— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்–53) 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தலில் என்ன நடந்தது என்பதைக் கூறியிருந்தேன். இது முதலாம் கட்டம்.
இரண்டாம் கட்டம்தான் 2015 ஜனவரி 08 இல் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகிய பின்னர் ஏற்பட்டது. தமிழ் மக்களின் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துத் தாங்களே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம்; மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினோம் என்று தம்பட்டம் அடித்த TNA என்ன செய்திருக்க வேண்டும்?
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு காலம் தாமதியாமல் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அணுகிக் கிழக்கு மாகாணசபையில் UPFA உடன் சேர்ந்து (14+11=25>19) ஆட்சியமைக்கத் தயார் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் மீண்டும் SLMC யுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முன்பு பலதடவைகள் சூடு கண்ட பூனையாக இருந்தும்கூட பாடம் படிக்காமல் மீண்டும் TNA மூக்குடைபட்டது.
SLMC ஆனது TNA உடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொண்டே முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் UPFA உடன் வைத்துக் கொண்ட உடன்படிக்கையைப் பயன்படுத்தி மீண்டும் UPFA உடன் இணைந்து மிகுதி இரண்டரை வருட காலத்திற்கு SLMC யை சேர்ந்த நசீர் அகமட்டை முதலமைச்சராக்கியது. TNA மீண்டும் SLMC தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பியது. எல்லோரிடமும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதும் பின்னர் தங்களை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லித் தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் வந்து தேர்தலில் வாக்குக் கேட்பதும்தானா TNA இன் அரசியல் சாணக்கியம்?
சட்டத்தரணிகள் நிறைந்த TNA இன்கெட்டித்தனம் இதுதானா? எல்லோரிடமும் ஏமாறுவதற்குத்தானா தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள்?
இரண்டாம் கட்டத்தில் நடந்த இன்னொரு அரசியல் நிகழ்வினையும் இங்கு பதிவிட வேண்டியுள்ளது. பிள்ளையானும் மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பையும் விமலவீர திஸாநாயக்காவும் இரா.சம்பந்தன் அவர்களை அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்துத் “தங்களுக்கு எந்தப் பதவிகளும் வேண்டாம், எந்த நிபந்தனைகளுமின்றி TNA கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு UPFA ஆதரவு வழங்குவதற்குத் தயார்” என்று முன்வந்தும் கூட சம்பந்தன் அதனைத் தட்டிக் கழித்து விட்டார்.
தானாக வந்த சீதேவியைக் கூடக் காலால் உதைத்துத் தள்ளியதுதான் TNA இன் அரசியல் இராஜதந்திரம். கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் கோட்டைவிட்டமைதான் TNA இன் அரசியல் வரலாறு. அரசியல் கையாலாகாத்தனங்களுக்கு TNA சூட்டிய பெயர்தான் அரசியல் சாணக்கியம். TNA ஆனது இறுதியில் SLMC இடம் யாசித்து இரு மாகாண அமைச்சுப் பதவிகளையும் சபையின் பிரதித் தவிசாளர் பதவியையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்டது. பிச்சையாகப் பெற்றுக்கொண்ட மாகாண அமைச்சுப் பதவிகளைத்தானும் வினைத்திறனுடன் பயன்படுத்தினார்களா என்றால் அதுவுமில்லை. அரசியல் கையாலாகாத்தனமுடைய TNA ஐ இனியும் கிழக்குத் தமிழர்கள் நம்பி வாக்களிப்பது தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவதற்கே சமமானது.
பலருக்குத் தெரியாத சங்கதியொன்றும் உள்ளது. அதனையும் இங்கு பதிவு செய்வது பொருத்தம்.
மேற்படி இரண்டாம் கட்டத்தின் போது, கிழக்கு மாகாணசபையில் UNP யின் சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவாகியிருந்த உறுப்பினர் தயாகமகே என்பவர் TNA இன் 11 ஆசனங்களுடன் UNP இன் 4 ஆசனங்களும் சேர்ந்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான மிகுதி ஆசனங்களைத் தான் தேடிக் கொள்வதாகவும் ஆறு மாதத்திற்குத் தன்னைக் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கும் படியும், ஏனைய நான்கு மாகாண அமைச்சுப் பதவிகளைத் தமிழர்களுக்கே அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வழங்குவதாகவும், ஆறுமாத காலத்தின் பின்னர் அந்த வருடம் (2015) ஆகஸ்டில், தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அப்போது முதலமைச்சர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கையளிப்பதாயும், தான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஆறு மாத காலப் பகுதிக்குள் மத்தியிலுள்ள ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் விடய அமைச்சுக்களிடமிருந்து கிழக்கு மாகாண அபிவிருத்திக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தந்துவிட்டே செல்வதாகவும் வாக்குறுதியளித்து, ஆட்சி அமைப்பதற்காக TNA இன் ஆதரவைக் கோரிநின்றார்.
இந்த முயற்சி மட்டக்களப்பு சிவில் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சிவில் அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா இதற்குச் சாட்சியாக உள்ளார். இதற்கான ஒரு கூட்டமும் திருகோணமலையில் ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கூட்டப்பெற்றது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட தயாகமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த தண்டாயுதபாணி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், வெண்ணை திரண்டு வருகிறபோது தாளியை உடைத்த கதையாக இரா. சம்பந்தன் அவர்களிடமிருந்து ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களுக்கு “இம்முயற்சியைத் தொடரவேண்டாம் நிறுத்துங்கள்” என்ற தொலைபேசிச் செய்தி மூலம் இம்முயற்சி கருவிலேயே சிதைந்து போயிற்று. சுமார் ஆறு மாதங்களிற்கு மட்டுமே தயாகமகேவை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கி அதன் மூலம் கிழக்குத் தமிழர்களுக்குக் கிடைக்கவிருந்த சமூக பொருளாதார அரசியல் நன்மைகளுக்குத் தடை போட்டதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இராஜதந்திரம்(?). இதே சம்பந்தன்தான் முன்பு 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலின்போது அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத போதிலும் பிள்ளையான் முதலமைச்சராக வருவதைத் தடுப்பதற்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை முதலமைச்சராக்கத் திரைமறைவில் முயற்சித்துத் தோல்வி கண்டவர். இரா. சம்பந்தன் அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களை விட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கடைந்தெடுத்த சுயநலம்தான்.
இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியே கூறிய காரணம் கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோமே தவிர சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக்கமாட்டோம் என்பதாகும்.
எழுந்தமானமாகப் பார்க்கும் போது ‘தமிழ்தேசியவாதிகள்’ (?) இக்காரணத்தை ஏற்றுக் கொள்ளக்கூடும்.
ஆனால், இப்பத்தி எழுத்தாளரின் பார்வையில் சுமார் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே தயாகமகேவை முதலமைச்சராக்கி அதனால் வரக் கூடிய சமூக பொருளாதார அரசியல் அனுகூலங்களைக் கிழக்குத் தமிழர்களுக்குப் பெற்றுத்தரக்கூடிய தந்திரோபாய அரசியலை–செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சந்தர்ப்பத்தில் கடைப்பிடித்திருக்க வேண்டுமென்பதே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியல் ஒரு நாளும் கறிக்குதவப் போவதில்லை. எல்லாவற்றையுமே இனவாதக் கண்ணாடி அணிந்து கொண்டு நோக்கக் கூடாது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது குறுந் தமிழ்த் தேசியவாத அணுகுமுறையையும் மனப்போக்கையும் மாற்றப் போவதில்லை.
எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முற்றாக நிராகரிக்க வேண்டும். கிழக்குத் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தற்காத்துக் கொள்வதற்கான ஒரே மார்க்கம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளை மட்டுமே ஆதரிப்பதுதான்.