— சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா – அவுஸ்திரேலியா —
அன்பிற்குரிய இரா. நாகலிங்கம் அண்ணன் அவர்கள் 2014 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, மறைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந்தபோது தாங்க முடியாத துயரில் தவித்தேன். தான் புனைந்துகொண்ட “அன்புமணி” என்ற பெயருக்கேற்றவாறே எல்லோரிடத்தும் அன்புள்ளவராக வாழ்ந்த பெருமைக்குரியவர் அவர். தமிழ் இலக்கியத்தைத் தன் உயிரினும் மேலாக நேசித்த பெருமகன். தான் எழுதுவதுடன் மட்டுமன்றி, மற்றையோரை எழுத ஊக்குவிப்பதிலும், மற்றையோரின் படைப்புக்களை வெளிக்கொணர்வதிலும் அவர் ஆற்றிய பணிகள் அளவற்றவை, தன்னிகரற்றவை.
அன்புமணி அண்ணன் அவர்கள், மிகச்சிறந்த நிர்வாகி, நேர்மையான அரச அதிகாரி, என்றுமே சோர்வடையாத இலக்கிய ஊழியன், தனித்துவம் மிக்க படைப்பாளி என்னும் எல்லாவகையான சிறப்புக்களுக்கும் மேலாக, மனிதாபிமானம் மேலோங்கி நின்றதோர் உயரிய “மனிதனாக”வும் வாழ்ந்த செம்மல்!
இலங்கையின் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் தடித்த எழுத்துக்களால் நிரப்பப்படும் பல பக்கங்கள் அவருக்குரியதாக இருக்கும். கதை, கட்டுரை, நாடகம், நாவல், விமர்சனம்,நேர்காணல் என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்துப் புகழ்பெற்ற எழுத்தாளரகத் திகழ்ந்த அன்புமணி அண்ணன், இளமையிலிருந்தே இதழாசிரியராக இணையற்ற ஈடுபாட்டுடன் வலம் வந்தவர். இப்போதய இதழாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்தவர், பல சிற்றிதழ்களுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இவற்றுடன் மட்டுமன்றி, நாடக நடிகராக, இயக்குனராக, நல்லதொரு கலைஞராகத் தமிழ்க் கலை உலகிலும் பிரகாசித்தவர்.
அன்புமணி அண்ணன் அவர்களை எனது அரும்பு மீசைக் காலத்திலிருந்து நான் அறிவேன். என்னையும் அவர் அறிவார். அந்த நாட்களில் மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை பிரதேச ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் வருடா வருடம் நடாத்திவந்த நாடகப் போட்டிகளுக்கு நடுவர்களில் ஒருவராக அன்புமணி அண்ணன் அவர்கள் கடமையாற்ற வருவார். களுவாஞ்சிக்குடி இளம் நாடக மன்றம் நாடகம், நாட்டுப்பாடல் போட்டிகளில் பல தடவைகள் முதற் பரிசுகளைப் பெற்றுவந்தது மன்றத்தின் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தவன் என்றவகையில் அன்புமணி அண்ணனின் அறிமுகம் கிடத்தது, அவரது கலை உள்ளத்தில் எனக்கும் ஓர் இடமும் கிடைத்தது. அந்தத் தொடர்பு இறுதிவரை தொடர்ந்தது.
அன்புமணி அண்ணன் அவர்கள் ம.தெ.எ.பற்று உதவி அரசாங்க அதிபராக, களுவாஞ்சிக்குடி அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் அந்தப்பகுதி மக்களுக்குச் செய்த சேவைகள் அளப்பரியவை. பெரும்பாலும் அதிகார தோரணையுள்ள அதிகாரிகளையே கண்டு பழக்கப்பட்டுவிட்ட மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு, அன்பாகப் பேசி, மனிதாபிமனத்துடன் பிரச்சினைகளை அணுகி உதவி செய்யும் ஓர் அதிகாரியின் செயற்பாடு நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால் அன்புமணி அண்ணனை அந்தப்பிரதேச மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணமின்றித் தேங்கிக்கிடந்த கோப்புக்கள் பல அசுர வேகத்தில் நகரத் தொடங்கின. இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில், எத்தனையோ வகையான இடர்ப்பாடுகளுக்கும், அசெளகரியங்களுக்கும் மத்தியிலும் அவர் தனது அரச பணியினை மிகவும் ஆளுமையுடன் ஆற்றி, மக்கள்மனதில் மாமலையாக உயர்ந்து நின்றார்.
என்னை ஒரு நூலாசிரியராக ஆக்கிய பெருமை அண்ணன் அன்புமணி அவர்களுக்கே உரியது. கொழும்பில் நான் கடமையாற்றிக்கொண்டிருந்தபோது, களுவாஞ்சிக்குடியில் உதவி அரசாங்க அதிபராக இருந்த அவர் ஒருநாள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு,எனது நாடகங்களை நூலாக்கவிரும்புவதாகவும், அவற்றைத் தன்னிடம் தரும்படியும் கேட்டார். அதன் பின்னர் அவரே என் வீட்டுக்குச் சென்று, என் மனைவியிடம் எனது நாடகப் பிரதிகளைப் பெற்று, நடிப்பதற்காக எழுதப்பட்டிருந்த அந்தநாடகங்களில் நூலாக்கத் தகுந்தவையெனக்கருதிய ஆறு நாடகங்களை, ம.தெ.எ.பற்று கலசாரப் பேரவையின் சார்பில் நூலாக்கம் செய்து, வெளியீட்டு விழாவும் நடாத்தினார்.
நான் பிறப்பதற்கு முன்னரே, 1952ஆம்ஆண்டில் ‘மனோகரா’ என்னும் மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிப் புகழ்பெற்றிருந்த அண்ணன் அன்புமணி அவர்கள், எனது நாடகங்களை நூலுருவாக்கியமை எனது பாக்கியம் என்றே கருதுகிறேன். இதனைப்போல எத்தனையோ நூல்கள் வெளிவரக் காரணவானாக இருந்து பலரை எழுத்துலகுக்கு அவர் இழுத்துக்கொண்டுவந்து அறிமுகமாக்கியிருக்கிறார்.
1991 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தபின்னர், கடிதங்களும், தொலைபேசியும் தொடர்ந்து எங்கள் உறவைப் பேணிவந்தன. ஒவ்வொரு தடவையும் ஊருக்கு நான் வந்தபோது எங்கிருந்தாலும் அவரைச் சென்று பார்த்தேன், கதைத்தேன், பல விடயங்களை பரிமாறி மகிழ்ந்தோம். கடந்த 2010 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு நூல்நிலைய மண்டபத்தில், எனது நூல் வெளியீட்டை அவராகவே ஒழுங்கு செய்து, மிகவும் சிறப்பாக நடாத்தி என்னைப் பெருமைப்படுத்தினார்.
அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 2013 இல்
அவசரமானதொரு பயணத்தில் வந்து சில நாட்களே தங்கி நின்றபோதும், நண்பர் குணநாதனுடன் ஆரையம்பதிக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்கூட, அவரது விபத்துப்பற்றித் தெரியாத நிலையில், ஓர் இலக்கிய விழா விடயமாக அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அப்போது அவர் பேசமுடியாத நிலையில் இருந்ததை அவரது சகோதரி மூலம் அறிந்து, சில நாட்களின் பின்னர் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறினேன். ஆனால், இனி எப்போதுமே அவரைக் காணமுடியாமலும், கதைக்க முடியாமலும் போய்விடும் என்று அப்போது நான் நினைத்ததில்லை.
இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இந்தியப் பத்திரிகைகளில் பிரசுரமாவதென்பது மிகவும் அரிதாகஇருந்த அந்தக்காலத்தில், 1954 ஆம் ஆண்டு, ‘கிராமபோன் காதல்’ எனும் தலைப்பிலான அவரது முதலாவது படைப்பே இந்தியப் பத்திரிகையான கல்கி இதழில் பிரசுரமானது என்றால் அன்புமணி அண்ணனின் இலக்கிய ஆற்றலை என்னென்பது?
தமிழ்மணி விருது(1992), ஆளுனர் விருது(2001), கலாபூஷணம் விருது (2002), மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவையின் ‘இலக்கியச்சுடர் விருது ‘(2003), காத்தான்குடி சமாதானப் பேரவையின் ‘சமாதானக்காவலர்’ பட்டம் இவ்வாறு தேசிய அளவிலும், பிரதேச மட்டத்திலும் பல்வேறு விருதுகள் அவரை அடைந்து சிறப்புப் பெற்றன.
அன்புமணி இரா. நாகலிங்கம் அவர்களது மறைவினால், உலகத்தமிழ் இலக்கிய உலகம், குறிப்பாக இலங்கைத் தமிழ்க்கலை, இலக்கிய உலகமும் சிறப்பாக மட்டக்களப்புத் தமிழகமும், தமிழையும், தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் நேசித்த, உள்ளத்தால் உயர்ந்ததொரு மனிதனை, தமிழ்க்கலையையும், தமிழ் இலக்கியத்தையும் தனது இரு கண்களாகப் பேணிய ஒப்பற்ற இலக்கிய வாதியை, இழந்து நிற்கின்றன, அவரின் இடத்தினை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கின்றன என்பதுதான் இன்றைய நிலைமை.
அன்புமணி அண்ணனின் பெயரும், புகழும் காலங்களைக் கடந்து வாழும்.