அவள் ஒரு பெண், அதிலும் போராளி, மனச்சாட்சி அற்று நான்!

அவள் ஒரு பெண், அதிலும் போராளி, மனச்சாட்சி அற்று நான்!

  — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

கதை   

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு. புதிய இலக்கம். “அண்ணா, வணக்கம். நலமாக இருக்கிறீங்களா? என்னை யாரெண்டு தெரியுதா?” கேட்டகுரல்தான். ஆனால் சட்டென அது யாரென்று அடையாளம் காண முடியவில்லை. 

யாராக இருக்கும்? 

ஒரு நிமிசம் அப்படியே அமைதியாக நான் நிற்க, “அண்ணா, நான்….” என்று அவர் தன்னை அறிமுகப்படுத்த முயன்றார். உடனேயே யாரென்று தெரிந்தது. 

“ஓ…தெரியும்.  (அவருடைய பெயரைச் சொல்லி) எப்பிடியிருக்கிறியள்? எங்க இருக்கிறீங்கள்?” என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவரிடம் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. ஏனென்றால், அந்தக் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்லவே முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எதேச்சையாக வேறு வழியின்றி அப்படிக் கேட்டு விட்டேன். 

“இருக்கிறன்” என்றார் மிகச் சோர்வாக. 

யுத்தத்தில் தப்பிப் பிழைத்து, ஏராளம் நெருக்கடிகள், பிரச்சினைகளையெல்லாம் சந்தித்து, யாரோ ஒரு தெரிந்தவரின் தயவில் வத்தளையிலிருந்தார். அப்படி ஒருவரின் உதவி கிடைத்திருந்தாலும் அவரால் அங்கிருக்க முடியாது. அப்படித்தானிருந்தாலும் தொடர்ந்தும் அங்கே இருக்கவியலாது என்று எனக்குத் தெரியும். அதையே அவரும் சொன்னார். 

காரணம், யுத்த காலத்திலேயே அவர் எழுந்து நடமாட முடியாத நிலையிலிருந்தார். போர்க்களத்தில் ஏற்பட்ட காயம், அவருடைய முள்ளந்தண்டை இயக்கமில்லாமல் செய்து விட்டது. அதனால் அவரை ஏனைய போராளிகளே கவனித்தனர். தேவையான  ஏனைய ஏற்பாடுகளை இயக்கம் கவனித்துக் கொண்டது. 

இப்பொழுது அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அவருக்குப் பெற்றோருமில்லை. சகோதரர்களும் இல்லை. இந்த நிலையில் இன்னொருவருடைய முழுமையான உதவியில்லாமல் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைக் கூடச் செய்ய முடியாமல் அவரால் எப்படி இருக்க முடியும்? 

“வத்தளையில் தொடர்ந்தும் இருக்க வாய்ப்பில்லை அண்ணா” என்றவர், “கிளிநொச்சியில ஒரு காணி இருக்கு. அதில சின்னதாக ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கலாம் எண்டு யோசிக்கிறன். அதுக்கு உதவ முடியுமா?”எனக் கேட்டார். 

அவருடைய நிலைமை விளங்கியது. ஆனால், அவர் விரும்புவதைப்போல, அவருடைய காணியில் உடனடியாக ஒரு வீட்டைக் கட்டுவதும் அதிலே அவர் வந்து தனியாக இருப்பதும் எந்தளவுக்குச் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் அவருக்கு அதை விட வேறு வழிகளோ தெரிவுகளோ இல்லை என்றும் புரிந்தது. 

இதற்கு என்ன செய்வது? அவருக்கு என்ன பதிலைச் சொல்வது? மாற்று ஏற்பாடாக எதைச் செய்வது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. 

இந்த நிலையில் அந்தப் பெண் போராளி என்ன செய்வார்? இதையிட்டு அவரை விடத் துக்கமான நிலையில் இப்போது நானிருக்கிறேன். மனதில் விடையற்ற கேள்விகளே நிரம்பிக் கொண்டிருக்கின்றன. 

அவர் ஒரு பெண் போராளி. நடக்கவோ தனியாக இயங்கவோ முடியாதவர். இப்பொழுது அவருக்கு 45 வயதுக்கு மேலாகிறது. இந்த நிலையில் பிறருடைய தயவில் எத்தனை நாட்களுக்குத்தான் அவரால் தாக்குப் பிடித்து வாழ முடியும். உடல் உபாதைகள், பிரச்சினைகளை விட, உளரீதியாக அவர் எவ்வளவு அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருப்பார்? 

இப்படியிருக்கும் பெண் போராளிகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். எல்லோரும் 45 வயதைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அதிகமானவர்களுக்கு போரிலேற்பட்ட உடற்காயங்கள். சிலருக்கு கையோ, காலோ, கண்ணோ இல்லை. சிலருக்குக் கையும் கண்ணுமில்லை. சிலருக்குக் காலும் கையுமில்லை. சிலருக்குக் கண்ணும் காலுமில்லை. சிலர் எழுந்து நடமாடவே முடியாமல் படுக்கையிலிருக்கிறார்கள். 

பாண்டவரின் வனவாசக் காலம் 12 ஆண்டுகள். அது வரையிலும் அவர்கள் ஏராளம் பாடுகளைச் சந்தித்தனர். அது முடிய அவர்கள் அஸ்தினாபுரத்தில் ஆட்சியை அமைத்தார்கள். நமக்கு யுத்தம் முடிந்து 12 ஆண்டுகள் முடியப்போகிறது. ஆனால்,போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகளின் வாழ்க்கையைக் குறித்துக் கூட நாம் சரியாகச் சிந்திக்கவில்லை இன்னும். 

ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் திக்கற்ற நிலையிலேயே உள்ளனர். சாதாரண பெண்களுடைய வாழ்க்கையே பல நெருக்கடிகளைக் கொண்டது. அப்படியிருக்கும்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் நிலை எப்படியிருக்கும்? அவர்கள் தங்களுடைய படிப்பை இடையில் கைவிட்டவர்கள். இளமையின் நாட்களைப் பொதுவாழ்விற்கென,  மக்களின் விடுதலைக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டவர்கள். கடினங்களையெல்லாம் எதிர்கொண்டு போராடியவர்கள். போர்க்களத்தில் துணிச்சலாக நின்றவர்கள். வீரமாகப் போரிட்டவர்கள். களத்தில் வெற்றிகளையும் சாதனைகளையும் ஈட்டியவர்கள். அந்தப் போரிலே காயமடைந்தவர்கள். எல்லாமே நம்முடைய விடுதலைக்காக, நாம் கனவு கண்ட தேசமொன்றுக்காக. இப்பொழுது எல்லோரும் முதிர்கன்னிகளாகத் தனித்துக் கை விடப்பட்டுள்ளனர். 

இவர்களைப்பற்றி, இவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி, இவர்களின் எதிர்காலத்தைப்பற்றி இன்று நம்முடைய கவனமென்ன? கரிசனை என்ன?இவர்களுக்கு என்ன சொல்லப்போகிறோம்? என்ன கொடுக்கப்போகிறோம்? 

வழமையைப்போல வெறும் கை விரிப்புத்தானா? இதுவரையும் செய்ததைப்போல கண்டு கொள்ளாமலே கடந்து சென்றுவிடுதலா? 

காட்சி 

இப்போது அந்தப் பெண் போராளி வன்னிக்கு வந்து, இந்த மாதிரியான நிலையில் உள்ளோருக்கான ஒரு பராமரிப்பு நிலையத்திலிருக்கிறார். இவரைப்போல கதியற்ற பலர் இங்கேதானிருக்கிறார்கள். 30 போராளிகளுக்கு மேல். இது அவர்களைப் பொறுத்தவரையில் ஓரளவுக்கு ஆறுதலும் பாதுகாப்பும். ஆனால்,  இங்கே எவ்வளவு காலம் இவர்களால் இருக்க முடியும் என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்த வரையில் அங்கே இருப்பது ஒன்றுதான் வழி. அதை விட வேறில்லை. ஆனாலும்  இப்படியே இங்கு தொடர்ந்தும் இருக்க முடியுமா? இப்படியே வாழ முடியுமா? என்பது கேள்வியே. 

இந்தப் பராமரிப்பு நிலையம் புலம்பெயர் தேசத்திலிருக்கும் ஒருவரின் ஏற்பாட்டினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரையிலும் இவர்களை – இந்த நிலையத்தை எந்தக் கட்சியும் எட்டிப்பார்த்ததில்லை. எந்தத் தலைவருக்கும் இங்கே செல்ல வேணும் என்று தோன்றவில்லை. இவர்களுக்கோ, இந்த நிலையத்துக்கோ தங்கள் நிதியிலிருந்து ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவுமில்லை. 

ஆனால், எதையும் எதிர்பார்க்காமல் இந்த மாதிரிப் பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கும் மூன்று நான்கு நிலையங்கள் தன்னார்வம் கொண்ட மனிதாபிமானிகள் சிலரால் நடத்தப்படுகின்றன. அவர்களாலும் எவ்வளவு காலத்துக்குத் தனித்து இதைச் செய்ய முடியும் என்று தெரியவில்லை. எப்படியும் இவற்றை இப்படியே தொடர்ந்து செய்ய முடியாது. இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்பதே உண்மை. 

நிலை 

2009 க்குப் பிறகு பெண் போராளிகளின் நிலைமையைப் பற்றி நம்முடைய சமூகம் கரிசனையே கொள்ளவில்லை என்பது துயரமே. அதை விட இது வெட்கக்கேடானது. இவர்களைப் பற்றிக் கரிசனை கொண்டு கவனமெடுத்திருந்தால், பலருக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்க முடியும். அவர்களுடைய தனிமையைப் போக்கி,குடும்ப வாழ்க்கையில் இணைத்திருக்கலாம். தொழில் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம். நிரந்தர உதவி தேவைப்படுவோருக்கு பொருத்தமான உதவி அல்லது ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கியிருக்க முடியும். இதெல்லாம் நிச்சயமாகச் செய்யப்பட்டிருக்க வேண்டியவை. ஏனெனில் நம்முடைய கனவுகளுக்காகத் தங்களுடைய உயிருள்ள வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்கள், போராளிகள், பெண் தேவதைகள் இவர்கள். 

ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? 

“இயக்கமிருந்திருந்தால், போராட்டத்தில நாங்கள் வெற்றியடைஞ்சிருந்தால், எங்கடை கதை வேறாக இருந்திருக்கும். அப்ப எங்களை எல்லாரும் எங்களை மதிச்சிருப்பினம்… இப்ப, இந்த நிலையில ஆர்தான் கவனிக்கப்போகினம்?….” என்று கண்கள் தளும்பச் சொன்னார், இன்னொரு பெண் போராளி. அவருக்கு ஒரு கையும் கண்ணொன்றுமில்லை. அதைத் தின்றதும் நம்முடைய தேசவிடுதலைக் கனவுதான். 

நாமோ கண்ணிருந்தும் குருடராய்…காலிருந்தும் முடவராய்… கையிருந்தும் விளங்காதோராய்…