இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப உதவுமாறு இந்தியாவைக் கேட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு

— பி.கே. பாலச்சந்திரனின் ஆங்கிலக் குறிப்பு — 

இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப இந்தியா வசதி செய்ய வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் தங்கியுள்ளனர். 

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜனவரி 7 இல் சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

1980க்கு பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கையை சேர்ந்த எந்த தமிழ் அமைப்பும்கூட) இந்த விடயத்தை முன்வைப்பது இதுதான் முதல் தடவையாகும். இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் குறித்து விபரித்த ததேகூவின் மூத்த செய்தி ஆதாரம் ஒன்று, தமிழர்களின் வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைந்துவருவதே இதற்கான காரணம் என்று கூறியுள்ளது. இதனால், இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான ஆசனம் குறையலாம் என்று அஞ்சப்படுகின்றது. இலங்கையின் ஒரே தமிழர் பெரும்பான்மை மாகாணமான வடமாகாணம்தான் இதனால் மோசமாகப் பாதிக்கப்படும்.  

“ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் 10 ஆசனங்கள் இருந்தன. ஆனால், தொடர்ச்சியான போர் இடப்பெயர்வு காரணமாக இப்போது அது 7ஆக குறைந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு நடந்தால் அது ஆறாகக் குறையலாம்” என்கிறது அந்த ஆதாரம். 

“ஆனால், இந்தியாவில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அகதிகள் நாடு திரும்பினால், அது ஆசனங்களை அதிகரிக்கலாம்” என்றும் அவர் கூறினார். 

மேற்கு நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை நாடு திரும்பி, சனத்தொகையை பலப்படுத்தி, தமிழ் மாகாணங்களை அபிவிருத்தி செய்யுமாறு தமிழ் தலைவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், வறிய நிலையில் முகாம்களில் வாடும் தமிழக அகதிகளை ஒட்டு மொத்தமாக நாடு திரும்பக் கோரினால், அது மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் பதில் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எப்படியிருந்தபோதிலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் அதிக அக்கறை காட்டவில்லை போலும், இலங்கையில், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க போதிய வசதிகள் இல்லை என்று அங்கே அவர்கள் நம்புகிறார்கள். இலங்கை அரசாங்கப் படைகளால் தாம் துன்புறுத்தப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்து பாதகமாகச் சிந்திக்கத் தூண்டுவது இலங்கையில் இந்தியாவிலும் உள்ள தமிழ் தலைவர்கள்தான். அதிகபட்ச தன்னாதிக்கத்தை கோரும் தமது கோரிக்கைக்கு சாதகமாக இலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாக இந்த தமிழ் தலைவர்கள் காண்பித்து வந்தனர். உண்மையில் இலங்கையில் 1980களில் போர் ஆரம்பித்தது முதல் இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையை வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கோரி வருகின்றது. இருந்தபோதிலும் இந்திய மத்திய அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. 

அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்கள் உட்பட இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் குடும்பங்கள் ஓரளவு வசதியான வாழ்க்கையையே வாழ்கின்றன. அவர்களுக்கு இலவச உணவுப் பங்கீடு வழங்கப்படுகின்றது, கைச்செலவுக்கு பணம் கொடுக்கப்படுகின்றது. இலவச மின்சாரம், தண்ணீர் மற்றும் கல்வியும் உண்டு. பலர் முகாம்களுக்கு வெளியே வேலை செய்து கொஞ்சம் பணமும் சம்பாதிக்கின்றனர். பலர் இந்தியரை திருமணம் செய்துள்ளனர். 

சிங்கள அரசியல்வாதிகளுக்கு இந்த நிலைமை நன்றாகத் தெரியும். முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறுகிறார் “அவர்களை திரும்பவரக் கேட்பதில் அர்த்தமில்லை. அவர்கள் அங்கு நன்றாக இருக்கிறார்கள். பல விசயங்கள் அவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.” 

இருந்தபோதிலும் எஸ்.சி. சந்திரஹாசன் தலைமையிலான ஈழ ஏதிலியர் அமைப்பு(ஒஃபர்) அவர்களை நாடு திரும்பச் செய்வதில் அக்கறையுடன் செயற்படுகின்றது. வடமாகாணத்தில் தமிழ் மக்கள் சனத்தொகை குறைந்துவருவதை சுட்டிகாட்டும் அவர் “எங்கள் நிலத்தை நாங்கள் மீட்க வேண்டும்” என்கிறார். அகதிகளாகவோ அல்லது நல்ல எதிர்காலத்துக்காகவோ 15 லட்சம் தமிழர் முன்னேறிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.  

தாமாக நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக சந்திரஹாசனின் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை தொடர்புகொண்டு செயற்பட்டுவருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை இலங்கை அதிகாரிகளும் திணைக்களங்களும் ஒத்துழைப்பு வழங்குவதாகவே கூறப்படுகின்றது. சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அகதிகளின் பிறப்புக்களையும் திருமணங்களையும் பதிந்து குடியுரிமைப் பத்திரங்களை வழங்கிவருகின்றது. ஆனாலும் அதற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.