— வி. சிவலிங்கம் —
சிங்கள பௌத்த இன மையவாதம்
– பெரும்பான்மை வாதம் என்பது மிகப் பழமையானது, இலகுவில் கையாளக்கூடியது.
– பிளவுகளைத் தோற்றுவிப்பது என்பது இன்றைய ஜனநாயக விளக்கத்தில் மிகவும் வாய்ப்பானது.
– தேர்தல் முறைகள் புனிதமானவைதான். ஆனால் இவைகளே தேசத்தையும், அதில் வாழும் மாந்தர்களையும் அழிக்கவும் உதவுகின்றன.
– சிங்கள பௌத்த இனமையவாதம் என்பது இலங்கையின் போக்கை மாற்றும் பெருந்தேசியவாத கருத்தியலாக மாறி வருகிறது.
– சிறுபான்மைத் தேசிய இனங்கள் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளின் பிடிக்குள் சீரழிகின்றன.
இலங்கையில் சிங்கள பௌத்த இனமையவாதத்தின் வரலாறு
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் மிகவும் ஆதிக்கம் செலுத்திவந்த திறந்த பொருளாதார நவதாராளவாத கட்டமைப்பு இன்று ஜனநாயக அடிப்படைகளைக் கேள்விக்குட்படுத்தி வருகிறது. சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் மிகவும் கூறுபட்டுச் செல்கிறது. போரும், சிங்கள பௌத்த இனமையவாத சிந்தனைகளும் இணைந்து செயற்பட்டமையால் போரின் வெற்றி அக்கருத்தியலை ஆழமாக்க உதவியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் சிங்கள பௌத்த இனமையவாத கருத்தியல் என்பது முதலில் அநகாரிக தர்மபால பின்னர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அதன் பின்னர் தற்போது குணதாஸ அமரசேகர, நளீன் டி சில்வா என்பவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனைகள் மிக நெடுங்காலமாக பாஷா பெரமுன, சிங்கள மகாஜன பக்ஷய, ஜாதிக விமுக்தி பெரமுன என்ற பெயர்களில் இயங்கிய போதிலும், இக்கால வெளியில் செயற்பட்ட பலமான தொழிற்சங்க கட்டுமானங்களும், அவற்றுடன் இணைந்த இடதுசாரிக் கட்சிகளும் அரசியல் விவாதங்களை வர்க்கப் போராட்ட அரசியல் விவாதங்களாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு, குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பு என மாற்றியிருந்தன. இதனால் இனவாத அரசியல் என்பது அதிகளவு தலைதூக்க முடியவில்லை.
1977ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், இடதுசாரிக் கட்சிகளின் தோல்விகளும் இனவாத சிந்தனைகள் வளர்வதற்கான இடைவெளிகளை ஏற்படுத்தியிருந்தன. 1980களின் நடுப் பகுதியில் ‘ஜாதிக சிந்தன’ (தேசிய சிந்தனை) என்ற பெயரில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பல கட்டுரைகள் வெளிவந்தன. இவற்றில் இருவர் மிக முக்கியத்துவம் பெறுகின்றனர். குணதாஸ அமரசேகர, நளீன் டி சில்வா என்போரே அவர்களாவர். இவர்களின் சிந்தனைகள் தற்போது இன்றைய இலங்கை ஆட்சியாளரின் வழிகாட்டுக் கோட்பாடுகளாக மாற்றமடைந்து வரும் பின்னணியில் அவை பற்றிய ஆய்வாகவே இக் கட்டுரை அமைகிறது.
தமிழ் அரசியலின் இன்றைய நிலை
தற்போது இலங்கையில் காணப்படும் கருத்தியல் அடிப்படையிலான மாறுதல்களை நாட்டின் இதர தேசிய இனங்கள் அவதானிப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக தமிழ் – குறும் தேசியவாத சக்திகள் தமிழ் மக்களினதும், இதர தேசிய சிறுபான்மை இனங்களினதும் இருப்பு ஆகியவற்றை வெறுமனே பாராளுமன்ற வாதங்கள், அங்கு வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புகளில் அளவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களினது இருப்பு என்பது பலமான கருத்தியல் அடிப்படையில் எடுத்துச் சென்றால் மாத்திரமே காத்திரமான இருப்பை நீண்ட காலத்தில் உறுதி செய்ய முடியும் என்பதை இவை புரிந்து கொண்டதாகக் காண முடியவில்லை.
அதாவது இலங்கையின் அடையாளம் என்பது அதன் ஜனநாயக பன்மைத்துவ அடிப்படைகளிலேயே தங்கியிருப்பதையும், நாட்டின் தேசிய கட்டுமானம் என்பது பல்லினங்களின் ஜனநாயக சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அரசியல் யாப்பு அடிப்படையிலான ஜனநாயக ஆட்சிக் கட்டுமானமாக அமையும் அவசியம் குறித்த வற்புறுத்தல்கள் எதுவும் இல்லை.
இலங்கை என்பது பௌத்த நாடு எனவும், அதன் அரசியல் கட்டுமானம் என்பது பௌத்த தர்மத்தின் அடிப்படையிலானது எனவும், அதன் பிரகாரம் ஏனைய தேசிய இனங்கள் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயற்பட அனுமதிக்கப்படுவதாகவும் கூறும் விவாதங்கள் மிக ஆழமாக வற்பறுத்தப்பட்டு வரும் நிலையில், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்கள் இலங்கை என்ற தேசத்திற்குள் தமது இருப்பு என்பது இரண்டாவது இடமா? அல்லது சம உரிமையுள்ள இருப்பிடமா? இரத்தக் களரியை ஏற்படுத்துவது பௌத்த தர்மத்திற்கு உகந்ததா? என்பதை கருத்தியல் அடிப்படையில் ஆழமாக விபரிக்க வேண்டிய வேளை இதுவாகவே இருக்க முடியும்.
எண்ணிக்கை பெரும்பான்மை
உதாரணமாக, சிங்கள பெரும்பான்மை வாதம் என்பது இலங்கை என்பது சிங்கள, பௌத்த நாடு என ஆரம்பித்து பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற எண்ணிக்கை அடிப்படையிலான தேர்தல் விளக்கத்திற்குள் சென்று “ஒரு நாடு, ஒரு நீதி” என்ற விளக்கத்திற்குள் தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலம் இதர தேசிய இனங்களது தனித்துவம் என்பது மறுக்கப்படுவதுடன் ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலானதாக வரையறுக்கப்பட்டு சமநீதி, சமஉரிமை, நியாயமான அடிப்படையில் உற்பத்தியும், விநியோகம் என்பன பகிரப்படுதல் போன்ற அடிப்படைத் தத்துவங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மறுக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் போக்குகள் ஒரு தூக்கத்தில் நடந்து செல்லும் பாதையையே அடையாளப்படுத்துகின்றன. நாட்டில் வாழும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை முழுமையாகவே அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துச் செல்வதும், அச் சமூகத்திற்குள் வாழும் ஆழுமை மிக்க அல்லது தேசிய வளர்ச்சியில் உண்மையான அக்கறை செலுத்தும் பிரிவினருக்கு உரிய பங்கை வழங்க மறுப்பதும் மிகவும் பாரதூரமான பிரச்சினையாகவே காணப்படுகின்றன.
அரசின் தந்திர அரசியல்
இக் கட்டுரை சிங்கள பௌத்த இன மையவாத கருத்தியல் என்பது எவ்வளவு ஆழமானது? அதன் அடிப்படைகள் ஏற்கனவே சமூகத்தை மிகவும் பாதிக்கத் தொடங்கியிருப்பதையும் அடையாளப்படுத்துகிறது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள புதிய சட்டங்கள், கொள்கைகள் என்பவற்றுடன் அரசு மிகவும் சிக்கலான இத் தருணத்தில், குறிப்பாக பொருளாதார நிலமைகள் மோசமாக உள்ள வேளையில் ஏன் மேலும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. இதன் அடிப்படைக் காரணம் சிங்கள பௌத்த இனமையவாத கருத்தியல் சகல மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்கள் பாதி வெற்றியை அடைந்தவர்களாவர்.
நாடு மிகவும் மோசமான சிக்கலுக்குள் அகப்பட்டிருந்த போதிலும் அவற்றின் தாக்கத்தை மறைப்பதற்கு எதிரிகள் தேவைப்படுகிறது. புதிய புதிய எதிரிகள் தேவையாகிறது. எனவே புதிய எதிரிகளை உருவாக்குவதாயின் புதிய பிரச்சனைகளை அரசு தோற்றுவிக்க வேண்டும். உதாரணமாக, கொரொனா தொற்றுநோய் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் திசை திருப்பும் வகையில் முஸ்லீம் மதத்தவரின் ஜனாசாக்களைப் புதைப்பதா? எரிப்பதா?என்ற பிரச்சினையை யார் உருவாக்கினார்கள்? மாலைதீவில் புதைக்க ஏன் முயற்சிக்கிறார்கள்?முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரிக்கும்போது அதற்கு எதிராக தீவிரவாதம் உருவாகுவதற்கான புறச் சூழல் உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. இப் பின்னணியில் யாராவது பௌத்த சிலைகளைத் தாக்கினால் அவை பயங்கரவாதம், தீவிரவாதம், அமைதிக்குப் பங்கம், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என அரசின் வாதம் செல்லும். இதன்மூலம் ராணுவ வாதத்தினை நோக்கி மக்களை அல்லது தீவிரவாத சக்திகளை உற்சாகப்படுத்த அரசு விரும்புகிறது. நாட்டை ராணுவப் பிடியில் வைத்திருப்பதற்காக புதிய புதிய பிரச்சினைகளை அரசு ஆரம்பிக்கிறது. இங்கு எதிர்க்கட்சிகளும், தேசிய சிறுபான்மை இனக் கட்சிகளும் வெறுமனே அழுகுரலிடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. ஏனெனில் இதன் இயக்கு விசையாக சிங்கள பௌத்த இனமையவாதம் செயற்படுகிறது.
போர்க்கால இனமைய வாதம்
80களின் பின்னர் நாடு நவதாராளவாத திறந்த பொருளாதார செயற்பாடுகளின் காரணமாக மேற்கு நாடுகளின் வலைக்குள் சிக்கியிருக்கிறது. போர்க் காலத்தில் ஐ தே கட்சியை நாட்டின் எதிரியாக, நாட்டைப் பிரிப்பதற்கு உதவுவதாக குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஒரு புறத்தில் ஐ தே கட்சியை தேசத்தின் அரசியல் துரோகியாக அடையாளப்படுத்திய அதே வேளை தேசத்தில் செயற்பட்ட உள்ளுர் முதலாளித்துவ சக்திகளும், ராணுவமும் போர்க்காலப் பொருளாதார நிலமைகளைப் பயன்படுத்திப் பெரும் செல்வத்தைத் திரட்டினர். போரை நடத்துவதற்கான நிதி அதிகம் தேவைப்பட்டதால் அரச அதிகாரங்கள் மிக அதிகளவில் மீறப்பட்டு தேசிய பொருளாதாரத்தின் பிரதான பிரிவுகள் ஊழல் மையங்களாக மாறின. சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள், இறக்குமதிகள் தாராளமாக நடந்தேறின.
அரச கட்டுமானம் என்பது ஊழல் மையங்களாக மாறியதால், நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் வளர்ந்து புதிய மத்தியதர வர்க்கம் உருவாகியது. இந்த மத்தியதர வர்க்கம் போரை மிகவும் ஆதரித்தது. ஏனெனில் போர் என்பது தேசத்தின் வளங்களைச் சட்ட விரோதமாகச் சூறையாடவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்புகளை வழங்கியது. நாட்டில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துச் சென்றவேளை பௌத்த மகா சங்கம் இம் மாற்றங்கள் குறித்துக் கவலையடைந்திருந்தது. ஆனால் பிக்குகளில் ஒரு சாரார் சிங்கள பௌத்த இனமையவாத அடிப்படையில் போரை உக்கிரப்படுத்த உதவினர். அதற்கான பிரதியீடாக விகாரைகளுக்கு நிலங்களும், பெருந்தொகை பணங்களும் வழங்கப்பட்டன. இதனால் சமூகப் பாதிப்புகள் குறித்து பிக்குகள் மௌனம் காத்தனர். இவற்றின் விளைவாக அவர்களும் பெரும் பணக்காரர்களாகவும், விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி தமது சௌகரியங்களை வளர்ப்பவர்களாகவும், அரச தீர்மானங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் மொத்தத்தில் சுகபோகிகளாக அவர்களும் மாறினர்.
சுதந்திரக் கட்சியும், ராஜபக்ஸாக்களும்
இவ்வாறு சிங்கள பௌத்த இனமையவாத கருத்தியல் மாற்றமடைந்து சென்ற வேளையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த தனிநபர் முரண்பாடுகள் குறிப்பாக பண்டாரநாயக்கா குடும்பத்தினருக்கும், ராஜபக்ஸ குடும்பத்தினருக்குமிடையே எழுந்த முரண்பாடுகள் புதிய ஆட்சிக்கான அல்லது புதிய அரசியல் கட்சிக்கான தோற்றுவாயாக மாறின. இன்று உருவாகியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் தோற்றம் என்பது பண்டாரநாயக்கா பரம்பரையிலிருந்து மாறிச் செல்லும் ஒரு வரலாற்றின் ஆரம்பமாக உள்ளது. அவ்வாறாயின் பண்டாரநாயக்கா அரசியல் அடிப்படைகளிலிருந்து ராஜபக்ஸாக்களின் அடிப்படைகள் மாறியுள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது. அதுவே இக் கட்டுரையின் பிரதான மூலக் கூறு ஆகும். அதாவது இன்றைய ராஜபக்ஸாக்களின் சிங்கள பௌத்த இனமையவாத சிந்தனைகள் பண்டாரநாயக்காவின் பஞ்ச மகா பலவேகய சிந்தனைகளிலிருந்து மிகவும் வேறுபட்டுச் செல்வதை நாம் நோக்கவேண்டியுள்ளது.
கருத்தியல் என்பது ஒரு மாலையின் அடிப்படையான நூலின் ஆதாரத்தைப் போன்றது. அந்த நூலே அதன் பலமாகவும், ஆதாரமாகவும் உள்ளது. அதேபோன்று அரசின் அல்லது ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நடவடிக்கைகளை விளக்கும் அடிப்படையாக அதன் கருத்தியலே உள்ளது. இதுவே இன்றைய சிங்கள பௌத்த இனமையவாத அரசியலின் இயக்கு விசையாகவும் உள்ளது. ராஜபக்ஸாக்கள் தமது குடும்ப ஆதிக்கத்தை பண்டாரநாயக்கா வரலாற்றிற்கு இணையாக எடுத்துச் செல்வதாயின் அவர்களுக்கும் இக் கருத்தியல் தேவைப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கருத்துகளை ஏற்கனவே குறிப்பிட்டவாறு குணதாஸ அமரசேகர, நளீன் டி சில்வா என்போர் கூறிவந்த போதிலும் அவை அவ் வேளையில் அவ்வளவாக மக்கள் கவனத்திற்குச் செல்லவில்லை. ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்த முரண்பாடுகள், 1995 இல் ஐ தே கட்சியும், சந்திரிகா தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசு உருவாக்கம் ஒன்றிற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வேளையில் அதனைத் தடுக்கும் முயற்சிகளில் இனவாத சக்திகளுடன் இணைந்து மகிந்த தரப்பினர் செயற்பட்டனர்.
போரின் கருத்தியல்கள்
போர் உக்கிரமடைந்து சென்ற வேளையில் சிங்கள பெருந்தேசிய தீவிரவாதம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம்’ என்ற பெயரில் பல அமைப்புகள் தோன்றின. சிங்கள வீர விதானய, சிகல உறுமய, எக்ஸத் சிங்கள மகா சபா, சிங்கலே மகா சம்மத பூமிபுத்ர பக்ஷய என்பன சிலவாகும். இவை யாவற்றையும் இணைக்கும் ஒரு வலுவான சக்தியாக இவர்களது கருத்தியல்கள் இருந்தன.
பண்டாரநாயக்கா சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய வேளையில் காணப்பட்ட அரசியல் புறச் சூழலும், இன்று சிறீலங்கா பொதுஜன பெரமுன தோற்றமடைந்துள்ள அரசியல் புறச் சூழலும் மிகவும் கவனத்திற்குரியன. உதாரணமாக, பண்டாரநாயக்காவின் அரசியல் பிரவேசம் என்பது இனவாதமாக நாம் விபரித்தால் ராஜபக்ஜாக்களின் இன்றைய அரசியலையும் இனவாதம் என சமப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் வெவ்வேறு வகைப்பட்ட இனவாதம் உண்டா? நாம் இவ்வகை அரசியல் நெருக்கடிகளின் போது இனவாத அரசியலின் தரம் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அதுவே அதன் பாதிப்புக் குறித்த முடிவைத் தரவல்லது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றம்
நாம் மீண்டும் பண்டாரநாயக்காவின் அரசியல் பின்னணியை நோக்கித் திரும்புவது அவசியம். அவர் மிகவும் ஆழமான கிறிஸ்தவ பின்னணியையும், பிரித்தானிய நிலப் பிரபுத்துவ அடிப்படையிலான இலங்கை நிலப் பிரபுத்துவ பின்னணியைக் கொண்டவர். அவரது ஒக்ஸ்வபோர்ட் பல்கலைக்கழக கல்வியும், அவரது ஆங்கிலேய வாழ்க்கை முறையும், கிறிஸ்தவ பின்னணியும் ஓர் இனவாத அரசியல்வாதிக்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. பிரித்தானியாவில் அவர் தனது கல்வியைத் தொடர்ந்த வேளையில் இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன. இதனால் அவர் காந்திய கொள்கைகளில் கவரப்பட்டிருந்ததாக அவரது வரலாறு கூறுகிறது. அவ்வாறாயின் அவர் காந்தியக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தால் இனப் பாகுபாட்டில் அவருக்கு நம்பிக்கை இருந்திருக்க முடியாது. பிரித்தானிய லிபரல் பொருளாதாரக் கோட்பாடுகளில் அவருக்கு அதிக நம்பிக்கை காணப்பட்டது. அதேபோலவே பகுத்தறிவு வாதங்களிலும் அவர் புலமை பெற்றவராக இருந்துள்ளார்.
இவற்றின் பின்னணியில் அவர் இலங்கை திரும்பியதும் அரசியலில் ஈடுபட்ட போது பௌத்த மதத்திற்கு ஏன் மாறினார்? ஆங்கிலேய உடைகளைக் களைந்து தேசிய உடைக்கு ஏன் மாறினார்?இனவாதத்திற்கு அப்பாற்பட்டவர் எனில் தனிச் சிங்களம் மட்டும் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்? இவ்வாறான கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டும். ஆய்வாளர்களின் கருத்துப்படி உள்நாட்டில் பௌத்த மதம், சிங்கள மொழியின் இருப்பிடம் போன்றன குறித்து ஆழமான விவாதங்கள் அங்கு இடம்பெற்றிருந்தன. தேசிய அரசியலில் அவர் தன்னை இணைப்பதாயின் தனது அணுகுமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே தாம் ஒரு தேசியத் தலைவராக மாற்றிக் கொள்வதற்கான தயாரிப்புகளே அவை எனக் கூறப்படுகிறது. காந்தியக் கொள்கைகள் குறித்த அவரது ஈடுபாடுகள் என்பது இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பொருத்தமான அணுகுமுறை காந்திய சிந்தனைகள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். பகுத்தறிவு வாதியான அவர் பௌத்த மதத்தைத் தழுவியதும், தனது ஆடைப் பழக்க வழக்கத்தை மாற்றியதும் பாரம்பரியத்திற்கும், நவீனத்திற்குமிடையே ஓர் பொது வெளியை நோக்கிய பாதையை உருவாக்கும் நோக்கமே எனக் கூறப்படுகிறது.
சிங்களம் மட்டும் சட்டம்
இங்கு எமது கவனத்திற்குரிய முக்கிய அம்சமாகவுள்ள விடயம் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை அவரால் எவ்வாறு முன்னெடுக்க முடிந்தது? என்பதாகும். பண்டாரநாயக்காவின் கல்வி மற்றும் அவரது குடும்பப் பின்னணி என்பது முற்றிலும் மிக உயரத்தில் இருந்தது. அவ்வாறான ஒருவர் தேசிய அரசியலில் உயர்ந்த இடத்தை நோக்கி நகர்வதாயின் தமது அணுகுமுறைகளில், நம்பிக்கைகளில் சில சமநிலை ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும். அவர் இலங்கைக்குத் திரும்பிய வேளையில் அங்கு தேசியவாதம் தொடர்பான விவாதங்கள் குறிப்பாக கலாச்சாரம், அடையாளம், சமூக விழுமியங்கள் போன்றன விவாதத்திலிருந்தன. எனவே இவை குறித்து அதாவது நாட்டில் நிலவும் பாரம்பரிய சிந்தனைகளுக்கும், நவீனத்திற்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் அணுகுமுறையை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அவரது பிரதான கவனம் என்பது நாட்டை குடியேற்ற பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து மாற்றி அமைப்பதாக மட்டுமே காணப்பட்டது. ஆனால் அங்கு சிங்கள, பௌத்த தேசியவாதம் பலமாகக் காணப்பட்டதால் அவற்றை இணைப்பது அவசியமாகியது.
“சிங்களம் மட்டும்”
இங்கு சில வரலாற்று நிகழ்வுகளோடு ‘சிங்களம் மட்டும்’ சட்டம் இயற்றப்பட்ட பின்னணியைப் பார்க்கலாம். இலங்கையின் பல முன்னணி அரசியல் தலைவர்கள் ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ என்ற அமைப்பில் 1946களில் செயற்பட்டார்கள். அதன் பின்னர் ஐ தே கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது அவர் அக் கட்சியில் இணைந்தார். 1948இல் முதலாவது சுதந்திர இலங்கையின் மந்திரி சபையில் உறுப்பினரானார். அடுத்த மூன்று வருடங்களில் அக் கட்சிக்குள் எழுந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக ஐ தே கட்சியிலிருந்து அவர் வெளியேறினார்.
இவ் வெளியேற்றத்திற்கான பிரதான காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போல இலங்கையைக் குடியேற்ற பொருளாதாரக் கட்டுமானத்திலிருந்து மாற்றி அமைக்கும் திட்டத்தை அமுல்படுத்த எண்ணிய நிலையில் டி எஸ் சேனநாயக்கா தலைமையிலான ஐ தே கட்சி குடியேற்ற ஆட்சியாளருடன் தொடர்ந்தும் உறவுகளைப் பேணத் தீர்மானித்தனர். இதுவே வெளியேற்றத்திற்கான பிரதான காரணியாக அமைந்தது.
இங்கு ‘சிங்களம் மட்டும்’ சட்டம் தொடர்பான வரலாற்றினை நோக்கினால் குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்னதான காலப் பகுதியை நோக்கினால் அதாவது 1943ம் ஆண்டுப் பகுதியில் பண்டாரநாயக்கா தமிழுக்கும், சிங்களத்திற்கும் சம அந்தஸ்தை வழங்கும் கொள்கையையே ஆதரித்து வந்தார். அவ்வாறாக சம அந்தஸ்தைக் கோரிய அவர் 1956ம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டத்தை ஏன் கோரினார்? அதன் பின்னணியில் இனவாதம் தொழிற்பட்டதா?
சர்வஜன வாக்குரிமையின் தாக்கம்
இதற்கான வரலாற்றினை நாம் ஆராயும்போது வாக்குரிமை தொடர்பான வாதங்களை நாம் அவதானிக்கலாம். அதாவது வாக்களிக்கும் உரிமை தொடர்பான வாதங்களின்போது பல கல்விமான்கள் குறிப்பாக சேர். பொன். இராமநாதன், பண்டாரநாயக்கா போன்றோர் படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்தபோது அப்போது செயற்பட்ட தொழிற்சங்கவாதியான ஏ ஈ குணசிங்க மட்டுமே தொழிலாளர்களின் உரிமைக்காகப் பலமாக வாதாடினார். இதன் காரணமாக எழுந்த விவாதங்கள் காரணமாக 1931ம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட சகலருக்குமான வாக்குரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு வாக்குரிமை தொடர்பாக ஏற்பட்ட பாரிய மாற்றம் என்பது அரசியல் கட்சிகளின் போக்கையும் மாற்றியது. அதாவது மக்களின் வாக்குகளை அபகரிக்க பலவித தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக ஏற்கனவே சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளுக்குச் சம அந்தஸ்தைக் கோரிய பண்டாரநாயக்க போன்றவர்கள் சிங்கள மொழியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். வரலாற்றினைப் பின்நோக்கிப் பார்த்தால் இரண்டு மொழிகளின் சம அந்தஸ்துக் கோரியே சுதந்திரத்திற்கு முன்னதான அரசியல் காணப்பட்டது.
1943ம் அண்டு ஜே ஆர் அரச சபையில் (State Council) சிங்களம் மட்டுமே அரச மொழி என பிரேரித்திருந்தார். இப் பிரேரணை முன்மொழியப்பட்ட வேளையில் பண்டாரநாயக்கா இரண்டு மொழிகளையும் அரச மொழியாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். எனவே ‘சிங்களம் மட்டும்’ என்ற கோரிக்கை சர்வஜன வாக்குரிமை வழங்கிய காரணத்தால் எழுந்த நிலமைகளின் அடிப்படையிலேயே அவ்வாறான மாற்றம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
உள்நாட்டில் மொழிப் பிரச்சனை கூர்மையடைந்து சென்ற வேளையில் அவர் 1957 இல் தந்தை. செல்வாவுடன் ஒப்பந்தம் செய்தார். உள்நாட்டில் அவருக்கு எதிராக பௌத்த பிக்குகள், இனவாதிகள் என்போர் பலத்த எதிர்ப்புகளை வெளியிட்ட போதிலும் அவ்வாறான ஒப்பந்தத்திற்கு அவர் சென்றது அவரது லிபரல் ஜனநாயக நம்பிக்கைகளின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.
எனவே ‘சிங்களம் மட்டும்’ சட்ட உருவாக்கம் என்பது இனவாத பின்னணி என்பதை விட வேறு காரணிகளே அவ்வாறான நிலமைகளுக்குக் காரணமாக அமைந்ததாக வரலாறு கூறுகிறது. ஆகவே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கம் என்பது இன்றைய சிறீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கத்தின் பின்னணியில் காணப்படும் இனவாத அரசியல் அல்ல என்பதும், குடியேற்ற ஆதிக்க பொருளாதாரக் கட்டுமானத்திலிருந்து சுயசார்புப் பொருளாதாரத்தை நோக்கிய அரசியலே பிரதான இயங்கு சக்தியாக தொழிற்பட்டது என்பது எமது கவனத்திற்குரியது.
இதுவரை நாம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றத்திற்கான வரலாற்றுக் காரணிகளையும், அதில் பிரித்தானிய குடியேற்ற ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்து புதிய தேசிய பொருளாதாரக் கட்டுமானங்களை உருவாக்குவதே அதன் அடிப்படைகள் என்பதையும் நோக்கினோம்.
இவ் வரலாற்றுப் பின்னணியில் இன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள மகிந்த தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் எவ்வாறான அடிப்படையில் கட்சியின் எதிர்காலத்தைக் கட்டி அமைக்க விரும்புகின்றனர்? அவர்களின் கருத்தியல் அடிப்படைகள் எவை? என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
(தொடரும்)