ஏண்டி குட்டி என்னாடி குட்டி—

ஏண்டி குட்டி என்னாடி குட்டி—

— வேதநாயகம் தபேந்திரன் —  

”ஏண்டி குட்டி என்னாடி குட்டி  என்னாடி செய்தாய் 

அம்மியடியில் கும்மியடித்தேன்  சும்மாவா இருந்தேன்.” 

ஒரு தலைமுறையின் பள்ளிக்கால  மகிழ்வைத் தந்த பாடல்களில்  இதுவும் ஒன்று. 

நாட்டார் பாடல்கள் 1985 ஆம் ஆண்டில் நாம் க.பொ.த.சாதாரண  தரம் படித்தபோது தமிழ் பாடத்துடன் ஒரு பகுதியாக இருந்தது. 

வகுப்பிலும் வகுப்பு முடிந்து வீடு வரும் வழியிலும் நட்புகள் கூடிச்  சந்தோசம் மிகும் பொழுதுகளிலும் இது போன்ற நாட்டார்  பாடல்களைப் பாடிப் பரவசம்  அடைவோம். 

இது போன்ற பல பாடல்கள் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம்  அவர்களால் ”இலங்கை நாட்டுப்  பாடல்கள்” எனும் தலைப்பில்  தொகுக்கப்பட்டுப் புத்தகமாகியது. 

தமிழ் பாடத்தில் எமக்குச் சுவையைத்தந்தமைக்கு, தனி விருப்பத்தைத் தந்தமைக்கு இந்த நாட்டார் பாடல்களும் ஒரு காரணம். 

பின்னாளில் பாடத்திட்ட மாற்றங்களின் போது நாட்டார்  பாடல்களை நீக்கி விட்டமையைக்  காலத்தின் கொடுமையெனலாம். பாடத்திட்டம் மாற்ற வேண்டும்  என்பதற்காக இவற்றையெல்லாம் கட்டாயம் பிடுங்கி எறிய  வேண்டுமா என்ற வேதனையும்  வருகின்றது. 

இந்த நாட்டார் பாடல்கள் ”தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிகள், வயல்  வேலையோடு தொடர்புடைய  பாடல்கள், கொடும்பாவிப் பாடல்கள், மணமக்களும் குடி மக்களும்,  பிரிவாற்றாமை, கப்பற் பாடல்கள்,  நெல் குற்றும் பாடல்கள், கிழக்குப்  பிராந்தியப் பாடல்கள், மலையகப்  பாடல்கள் என  வகைப்படுத்திக்  கொள்ளலாம். 

நாட்டு மக்கள் பாடி வரும் பாடல்களை நாட்டார் பாடல்கள்  என்பது அறிஞர்களது கருத்தாகும். 

இந்தப் பாடல்களை யார் இயற்றியது, எப்போது இயற்றப்பட்டது  என்பவை அறியப்படவில்லை. இன்னார் இயற்றியது  என்ற சொல்ல  முடியாமையே இந்த இலக்கியத்தின் இலக்கணங்களுள் ஒன்று. 

யாப்பு இலக்கண வரம்புக்கு இசைந்து நிற்றல் இதற்கு  இன்னுமோர் இலக்கணம் எனலாம். 

பன்னெடும் காலமாகப் பாமர மக்களால் பயின்று வருதலை  இன்னொரு இலக்கணமாகக்  கூறலாம். ஊருக்கு ஊர் மக்கள்  இப்பாடல்களைத் தமது மனவிருப்புக்கு ஏற்ப மாற்றியும்  பாடுவார்கள். 

மரண வீடுகளிலே ஒப்பாரி சொல்லிப்பாடும் பாடல்களும் நாட்டார்  பாடல்கள்தான். அவையும் இன்று  வழக்கொழிந்து போகின்றது.  

ஒப்பாரி பாடுதல் கௌரவக் குறைவு என நினைக்கும் காலமும் வந்துவிட்டது. 

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர் திருமணங்களில்  பாடப்பட்ட நாட்டார் பாடல்களில்  ஒன்று 

” முத்தாலே ஆலாத்தி, முகத்திலே  தானெடுத்து 

பவளத்தால் ஆலாத்தி, பக்கத்தில்  நின்றெடுத்து 

ஆலாத்திப் பெண்கள் எல்லாம்,  அணியணியாய் நிற்பினமாம் ………. 

மணமகன் வரிசை வாத்தியங்களுடன் மணப் பெண்  வீட்டுப் படலையில் நிற்கும் போது  இப்பாடல் பாடப்பட்டது. 

கிராமத்து மனிதர்களின் இரசனை  மிக்க பாடல்களில், 

”ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய் ? 

கல்லைப் பிளந்து கடலருகே முட்டை வைத்தேன். 

வைத்ததுமோ நாலு முட்டை  பொரித்ததுவோ மூன்று, 

மூத்த குஞ்சுக்கு இரைதேடி மூன்று  மலை சுத்தி வந்தேன் 

இளைய குஞ்சுக்கு இரைதேடி  ஏழுமலை சுற்றி வந்தேன் 

பாத்திருந்த குஞ்சுக்கு இரைதேடி  பவளமலை சுற்றி வந்தேன் ..” 

என இரசனையாகத் தொடருகின்றது. 

”காக்காக் குஞ்சுக்குக் கலியாணமாம் காசுக்கு இரண்டு மஞ்சளாம் 

தொட்டுக் குளித்தால் பூக்குமாம் துரையைக் கண்டால்  மணக்குமாம் ….”  

இதில் ஒரு வகை அங்கதச் சுவை உள்ளது. 

”என் பொண்டாட்டி சண்டைக்காறி  சந்தமாமா 

இண்டைக்கெல்லாம் ஏசக் கேப்பாள் தோழமாமா 

தஞ்சாவூர்ச் சந்தைக்குப் போனேன்  சந்தமாமா  

சாகிற கிழவியைப் போட்டடித்தேன் தோழ மாமா…..” 

இது இன்னொரு வகைச் சுவை. 

”ஊரான ஊரிழந்தேன், ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்  

பாரான கண்டியிலே, பெத்த தாயும் வீடும் இழந்தேன் ……” 

எனப் பாடும் போது தமிழகத்திலிருந்து மலையகத்திற்கு புலம்  பெயர்ந்த வாழ்வின் வேதனைகள் கண் முன்னே படமாகத்  தெரிகிறது. 

பிரித்தானியரின் காலனித்துவ காலத்தில் சிலோன் சீமையிலே  தேனும் பாலும் ஆறாக ஓடுகின்றது.  அங்கு போய் செல்வந்த வாழ்க்கை வாழலாமென்ற நம்பிக்கையில்  பல்லாயிரம் தென்னிந்தியத் தமிழர்கள் தலைமன்னார் வந்தார்கள்.  தாம் ஏமாந்தகதையை இது போன்ற பாடல்கள் ஊடாகப் பதிவு  செய்துள்ளார்கள். 

காதல் உணர்வைச் சொல்வதாக  

”மாமி மகளே – என்ரை 

மருக்கொழுந்து வெற்றிலையே 

இன்பக் கடலே – எனக்கு  

இரக்கமெல்லாம் உன் மேலே …” 

போன்ற பாடல்கள் இருக்கும். 

வடபகுதிப் பாடல்களில் கொடும்பாவிப் பாடல்களும் உள்ளது. 

மழை இல்லாக் காலத்திலே கொடும்பாவியொன்றை இழுத்து ஊர்  சுற்றி வந்து கொழுத்துதல் வழக்கம். ஊரவர் செய்த  கொடுமைகளை வைக்கோல் உருவம் ஒன்றில் ஏற்றித் தீர்க்கும் பாவனையாகச்  செய்யும் வழக்கம் பன்னெடுங்  காலமாகவே  இருக்கின்றது. 

அப்போது 

”கொடும்பாவி சாகாளோ – எடியொரு 

கோடி மழை பெய்யாதோ ? 

மாபாவி சாகாளோ – எடியொரு  

மாரிமழை பெய்யாதோ?………” 

என நீளும் பாடல்களைப் பாடினார்கள். 

சிறுவர் விளையாட்டுப் பாடல்களிலே  

”ஆலையிலே சோலையிலே ஆலம்பாடிய சந்தையிலே 

கிட்டிப் புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு…..” 

என்ற பாடலும் மனதில் நிற்கிறது. 

சிங்களச் சகோதரர்களுடன் வாழும் இடங்களிலே 

”கடலை கொந்தாய் அவிச்ச கடலை  

கடலை கொந்தாய் அவிச்ச கடலை 

றாலாமி வாங்கோ அப்புகாமி வாங்கோ  

சின்னையா வாங்கோ பெரியையா வாங்கோ ……” 

இப்படியே தொடரும் பாடல்கள் வழங்கப் பெற்றுள்ளன.  

காதல் வசம் கொண்ட ஒரு  பெண்ணுக்குப் பெற்றோர் மாப்பிளைபார்க்கின்றனர்.  

அப்போது பொருத்தமில்லா மாப்பிளை என்பதைக் கூற  

”கச்சான் அடித்த பின்பு காட்டில் மரம் நின்றது போல  

உச்சியிலே நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை ……..” 

எனும் பாடல் மூலமாக நகைச்சுவையாகப் பாடுகின்றனர். 

நாட்டார் பாடல்கள் என்பது மிகப் பெரிய ஒரு பரப்பு. அறிஞர்கள்  பலர் ஆய்வுக்கு உட்படுத்திய கிராமிய இலக்கியம். 

என் பட்டறிவுக்கு எட்டியவற்றை இங்கே பட்டியல் இட்டுள்ளேன்.  இப்பாடல்களை தேடி உரிய சந்தமறிந்து பாடிப் பாருங்கள். தனிப்  பரவசம் வரும்.