இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சிறிய பார்வை

இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு சிறிய பார்வை

    — ரியாஸ் குரானா — 

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் ”தீன் வேலை” என்ற பெயரில் ”வீண்வேலை” செய்யும் அனேக  இயக்கங்கள் இந்தியாவில்  பிறந்தவையே. சூஃபி மற்றும்  தௌஹீத் போன்ற அமைப்புக்கள் மத்திய கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவை. அதிலும், கடந்த 300 ஆண்டுகளாக சூஃபி இயக்கங்கள் இந்தியாவுக்குரிய ஒரு  புதிய மாற்றத்தை தமது  உள்ளடக்கத்தில் உருவாக்கியிருந்தன. அந்த உள்ளடக்கங்களுடனேயே சூஃபி இயக்கம் இலங்கையில் பரவியது.  அது முற்றிலும்  ”நிலபிரபுத்துவ”  அமைப்பைப்போன்று செயல்படும்  ஓர் இயக்கம். 

இலங்கையில் மிகப் பழமையான அமைப்பாக தௌஹீத் சார்ந்த (வஹாபிசம்) கருத்தின் தாக்கத்தில் உருவான ”ஜம்மியதுல் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா” என்ற அமைப்பையே கூறலாம். இது  1947 களிலேயே இலங்கையில் காலுான்றியது. 1948 களில் கண்டியில் இரண்டு கபுர்ஸ்தானங்களை உடைத்ததோடு பிலபலமானது. 

பின்னர் கிழக்கில் மையம்கொண்டு செயல்படத் தொடங்கியது.  எனினும்,அன்றைய காலத்தில் அந்த இயக்கத்தினால் மக்களிடம் பாரிய வரவேற்பைப் பெறமுடியாது போயிற்று. இதை  தாபித்த அப்துல் ஹமீத் பக்ரி அவர்களின் குடும்பத்திற்கே சவூதிஅரேபியா குடியுரிமை வழங்கியது என்பது மிக முக்கியம். 1976ம் ஆண்டு சவூதியிலேயே அவர் மரணித்துவிட்டார். 

இந்த இயக்கம் அரசியல்  கட்சியாகவும் பதிவு செய்யப்படும் என  அவர் அறிவித்திருந்தபோதும், அது நிகழவில்லை. 

இதைவிடப் பழமையான இஸ்லாமிய இயக்கமான ஷீயாக்கள் அதற்கு முன்பே இலங்கையில்  இருந்தபோதும், அவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை. வியாபாரங்களிலேயே கவனம் செலுத்தினர். 80களிலேயே இதை வளர்க்கும் முயற்சி தீவிரமடைந்தது. 

தப்லீஃக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி, காதியான்கள் என பல அமைப்புகள் இந்தியாவிலேயே பிறந்தன.  

முதலாளித்துவ சிந்தனை கொண்டவை 

முதாலாளித்துவ ஆதரவை தனது உள்ளகத்தில் பெரும் அக்கறை கொள்ளும் இயக்கமாக தப்லீக் இருக்கிறது. இது பாமர மக்களை அதிகம் கவர்ந்த ஓர் அமைப்பு. வெளிநாடொன்றுக்குப் பயணம் செய்வதற்காக இலங்கையினுாடாகப் பயணித்த இந்தியர் ஒருவருக்கு இலங்கையில் சில நாட்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.  அவர் ஒரு பள்ளியில் உரையாடிய  தருணத்திலிருந்து அந்த அமைப்பு  இலங்கையில் தோன்றியது. 

ஜமாதே இஸ்லாமியும்  அதேபோல்தான், தர்ஜூமதுல் குர் ஆன் விற்பனைக்காக இலங்கை வந்த  இந்தியர் ஒருவரால் இங்கு ஜமாதே  இஸ்லாமி உருவானது. அதன் முதலாவது தலைவரும் இந்தியாவைச் சேர்ந்தவரே. 

இந்த இயக்கம் மாணவர்கள், படித்தவர்கள் எனத் தேடித்தேடி தனது இயக்கத்தின் ஆதரவாளர்களாக பிடித்துக்கொண்டது. 80 களிலிருந்து ”இஹ்வானுல் முஸ்லிமீன்” போன்ற போர்க் குணம்கொண்ட அமைப்புகளின் நிழல் இந்த இயக்கத்தின்மீது  படிந்தது. அதனால், தனது உறுப்பினர்களை  வழிநடாத்தும் ஓழுக்கக்  கோவைகளில் அந்த அம்சங்களை  அவர்கள்  இணைத்துக்கொண்டனர்.  

பாமர மக்கள் இலக்கு 

தப்லீக் ஜமாத் இயக்கம் தலித் (பாமர) மக்களை தமது ஆதரவாளர்களாகக் குறிவைத்துச் செயற்பட்டாலும், அதன் அதிகாரச் சக்திகளாக பெரும் பணக்காரர்களே இருந்துவந்தனர்; வருகின்றனர். 

ஜமாதே இஸ்லாமி கற்பனையான இறுக்கமான அரசியல்  இயக்கங்களுக்கு நிகரான  கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் ஆதரவாளர்களின் மீது திணித்து  செயல்பட்ட  மேட்டுக்குடி இஸ்லாமிய இயக்கம். 80 களில் தான் இது பரவலான  கவனத்தைப் பெற்றது. முஜாஹிதீன்களை ஆதரித்ததினுாடாக இந்தக் கவர்ச்சி  அந்த இயக்கத்திற்கு உருவானது. 

சூஃபி இயக்கங்களோ, மயாஜால  இஸ்லாமிய இயக்கங்களாக  மாறிப்போயின. அதிசயங்களை நிகழ்த்தும் வாப்பாக்களை/தங்கல்களை” ( தலைவர்களை)  முன்வைத்து அவை செயல்பட்டன.  எனினும், பள்ளிவாயல்களுக்குள்  பெண்களின் நடமாட்டத்தை  இந்த இயக்கம் அனுமதித்தது.  அந்த பள்ளிகள் தரீக்காப் பள்ளிகளாக இருப்பது முக்கியமான ஒன்றே. 

ஆனால், சுன்னத்துவல் ஜமாத் அமைப்பினர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் சில இயக்கங்கள் இருக்கின்றன.  அதில்  காதியான்களும் ஒன்று. ஆனால்,  இந்த காதியான்கள் தங்கள்  பள்ளிவாயலில் ஜூம்மாக்களுக்குப்  பெண்களை அனுமதித்தே  வருகின்றனர். நீர்கொழும்பிலுள்ள  அவர்களுடைய பள்ளிவாயலில் இதை அறிந்துகொள்ளலாம். 

இந்தியா வழி இலங்கைக்கு வந்த தௌஹீத் (வாஹாப்பிசம்) 90 களின் பின்னரே இலங்கையில் பெரும் கவர்ச்சிகரமான இடத்தைப்  பெற்றது. 

ஏனைய இயக்கங்களில் ”தாருல் அர்க்கம்” கொஞ்சம்  முக்கியத்துவமான அமைப்பு.  இது ஜமாதே இஸ்லாமியிருந்த அதிருப்தியாளர்களால்  உருவாக்கப்பட்ட அமைப்பு. ஒஸ்தாத்  மன்சூரின் தலைமையில்  ஆரம்பத்தில் இது நடந்தேறியது.  இதில் அதிக இளைஞர்கள்  இருந்தனர். சர்வதேச அளவில்  இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இதன் உருவாக்கம் நடந்தது. இஸ்லாமிய வெறுப்பை மேற்குலகம் உலகெங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. அதை எதிர்கொள்வதில் பல வகையான  கருத்து நிலைகள்  உருவாகத்தொடங்கியிருந்தன. அந்த  அனைத்துக் கருத்து நிலைகளிலும் பாதிப்படைந்திருந்த இளைஞர்கள் அதிகம்பேர் இந்த இயக்கத்தில் இருந்தனர். எனினும், இதுவும் அடிப்படைவாதத்தை அனுசரிக்கும் அமைப்பாகவே சுருங்கிப்போனது. முழுமையாக இப்படி கருத முடியாது. பிற இயக்கங்களைவிட இது சற்று முற்போக்கானது. 

ஏபிஎம் இத்ரீஸ் வெளியேற்றம் 

இதிலிருந்து முதலில் ஏபிஎம் இத்ரீஸ் வெளியேறினார். பின்னர், அதற்குள் உருவான “தலைமைத்துவப்  போட்டியும், பொருளாதார  ரீதியிலான வரவுகளும், ஒன்றிணையும் புள்ளியில் மன்சூர் வெளியேற்றப்பட்டார்.  வெளியேற்றப்பட்ட மன்சூர், ”மிஷ்காத்” என்ற ஓர் அமைப்பைத்  தொடங்கியிருக்கிறார். 

இலங்கையில் குர் ஆனுக்கு தப்ஸீர் எழுதக்கூடிய ஆற்றல் மிக்க இருவரை அடையாளப்படுத்தலாம். ஒருவர்  ஏபிஎம்.இத்ரீஸ்.  மற்றையவர்,  அந்த வேலையைச்செய்து  கொண்டிருக்கும் மன்சூர். இருவரும்  அந்த அமைப்பில் தற்போது இல்லை.  வெளிநாட்டு நிதிகளைக்கொண்டு  மாடுகளை அறுத்து பங்கிடுதல், கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்  என்ற பிரத்தியேகமான பொருளாதார விசயங்களிலும் கவனம்  செலுத்துகிறது, தாருல் அர்க்கம்.  

இன்றைய நிலையில் அதிக விமர்சனங்களை முன்வைப்பதெனில்தௌஹீத் ஜமாத் மற்றும் தாருல்  அர்க்கம் என்ற இரண்டு அமைப்புக்களின் மீதுமே நான்  வைப்பேன். (பின்னர் அதை எழுதுகிறேன்) இந்த இயக்கத்தவர்கள் ”உலக  உம்மாவாதிகள்”  எனத் தம்மைக் காட்டிக்கொள்பவர்கள். 

மற்றயவை, முன்புள்ள இயக்கங்களுடன் முரண்பட்டுக்  கொண்டு இலங்கையிலேயே  உருவான அமைப்புக்கள்தாம். 

ஒட்டுமொத்தமாக அனைத்து அமைப்புக்களும், (அதிக அமைப்புகள்) 1924 ம்  ஆண்டின் பின்னர் சரிந்த உதுமானிய சாம்ராஜ்யத்திற்குப்  பிறகே தீவிரமாக இயங்கத்  தொடங்கின. இந்த அமைப்புக்கள் பெரும்பாலும்,  உமர் (ரழி) அவர்களின்  காலத்தில்  உருவான இறுக்கமான பல  நடைமுறைகளைத் தீவிரப்படுத்தினவே தவிர அவற்றை மீள்பரிசீலிக்கவில்லை. 

பெண்களை தூரமாக்கும் நடவடிக்கை 

உமர் (ரழி)யின் காலத்தில்  தொடங்கிய, பள்ளியிலிருந்து  பெண்களைத் துாரமாக்கும் நடைமுறை, 10ம் நுாற்றாண்டில்  உச்சத்தை அடைந்தது. பெண் ஹதீஸ் கலை வல்லுனர்கள் 10ம் நுாற்றாண்டின்  பின்னர் இல்லை. அவர்களுடைய  வாசகங்கள் கூட மேற்கோள்  காட்டப்படுவதில்லை  என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இந்த வறண்டுபோன, போக்கையே இஸ்லாமியப் போக்குகளாகப் பரப்பியிருந்தனர். அதுவே நிறுவனமயப் படுத்தப்பட்டிருந்தது.  அதை இந்த இயக்கங்கள்  பின்பற்றின. அதையே தொடர்ந்து காப்பாற்றும் வழிமுறைகளைப்  பற்றிச்சிந்தித்தன; முன்வைத்தன.  பெண்கள் முற்றுமுழுதாகப்  பள்ளிவாயலில் இருந்தும்,  கருத்துக்களை விவாதிப்பதிலிருந்தும், பொது உரையாடல்களில்  பங்கேற்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர். 

கடைசியில், அவர்களை முற்றாக  மூடி, சமையலறைகளிலும், படுக்கையறைகளிலும் சிறை வைக்கும் அது நிலைவரை  சென்றுவிட்டனர். 

இந்த வறண்ட இஸ்லாமிய  இயக்கங்கள் தங்கள் நிலைப்பாடுகளை  மீளப்பரிசீலிக்கும் மனநிலையில்  இல்லை. இதை எழுதினால்,  காபிர், என எனக்கு ஃபத்வா  தருவார்கள் என்பது  தெரியும். அதைவிட வேறு என்ன இவர்களால் செய்ய முடியும்? வெறும்  ஃபத்வாக்களையே உற்பத்தி செய்து  கொண்டிருக்கும் இயந்திரங்களே  அவை. 

இந்த இயக்கங்களின் நடவடிக்கைகள் மற்றும் போக்குகள் குறித்தும், அதன் இலங்கை  உருவாக்கம் குறித்தும்  விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டுதான். அதற்கு  சற்றுபொறுத்திருப்போம்.  

பல்கலைக்கழகங்களை இலக்கு வைத்த இயக்கங்கள் 

இலங்கையின் அரசியல் கட்சிகளான ஜேவிபி, யூ.என்பி  உட்பட  தமிழ்ப்போராட்ட இயக்கங்கள் வரை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து செயற்பட்டனர் என்பது நாமறிந்ததே, இதே செயற்பாடுகளை இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் 90 களின் நடுப்பகுதியிலிருந்தே தொடங்கியிருந்தன. பல்கலைக்கழக மாணவர்களை தமது இயக்கக் கருத்தியலுக்கும்,  செயற்பாடுகளுக்கும் பாவிக்கத் தொடங்கினர்.  இந்தப்பணியை ஆரம்பித்து  வைத்தது தாருல்அர்க்கம் (DA) என்ற  அமைப்புத்தான், அதைத்  தொடர்ந்து ஜமாதே இஸ்லாமியும்  களத்தில் இறங்கியது.  

“தௌஹதீ” 

அதுபோல, கடும்போக்கு பழமைவாத சிந்தனையை பின்பற்றும் பல அமைப்புக்கள் இலங்கையில் “தௌஹீத்” என்ற அடைமொழியோடுதான் செயற்பட முன்வந்தன. இந்த தௌஹீத் என்ற முக்கியமான இஸ்லாமியச் செயலை இன்று மிகமோசமான கண்ணோட்டத்திலும்,  அருவருப்புடனும் பார்ப்பதற்கு அதை அடைமொழியாக பயன்படுத்தி செயற்படும்  பழமைவாத அமைப்புக்களே  காரணம்.  

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களை இயக்கத்திற்கு சேர்க்கும் “ஆள்புடிக்கும்”  பணியில் நடந்த போட்டா  போட்டிகளில், அனைத்து இஸ்லாமிய  அமைப்புக்களும் பின்னர் களத்தில்  இறங்கின. அதுவே இன்று வளர்ந்து  முகமற்ற பெண்களை உருவாக்கும்  மாபெரும் தௌவா பணியை சாதித்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.