சொல்லத் துணிந்தேன்—52

சொல்லத் துணிந்தேன்—52

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்கள் இவ்வருடம் முதற்கூறில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களின்போது நடைபெற்ற விடயங்களை இப்போது மீட்டுப்பார்ப்பது எதிர்காலத் தேர்தல்களைக் கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்கொள்வதற்கான அறிவுபூர்வமான அரசியல் ஆலோசனையை வழங்கக் கூடும். 

1987, யூலை 29 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள்  2006 ஜூலை 14 இல் மக்கள் விடுதலைமுன்னணி (ஜே.வி.பி) உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 2006 அக்டோபர் 16 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து இணைந்த வடக்குக் கிழக்கு மாகாண சபை பின்னர் வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என தனித்தனியே  2007 ஜனவரி 1 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  

அதனடிப்படையில், கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2008 இல் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் பங்குபற்றப் போவதில்லையென கொள்கை வாதிகள்(?) போல் ஆஷாடபூதித்தனமாக அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடவில்லை.  

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை அறுதிப் பெரும்பான்மையுடன் தாங்கள் கைப்பற்றலாம் என்று திட்டமிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான அரசியல் வியூகத்தை வகுத்தது. 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டுத் திருகோணமலை மாவட்டத்திலும், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அலி தனது பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்துவிட்டு அம்பாறை மாவட்டத்திலும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏறாவூரைச் சேர்ந்த பசீர்சேகுதாவுத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் போட்டியிட்டனர். அது தவறல்ல. முஸ்லிம் காங்கிரஸ் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் சார்ந்து சிந்தித்ததைத் தவறென்று கூற முடியாது. அது அவர்களுடைய சமூகநலன் சார்ந்த அரசியல். 

இத் தேர்தலில் பிள்ளையான் தரப்பு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து ‘வெற்றிலை’ச் சின்னத்தில் போட்டியிட்டது. 

எந்தத் தமிழ்க் கட்சியும் நேரடியாக இத் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்காத நிலையில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் நலன்களைப் பேணுவதற்காகக் கலாநிதி கா. விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழர் மகாசபை (அப்போது கட்சியின் பெயர் அகில இலங்கை தமிழர் கூட்டணி என்றிருந்தது) இத்தேர்தலில் போட்டியிட முன் வந்து, அதன் தலைவர் கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ‘சரி பார்க்கலாம்’ என்பதே இரா. சம்பந்தனின் உடனடிப் பதிலாக இருந்தது. இரா. சம்பந்தனிடம் இருந்து சாதகமான பதில் வருமெனக் காத்திருந்த கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்கள் அவ்வாறான பதிலொன்றும் கிடைக்காததால் மீண்டும் இரா. சம்பந்தனைச் சந்தித்தார். அப்போது அவருக்குச் சம்பந்தன் அளித்த பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை முதலமைச்சராக்குவதற்குத் தீர்மானித்திருப்பதாக இருந்தது. அப்பதிலால் அதிர்ச்சி அடைந்த கலாநிதி விக்னேஸ்வரன்,  சம்பந்தனை விளித்து “என்ன அண்ணே! சொல்கிறீர்கள்” என்று ஆச்சரியக் குறியுடன் கேட்ட போது அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு சம்பந்தன் ஆங்கிலத்தில் கூறியது என்னவெனில் “Haheem is a good Muslim” (ஹக்கீம் ஒரு நல்ல முஸ்லிம்) என்பதாகும். விக்னேஸ்வரன் அவர்கள் கிழக்கு மாகாணத் தமிழர்களின் தலைவிதியை நினைத்து மனம் நொந்து அவ்விடம் விட்டு நகர்ந்தார். கலாநிதி கா. விக்னேஸ்வரன் அவர்கள் இதற்குச் சாட்சியாக உள்ளார். 

கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ரவூப் ஹக்கீம் முதலமைச்சராக வந்தாலும் வரலாமேயொழிய கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பிள்ளையான் வருவதைத் தடுப்பது யாழ் மேலாதிக்கச் சிந்தனைகளின் மீது கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகவிருந்தது. இதிலிருந்த அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் தனியாக ஆராயப்பட வேண்டியதாகும். 

இத் தேர்தலின்போது கிழக்கில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் இங்கே பதிவிட வேண்டியுள்ளது. 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பஷீர்சேகுதாவூதுக்குத் தமிழர்களை வாக்களிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்களை மாவை சேனாதிராசா ஒரு மலையக அன்பர் மூலம் மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் ஆரம்பகாலத் தொண்டரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான மண்டூர் மகேந்திரன் என்பவருக்கு அனுப்பி வைத்திருந்தார். (மண்டூர் மகேந்திரன் அவர்கள் கடந்த வருடம் 19.06.2020  அன்று மட்டக்களப்பு கல்லடியில் காலமாகிவிட்டார்). ஆனால், மண்டூர் மகேந்திரன் அவற்றை விநியோகிக்க விரும்பாது அப்படியே தனது வீட்டில் வைத்துவிட்டார். இத்தகவலை மண்டூர் மகேந்திரன் அவர்களே இப்பத்தி எழுத்தாளரிடம் தெரிவித்திருந்தார். 

பிள்ளையான் முதலமைச்சராக வருவதைத் தடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரைமறைவில் மேற்கொண்ட இவ்வாறான ‘சதி’ களையெல்லாம் கடந்து 2008 ல் பிள்ளையான் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரானார். 

பின், 2012-இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தலில் என்ன நடந்தது என்பதை அடுத்து வரும் பத்தியில் (சொல்லத் துணிந்தேன்– 53) பார்க்கலாம்.