கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்

கிளிநொச்சி அபிவிருத்திக் குறைகள்

 —  கருணாகரன் — 

சிலவேளை இந்தச் செய்திகள் உங்களுக்கு ஆச்சரியமாக – நம்பக் கடினமாக இருக்கலாம். அல்லது “அட இதென்ன புதினம்? இங்கேயும் அப்படித்தானே இருக்கு!” என உங்களுடைய நிலையைச் சமப்படுத்தி ஆறுதலடையலாம். அல்லது “இதுதானே நம்முடைய நாட்டின் நிலை” என்று சொல்லிச் சிரிக்கலாம்.  

ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இதையிட்டு நாம் துக்கப்படாமலும் வெட்கப்படாமலும் இருக்க முடியாது. 

பாருங்கள், கிளிநொச்சி நகரில் ஒரு பஸ் நிலையமே இல்லை. மழையிலும் வெயிலிலும் சனங்கள் வெட்ட வெளியில் நின்றே பஸ் ஏறுகிறார்கள். இறங்குகிறார்கள். பஸ் நிலையமே இல்லையென்ற நிலையில், அங்கே மலசல கூடமோ பிற வசதிகளோ இருக்குமா? ஆகவே எவ்வளவு அந்தரமென்றாலும் அடக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஏனென்றால் நீங்கள் அப்பாவிச் சனங்கள். அப்பாவிச் சனங்களின் விதி இப்படித்தானிருக்கும். எது உள்ளதோ அதை அனுசரித்துக் கொள்ள வேண்டும். எது எப்படி நடக்கிறதோ அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்குமேல் எதுவுமே இல்லை. எதுவுமே செய்ய முடியாது. அவ்வளவுதான். 

“இது மக்களுடைய உரிமைகளை அவமதிக்கும் மீறும் செயல் அல்லவா?” என்று உங்களுடைய சிறிய மூளைக்குள் ரத்தம் கொப்பளிக்கலாம். இதனால் உங்களுடைய உடலுக்குத்தான் நலக்கேடு ஏற்படுமே தவிர, வேறு ஒரு பயனும் விளையாது. 

ஆனால் மக்களைக் காப்பதற்கென்று நாட்டின் தலைமைப் பதவிகளில் இருப்போரிலிருந்து பொறுப்பான அமைச்சர்கள், ஒருங்கிணைப்புக்குழுவினர், ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத்தலைவர்கள், மாவட்டச் செயலர், திட்டமிடல் பணிப்பாளர்கள் என ஏராளம் காத்தற் கடவுள்கள் உள்ளனர்.  

மத்திய  அரசாங்கம், மாகாணசபை, பிதேச சபை, போக்குவரத்துச் சபை என ஏராளம் அமைப்புகள்,  நிறுவனங்கள் எல்லாம் உண்டு. ஆனால் பஸ் நிலையம் இல்லை. 

பஸ் நிலையத்துக்கான கதை: 

இதற்குள் ஒரு கதை உண்டு. அதையும் சொல்லி விட வேணும். இங்கே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஒரு பஸ் நிலையத்தைக் கட்டுவதற்கு எல்லோரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்தளவுக்குப் பிரமாண்டமான பேருந்து நிலையமாயிருக்குமோ! என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. சற்றுப் பொறுமையாக மீதியைப் படியுங்கள்.  

முதலில் எங்கே பஸ் நிலையத்தை அமைக்கலாம் என்ற இழுபறியில் ஐந்து ஆண்டு காலம் போய் விட்டது. பிறகு வந்த ஐந்து ஆண்டில், பிரதான வீதியோடு அமைந்துள்ள டிப்போச் சந்தியில், சந்தைக்கு முன்பாக இடமொன்று தேரப்பட்டது. வளரும் நகரொன்றின் பஸ் நிலையத்துக்கு அந்த இடம் பொருத்தமானதேயல்ல என்று பலரும் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அன்றிருந்த (2015 – 2019)  தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைமை வகித்த ஒருங்கிணைப்புக்குழுவினர், அதில்தான் பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்று முடிவெடுத்தார்கள். குறிப்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதிலேயே அமைய வேண்டும் என்று நின்றார்.  

அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு,  வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதுவும் ஒரேயொரு சிறிய கட்டிடத்துக்கு மட்டுமே ஏற்பாடு நடந்தது. அந்தக் கட்டிடத்தை அமைத்த முறையே – வடிவமே – தவறு.  

கட்டிடத்தின் வடிவம் மட்டுமல்ல,  கட்டிடம் அமைக்கப்பட்ட இட அமைவும் தவறானது. காணியின் விஸ்தீரணம், பயணிகளின் பார்வை, பேருந்துகள் நிறுத்தப்படும் அமைப்பு என்பதையெல்லாம் கணக்கிட்டுத் திட்டமிடப்படாமல் வரையப்பட்ட கட்டிடம் அது. 

கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது ஐந்து ஆண்டுகளாகின்றன. இரண்டு ஆட்சிக்காலம் இடையில் நகர்ந்துள்ளது. ஆனாலும் கட்டிடத்தின் பாதி வேலைகூட முடியவில்லை. இதற்குள் இரண்டு மூன்று ஒப்பந்தகாரர்கள் மாறி விட்டனர். வேலை மட்டும் குறையாகவே நிற்கிறது. 

நம்முடைய அபிவிருத்தியின் சிறப்பும் திட்டமிடல்களின் பெருமையும் இப்படித்தான் உள்ளது. இதற்குள் புற்றீசல்கள் முளைத்ததைப்போல ஐம்பது அறுபது கடைகள் இந்த வளாகத்துக்குள் முளைத்து விட்டன. ஒவ்வொரு வாரமும் ஒரு கடையாவது இரவில் முளைத்துக் காலையில் நிற்கும். இதற்கு எந்தக் கேள்விகளும் பிரதேச சபையினால் கோரப்படுவதுமில்லை. நடைமுறைகள் எதுவும் பின்பற்றப் படுவதுமில்லை. எல்லாமே அரசியல் நலன் நோக்கிலான செயற்பாடுகள். இதைத் தட்டிக் கேட்கவோ கட்டுப்படுத்தி நிறுத்தவோ உள்ளுராட்சி சபையும் முயற்சிப்பதாக இல்லை.  

இப்பொழுது இந்தக் கடைகளை அகற்றினால்தான் பஸ் நிலையப் பணிகளை மீளத் தொடங்க முடியும் என்கிறது மாவட்டச் செயலகம். ஆனால், அதற்குப் பிரதேச சபை ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் நலன்களைப் பெறுவதை இலக்கு வைத்து வழங்கப்பட்ட கடை மற்றும் வியாபார அனுமதிகளே இவை என்று கூறப்படுவதால் அந்த நலனை பிரதேச சபையை ஆட்சி செய்யும் கூட்டமைப்பினர் இழக்க விரும்பாமல் இழுத்தடிக்கின்றனர்.  

அப்படியானால் இதை அகற்றுவதில் சிக்கல்கள் உண்டு. இதை எப்படித் தீர்ப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். நிலவரத்தைப் பார்த்தால் விவகாரம், நீதி மன்றம் வரையில் செல்லக் கூடும் போலத் தெரிகிறது.   

இதையெல்லாம் சமாளித்து பஸ் நிலையத்தை அங்கே அமைத்தாலும் அது எந்த வகையிலும் பொருத்தமானதே இல்லை. வேண்டுமானால் அந்தக் காணியையும் கட்டிடத்தையும் வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். பஸ் நிலையத்தை தற்போது டிப்போ உள்ள இடத்துக்கே மாற்ற வேணும். அதுவே பொருத்தமானது. டிப்போவை வேறு இடத்துக்கு நகர்த்துவது அவசியம். இதுதான் நகர அபிவிருத்திக்குப் பொருத்தமானது. இதனை தற்போது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் சார்ள்சும் கவனத்தில் எடுப்பது நல்லது.  

நீ பாதி நான் பாதி… 

இது மட்டுமல்ல, கிளிநொச்சி நகரின் மாவட்ட விளையாட்டரங்கும்  அப்படித்தான் உள்ளது. நீ பாதி நான் பாதி என்ற மாதிரி. 2013 இல் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட மைதானத்தின் நிர்மாணப் பணிகள், அரை குறை வேலைகளோடு சத்தமேயில்லாமல் இடை நின்று விட்டன. நின்ற பணிகளை மீண்டும் முடுக்கி விடுவதற்கென எத்தனையோ அமைச்சர்களும் அதிகாரிகளும் பிரதானிகளோடு வந்து பல தடவை பார்த்துச் சென்றிருக்கிறார்கள். ம்ஹூம், நின்றது நின்றதுதான். அசையவேயில்லை. 

இதைப்பற்றிய செய்திகள் பல தடவை வந்தபோதும் யாருடைய கவனத்தையும் அது பெற்றதாகத் தெரியவில்லை. 

இந்த மைதானத்தை எதுவுமே செய்யாமல் விட்டிருந்தால் ஊரிலுள்ள இளைஞர்களாவது விளையாடியிருப்பர். அல்லது மாடாவது புல் மேய்ந்திருக்கும் என்று கவலையோடு சொல்கிறார் கிளிநொச்சியிலுள்ள முதியவர் ஒருவர். இந்த மைதானத்தின் சிறப்பை அறிந்தவர் அவர். ஒரு காலம் கொழும்பிலிருந்து மரைக்கார் ராமதாஸின் கோமாளிகள் தொடக்கம் வடக்கும் தெற்கு,  வெளிக்கிடடி விசுவமடுவுக்கு எனப் பல நூறு நாடங்கள் அரங்கிடப்பட்ட மைதானம். தென்னிந்தியப் பாடகர்கள் ரீ.எம். சௌந்தராஜன்,  மலேசியா வாசுதேவன், கே.ஜே. ஜேசுதாஸ் எனப் பலரும் வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்திய மைதானம். பல தேர்தல் கூட்டங்கள், பல நூறு விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் நடந்த மைதானம். ஏன் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் வான் வெளிப் பயணங்களை மேற்கொண்டிருந்ததும் இந்த மைதானத்தின் வழியேதான். 

இப்படியெல்லாம் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும் மைதானம் எப்போது மறுபடியும் இயங்கு நிலைக்கு வரும் என்பது கேள்வியே. இதைக்குறித்து மக்கள் சிந்தனைக் களத்தின் பிரதிநிதிகள் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் எடுத்துச் சொல்லியுள்ளனர். அவரும் இதைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். ஆனாலும் வேலைகள் முடிந்தால்தான் உண்டு.  

இது போல முறையாகத் திட்டமிடப்படாமல் பெருமளவு நிதியைச் செலவழித்து, வட மாகாண சபையினால்  கட்டப்பட்ட சுற்றுலா மையங்கள் அப்படியே கைவிடப்பட்டு விட்டன. கிளிநொச்சி நகரில் குளக்கட்டுடன் அமைந்துள்ள கட்டிடம் அவற்றில் ஒன்று. இன்னொன்று வன்னேரிக்குளத்தில் உள்ளது. எல்லாவற்றிலும் வௌவால்கள் உறங்குகின்றன.  “வௌவால்களுக்கு இவ்வளவு நிதியைச் செலவழித்து இடம் அமைத்துக் கொடுக்க வேண்டுமா? இந்த அபிவிருத்திக்கு என்ன பெயர்? என்று கேட்கிறார் ஒரு இளைஞர். 

ஏனைய அரைகுறை நிர்மாணங்கள் 

மேலும் சொல்வதென்றால் யு. என். டி.பீ மற்றும் ஐ.எல்.ஓ, கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிதியில்  32 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரிசி ஆலையொன்று இயக்கமின்றி மூடப்பட்டிருக்கிறது. 

இன்னொன்று அரை குறை நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சந்தையாகும். இதை முழு நிலையில் இயங்குவதற்கு கரைச்சிப் பிரதேச சபையே முட்டுக்கட்டையாக உள்ளது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் வர்த்தகர்களும் கூறுகின்றனர். மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு பொருளாதாரச் சந்தையைக் கூட இயக்குவதற்கு வழியும் வல்லமையும் இல்லாத நிலையே நீடிக்கிறது. 

மற்றொன்று ஏ9 பிரதான சாலையோரத்தில் சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதித் தொகுதியாகும். இந்த இடம் மிக முக்கியமான Commercial Area வாகும். இங்கே ஒரு அருமையான,  அழகான Shoping Complex  நிர்மாணிக்கப்பட வேண்டியது. ஆனால், அதில் கொண்டுபோய் உத்தியோகத்தர் விடுதி கட்டப்பட்டுள்ளது. 

இன்னொன்று பூநகரியில் தொலைநோக்குப் பார்வையுடன் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச் சந்தையும் பேருந்து நிலையமும் கைவிடப்பட்டு பொருத்தமற்ற இடத்தில் புதிதாக இவற்றை நிர்மாணிக்க எடுக்கப்படும் முயற்சி. இதனால் ஏற்கனவே செலவழிக்கப்பட்ட 80 மில்லியன் வரையான பணம் வீணாக்கப்படுகிறது. மட்டுமல்ல, புதிய திட்டம் பொருத்தப்பாடுடையதே அல்ல. 

இதெல்லாம் திட்டமிடலின் குறைபாடுகளன்றி, நிர்வாக ஒழுங்கீனங்களின்றி, அரசியல் தவறுகளின் விளைவுகளன்றி வேறென்ன? 

இப்படிப் பலதைப் பட்டியிடலாம். இதெல்லாம் எதைக் காட்டுகிறது?  நம்முடைய அபிவிருத்தி என்பது உண்மையில் குறைவிருத்தி நிலையில் உள்ளது என்பதைத்தானே! 

ஆனால் அரசாங்கமோ எடுத்ததெற்கெல்லாம் அபிவிருத்தி என்றே பேசுகிறது. நாடு கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு அபிவிருத்தி ஒன்றுதான் வழி. அப்படியென்றால் அதைச் சரியாகவும் விரைவாகவும் செய்ய வேண்டும். ஆனால் இப்படி ஒவ்வொரு திட்டங்களிலும் ஒவ்வொரு வேலைகளிலும் குறைபாடுகளும் தவறுகளும் நிகழுமாக இருந்தால் நிலைமை என்னாவது? அது சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகத்தான் போய் முடியும். 

இதைப் புரிந்து கொண்டுதான் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை விரைவு படுத்தவும் கண்காணிக்கவும் என்று ஒரு செயலணியை நியமிப்பதற்கு ஜனாதிபதி சிந்திக்கிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அந்தச் செயலணி எப்படியிருக்கும்?  அதன் பணி எல்லைகள் என்ன? அதில் பிரதிநிதித்துவம் செய்வோர் யார்? அவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் அமைச்சுகளுககும் இடையிலான உறவு எவ்வாறானதாக இருக்கும்? என்ற கேள்விகள் எல்லாம் உண்டு. 

எல்லாவற்றுக்கும் மேலாக எந்தவொரு விடயமும் சரியான திட்டமிடலில்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்தத்  திட்டம் எந்தளவுக்குப் பொருத்தப்படானது?  சாத்தியமானது? வெற்றியைத் தரக்கூடியது? நீண்டகால அடிப்படையிலானது? என்ற தெரிவும் தெளிவும் அவசியம். 

இதற்கு ஒரு உதாரணமாக மீண்டும் கிளிநொச்சியைப் பார்க்கலாம்.  

உதாரணமான கிளிநொச்சி 

கிளிநொச்சி ஒரு வளர்ந்து வரும் நகரம். வளங்கள் நிறைந்த பிரதேசம். குறிப்பாக விவசாய நகராக, விவசாய உற்பத்திகளை மையப்படுத்திய நகராக அதை வடிவமைக்கலாம். இதைப்பற்றி கிளிநொச்சி இயங்கும் “மக்கள் சிந்தனைக் களம்” என்ற தன்னார்வலர்களான சிந்தனையாளர்களால் ஒரு ஆய்வரங்கு அறிவியல் நகரிலுள்ள பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு திட்டங்களும் கருத்துகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக விவசாயப் பொருளாதார பண்பாட்டு நகராக கிளிநொச்சியை நிர்மாணிக்க முடியும். அதற்கான சாத்தியங்கள் தாராளமாக உண்டு. வளங்களையும் அரசு மற்றும் புலம்பெயர் மக்கள், சர்வதேச சமூகம் ஆகியவற்றின் ஆதரவையும் பெற முடியும் என. 

இதேவேளை “போரினால் முழுதாகவே அழிவடைந்த பின்னர் மீளப் புதிதாக நிர்மாணிக்கப்படும் நகரில் சரியான – முறையான திட்டமிடல்களைச் செய்வது அவசியம். அது இலகுவானதும் கூட” என்று பேராசிரியர் சி.சிவசேகரம், விரிவுரையாளர் கலாநிதி எஸ். சிவகுமார் போன்றோர் தெரிவிக்கின்றனர்.  

கிளிநொச்சியை அப்படி புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க வேண்டும் என்பது இவர்களுடைய கருத்து. இதையொட்டி, பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, விவசாய விஞ்ஞானி அரசகேசரி மற்றும் சமூக விஞ்ஞானியான செல்வின் போன்றோரும் அப்படி ஒரு விவசாய நகரைக் குறித்துப் பேசுகின்றனர். 

இதற்கு குறுகிய நோக்கில் சிந்திக்கும் முறை மாற வேண்டும். – அரசியல் தலையீடுகளற்ற சூழல் உருவாக்கப்பட்ட வேண்டும். துறைசார் வல்லுனர்களின் அறிவும் சமூக ஆய்வு அறிவும் இணைக்கப்பட வேண்டும். தொலை நோக்குப் பார்வை தேவை. சமூகப் பற்றும் மக்கள் நேயமும் வேண்டும். இவையெல்லாம் இணைந்தால்தான் அபிவிருத்தியின் இலக்குகளில் முன்னேற்றம் நிகழும். இல்லையெனில் குறைவிருத்தியே தொடரும். மக்கள் பிணி தொடர்ந்தும் வாழும். நாடு பிறர் காலடியில் சொல்லாமல் கொள்ளாமலே வீழும்.