எனது மிக அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய தோழர் ஜெமினி சுகவீனத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்த செய்தி மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மனித உரிமைவாதியும், போராளியுமான அவர் தனக்கென சில இலட்சியங்களுடனேயே வாழ்கிறார்.
எமது தாயகத்தில் உள்நாட்டுப் போர் சிறுகச் சிறுக ஆரம்பித்த வேளையில் லண்டனில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் என்ற பெயரில் எனது மதிப்பிற்குரிய நண்பரான ராம்ராஜ் ஆரம்பித்திருந்தார். இந்த ஊடகத்தினூடாகவே இந்த இனிய மனிதரின் உறவு எனக்குக் கிட்டியது.
விடுதலைப் போராட்டம் என்பது படிப்படியாக உள்நோக்கியதாகவும், எந்த மக்களின் பாதுகாப்பைக் கோருவதாகவும் அமைந்ததோ, அம் மக்களின் அடிப்படை உரிமைகளின் எதிரியாகவும் மாற்றமடைந்திருந்தது. மேற்குலகத்தில் பல்வேறு பெயர்களில் உருவாகிய பல்வேறு ஊடகங்கள் யாவும் ஒரே குரலில் இந்த அராஜக நிலமைகளுக்கு ஆதரவாக ஒலித்தன. அதாவது சொந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதை முழுமையாகவே மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.
தமிழ் மக்களின் மற்றும் இதர சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இலங்கை அரச யந்திரம் குறிப்பாக ராணுவம் மட்டுமல்ல, எம்முள் செயற்பட்ட ஜனநாயக விரோத அராஜக சக்திகளும் எமது மக்களின் குரல்வழையை நசுக்கி வந்தன.
அச்சு ஊடகங்கள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள் போன்றன ஒரே விதமாகவே மக்களின் மூளைகளைச் சலவை செய்து வந்தன. யாரும் எழுதவும் முடியவில்லை. எழுதினால் பிரசுரிக்க யாரும் தயாரில்லை என்ற பலமான அச்ச புறச் சூழல் நிலவியது.
இவ்வாறான மிகவும் மோசமான ஜனநாயக விரோதச் சூழல் தாயகத்தில் மட்டுமல்ல, ஐரோப்பிய தேசங்களிலும் நிலவியதால் இந் நிலமைகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனக் கருதிய ஜெமினி தாம் ‘ தேனீ’ என்ற பெயரில் இணையத் தளம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணுவதாக என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அவ் வேளையில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செயற்படும் பலர் எதிர்நோக்கும் நெருக்கடிகளை அடிக்கடி அறிந்துள்ள அவர் தாமும் அவ்வாறான பயணத்தில் பங்குகொள்ள முனைந்தபோது ஒரு கணம் கவலையடைந்தேன். ஆனால் ஏற்கெனவே தனது அரசியலை மிக இள வயதிலேயே ஆரம்பித்து, கோட்பாட்டு அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர் இவ்வாறான முடிவுக்குச் செல்வதில் நான் ஆச்சரியம் அடைந்ததில்லை.
எமது வானொலியில் அரசியல் விவாதங்களையும், கட்டுரைகளையும் வெளியிட்ட எனக்கு அவை எழுத்து வடிவில் வருவதும் ஒரு வகையில் மகிழ்ச்சியானதே. தாயகத்திலும். புலம்பெயர் தேசங்களிலும் ஜனநாயகத்தின் குரலாக எமது வானொலி இயங்கிய வேளையில், ஆழமான கருத்துக்களைத் தாங்கிய இணையமாக ‘தேனீ’ விளங்கியது. பல்வேறு நாடுகளில் அவை படிக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களால் அவை பயன்படுத்தப்பட்டன. தினசரி சுமார் 40,000 பேர் படிப்பதை அவர் பெருமையுடன் கூறிய காலங்கள் உண்டு.
ஒரு தாக்கம் செலுத்தும் வகையிலான இணைய ஊடகப் பத்திரிகையாக அவர் அதனை மாற்றியிருந்தார். பல அறிஞர்களினதும், வல்லுனர்களினதும் கட்டுரைகளை மொழிமாற்றம் செய்து பிரசுரித்திருந்தார். மொழி மாற்றம் செய்வதற்கென சிலரை அவர் சம்பளம் வழங்கி நியமித்திருந்தார். அவ்வளவிற்கு அவரது பார்வை காணப்பட்டது.
இவை யாவற்றிற்கும் அவர் ஓர் ஸ்தாபனம் அல்ல. தனது சொந்தப் பணத்தில், இரவில் வேலைக்குச் செல்வது, பகலில் கட்டுரைகளைப் படித்துப் பதிவிடுவது என சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தார். இத்தனை சுகவீனங்களுக்கு மத்தியிலும் இப் பணிகளை மேற்கொண்டிருப்பது மிக உயர்ந்த மனிதர்களின் பண்பாகும். எதிர்பார்த்தது போலவே அரசியல் எதிரிகள்,பயமுறுத்தல்கள் எனப் பல இருந்த போதிலும் அவர் தனது ஜனநாயகக் கடமையில் மிகவும் கண்ணியமாகவே செயற்பட்டார்.
இத்துணை ஆளுமைகளும் பொருந்திய எனது அன்புமிக்க தோழர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன. தற்போதுள்ள உலகப் பொதுச் சுகாதாரச் சூழலில் இந்த இனிய மனிதரின் சுகத்திற்காக நாம் எமது ஆழமான சிந்தனைகளை அவருக்காக அர்ப்பணிக்க முடியும்.
அன்பான தோழனே,
மிகவும் கனத்த இதயத்துடன் இம் மடலை எழுதுகிறேன். மக்களின் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், பேச்சுரிமைக்காகவும் உனது வாழ்வை அர்ப்பணித்தாய். ஆனால் உனது வாழ்வோடு நீ நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். உனது லட்சியங்களின் பயணத்தை நாம் தொடர்வோம் என்பதே நாம் உமக்குத் தரும் சத்தியமாகும்.
தோழமையுள்ள
வி.சிவலிங்கம்.