பிள்ளையான் சுழியும், அரசியல் கைதிகளும்! (காலக்கண்டாடி 18)

பிள்ளையான் சுழியும், அரசியல் கைதிகளும்! (காலக்கண்டாடி 18)

— அழகு குணசீலன் —

சிறிலங்கா அரசியலில் மட்டுமன்றி, பிராந்திய, சர்வதேச அரசியலிலும் கூட  கடந்த பல ஆண்டுகளாக பேசப்பட்ட ஒருவிடயத்திற்கு முடிவு கிடைத்திருக்கிறது. 

மட்டக்களப்பு உச்சநீதிமன்றம் யோசப் பரராஜசிங்கம் கொலைவழக்கில் சந்தேக நபர்கள் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது. 

வழக்கை தொடர்வதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என்று சட்டமாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததன் விளைவு இது. 

விடுதலைப்புலிகள் அமைப்பு   உட்பூசல்களால் இருபிரிவுகளாக உடைந்தபோது கருணா அம்மான் பிரிவோடு புலிகளில் இருந்து வெளியேறியவர் பிள்ளையான் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன். 

பள்ளிப்படிப்பை சிறுவயதில் தூக்கி எறிந்து விடுதலைப் போராட்டத்தில் சிறுவர் போராளியாக இணைந்து ஆயுதம் ஏந்திய தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்தின் ஆயிரக்கணக்கான போராளிகளுள் இவரும் ஒருவர். 

அந்த அமைப்பில் பிள்ளையான் குறிப்பிடத்தக்க அளவிற்கு பதவி எதையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், போராட்டத்தில் இரு நாட்டு இராணுவ  அடக்குமுறைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ, முடியாது. 

மிகவும் உச்சக் கட்ட போராட்டக்காலங்களில் எல்லாம் பிள்ளையானின் பெயர் மட்டக்களப்பு பிராந்தியத்தில் வெகுவாக அடிபட்டது. இதற்கு அவர் போராட்டத்தில் கையாண்ட துணிச்சல் மிக்க செயற்பாடுகளும்,  இராணுவ இராஜதந்திரங்களும்,  ஆளுமைமிக்க அணுகுமுறைகளுமே காரணம். 

கருணா அம்மானின் பிரிவுக்குப் பின்னர் இந்த தேசிய விடுதலைக்கான பங்களிப்பை ஒருதரப்பு வெறும் கறிவேப்பிலை அரசியலாக வெளிப்படுத்துகிறது. மாறாக இன்னொரு தரப்பு அந்த பங்களிப்பிற்கு மதிப்பளிக்கிறது. 

சிறுவர் போராளியாக அரசியல் கற்று, மாகாணசபை உறுப்பினர்,  மாகாணசபைத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்  இப்படி அரசியலில் படிப்படியாக வளர்ந்து அரசியல் அனுபவங்களை பல பாத்திரங்களின் ஊடாக கற்றுக்கொண்டார் பிள்ளையான். 

யுத்தத்தின் வாடையே தெரியாமல் வெளிநாட்டில் வாழ்ந்தும் கற்றும்,  எந்த வாய்ப்புக்களை சிங்கள அரசு தமிழ் மாணவர்களுக்கு மறுத்து,  தட்டிப் பறித்து சிங்களப் பிரதேசங்களுக்கு வழங்கியதோ அதன்மூலம் நன்மை அடைந்தவர் ஒருவர்.  

அதற்கு நன்றிக் கடனாக அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைப்பாளராகி தனித் தமிழ் தொகுதியில் பௌத்த சிங்கள தேசியத்தை வளர்க்க வந்தவர். 

இவர்களோடு ஒப்பிடுகையில் பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் காட்டிலும் மோட்டிலும், மழையிலும் வெயிலிலும், முள்ளிலும் கல்லிலும்,  ஆயுதப்போராட்டத்திலும், ஜனநாயக நீரோட்டத்திலும் அரசியல் கற்று, அனுபவங்களைப் பெற்ற மட்டக்களப்பின் ஒரு சராசரி சாதாரண மனிதன்.  

ஊடக தர்மம் கொலை 

இறுதியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் “யோசப் பரராஜசிங்கம் கொலை” பிரச்சாரத்தில் கொண்ட வகிபாகம்   மிக அதிகமானது. 

குற்றம் சாட்டப்பட்டு சந்தேகநபராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒருவர் தீர்ப்பு கிடைக்கும்வரை அது எந்த வழக்காக இருந்தாலும் சந்தேகநபர்தான். எந்த ஒரு நாட்டிலும் இருக்கின்ற பொதுநிலை. 

ஊடகங்களில் வெளிவந்த தேர்தல்கால செய்திகளை ஆய்வு செய்யும் ஒருவர் இதன் பின்னணியில் உள்ள அரசியலைப்புரிந்து கொள்ளமுடியும்.   

கையாளப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் இங்கு முக்கியமானவை. ஒப்பீட்டளவில் சந்தேகநபர் என்ற வார்த்தையை விடவும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற வார்தை பிரயோகிக்கப்பட்டது. 

மேலெழுந்தவாரியாக இருவார்த்தைகளுக்கும் இடையிலும் வேறுபாடு இல்லை என்றாலும்  சந்தேகம், குற்றம் என்ற வார்த்தைகள் வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை. இரு வேறு உள்ளடக்கங்களைச் கொண்டவை. 

இவை மட்டுமல்லாது மட்டக்களப்பில் பல அரசியல் வாதிகளும்,  புத்திஜீவிகளும்,  ஊடகவியலாளர்களும், பாதிரியார் எல்லோரும் அனைத்துத்தரப்பு ஆயுத கலாச்சாரத்திற்கு பலியாக்கப்பட்டனர். 

ஒரு கொலையை புனிதக்கொலை என்றும் மற்றொன்றை புனிதமற்றதென்றும் பார்க்கும்  குருட்டு ஊடகத்தனம் இது. 

திரும்ப திரும்ப சொல்லி மூளைச்சலவை செய்யும் பிரச்சார ஊடகயுக்தி. உளவியலாளர்கள் கருத்தின்படி இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் சமூகத்தை தவறான வழிக்கு இட்டுச் செல்பவை,  ஊடகங்களின் திட்டமிட்ட துஷ்பிரயோகம்.  

சிங்கள அரச ஆதரவு லங்காபுவத் ஊடகம் போராட்ட காலத்தில் வெளியிட்ட  செய்திகளில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாத தமிழ்த்தேசிய ஆதரவு  ஊடகக்கட்டமைப்பு.  

இது நீங்கள் ஊடகவியலாளர் யோசப் பரராசசிங்கத்தையும் அவமதிக்கும் செயல். 

தனிச் சிங்கள எதிர்ப்புநாளே 

திருமணநாள் ! 

மூன்று வயதில் இருந்தே மட்டக்களப்பை தனது தாயாகக் கொண்டவர் அமர் யோசப் பரராஜசிங்கம். மட்டக்களப்பு  கட்சி அரசியலிலும், மட்டக்களப்பு மக்களின் சுக, துக்கங்களிலும் பல்வேறு கஷ்டமான காலகட்டங்களில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.  இராசதுரை காலத்தில் இருந்து இறக்கும் வரை அந்த அரசியலைத் தொடர்ந்தவர். 

1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற  போராட்டத்தில் பங்கு கொண்டிருந்தார் என்பது தெரிந்த விடயம். தெரியாதது அந்த போராட்டநாள் அவரின் திருமணநாள் என்பது. 

அரசாங்க உத்தியோகத்தர் முதல் அரசியல்வாதி வரை உயர்ந்தவர். தனது வாழ்க்கைப் பயணத்தில் பத்திரிகையாளர்,  வர்த்தகர் ஆகவும் இருந்தவர். தவஸ பத்திரிகை நிறுவனத்தின் தினபதி/சிந்தாமணியில் மட்டுமன்றி அதன் ஆங்கிலப்பதிப்புக்களான சண், வீக்என்ட்களிலும் எழுதியவர். 

மட்டக்களப்பில் 1989, 2004 தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும்,  1994, 2000, 2001ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மக்களால் தமது பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர். 

1989 இந்தியப் படையின் பிரசன்னத்தில் நடந்த தேர்தலில்  அமிர்தலிங்கம் மட்டக்களப்பில் போட்டியிட்டார். அமிர்தலிங்கத்தை பரராஜசிங்கம்தான் அழைத்து வந்தார் அதனால்தான் மக்கள் இருவரையும் தோற்கடித்தனர் என்று கூறப்பட்டது. 

அமிர்தலிங்கம், சாம்தம்பிமுத்து, ஜனா வெல்வதை புலிகள் அன்று  விரும்பவில்லை. பிரின்ஸ் காசிநாதரும், யோசப் பரராசிங்கமும் வெல்வதில் தமக்கு பிரச்சினை இல்லை என்ற அடிப்படையில் நடந்து கொண்டார்கள். 

அமிர்தலிங்கம் தேசியப்பட்டியலில் நுழைந்தபோது அவரையும்,  சாம்தம்பிமுத்துவையும் கொன்றார்கள். இந்த தாக்குதல்கள் குறித்து பரரசிங்கம் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. 

பொதுவாக தமிழர் தாயகத்திலும்,  சிறப்பாக மட்டக்களப்பு தேசத்திலும் சிறிலங்கா, இந்திய இராணுவங்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்களை சர்வதேசமயப்படுத்திய பெருமை தமிழ் அரசியல்வாதிகளில் இவரைத் தவிர எவரையும் சாராது.  

விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை அவர் பகிரங்கமாக் கண்டிக்காதது இது விடயத்தில் அவரின் நடுநிலை குறித்து கேள்வியை எழுப்புகின்றது.  

ஆனால் மூடியகதவுக்குள் மனித உரிமைகள் தொடர்பான வெளிநாட்டு தூதரகங்கள்,  அமைப்புக்கள் சந்திப்புக்களில் தகவல்களை வழங்கியது மட்டுமன்றி தனது கவலையையும் வெளியிட்டார் என்று கூறப்படுகிறது?. 

தமிழ் மக்களின் விடுதலை என்ற பெயரில் நாம் தூக்கிய ஆயுதம் தனிநபர் பயங்கரவாத்தில் ஆரம்பித்து,  மனநோயாளியையும் உளவாளி என்று மண்டையில் போட்டு/பொட்டுவைத்து மின்கம்பத்தில் கட்டி அருகில் ஒரு துண்டுகடதாசியை போட்டு………..! 

இறுதியில் ஆட்டைக்கடித்து,  மாட்டைக்கடித்து, ஆளுமை மிக்க அரசியல் தலைமைத்துவங்களை அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி……..! இன்று அரசியல் தலைமைத்துமே அற்ற ஒரு இனமாக விட்டுச் சென்றிருக்கிறோம். 

எமது ஆயுதங்கள் அழித்த அந்த ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் தேவை இப்போது இருக்கிறது. இதில் யோசப் அண்ணனும் ஒருவர்.  எங்களுக்கு நாங்களே புதைகுழி வெட்டிய அரசியல்.  

தொப்பி அளவானவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்! 

தமிழ்த்தேசிய சட்டவாதிகளுக்கு…….! 

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சட்டம் விடுதலை செய்திருக்கிறது. 

இதில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்வதற்கு சில விடயங்கள் இருப்பதாக காலக்கண்ணாடி கருதுகின்றது. 

சுமந்திரன் அவர்களே எதிர்காலத்தில் பொய்பேசி அரசியல் நடாத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

சந்திரகாந்தனை விடுதலை செய்யக் கூடாது என்றும், ஏனெனில் அவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் மட்டக்களப்பில் வாதாடினீர்கள். 

இது நீதிதேவதையையும் அவள் தூக்கி நிற்கும் தராசையும் அவமானப்படுத்தும் செயல். அது மட்டுமன்றி உங்கள் தமிழ்தேசிய அரசியல் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்பும் விடயம். 

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான  பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் விடுதலைக்காக தவிக்கும் காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னொரு சக பாராளுமன்ற உறுப்பிருக்கு எதிராக சரியென்று வாதிட எப்படி முடிந்து? 

உங்கள் அருகில் மட்டக்களப்பு மாநகர பிதா சரவணபவானும் மட்டக்களப்பு எம்.பி.சாணக்கியனும் நிற்கும்போது யோசப் பரரசிங்கத்தின் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி ஆஜராகினேன் என்று ஊடகங்களுக்கு பெரும் பொய்யைச் சொன்னீர்கள். மற்றவர்கள் இருவரும் பொய்க்கு சாட்சியங்களா? 

யோசப் பரராஜசிங்கம் குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். பகிரங்க மன்னிப்புத்தான் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் தனிப்பட ஒரு மன்னிப்பு?. 

உங்களது கொள்கையற்ற முன்னுக்குப் பின்னான அரசியல் தர்மம் அற்றது. தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானது. யுத்தம் நடாத்திய சரத்பொன்சேகாவை ஆதரித்தது முதல் ரணிலுக்கு முட்டுக் கொடுத்து வரை இது நீளுகிறது. 

இறுதியாக பிள்ளையானின் விடுதலை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுயவிருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்ற சந்தேக நபர்களான அரசியல் கைதிகளை சட்டரீதியாக விடுதலை செய்ய முடியும் என்பதை காட்டுகிறது. 

இந்தத் தீர்ப்பை முன் உதாரணமாக் கொண்டு அரசியல் கைதிகளின் பெயரால் அரசியல் நடாத்தாமல்  அவர்களின் விடுதலைக்கு உங்கள் சட்ட வாதத்தை பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராக  காட்டுங்கள் .  

கவனம்! பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராக! ஆதரவாக அல்ல!அல்ல!!அல்ல!!! 

பிள்ளையான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். 

இனி பந்து உங்கள் பக்கம்தான். சரியான திசையில் அடியுங்கள்.! 

கோல் மறுபக்கம் போனால் எல்லாம் போய்ச்சி.! 

இருந்ததையும் இழந்தாய் போற்றி.!!