அரைப்போத்தல் கள்ளு (சிறுகதை)

அரைப்போத்தல் கள்ளு (சிறுகதை)

— சபீனா சோமசுந்தரம் —  

(குடி குடியைக் கெடுக்கும்) 

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும் லீவு விட்டிடும் என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தாள் கவிநயா.  

போர்வையை விலக்கி தலையை தூக்கி எட்டிப்பார்த்தாள். குளிர் தலைக்கு ஏறாமல் காதுகள் இரண்டையும் துணியால் இறுக மூடி மனைவியின் பழைய சேலை ஒன்றை போர்த்தியபடி குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான் சுந்தரம். கவிநயாவை பெற்றவன். தூக்கத்தில் புரண்டு திரும்பிபடுத்த தகப்பனின் முகத்தை பார்த்த கவிக்கு மனதில் ஏனோ இனம்புரியாத கவலை ஒட்டிக்கொண்டது.  

நினைவு தெரிந்தநாள் முதலாகவே அவளது உலகம் அவன் தான். எதுக்கென்றாலும் அவளுக்கு அப்பா‘ மட்டும் தான். பாடசாலையில் சக பிள்ளைகள் தங்கள் தாயை பற்றி பேசும் போது கவிநயாவுக்கு தனக்கு தாய் இல்லையே என்று ஒரு நாளும் தோன்றியதில்லை. மெல்ல எழுந்துபோய் உள்ளங்காலில் குளிர் ஏறாதவாறு போர்வையை இழுத்து தகப்பனின் கால்களை போர்த்திவிட்டு வந்து படுத்தாள். எப்பிடி எண்டாலும் நாளைக்கு அப்பாக்கு தீவாளிக்கு பரிசு வாங்கிடணும்..‘ என்று தீர்மானமாய் யோசித்தவள் அதை வாங்குவதற்குரிய வழியையும் கண்டுபிடித்துவிட்ட திருப்தியில் உறங்கிப் போனாள்.  

கவிநயாவுக்கு இப்போது பதினேழு வயதாகிறது. உயர்தரத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் இந்த உலகில் அறிந்த எல்லாமே அப்பா‘ என்ற ஒரு வார்த்தையில் தான். கவிநயாவின் தாய் அவளுக்கு நான்கு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டாள். திருமணமாகி ஐந்தே வருடங்களில் வாலிப வயதில் மனைவியை பறிகொடுத்துவிட்டு, நான்கு வயது பெண்குழந்தையுடன் நின்ற சுந்தரத்திடம் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்தியபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டு, மகளை தாயைப்போல் இருந்து வளர்த்தெடுத்தான்.  

சுந்தரமும் அவனது மனைவி தேவிகாவும் திருமணம் முடித்து ஒரு வருடத்திற்குள் கவிநயா பிறந்தாள். சுந்தரத்திற்கு எஸ்டேட்டில் வேலை. காலையில் மலைக்கு வேலைக்கு போவான். மாலை நேரங்களில் பக்ரியில் வேலைக்கு போவான். கடும் உழைப்பாளி. அந்த லயத்தில் கடைசி வீடு தான் சுந்தரத்தினுடையது.  

லயத்தில் உள்ள வீடுகளில் ஒரு அறையும் ஒரு விறாந்தையும் மட்டுமே இருக்கும். சிலர் முன்னால் அல்லது பின்னால் என்று சுவரை இடித்து கொஞ்சம் அறையை பெரிதாக்கியோ அல்லது இன்னொரு சின்ன அறையையோ கட்டிக் கொள்வார்கள். வருமானம் இருப்பவர்கள் அப்படி செய்து கொள்வார்கள், இல்லாதவர்கள் அந்த சிறிய பெட்டிக்குள்ளேயே வாழக்கையை ஓட்டிக்கொள்வார்கள். சுந்தரத்தின் வீடு லயத்தின் கடைசி வீடு என்பதால் லயத்தின் முடிவில் இருந்த சிறிய வெற்றிடத்தை எஸ்டேட் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று  ஒரு அறையாக கட்டியிருந்தான். வீட்டின் பக்கவாட்டில் உடைத்து வாசலாக்கி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமாக ஆக்கி இருந்தான்.  

ஏங்க நானும் தோட்டத்தில பதியிறனே.. நானும் வேலைக்கு போனா நீங்க இப்பிடி அந்திக்கு பக்ரி வேலைக்கு போய் கஸ்டப்பட தேவல தானே..‘ என்று தேவிகா கேட்டபோது நீ வேலக்கி போனா புள்ளய ஆரு பாக்கிற.. மாடாட்டம் ஒழைச்சாலும்  நான் நிம்மதியா வாழ என் புள்ளயும் நீயும் நல்லா இருக்கணும்.. இந்த வேலக்கி போறேன் மலைக்கு போறேன்னு இன்னொருவாட்டி பேச்ச எடுத்தன்னு வச்சுக்க.. தொடப்பக்கட்ட பிஞ்சிடும்..‘ என்று கோபமாகவே மறுத்து விட்டான் சுந்தரம்.  

அப்படியெல்லாம் அவன் பொத்தி பொத்தி பாதுகாத்தும் ஆசையாய் கட்டிக்கொண்ட மனைவியை அவனால் காப்பாற்ற முடியவில்லை. மலை உச்சியில் இருக்கும் முனியாண்டி சாமி கோவிலில் நேர்த்திவைக்க போன தேவிகா மலையிலிருந்து இறங்கி வரும்போது கால்இடறி விழுந்து பெருத்த காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். ஒரு வாரத்தில் குணமாகி வீடுவந்தாள். குணமாகிவிட்டாள் என்று சுந்தரமும் நிம்மதியாய் இருக்க உள்காயங்கள் சற்று தாமதமாக வேலை செய்யதொடங்க திடீரென ஒருநாள் தலைவலிக்கிறது என்று படுத்தவள் அப்படியே நிரந்தரமாக படுத்து உறங்கிவிட்டாள்.  

சுந்தரத்துக்கு எல்லாம் இருண்டுவிட்டது போல இருந்தது பித்துபிடித்தவன் போல உட்கார்ந்து விட்டான். நாட்கள் போகப் போக வீட்டில் வந்து தங்கி இருந்து குழந்தையை பார்த்துக்கொண்ட உறவினர்களின் நச்சரிப்பு அதிகரித்தது. பிள்ளையை சாட்டாக வைத்து அவனை இன்னொரு திருமணத்திற்கு கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். ஏன் ஆம்பிளக்கி புள்ள வளக்க தெரியாதாஎன் புள்ளய நானே வளக்கிறன்..என் பொண்டாட்டி இருந்தா அவள எப்பிடி சீரும் சிறப்புமா வளப்பாளோ அதவிட நல்லா வளக்கிறன் நா.. சாவு வீட்டுக்கு வந்தீங்க.. எட்டு முப்பதொன்னு எல்லாம் முடிஞ்சு போச்சு.. எல்லாரும் கௌம்புங்க.. என் மக பெரியவளானா தகவல் சொல்லுறேன் முற செய்ய வாங்க.. இப்ப கௌம்புங்க..‘ என்று முகத்திலடித்தாற்போல பேசி எல்லோரையும் வீட்டைவிட்டு அனுப்பினான் சுந்தரம்.  

முதன் முதலாக மகளை கொண்டு போய் பிள்ளைகளை பராமரிக்கும் பிள்ளை காம்பராவில் விட்ட போது இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது சுந்தரத்துக்கு. பட்டாம்பூச்சி போல அவன் கைக்குள்ளும் காலுக்குள்ளும் ஓடி திரியும் மகளை அள்ளி அணைத்து முத்தமிட்டு அம்மாடி.. இங்க ஆயா கூட இருந்து வெளாடனும்.. அங்க பாரு நெறய பேர் இருங்காங்க குட்டி குட்டி பாப்பா எல்லாம் வெளயாடுது பாத்தியா..அவங்ககூட இரும்மா.. அப்பா அந்திக்கு ஓடி வந்திடுவன்..‘ என்று சொல்லி கொஞ்சி பிள்ளைகளை பராமரிக்கும் அந்த பிள்ளை காம்பராவுக்கு பொறுப்பான பெண்ணிடம் மகளை விட்டுவிட்டு வேலைக்கு போனான். மனைவி இறந்த பிறகு சுந்தரம் மாலை நேர வேலைக்கு போவதில்லை. மலைக்கும் முடிந்தளவு கவ்வாத்து வெட்ட தான் போவான் கொழுந்து பறிக்க போவதில்லை. கவ்வாத்து வெட்ட போனால் எப்படியும் இரண்டு மணியோடு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடலாம்.  

மனைவியின் இழப்பை தாங்க குடியையும் பழக்கப்படுத்திக்கொண்டான். வேலை முடிந்து வரும்போது அரை போத்தல் கள்ளு வாங்கிகொண்டு வந்துவிடுவான். காலம் போக போக சுந்தரத்தின் வாழ்க்கை ஒரு இயந்திரமாக சுழலத் தொடங்கியது. காலையில் எழுந்து வீடு வாசலை பெருக்கி குழாயடியில் போய் குடத்தில் தண்ணீர் பிடித்து வந்து வைத்துவிட்டு பிள்ளையினதும் தன்னுடையதும் உடைகளை துவைத்து காய போட்டு விட்டு மகளை எழுப்பி குளிப்பாட்டி தலைவாரி தயார்படுத்தி அதன் பின் ரொட்டியை சுட்டு மகளுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு தனக்கும் மகளுக்குமாக தனித்தனியே சாப்பாடு கட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு மகளை தூக்கிகொண்டு ஓட்டமும் நடையுமாக போய் மகளை பிள்ளை காம்பராவில் விட்டுவிட்டு சரியான நேரத்துக்கு மலைக்கு போய் விடுவான்.  

இரவில் உணவு வேலை எல்லாம் முடிந்து மகளை தோளில் போட்டு தட்டி தூங்கவைத்துவிட்டு மதியம் வாங்கிவந்து வைத்த கள்ளை எடுத்து குடித்துவிட்டு சாப்பிட்டபாதி சாப்பிடாதபாதி என்று அப்படியே போட்டுவிட்டு மனைவியின் சேலையை எடுத்து போர்த்திக் கொண்டு தூங்கிவிடுவான். 

இப்படியே வாழ்க்கை போக மகளும் பாடசாலை போக தொடங்கிவிட்டாள். முன்பெல்லாம் பிள்ளை காம்பராவில் கொண்டுபோய் விட்டவன் இப்போது மகளை ஒரு தோளிலும் புத்தகப்பையை ஒரு தோளிலும் சுமந்துகொண்டு போய் பாடசாலையில் விடுவான். வளரவளர கவிநயாவுக்கு தந்தையின் மனவேதனை ஓரளவு புரிந்தது. அப்போதும் கூட இப்படி ஒரு மனிதனை தனியாகவிட்டு பொறுப்பில்லாமல் செத்து போய்விட்டதாக தாய் மேல் அவளுக்கு கோபம் வந்தது. கள்ளு குடித்துவிட்டு சாப்பிடாமல் சுவரோடு சாய்ந்தபடி இருந்து யோசித்துக்கொண்டிருக்கும் தகப்பனை பார்க்கையில் அவளுக்கு அழுகை வரும். அப்பா சாப்பிடுங்கப்பா.. நானும் சாப்பிடாம தூங்கிடுவன்..காலைல ஸ்கூல் போக மாட்டேன்..‘ என்றெல்லாம் மிரட்டி தகப்பனை சாப்பிட வைத்துவிடுவாள்.  

கவிநயா படிப்பில் கெட்டிக்காரி. தான் நன்றாக படிப்பது மட்டுமே தன்னுடைய தந்தைக்கு தான் செய்யும் பெரிய கைமாறு என்பதை அவள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். வீட்டு வேலைகளையும் தானே செய்து தகப்பனுக்கு கொஞ்சம் ஓய்வையும் கொடுத்தாள். பாடசாலையில் அவள் ஒவ்வொரு விடயத்திலும் வெற்றிபெறும் போதும் அதிபர் சுந்தரத்தை கூப்பிட்டு பாராட்டுவார். ஊருக்குள் கூட சிலர் சொல்லுவார்கள் சுந்தரத்த போல புள்ள வளக்க எவனுக்கு தெரியும்..‘ என்பார்கள். தன் பிள்ளையை பராமரிப்பதில் கூட ஒரு குறையும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக கவிநயா தூங்கிய பின் குடித்துவிட்டு படுப்பது சுந்தரத்தின் வழக்கம்.  

யார் வாழ்க்கை எப்படி மாறினாலும் இயற்கை மாறுவதில்லையே. சூரியன் தன் கதிர்களை பரப்பி பனித்துளிகளை தட்டி எழுப்பினான். பொழுது விடிந்து விட்டது. எழுந்து வீட்டுவேலைகளை முடித்துவிட்டு தகப்பன் கொடுத்த உணவை சாப்பிட்டுவிட்டு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு கிளம்பினாள் கவிநயா.  

அந்த லயத்து மாணவர்கள் பாடசாலைக்கு ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்துதான் போக வேண்டும். அந்த எஸ்டேட்டில் இருக்கும் ஒரேயொரு அரசாங்க பாடசாலை அது. ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் அந்த பாடசாலையிலிருந்து சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வார்கள். கவிநயாவின் இலட்சியமும் அதுவாக தான் இருந்தது. தான் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாக வேண்டும் என்பது. கொஞ்ச தூரம் நடந்ததும் தோழியிடம்  

ஏய் நீ போய்ட்டே இருடி.. நான் சலூனுக்கு போய்ட்டு வெரசா வந்திடுறன்..‘ என்றாள் கவிநயா.  

சலூனுக்கா.. நீ எதுக்கு அங்க போற.. பயலுக மாதிரி முடிவெட்ட போறியா..‘ என்று நக்கல் பண்ணி சிரித்தாள் அவள் தோழி.  

சீ போ லூசு.. அழகு மாமாக்கு அப்பா சாப்பாடு குடுத்து விட்டுச்சி.. அத குடுத்திட்டு வாறன்..‘ என்று சொல்லிவிட்டு தோழியின் பதிலை காதில் வாங்காமல் வீதியின் இடையில் மலைக்கு நடுவே இருந்த படிகளில் இறங்கி ஓடினாள் கவிநயா.  

அழகுராஜ் சுந்தரத்தின் சிநேகிதன். சிறுவயது முதல் அவர்கள் நண்பர்கள். அவனுக்கும் திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அழகுராஜீடைய பிள்ளைகள் கவிநயாவை விட ஏழெட்டு வயது இளையவர்கள். சுந்தரத்தின் எல்லா நல்லது கெட்டதிலும் அவனுக்கு துணையாக இருக்கும் ஒரு நண்பன். கவிநயாவுக்கு அழகுராஜ் மீதும் அதிக பாசம் உண்டு அழகு மாமா என்று சிறுவயது முதல் தந்தையை போலவே அவனோடும் அன்பாக இருப்பாள். அவனுக்கும் நண்பனின் மகள் மீது தன் பிள்ளைகளை விட பாசம் அதிகம். தாயில்லாமல் வளர்ந்தபிள்ளை என்று அவளுக்கு அதிக செல்லமும் அவனிடம்.  

காலையில் வந்து கடையை திறந்து சுத்தப்படுத்திவிட்டு சுவாமிபடத்திற்கு ஊதுபத்தி கொழுத்தி வைத்துக்கொண்டிருந்த அழகுராஜ் கவிநயாவை கண்டதும் என்னாத்தா.. காலங்காத்தால ஓடியார.. உங்க அப்பன் எங்கஏதும் பிரச்சினையா..‘ என்றான் கலக்கமாக.  

ஐயோ.. அதெல்லாம் இல்ல மாமா.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. செய்வியளா..?’ என்றாள்.  

எம்புள்ளைக்கி செய்யாமலா..சொல்லு மாமா என்ன செய்யனும்‘ என்றான் அழகு. 

கவிநயாவுக்கு எப்படி கேட்பதென்று தெரியவில்லை. தயக்கமாக இருந்தது. ஆனாலும் தனக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். நேரம் வேறு போகிறது. பாடசாலைக்கும் போக வேண்டும். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அர போத்தல் கள்ளு வேணும்.. வாங்..கி.. தருவியளா..?’ என்றாள் வார்த்தைகளை மென்றுவிழுங்கி. 

அவள் சொன்னது காதில் விழுந்ததுதான் தாமதம் அடி கழுத.. என்ன பழக்கம் இது.. உங்கப்பன் படாதபாடுபட்டு உன்ன வளக்கிறான்.. நீ… என்று அழகுராஜ் கோபமாக பேசிக்கொண்டே போக அவனை இடைமறித்து 

ஐயோ மாமா.. அப்பாக்கு தான்.. லூசு மாமா நானா கள்ளு குடிக்கிறேன்..என்றாள் முறைத்துக் கொண்டு.  

உங்கப்பன் என்னக்கி குடிக்காம படுக்கிறான்.. ஏதோ புதுசா நீ வாங்கி குடுக்கிற.. அந்த குடிகாரபயலுக்கு ஏக்கனவே குடிக்கிறது பத்தாதாமா..‘ என்றான் அழகுராஜ். 

தந்தையை பற்றி அவன் அப்படி கூறவும் கவிநயாவுக்கு சுளீரென்று கோபம் வர மாமா.. எங்கப்பாவ பத்தி எதுனாச்சும் பேசினீங்களோ.. அப்புறம் நல்லாயிருக்காது பாத்துக்குங்க.. எங்கப்பா கஸ்ட்டப்பட்டு வேல செய்யிது.. அது குடிக்கிது.. உங்களுக்கு என்னவாம்..என்றாள் கவிநயா. 

சரி ஆத்தா கோவப்படாத.. அர போத்தல் கள்ளுதானே இரு நா வாங்கி தாறேன்..‘ என்ற அழகுராஜீடம் 

இல்ல மாமா நா சல்லி சேத்து வைச்சிருக்கன்.. அப்பாக்கு நான் சேத்து வைச்ச சல்லில தான் வாங்கனும்..‘ என்றாள் கவி. 

சரி குடு நா வாங்கி வைக்கிறேன்.. அந்திக்கு சலூன்ல பயலுக நிப்பானுக.. நீ ஸ்கூல் முடிஞ்சு போகக்குள்ள வந்து எடுத்திட்டு போ..‘ என்றான் அழகுராஜ். 

கீழ் லயத்திலுள்ள பெட்டிக்கடையில் அவசர தேவைக்கு வீட்டு சமையல் சாமான்கள் வாங்க கவியை தான் அனுப்புவான் சுந்தரம். அதில் வரும் ஐந்து பத்து மீதிகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரமாக சேர்த்து வைத்திருந்தாள். ஒரு வாரத்திற்க்கு முன் தான் அதை எல்லாம் சேர்த்து எடுத்து கடையில் கொடுத்து தாள்களாக மாற்றி வைத்திருந்தாள்.  

நூறும் ஐம்பதுமாக தாள்களை புத்தகப்பையிலிருந்து எடுத்து அழகுராஜிடம் கொடுத்து ஐநூத்தம்பது ரூவா இருக்கு மாமா.. இது போதுமா..‘ என்றாள். 

ஆ… அது போதும்.. நீ வெரசா கௌம்பு.. ஸ்கூல்ல பெல் அடிச்சிடுவாங்க..‘ என்று சொல்லி கவியிடம் இருந்து பணத்தை வாங்கி சட்டைப்பையில் வைத்தான் அழகுராஜ். 

இப்பொழுது தான் கவிநயாவுக்கு நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னே அவளை டவுனுக்கு கூட்டிக்கொண்டு போய் தீபாவளிக்கு உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான் சுந்தரம் அதோடு கூடவே போனவருடம் அவள் கேட்ட வெள்ளிக்கொலுசையும் நகைகடைக்காரரிடம் சொல்லி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கட்டி இப்போது வாங்கி கொடுத்திருந்தான். சுந்தரம் இனிப்பு பண்டங்கள் பெரிதாக சாப்பிடுவதில்லை என்றாலும் எல்லா பண்டிகைக்கும் மகளுக்காக கடைசி இரண்டு வகையான பலகாரமாவது செய்து விடுவான்.  

தனக்கென்று எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் தன் மகளுக்காகவே செய்யும் தன் தகப்பனுக்கு சின்ன சின்ன சந்தோசங்களையாவது கொடுக்க வேண்டும் என்பதே கவியின் ஆசை. அதில் ஒரு முயற்சி தான் இந்த தீபாவளி பரிசு.  

அப்பாக்கு என்ன வாங்கி குடுக்கலாம்..‘ என்று யோசித்து பார்த்தாள். தனக்கு பிறகு தன் தகப்பனின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு இந்த கள்ளு போத்தலுக்கு தான் இருக்கிறது. குடிப்பது உடலுக்கு கூடாது என்றாலும் அது தான் அவன் நிம்மதியான உறக்கத்துக்கு காரணம் என்பதை கவி புரிந்து வைத்திருக்கிறாள். இந்த தீபாவளிக்கு நல்ல கறிசோறு தானே சமைத்து அரை போத்தல் கள்ளும் வாங்கி கொடுத்து அப்பாவை வயிறார சாப்பிட வைக்கவென்று தீர்மானித்தாள். இப்பொழுது ஒரு வழியாக அரை போத்தல் கள்ளை வாங்கியும் விட்டாள். 

அன்று இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை. எப்படா விடியும் என்றிருந்தது. நாளை விடியபோகும் தீபாவளிக்காக அவள் காத்திருக்கவில்லை. நாளை தன் பெற்றவனின் முகத்தில் காணப்போகும் மகிழ்ச்சிக்காக அந்த இரவை கடக்க பொறுமையில்லாமல்  பாடுபட்டுக்கொண்டிருந்தாள் சுந்தரத்தின் செல்ல மகள்.