— படுவான் பாலகன் —
சாத்தியவள அறிக்கையுடன் வீதிகள் அமைப்படுகின்றதா? நீர் தேங்கி நிற்க காரணம் என்ன?
காலநிலை மாற்றங்களுக்கேற்ப உரிய பருவகாலங்களில் மழை வீழ்ச்சி பதிவாகின்றமை வருடாந்தம் நடந்தேறுவது வழமை. அவ்வாறு பதிவாகவும் மழை வீழ்ச்சி வருடாந்தம் மாற்றமுறுவதுண்டு. ஆனாலும் உரிய பருவகாலத்தில் மழைபெய்யும் என்பது கடந்துவந்த பாதையில் பெற்ற அனுபவமே. அம்மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் தற்காலத்தேவை. வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும். என்று சொல்லுவார்கள் அக்கூற்றுக்கேற்ப செயற்பட வேண்டியதும் மிகமிக அவசியமானதே.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரை அண்மைக்காலங்களில் மழை பெய்தவுடன் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி, மக்கள் அவதியுறுவதுண்டு. ஆனாலும் கடந்த தசாப்தங்களுக்கு முன்னரான காலங்களை எடுத்தாராய்ந்து பார்க்கின்ற போது, முகத்துவாரம் வெட்டப்பட்டால் நீர் வடிந்தோடிவிடும். முகத்துவாரம் வெட்டும் வரைக்கும் தான் நீர் தேங்கி நிற்கும். அந்நீரும் குடியிருப்புக்களில் தங்கியிருப்பது குறைவு. ஆற்றிலும், ஆற்றையண்டிய நிலப்பகுதியிலுமே அந்நீர் தேங்கி நிற்பதுண்டு. ஆனால் சில வருட காலங்களாக குடியிருப்புக்களில் நீர் தேங்கி நீண்ட நாட்களுக்கு நிற்கின்ற நிலைமை உருவாகி வருகின்றது. சிறுமழைக்கும் வீடுகளில் இருந்து இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்படுவதையும் கண்ணூடாக காண்கின்றோம். இந்நிலைக்கு இயற்கை ஒரு காரணமாகவிருந்தாலும், இயற்கையாக நீர்வழிந்தோடும் பகுதிகள் அடைக்கப்படுவதும் மற்றோர் காரணமாகின்றது.
மாவட்டத்தில் அபிவிருத்திகள் இடம்பெறவேண்டும். அதற்கு யாரும் தடையில்லை. ஆனாலும் அபிவிருத்தி செய்கின்ற போது, இயற்கை அமைப்புக்களையும் கவனத்தில் கொண்டே அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். ஆனாலும் அவை கவனத்தில் கொள்ளப்படுகின்றதா? அல்லது உரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அபிவிருத்திகள் நடைபெறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
கிறவல் வீதிகளாக இருந்த வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவை நடந்தேறவேண்டிய தேவையும் இருக்கின்றது. இவ்வீதி அமைப்புக்கு முன்னர், குறித்த வீதி அமைத்தலுக்கான சாத்தியவள அறிக்கை பெறப்படுவதுண்டு. அவ்வறிக்கை ஒழுங்காக பெறப்படுகின்றதா? அல்லது உரிய பகுதியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களால் மட்டும் அறிக்கை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகின்றதா? என்ற வினா தற்கால வீதி அமைப்பின் பின்னர், நீர்தேங்கும் நிலையில் எழுகின்றது.
வீதிகள் அமைக்கப்படுகின்ற போது, எழுந்தமானமாக அமைத்துவிட்டு செல்ல முடியாது. அவ்வீதியின் குறுக்கே கல்வெட்டுக்கள் இடப்பட வேண்டியிருக்கும். அக்கல்வெட்டுக்கள் எவ்விடங்களில் இடப்பட வேண்டும் என்பது குறித்து அப்பிரதேசத்து மக்களிடமே வினவ வேண்டும். அப்போதுதான் உரிய இடங்கள் மக்களால் அடையாளப்படுத்தப்படும். வீதிகள் புனரமைப்பின் போது உரிய வகையில் சாத்தியவள அறிக்கை பெறப்பட்டிருந்தால், நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டிருக்காது. மக்கள் அவதியுறும் நிலையும் ஏற்படாது. சாத்தியவள அறிக்கையின் ஒழுங்கின்மை, மக்கள் சிறு மழைக்கும், நீரில் மிதக்கும் நிலை உருவாகின்றமைக்கு காரணமெனலாம். அதேபோன்று இயற்கையாக நீர் ஓடுகின்ற பாதைகள், எப்போதும் நீர் வேகமாக வடிந்தோடக்கூடிய பாதைகளாகவே காணப்படும். அவ்வாறான இடங்களை தடுப்பணைகள் கொண்டு தடுகின்ற போது, நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்கும் நிலையை அடைகின்றது.
அதேவேளை சில வீதிகள் குறைதூரத்துடன் அமைக்கப்படுகின்றன. இதனால் வீதிகள் முழுமை பெறாத நிலையும் காணப்படுகின்றது. இதனாலும் வீதிகளில் அதிகளவு நீர்தேங்கி நிற்கும் நிலை உருவாகின்றது. இந்நிலைமையில் இருந்து பார்க்கின்ற போது, வருடாந்தம் மழைபெய்வதும், மக்கள் அவதியுறுவதும் இல்லாமல் ஆக்கப்பட உரிய பிரதேச மக்களினது ஆலோசனைகளைப் பெற்று நீர் வடிந்தோடுகின்ற இடங்களில கல்வெட்டுக்களை அமைத்து, மக்களின் இன்னல்களை போக்க உரிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.
வீதிகள் அமைக்கப்படுவதும் மக்கள் பயனுக்காகவே!. இருந்தாலும், மக்களை வெள்ளத்தில் தள்ளிவிட்டு வேடிக்கையும் பார்க்க முடியாது. உரிய திட்டங்களின் போது பெறப்படுகின்ற சாத்தியவள அறிக்கை சரியானதா என்பதை ஆராய்வதுடன், நீர்வடிந்தோடும் வடிகான்களையும் அமைப்பதற்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.