகர்த்தப்பட்டது. 

ட்ரம்ப் அரசியலுக்கு குடியரசுக் கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு இருப்பதால் காங்கிரஸில் ட்ரம்ப் கட்சியினர் அவருக்கு எதிராக குற்றவியல் பிரைரணைக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்ற நம்பிக்கை ஜனநாயகக் கட்சியினருக்கு இருந்தது. 

ஜனவரி 13ம்திகதி  ஜனநாயகக் கட்சியினரால் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டும் பிரேரணை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

ஜனநாயகம் கட்சியினருடன் இணைந்து பத்து குடியரசுக் கட்சி பிரதிநிதியும் வாக்களித்தனர். ஆதரவாக 232 பேரும் எதிராக 197பேரும் வாக்களித்துள்ளனர். மற்றவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

அமெரிக்காவில் இதுபோன்ற குற்றவியல் பிரேரணை இதுவரை நான்கு தடவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இரண்டு ட்ரம்ப்பிற்கு எதிரானது. சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய, உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ட்ரம்ப்க்கு சார்பாக முடிந்தது. 

இனி, பிரேரணை செனற்றில் விவாதிக்கப்படவேண்டும். செனற்றில் 20ம் திகதிக்கு முன் விவாதத்திற்கு எடுப்பதில்லை என சபாநாயகர் தீர்மானித்துள்ளார் 

புதிய ஜனாதிபதியாக ஜோ பையன் பதவி ஏற்று,ட்ரம்ப்பும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னரே குற்றவியல் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற உள்ளது. 

இங்கு ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தது மூன்று குடியரசு செனற்றர்கள் வாக்களிக்க வேண்டும் இது கல்லில் நார் உரிப்பதாக அமையும்.  

ஆனால், நடக்காது என்பார் நடந்து விடும். நடக்கும் என்பார் நடக்காது. 

25 இன் வரலாறு ! 

1963 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எப்.கெனடி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலைகள்காரணமாக ஜனாதிபதி லின்டன் பி.ஜோன்சன் இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தார்.  

அமெரிக்க தலைமைத்துவம் செயல்திறன் அற்று அல்லது மரணிக்கும்போது தலைமைத்துவ இடைவெளியை தவிர்த்து ஒரு தொடர்ச்சியைப் பேணுவதே இதன் நோக்கமாகும். இது 1967 இல் இருந்து நடைமுறையில் உள்ளது. 

இதன் கீழ்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் உதவி ஜனாதிபதியை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறார். உதாரணமாக ஜனாதிபதி ஒருவர் நோயுற்று வைத்திய சிகிச்சையில் இருக்கும் போது இச்சட்டம் பயன்படுத்தப்படலாம். 

2002 இல் ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யு புஷ்  தான் நோயுற்றிருந்த நிலையில் தனது அதிகாரங்களை உதவி ஜனாதிபதி டிக் செனிக்கு கையளித்தார். 

25 # சரத்து  1:  

ஜனாதிபதி ஒருவர் பதவிநீக்கம் செய்யப்பட்டால் அல்லது இராஜினாமாச் செய்தால் அல்லது மரணித்தால் , உப ஜனாதிபதி, ஜனாதிபதியாக பதவி ஏற்பார். 

25# சரத்து 2: 

வெற்றிடமாகும் உப ஜனாதிபதி பதவிக்கு, ஜனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிக்க முடியும். காங்கிரஸின் இரு சபைகளிலும் இந்த நியமனம்   பெரும்பான்மை வாக்குகளால் அங்கிகரிக்கப்படவேண்டும். 

25#சரத்து 3: 

ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குதான் தகுதியற்றவர் என்றும், தனக்காக கடமைகளைச் செய்யும் செயற்றிறனும், ஆளுமையும் இல்லாத நிலையில் இருசபைகளினதும் சபாநாயகர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். 

இரு சபைகளிலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டபின்  உப ஜனாதிபதி, ஜனாதிபதியின் கடமைகளை ஏற்று கமிஷனர் ஜனாதிபதியாக செயற்படுவார். 

குற்றவியல் பிரேரணை காங்கிரஸில் கொண்டு வரப்பட்டால் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு  இரு சபைகளிலும்  பெரும்பான்மை தேவை. 

25# சரத்து 4: 

உப ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் அமைச்சரவை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதாயின் அமைச்சரவையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். 

ஜோ பைடன்  எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் 

அமெரிக்கா மிகமோசமான சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள காலச்சூழலில் பதவி ஏற்கிறார் ஜோ பைடன்.  

உள்நாட்டிலும், வெளிநாட்டு உறவிலும் பைடனின் நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். 

1.  கொரோனாவை கட்டுப்படுத்தி, சகல அமெரிக்கர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வாய்ப்பு வழங்குதல். 

2. தேர்தல் வாக்குறுதிப்படி ஆகக் குறைந்த கூலியை 15 டொலர்களாக நியமித்தலும், சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய புதிய சக்தி வளத்திற்கான முதலீட்டை அதிகரித்தலும். 

3. குற்றவியல் நீதித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளல். குடியேற்றவாசிகள், அமெரிக்க கறுப்பினத்தவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தல். 

4. உலக காலநிலை உடன்பாட்டில் இருந்து ட்ரம்ப் வெளியேறினார். அதில் மீண்டும் இணைந்து கொள்ளல். 

5. ட்ரம்ப்பினால் சேதப்படுத்தப்பட்ட வெளியுறவுகளை நேட்டோ, ஐ.நா. சீனாவுடன் மீளக்கட்டுதல். 

6. ட்ரம்ப் புறக்கணித்த ஒபாமா கெயர்  வைத்திய காப்புறுதி திட்டத்தை விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்தல் 

7. குடியேற்றவாசிகள் தொடர்பாக முழுக்க முழுக்க புதிய கொள்கை ஒன்றை வகுத்தல். 

8.அமெரிக்காவில் வேலைவாய்ப்பு என்றால் உள்ள ஒரே தெரிவு ஆமியில் சேருவதுதான். ட்ரம்ப் யுத்தங்களை தொடரவில்லை என்பதால் அதுவும் இல்லை. வேலைவாய்ப்பு வசதிகளை அதிகரிப்பது பைடனுக்கு  பெரும் சவாலாக அமையும். 

இந்த சவால்களுக்கு முகம் கொடுப்பது இன்றைய அமெரிக்க நிலையில் அவ்வளவு இலகுவானதல்ல. இவற்றை பைடன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதற்கு காலமே பதில். 

FIRST,  GREAT என்று வாயாடி வந்த ட்ரம்ப் மிகவும் பழுதடைந்த நிலையில் அமெரிக்காவை விட்டுச் செல்கிறார். 

எல்லாம் ஜோ பைடனின் தலையில்தான் கட்டப்பட்டு இருக்கிறது. 

சம்பிரதாயத்திற்காக:  BYE BYE!.  AND   WELCOME.!