நினைவுத்தூபிகளின் செய்தி என்ன?

நினைவுத்தூபிகளின் செய்தி என்ன?

— எழுவான் வேலன் — 

யாழ் பல்கலைக் கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு விவகாரம் தொடர்பாக பெருமளவுக்கு எல்லா தமிழ் ஊடகங்களும் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் விடயத்தினை பல்வேறுவகைப்பட்ட கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும் என் மனதில் எழும் விடயங்களுக்கு சரியான புரிதலை எந்தவொரு எழுத்துக்களும் தராதநிலையில் எனது மனவெழுச்சி தொடர்பாக எனது கருத்து நிலையினை முன்வைக்க வேண்டும் என்ற உந்துதலே இப்பத்தியின் நோக்கமாகும்.  

சம்பவங்களின் நிகழ்வுப் பின்னணியினை செய்திகளினூடாகப் பார்க்கின்றபோது, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கற்கின்ற சிங்கள மாணவர்கள் குறித்த நினைவுச் சின்னத்தை அகற்ற வேண்டும் என பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவைக் கேட்டதாகவும்பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நினைவுச் சின்னத்தை அகற்றுமாறு உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முரண்பாடாமல் இருக்கவும் தமது பதவியினைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் உபவேந்தர் இரவோடிரவாக நினைவிடத்தை அகற்றினார் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.   

பல்கலைக்கழக சமூகம்  

இலங்கையின் இனப்பிரச்சினையில் உயிர்களைக் கொடுத்த அத்தனை மனித உயிர்களும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட கோபதாபங்களுக்காகவோ அல்லது சொந்தப் பிரச்சினை காரணமாகவோ உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் அல்ல. அவர்களில் பொதுமக்கள், இலங்கை அரசியலால் உருவாக்கப்பட்ட யுத்தசூழலுக்குள் தவிர்க்கமுடியாதவாறு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு பலியாக்கப்பட்டவர்கள், மற்றயவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட கொள்கை காரணமாகவும், கடமை காரணமாகவும் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். இந்த உயிர்கள் எல்லாம் அவரவர் நிலையில் நின்று நினைவு கொள்ளப்படவும் பூஜிக்கப்படவும் வேண்டியவர்கள் என்பதை அவரவர் நிலையில் நின்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.  

ஆனால், அவ்வாறு அவரவர் நிலையில் நின்று அவரவர் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை ஏன் உயர் கல்விச் சமூகத்துக்கு வரவில்லை என்பது எனது முதலாவது ஆதங்கமாகும். ஒரு கல்விச் சமூகத்துக்கே இந்த பரஸ்பரப் புரிந்துணர்வுப் பண்பாடு வரவில்லை அல்லது அதற்குள் வளர்க்கப்படவில்லை என்றால் பரஸ்பரப் புரிந்துணர்வை நாம் எங்கு சென்று தேட முடியும் எனும் கேள்வி எழுகின்றது. 

தற்போது இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் சமூக நல்லிணக்கம் (Social Harmony) தொடர்பாக ஒரு பாடம் கட்டாயம் அனைவருக்கும் கற்பிக்கப்படுவதாக அறியமுடிகிறது. அவ்வாறு கற்பிக்கப்படும் பல்கலைக் கழகங்களின் ஆணைக்குழுவின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகின்றார் இலங்கையில் யுத்த நினைவுச் சின்னங்கள் தேவையில்லை சமாதானச் சின்னங்கள்தான் தேவை‘ என்று தென்னிலங்கையில் இருக்கும் யுத்த நினைவுச் சின்னங்களையெல்லாம் அகற்றிவிட்டு இவ்வாறு கூறுவாராக இருந்தால் அவருடைய கூற்றில் ஒரு நியாயத்தன்மை இருக்கும். ஆனால் தனது கண்முன்னே பல வெற்றிச் சின்னங்களையும் யுத்தச் சின்னங்களையும் பார்த்துக் கொண்டு இவ்வாறு சமாதானம் போதிப்பது மிகவும் வேடிக்கையானதாக இருக்கின்றது. இதைத்தான் சொல்வது படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன்கோயில் என்று. மற்றது சமாதானச் சின்னம் என்பதும் யுத்தம் ஒன்றின் வெளிப்பாட்டுச் சின்னம்தான் என்பதை உணர மறுப்பதையும் அவருடைய கூற்று வெளிப்படுத்துகின்றது.  

யுத்தம்சமாதானம் என்பன சார்புநிலையுடையவை, அவை ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஆனால் இவை தொடர்பாக நிர்மாணிக்கப்படும் இரு சின்னங்களின் நோக்கமும் சமாதானத்தினை வற்புறுத்துவதுதான் என்பதையும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுக்கு எட்டாதது ஆச்சரியமளிக்கின்றது. 

நினைவுச்சின்னங்கள் கூறும் செய்தி 

இந்த நினைவுச் சின்னங்கள் கூறும் செய்தி என்னஇத்தனை உயிர்களைப் பலி கொண்ட இந்தக் கொடிய யுத்தம் எமக்கு இனி வேண்டாம் என்பதும் இவ்வாறு உயிர்களைப் பலி கொள்வதற்கு காரணமாக இருந்தவர்களும் அவர்களைப் போன்றவர்களும் இவற்றைப் பார்த்து வெட்கித் தலைகுனிந்து இனி ஒரு யுத்தத்தை நடாத்தக் கூடாது என்பதுமாகும். உலகம் முழுவதும் இருக்கும் யுத்தசமாதான நினைவுச்சின்னங்கள் இதைத்தான் கூறுகின்றன. அது ஜப்பானில் இருக்கும் இரண்டாவது உலக யுத்த நினைவுச்சின்னமாக இருந்தாலும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னமாக இருந்தாலும் சரி அவற்றின் நோக்கம் சமாதானத்தை வற்புறுத்துவதுதான்.  

எனவே பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் தலைமையில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் சமூக நல்லிணக்கமும் அவரைப்போலவே வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டுமே இருக்கின்றது. ஆகக் குறைந்தது இந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களின் தத்துவமும் அதன் அரசியலும் அறியாதவர்களாக இருப்பது வேதனைக்குரிய விடயம்தான். இவ்வாறான ஆசிரியர்களாலும் கற்பித்தலாலும்தான் சகமனிதர்களின் பண்பாடுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியாத மாணவர்களாக பல்கலைக் கழக மாணவர்கள் இருக்கின்றார்கள்.  

அரசின் சமூக நல்லிணக்கம்? 

அரசும் சமூக நல்லிணக்கத்துக்காக பல கோடி ரூபாய்களை வருடாவருடம் செலவிடுகின்றது. ஆனால் அந்த அரசின் முக்கிய அமைச்சர்களோ முழுக்க முழுக்க சிங்கள பௌத்த இனவாதிகளாக இருக்கின்றார்கள். குறிப்பாக விமல் வீரவம்சசரத் வீரசேகர போன்றவர்கள் சிறுபான்மையினத்தவர்களை மிகவும் புண்படுத்தும் வகையிலே அறிக்கைகளை விடுகின்றனர். சமூக நல்லிணக்கம் பற்றி அடிநிலை மக்களுக்கு பல பயிற்சிப்பட்டறைகளையும் நடாத்தி துண்டுப்பிரசுரங்களை வெளியிடும் அரசு முதலில் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்கான செலவுகளைச் செய்யும் போது அது அர்த்தமுள்ளதாக அமையும். இல்லாவிட்டால் பல நூறு வருடங்கள் பல ஆயிரம் கோடிகளைச் செலவிட்டாலும் இலங்கையில் சமூக நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.  

அடுத்து ஒரு உபவேந்தர் தனது கல்விக்கும் தனது பதவிக்கும் தொடர்பற்ற முறையில் மிகச் சிறுபிள்ளைத் தனமாகச் செயற்பட்டிருக்கின்றார். சந்திரமண்டலத்திலிருந்து குதித்த ஒரு உபவேந்தர் அல்ல அவர். அந்தச் சமூகத்தின் ஒரு உறுப்பினர். அந்தச் சமூகத்தின் உணர்வுகளை தனது உணர்வாகக் கொண்டவர். அவ்வாறான ஒருவர் சட்ட ரீதியற்ற முறையில் கட்டப்பட்டது அதனால்தான் இடித்தோம்‘ என்பதும், என்னைப் பயன்படுத்தி விட்டார்கள்‘ என்பதும் அவருடைய பதவிநிலை ஆளுமைக்கு பொருத்தமானதாக இல்லை. எமது பெரும்பாலான அறிவு ஜீவிகள் தங்களுடைய இருப்புக்காக எந்த அந்தத்துக்கும் செல்வார்கள் என்பதற்கு இவரும் ஒரு உதாரணமாக இருக்கின்றார். இவ்வாறான அறிவுஜீவிகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் செயற்பாடு காரணமாக கேள்விக்குறியாகின்றது. ஆனால் அவர்கள் நினைக்கிறார்கள் மக்கள் எதையும் விளங்கிக் கொள்ளமாட்டார்கள் தமது மனச்சாட்சியினை நியாயப்படுத்தும் அவர்களின் அறிவுஜீவித்தனத்தின் விபரிப்புக்களையும் வியாக்கியானங்களையும் கிளிப்பிள்ளைபோல் ஏற்றுக்கொள்வார்கள் என்று.        

யாழ் பல்கலைக்கழக சமூகம் 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அதிக விலையினைக் கொடுத்த ஒரு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்து தமது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அதனை விட பேராசிரியர் ராஜினி திரணகம மாணவர்களான செல்விவிஜிதரன் போன்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்இந்திய இராணுவ வீரர்கள் இந்த மைதானத்தில் களப்பலி ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பல்கலைக் கழகத்துக்கு மிக அண்மையில்தான்  1983இல்  13 இலங்கை இராணுவத்தினர் முதல் முதல் கன்னிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். இவர்களையெல்லாம் இந்தப் பல்கலைக் கழகம் நினைவு கொள்வதற்கும் ஒரு நினைவிடத்தை அமைக்குமாக இருந்தால் இந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் மானிடத்துவத்துக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவார்கள். ஆனால் துரதிஸ்ட்டவசமாக இவர்களிடையே இருக்கும் குறுந்தேசியவாத அரசியல் இவ்வாறான முயற்சிக்கு இடமளிக்கப்போவதில்லை. எப்போது இந்தக் குறுந்தமிழ்த் தேசிவாத அரசியலை களைந்தெறிந்து விட்டு மனித உயிர்களை சமமாக மதிக்கின்றார்களோ அப்போது சிங்கள பௌத்த குறுந்தேசிய வாதம் வெட்கித் தலைகுனிந்து நிற்கும்.  

கிழக்கில் ஏன் ஆதரவு இல்லை? 

அடுத்து இந்த நினைவுச்சின்ன இடிப்புத் தொடர்பாக இடம்பெற்ற ஹர்த்தால் கிழக்கில் பூரண வெற்றி இல்லை என்ற செய்தியினையும் வாசிக்கக் கூடியதாக இருந்தது. இது ஒரு கவலையளிக்கத்தக்க விடயமாகும். பொதுவாக தமிழர்கள் ஹர்த்தால் அறிவித்தால் முஸ்லிம்கள் அந்தக் ஹர்த்தாலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்வார்கள். அது அவர்களின் இனமைய வர்த்தக அரசியல். ஆனால் இம்முறை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து அறிவித்தும் கூட பூரண வெற்றியளிக்கவில்லை என்பது நாம் மனித உயிர்களையும் மற்றவர்களுடைய உணர்வுகளையும் மதிக்கத்தெரியாதவர்களாக இருக்கின்றோம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.  

கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற பிள்ளையான்வியாளேந்திரன் போன்றவர்கள் அரசின் பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் மட்டக்களப்புத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை எப்போதும் மனதில் கொள்வது நல்லது. மட்டக்களப்புத் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசிடம் வெளிப்படுத்துபவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். அரசை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பதும் அவர்களின் கடமையாகின்றது. இவ்விடயத்தில் கட்சி அரசியல் பார்த்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்துவது அவர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தானதாக அமையும் என்பதையும் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் கட்சிபிரதேச வேறுபாடுகளுக்கப்பால் ஓரணியில் நின்று அநியாயத்தைத் தட்டிக் கேட்பதுடன் நீதிக்கான போராட்டத்துக்கு தலைமையேற்கவும் வேண்டும் என்பதே கிழக்கு மக்களின் எதிர்ப்பார்ப்புமாகும். 

ஆதிக்கத்தை நோக்கி வளர்ந்து வரும் எந்தக் குழுவிற்கும் மிகவும் முக்கியமான தன்மைகளில் ஒன்றாக இருப்பதுமரபுரீதியான அறிவுஜீவிகளை சித்தாந்த ரீதியாக‘  வென்றெடுத்து தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் அதன் போராட்டமே தனது சொந்த உயிரோட்டமான அறிவுஜீவிகளை விரிவாக்குவதிலும் எந்த அளவிற்கு சம்மந்தப்பட்ட குழு வெற்றியடைகிறதோஅந்த அளவிற்கு மேற்படி ஈர்த்தலும்வெற்றி கொள்ளலும் விரைவு படுத்தப்பட்டு சக்தி மிக்கதாய் அவை இருக்கின்றன.‘ என்பார் அந்தோனியோ கிராம்சி.  

எனவே குறுநலவாத தமிழ்த் தேசிய அரசியலை விமர்சனம் செய்யும் பிள்ளையான்வியாழேந்திரன் போன்றவர்கள் தங்களுடைய அரசியல் தமிழர்களை வெறும் அபிவிருத்திக்காக அடகுவைப்பதாகவும் இருக்கக் கூடாது என்பதும் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாடாகும். எதிர்வரும் காலங்களில் ஒலிக்க வேண்டிய இடத்தில் அவர்களின் குரல் தொடர்ந்தும் ஒலிக்காமல் போனால் கிழக்கு மக்கள் மத்தியில் அவர்கள் சங்கடப்படவும் நேரிடும்.