கொவிட்-19 நோய்த்தடுப்பு மருந்துகள் ஹலாலா அல்லது ஹராமா?

கொவிட்-19 நோய்த்தடுப்பு மருந்துகள் ஹலாலா அல்லது ஹராமா?

(இஸ்லாமாபாத்தில் இருந்து சாஹிட் சா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஜொண் எமொண்ட் ஆகியோர் வோல் ஸ்றீட் ஜேர்ணல் சஞ்சிகைக்காக எழுதியதை தழுவி தமிழில் தருவது சீவகன் பூபாலரட்ணம்

கொவிட் 19 நோய்த்தடுப்பு மருந்துக்கான முயற்சிகளுக்கு இஸ்லாத்தால் தடை செய்யப்பட்ட விடயங்கள் இடையூறாக இருந்துவிடக்கூடாது என்ற கவலைகளை தீர்க்கும் முயற்சியாக முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் அரசாங்கங்களும் தலைவர்களும், தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு, மருந்து தயாரிப்பு நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கான ஒழுங்கு விதிகளை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.  

சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோவக் என்னும் நோய்த்தடுப்பு மருந்து இஸ்லாத்தால் அனுமதிக்கப்படக் கூடியது அல்லது “ஹலால்” என்று உலகிலேயே பெரும்பான்மையான முஸ்லிம் மக்களைக் கொண்ட இந்தோனேசியாவின் மதகுருமார் கவுன்ஸில் கடந்த வெள்ளியன்று கூறியுள்ளது.  

சீனாவில் உள்ள சினோவக் மருந்து தயாரிப்பு நிலையத்துக்கு அந்தக் கவுன்ஸிலின் பிரதிநிதிகள் சென்று கடந்த ஆண்டு ஹலால் மதிப்பீடு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

உலகெங்கும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கி மக்களுக்கு ஒட்டுமொத்த நீர்பீடனத்தை ஏற்படுத்துவதில் உள்ள ஒரு முக்கிய சவால், இந்த மருந்துகளை எடுத்துக்குகொள்ளுமாறு மக்களை இணங்க வைப்பதாகும்.  

பல முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களிடம் காணப்படும், பாதுகாப்பு குறித்த கவலைகள், சந்தேகங்கள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் குறித்த சதிக்கதைகள் ஆகியவற்றை கடந்து, மக்களை இந்த முயற்சிகளுக்கு இணங்க வைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. இவற்றைவிட மத மற்றும் நெறிமுறைசார் எதிர்ப்புகளும் இதற்கு சவாலாகின்றன. 

பன்றி மற்றும் மனித கருவின் தசை திசுக்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் ஊன் புரதப்பசை ஆகிய இரண்டும் நோய்த்தடுப்பு மருத்துகளை தயாரிப்பதில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை ஹலால் அல்ல என்பது முஸ்லிம் அறிஞர் கருத்து. 

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக நோய்த்தடுப்பு மருந்துகளை ஏற்றுக்கொள்ளுவதா, இல்லாயா என்பது குறித்த கருத்து முஸ்லிம் நாடுகள் மத்தியில் இடத்துக்கு இடம் வேறுபட்டதாகவே இருந்துள்ளது.  

லான்செட் மருத்துவ சஞ்சிகையில் 2020 செப்டம்பரில் கூறப்பட்டுள்ளபடி வங்கதேசம் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நோய்த்தடுப்பு மருந்துகளை ஏற்கும் பண்பு மிக அதிகமாகவே காணப்பட்டுள்ளது. 149 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு இது. 2019 வரையிலான 4 வருடங்களில் நோய்த்தடுப்பு மருந்துகள் தொடர்பான நம்பிக்கையீனம் அதிகமாக காணப்பட்ட 10 நாடுகளில் 7 நாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளாகும். அவை, ஆப்கானிஸ்தான், அஷர்பைஜான், பொஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான். அதனைவிட ஜப்பான், ஜோர்ஜியா மற்றும் சேர்பியாவும் இந்தப் பட்டியலில் அடங்கும். 

பாகிஸ்தானைப் பொறுத்தவரை உலகில் போலியோ ஒழிக்கப்படாத இரு நாடுகளில் அதுவும் ஒன்று. இங்கு போலியோ தடுப்பு மருந்துகளை குழந்தைகளுக்கு எடுக்கச் செய்வதற்கு பெற்றோரை இணங்க வைக்க அதிகாரிகள் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இஸ்லாம் சார்ந்த எதிர்ப்பும் ஏனைய சில கவலைகளும் பெற்றோர்களை தயங்கச் செய்கின்றன. போலியோ மருந்து இஸ்லாத்துக்கு பொருத்தமானதே என்று மூத்த மதகுருமார் அனுமதித்துள்ளபோதிலும், சில பொதுமக்கள் இது ஹராம் என்று சொல்லி ஏற்க மறுக்கின்றனர். அது மாத்திரமல்லாமல், மேற்கு நாடுகள் நோய்த்தடுப்பு மூலம் முஸ்லிம்களை மலடாக்க முயற்சிப்பதாக உலவும் சதிக்கதை ஒன்றும் அங்கு மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்படுகின்றது. 

இந்தோனேசியாவில் இரு வருடங்களுக்கு முன்னதாக சின்னமுத்து(தட்டம்மை) நோய்க்கான நோய்த்தடுப்பு மருந்து ஒன்றுக்கு அங்குள்ள அதிகாரபூர்வ முஸ்லிம் மதகுருமார் அமைப்பு அனுமதி வழங்கியது. அந்த மருந்தில் பன்றியின் ஊன் புரதப்பசை இருக்கின்ற போதிலும், அதற்கான ஹலால் மாற்றீடு எதுவும் இல்லாத காரணத்தால், அந்த மருந்தை அந்த அமைப்பு ஏற்றிருந்தது. ஆனால், அந்த நோய்த்தடுப்பு மருந்தை ஏற்க இன்றும் இந்தோனேசியாவின் பழமைவாத பகுதிகளில் தயக்கம் காணப்படுகின்றது. அதில் பன்றி சார்ந்த பொருள் இருப்பதால், பெற்றோர் அதனை தமது குழந்தைகளுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். 

பல்வேறு காரணங்களுக்காக நோய்த்தடுப்பு மருந்துகளை ஏற்க மறுப்பவர்கள் பொதுவாக முஸ்லிம்களில் சிறுபான்மையினரே. ஆனால், உலகெங்கும் உள்ள 1.8 பில்லியன் முஸ்லிம்களுக்கு நோய்த்தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஹலால் குறித்த கவலைகள் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான வழிகளைக் காண்பதற்காக இந்தோனேசியா முதல், துபாய் வரை உள்ள முஸ்லிம் தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்.  

“இது ஒரு மிக முக்கியமான விவகாரம்” என்கிறார் பிரிட்டனின் லன்கெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வைரஸ் ஆய்வு நிபுணரான முஹமட் முனிர். “செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள் மற்றும் செய்யப்பட்ட முறை ஆகியவற்றை கொண்டு பார்க்கும்போது, இதுவரை சோதனையின் இறுதிக்கட்டத்தை எட்டிய எந்த கொவிட் 19 தடுப்பு மருந்தும் முஸ்லிம்களுக்கு பிரச்சினையானது அல்ல என்றும் அவர் கூறுகிறார். 

 “இந்த விடயத்தில் மக்களை முறையாக வழிநடத்துவதற்கு தேவையான அறிவைப் பெறவேண்டியது மதத்தலைவர்களின் பொறுப்பு” என்கிறார் முஹமட் முனிர். 

Moderna Inc. மற்றும் Pfizer Inc. and BioNTech SE ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகள் தீர்வைத்தரலாம். அவை செயற்கையானவை என்பதுடன், அவற்றில் மனித அல்லது விலங்குப் பொருள் ஆதாரம் எதுவும் கிடையாது என்கிறார் முனிர். இருந்தபோதிலும், உலகெங்கிலும் இந்த நோய்த்தடுப்பு மருந்துகளின் விநியோகம் மிகவும் குறைவு என்பதுடன், அவற்றை மிகவும் கடும் குளிரிலேயே சேமித்து வைக்க முடியும் என்பதால் அவற்றை வறிய நாடுகள் பெறுவது சிரமமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசிய மதகுருமார் எடுத்த முடிவுகளின்படி பார்த்தால் அந்த நாட்டின் மருந்து மற்றும் உணவு ஒழுங்குபடுத்துனர் அதனை அங்கீகரித்ததும் சினொவக் வரும் வாரங்களில் அங்கு விநியோகிக்கப்படலாம். 

நோய்த்தடுப்பு மருந்து விவகாரத்தில் அரசாங்கத்தின் முடிவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று சிறப்பு மதகுருமார் குழு முடிவு செய்ததாக, 60 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட நாடான மலேசியாவின் மத விவகார அமைச்சரான சுல்கிஃலி முகமட் அல் பகீர் கடந்த டிசம்பரில் கூறியுள்ளார். கடந்த காலங்களில் முஸ்லிம்கள் நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொரொனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகள், ஹலால் அல்லாத பொருட்களைக் கொண்டிருந்தாலும்கூட அவற்றைப்பெற  முஸ்லிம்களை அனுமதிப்பதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள மத அமைப்பு ஒன்று இஸ்லாமிய ஆணை ஒன்றை அதாவது பத்வாவை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்களுக்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் வக்ஸினை அந்தநாடு கொடுக்க ஆரம்பித்துவிட்டது. Pfizer-BioNTech நோய்த்தடுப்பு மருந்தும் அங்கு வழங்கப்படுகின்றது. 

“வக்ஸின்கள் குறித்த இப்படியான ஆணைகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை ஹலால் என்று ஆக்கிவிடாது, ஆனால், மாற்று வழிகள் இல்லாதபோது இந்த வக்ஸீன்களை பயன்படுத்தலாம்” என்கிறார் மலேசிய மருந்தாளர் அமைப்பின் தலைவரான அம்ரஹி புனாங். 

இவை ஹலாலா என்பதைக் கண்டறிய தயாரிப்பாளர்கள், தமது மருந்துகளில் என்ன பொருட்கள் இருக்கின்றன, அவை எப்படி செய்யப்படுகின்றன என்ற விபரங்களை மதகுருமாருக்கு வழங்க வேண்டும். அவற்றைக் கொண்டே அவர்கள் இவை இஸ்லாமிய கொள்கைகளுக்கு பொருத்தமானவையா என்பதை முடிவு செய்ய முடிய வேண்டும். “அவை ஹலால் நடைமுறைக்கு உட்பட்டவை என்பதை அத்தாட்சிப்படுத்துவது அடுத்த நிலை, அதாவது மருந்து செய்யப்படும் முறை முழுமையாக ஆராயப்பட வேண்டும்” என்கிறார் புனாங்.  

கடந்த காலங்களைப் பார்க்கின்ற போது சீனா, முஸ்லிம்கள் ஏற்கக்கூடிய நோய்த்தடுப்பு மருந்துகளை செய்யகூடியதாக இருக்கும் என்கிறார் வின்கொன்ஸின் பல்கலைக்கழக பேராசிரியரும், இஸ்லாம் மற்றும் மருத்துவ முனைவுகளுக்கான துறையின் தலைவருமான ஆசின் படெலா.  

முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அண்மைய வாரங்களாக எந்த நோய்த்தடுப்பு மருந்து “ஹலால்” என்பதை அறிவதில் இஸ்லாமிய குழுக்கள் ஆர்வமாக இருக்கின்றன. 

கொவிட் 19 நோய்த்தடுப்பு மருந்தில் மனித கருவின் கலங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவிலும் ஏனைய சில இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இப்படியான நோய்த்தடுப்பு மருந்துகளை கத்தோலிக்கர்கள் பெறுவது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக டிசம்பரில் வத்திக்கான் அறிவித்தது. 

தடை செய்யப்பட்ட பொருட்கள் நோய்த்தடுப்பு மருந்துகளில் இருந்தாலும், அவை பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதால், அவற்றின் தூய்மையற்ற தன்மை அகற்றப்பட்டு விடும் என்றும் முஸ்லிம் அறிஞர்கள் முடிவெடுக்கலாம் என்று இஸ்லாமிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.  

“விதிகளை கடுமையாக கடைப்பிடிப்பதைப் பார்க்கிலும் உயிர்களை காப்பாற்றுதல் மிகவும் முக்கியமானது” என்று இஸ்லாமிய மறை சொல்வதாக மலேசியாவைச் சேர்ந்த சுயாதீன ஹலால் ஆலோசகரான றொசி ஒஸ்மான் கூறுகிறார். 

“இளவயதிலேயே வேரூன்றிய ஹலால் பாகத்தை  பிடித்துக்கொண்டு சில முஸ்லிம்கள் நிற்கலாம், ஆனால், உயிர்களை பாதுகாப்பது முஸ்லிம்களுக்கு கட்டாயமானது. உண்மையை விட சிலருக்கு சர்ச்சைக்குரல்கள் பெரிதாக கேட்கலாம்” என்கிறார் அவர். 

(ரஃபேல் குவாங், செஸ்டர் டே மற்றும் பெலிஸ் சொலொமன் ஆகியோரும் இந்தக் கட்டுரைக்கு பங்களித்துள்ளனர்.)