— அழகு குணசீலன் —
முள்ளை முள்ளால் எடுத்தல் !!.
யாழ்.வளாகம் 1974 யூலை 15ம் திகதி அன்றைய கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியூதீன் மொகமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அன்றைய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் இது.
1974 ஆகஸ்ட் 1ம்திகதி பேராசிரியர் கைலாசபதி யாழ்.வளாகத் தலைவராகப் பதவி ஏற்றார்.
அறுகாய் விதைத்து யாழ்.வளாகத்தை ஆலாய் வளர்த்தவர் பேராசிரியர் கைலாசபதி.
அன்று யாழ்.வளாகம் திறக்கப்படுவதை எதிர்த்து தமிழரசு கறுப்புக் கொடி காட்டியது. இன்று ஹர்த்தாலும் கதவடைப்பும்.
ஆளுமை மிக்க அந்த ஆசானின் நிர்வாகத்தில், அன்றைய தனிநபர் பயங்கரவாதச் சூழலில் திறமைமிக்க பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாகத்தினர் தலைவர் கைலாசபதியின் நிர்வாகத்திறமை கண்டு யாழ்.வளாகத்திற்கு வந்தார்கள்.
வெளிநாடுகளில் இருந்த நம்மவர்கள் கூட வெளிநாட்டுப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு வந்தார்கள் என்றால் கைலாசபதி என்ற காந்தம் அதற்கு காரணம்.
தமிழ்த்தேசிய அரசியலில் 50 ஆண்டுகளாக யாழ்.பல்கலைக்கழகம் காலத்திற்கு காலம் ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளை மாறுபட்டுச் சிந்திக்கின்ற புத்திஜீவிகள்.
இதன் வெளிப்பாடே கடந்த காலங்களில் பாராளுமன்ற, ஆயுதப்போராட்ட தமிழ்தேசிய அரசியலில் அதன் பெயர் அடிபடுவதற்கு காரணம்.
உலக வரலாற்று அரசியல் நடைமுறையில் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு இருந்தே வந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் நல்ல விடயங்கள் இடம்பெறும் போதும் அவை பேசப்படுகின்றன. தவறான விடயங்கள் இடம்பெறும் போதும் அவை பேசப்படுகின்றன.
யாழ். பல்கலைக்கழகத்தின் சமகால பேசு பொருளாக இருப்பது வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட்டதும், அது அகற்றப்பட்ட முறையுமாகும். இதனை வெறுமனே ஒரு நிகழ்வாக மட்டும் மட்டுப்படுத்தி நோக்கமுடியாது.
1979 ஜனவரி 1ம் திகதி யாழ்.வளாகம் முழுமையான பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. இதன்படி இது ஒரு சுயாதிக்கம் கொண்ட சுதந்திரமாகச் செயற்படும் உரிமத்தைக் கொண்டதாகும்.
இந்த அடிப்படையில் நோக்கும்போது சுயாதீன பல்கலைக்கழகம் ஒன்றின் தீர்மானம், முடிவுகளை எடுக்கும் உரிமையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசு தலையிட முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை:
1. விடுதலைப்புலிகளின் போராட்ட தவறுகளும், அதனால் ஏற்பட்ட அனைத்து இழப்புக்களும்.
2. யுத்தத்தை வெற்றிபெற பேரினவாத அரசு யுத்தகால மானிட நேயம் மறந்து மேற்கொண்ட ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையும் அதன் ஊடாக ஏற்படுத்திய அனைத்து இழப்புக்களும்.
இந்த இழப்புக்களையே யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி நினைவூட்டி நின்றது.
தமிழர் தாயகத்தில் சமகாலத்தில் நிலவுகின்ற தோல்வி அரசியல், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதியாக சிறையில் வாடுபவர்கள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அன்றாட வாழ்க்கையை யுத்தத்திற்கு விலையாக கொடுத்து நிற்கின்ற மக்கள், உடன் பிறப்புக்களை இழந்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள்.
மறுபக்கத்தில் யுத்த வெற்றி அரசியல். மக்களின் பிரச்சினைகள் எதற்கும் யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தீர்வை வழங்கமுடியாத பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்.
இந்த இருதரப்பினரதும் எதிர்பார்ப்பும் செயற்பாடும் இரு துருவங்களாக உள்ளன. இந்த மனநிலை – மானிட இடைவெளியைக் காட்டுகின்ற மிகப் பிந்திய வெளிப்பாடே யாழ்.பல்கலைக் கழகத்தில் நினைவுத்தூபி அகற்றப்பட்ட நிகழ்வாகும்.
புகலிடத்திலும் தூபி விவகாரம் எதிரொலிக்கிறது.
நினைவுத்தூபி விவகாரம் தமிழக அரசியலிலும் ஓங்கி ஒலிக்கின்றது. பொதுவாக அனைத்து தமிழக கட்சிகளும் இதனைக் கண்டித்துள்ளன. சென்னையில் சிறிலங்கா உபதூதரகம் முற்றுகையிடப்பட்டது.
இந்த வெளிப்பாட்டை வெறும் உணர்வலை என்றே கொள்ளமுடியும். வருகின்ற தேர்தலில் வாக்குச் சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை தமிழக அரசியல்வாதிகள் தவறவிடுவதற்கு அவர்கள் என்ன அரசியல் தெரியாதவர்களா?
ஈழத்தமிழர்களின் விவகாரங்களை ஓட்டுக்கு பயன்படுத்துவது இது முதல்முறையும் அல்ல. அதுபோல் இது இறுதியும் அல்ல.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி:
முள்ளிவாய்க்கால் துயரம் ஒரு தூக்க முடியாத பாரம். யேசு தூக்கிய சிலுவையைப் போன்று அந்த துன்பத்தை அனுபவித்த மக்கள் உடலாலும் மனதாலும் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கின்ற கொடுமை.
இதன் நினைவாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உளவியல் திருப்திக்காக, ஒரு மன ஆறுதலுக்காக ஒரு நினைவுச் சின்னத்தை அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்கப் போகின்றது.
தமிழர் தாயகத்தைப் பொறுத்தமட்டில் யுத்தத்தில் உயிர் இழப்புக்களை சந்திக்காத குடும்பங்கள் மிகக் குறைவானவை. இந்த வகையில் இது முழு ஈழத்தமிழர் சார்ந்த ஒரு அழிவு அல்லது அழிப்பு.
நினைவுத்தூபி அழிப்பு விவகாரத்தை அல்லது முள்ளிவாய்க்கால் துயரத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏகபோக உரிமை கொண்டு நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பின் தவறான, இராஜதந்திரமற்ற, சந்தர்ப்பவாத, பிராந்திய, சர்வதேச போக்கைக் கவனத்தில் எடுக்காத தவறுகளின் விளைவு என்றும், அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வாதிடப்படுகின்றது.
யுத்தம் ஒன்றை ஒரு கை ஓசையாக ஒருதரப்பு மட்டும் கொண்டு நாடாத்த முடியாதல்லவா? ஆகவே இவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டிய மறுதரப்பும் உண்டு. அது சிறிலங்கா அரசு.
இந்த இருதரப்பினாலும் ஏற்பட்ட இழப்புக்களின் நினைவைத்தான் தூபி குறித்து நின்றது. ஆனால் அரசு அதனை தவறாக அரச படைகளின் கொலைகளைத்தான் அது குறித்து நிற்பதாகவும், அரசபடைகள் மீது அவமானத்தை ஏற்படுத்தும் தூபி என்றும் கற்பிதம் செய்கின்றது.
மறுபக்கத்தில் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கூட இதனை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தூபி என்றே நினைக்கின்றனர். யுத்த நினைவு தூபி இருதரப்பினாலும் ஏற்பட்ட மனித இழப்பை குறிக்கின்றது.
இது வெற்றியையோ, தோல்வியையோ குறித்து நிற்கவேண்டும் என்பதல்ல ஒட்டு மொத்த யுத்தத்தின், அது ஏற்படுத்திய வடுக்களின், இழப்புகளின் நினைவு.
பல்கலைக்கழக நிர்வாகம்:
2018 இல் அமைக்கப்பட்டு அகற்றும் வரை தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டும் இருந்த தூபி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இரவோடிரவாக அகற்றப்பட்டதன் காரணம் என்ன? என்ற கேள்வி பல்கலைக்கழக நிர்வாகத்தை நோக்கி கேட்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதவி ஏற்றார்.
அவரின் கருத்துப்படி நினைவுத்தூபி பல்கலைக்கழக வளாகத்தில் சட்டரீதியற்றவகையில் அமைக்கப்பட்டது. ஒழுங்குமுறையான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. சிறிய அளவில் தொடங்கி மெல்ல, மெல்ல அளவு பெருப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் தூபி நிர்வாகத்தின் கண்களில் குத்தவில்லையாம்.?
உண்மையில் தூபி அமைப்பதற்கான அனுமதியை பல்கலைக்கழகம் வழங்கவில்லை என்றால், மாணவர்கள் சட்டரீதியற்றவகையில் நடந்து கொண்டதற்கான பொறுப்பையும், அன்றைய நிர்வாகம் விட்ட தவறுக்கான பொறுப்பையும் 2018 இல் இருந்த உபவேந்தரும் நிர்வாகமுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டரீதியாக நோக்கினாலும் சரி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது உயர்கல்வி அமைச்சின் அழுத்தம் காரணமாக இன்றைய உப வேந்தர் தூபி அகற்றலைச் செய்திருந்தாலும்சரி, மத்திய அரசாங்கத்தின் ஒரு அதிகாரி என்ற வகையில் அவரின் செயற்பாடு சாதாரண நிர்வாக நடைமுறைக்கு முரணானதாக இல்லை என்றே கொள்ளவேண்டி உள்ளது.
உபவேந்தர் தனது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து பதவியில் இருக்கவும் இதைச் செய்துள்ளார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சட்டரீதியற்ற வகையில் அமைக்கப்பட்ட தூபிக்காக அரசாங்கத்தோடு முரண்பட்டு தனது பதவியை இழக்க அல்லது இதனால் பல்கலைக்கழகம் பாதிக்கப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள்.
கிடைக்க்கூடிய நிதி ஒதுக்கீட்டு புள்ளிவிபரங்களின்படி 2016 இல் 3.5 பில்லியன் ரூபா நிதி யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், கொழும்பு மத்திய அரசாங்கமும் இந்த நிதியினை வழங்கியுள்ளன.
இதில் 2.2 பில்லியன் நடைமுறைச் செலவுகளுக்காகவும், 1.2 பில்லியன் முதலீட்டுச்செலவுக்காகவும் ஒதுக்கப்பட்டது. மொத்த நிதியில் 98 வீதம் மத்திய அரசாங்கத்தின் ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக அபிவிருத்தியில் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை உபவேந்தருக்கு உண்டு. கடந்த காலங்களில் ஏற்பட்ட இவ்வாறான அரசியல் தலையீடுகள், குழப்பநிலைமைகளால் தகுதியும், திறமையும், ஆளுமையும் மிக்க பல கல்வியாளர்களை எமது அரசியல் நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. இதனால் பாதிக்கப்படப்போவது எமது எதிர்கால சந்ததி என்பதையும் சகல தரப்பும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. கிளிநொச்சி விசாய, பொறியியல் பீடங்கள் யுத்தகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டபோதும் யுத்தத்தம் முடிவடைந்த பின்னரே வளர்ச்சியைக் கண்டன.
சட்டம் எதிர் மனிதநேயம்:
சட்டமும் மனிதநேயமும் இருவேறு விடயங்கள். ஒன்று பகல் என்றால் மற்றையது இரவு.
இவை தமிழர் அரசியலில் எப்போதும் மோதுகின்ற முரண்பட்ட அம்சங்கள்.
தூபி விவகாரத்தில் மட்டும் அல்ல காணாமல்போனோர், அரசியல் கைதிகள், காணிப் பிரச்சினை இவை எல்லாவற்றிலும் மனிதாபிமானமும் சட்டமும் மோதுகின்றன.
சட்டரீதியாக ஒருவிவகாரம் கையாளப்பட்டால் சட்டம்தான் அந்த சிக்கை அவிழ்க்க வேண்டும்.
மனிதாபிமானமாக ஒரு விவகாரம் அணுகப்பட்டால் அதனை மனிதநேயத்துடன் பேசித்தீர்க்க முடியும்.
பல்கலைக்கழக நிர்வாகத்தரப்பில் இது ஒரு சட்டவிவகாரம்.
மாணவர்கள், மக்கள் தரப்பில் இது ஒரு மனிதநேய விவகாரம்.
இதுதான் இங்கு உருவாகியுள்ள இடியப்பச்சிக்கல்.
பேச்சுவார்த்தையே தீர்வு!
தூபி அகற்றப்படுவது குறித்து உபவேந்தர் மாணவர் சங்கத்திற்கு அறிவிக்காமல் இரவோடிரவாக பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் இதைச்செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டால் அகற்றுதல் சாத்தியமற்றது மட்டும் அல்ல ஒரு பெரும் கலவரம் ஏற்பட்டிருக்கும்? மற்றொரு தமிழாராய்ச்சி மாநாட்டை துணை வேந்தர் தவிர்த்துக் கொண்டாரா?
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின்றி தூபி அமைக்கப்பட்டிருந்தால் அதை அகற்றுவதற்கான முழு அதிகாரமும் நிர்வாகத்திற்கு உண்டு. அல்லது மாணவர்கள் தாங்களாகவே அகற்றவேண்டும் என்று பணிக்கவும் நிர்வாகத்திற்கு முடியும் இது சாத்தியமா?
முள்ளை முள்ளால் எடுத்திருக்கிறார் துணைவேந்தர்.
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர் சங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும். தவறுகளை விவாதிக்காது மாற்றுத்தீர்வு குறித்து விவாதிக்க முடியும்.
இருதரப்பும் தவறுகளுக்காக வருத்தமும், மன்னிப்பும் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இணைந்து செயற்பட வேண்டியவர்கள் அவர்கள்.
நினைவுத்தூபி ஒரு காலக்கண்ணாடி. அது மீள் அமைக்கப்படுவதன் மூலமே ஆகக் குறைந்தபட்சம் ஒரு உளவியல் ஆறுதலை வழங்கமுடியும்.
இது யுத்தத்தின் முழு அடையாளமாக அமைவது நல்லது. எல்லா மக்களினதும் நினைவாக பொதுவானதாக இருத்தல் தூபியின் வரலாற்றுக் கனதியை அதிகரிக்கும்.
அமையும் இடம் நிச்சயமாக பெரும் வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தத்தான் போகின்றது. இருதரப்பும் இயலுமானவரை விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு பொருத்தமான பொது இடம் ஒன்றில் அமைக்க முடிவு செய்வது எல்லோருக்கும் நல்லது. எதிர்காலத்திற்கும் நல்லது.
இருந்த இடத்திலையே அமைக்க இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது திட்டமிட்டபடி நடந்தால் பிரச்சினை இலகுவாக இருக்கும்.
தூபி அமைப்புச் செலவை யாழ்.பல்கலைக்கழகம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொள்வது ஏற்பட்டுள்ள கசப்பை குறைக்கலாம்?
இறுதியாக….,
கவிஞர் வைரமுத்துவின் வரிகள்!
முள்ளிவாய்க்கால் போயிருந்தேன் – அந்த
முல்லைத்தீவையும் மோதிவந்தேன்…..
ஆனந்தபுரத்தைக் கடக்கையிலே – என்
ஆவி துடித்ததை என்ன சொல்ல……?
நான் அந்த துயரம் சொல்வதற்கு – என்
நா படும்பாடு கொஞ்சமல்ல……
இந்த இடம்தான் அந்த இடம் – எம்
இலட்சம் உயிர்களைக் கொன்ற இடம்……….!.