கண்ணைக் கட்டிக் கோவம் பாம்பு வந்து கொத்தும்…

கண்ணைக் கட்டிக் கோவம் பாம்பு வந்து கொத்தும்…

   — வேதநாயகம் தபேந்திரன் — 

எமது சின்ன வயதுப் பழக்க வழக்கங்களைப் பெரியவர்களான பிறகு இரைமீட்டிப் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனித்துவமானது.   

கோபம் போடுதல், நேசம் போடுதல் எனும் பழக்கம்  எமது சிறுவர் காலத்தில் இருந்தது. 

கோபமும் நேசமும்  மனித குலத்தின் பகுத்தறிவினால் வந்தவை. ஆனாலும் சின்னஞ்சிறு பராயத்தைக் கடந்தே யாவரும் வந்திருப்போம். 

அவை மிகவும் சுவாரஸ்யமான நினைவுகள். 

கள்ளம், கபடம், சூது, வாது தெரியாத பருவங்கள் அவை. 

உண்மையில் மின்சாரம், நவீன வசதிகள், தொலைக்காட்சி,  இணையப் பாவனை எதுவுமே இல்லாத மனித வாழ்க்கை ஒரு சந்தோசம்தான். 

”ஆதிவாசி வாழ்க்கை வாழத் தான் உங்களுக்கு விருப்பமோவென …“ 

நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. 

1980 களுக்கு முந்தி வாழ்ந்த எமது தலைமுறைக்குத்தான் குறைந்த வசதியில் நிறைந்த இன்பம் பெற்ற வாழ்வின் ருசி தெரியும். 

எமது சின்ன வயதில் பாடசாலை நாள்கள் மிகவும் மகிழ்வாகவே கழிந்தன. யுத்தத்தின் சத்தங்கள் கேட்காத அந்த நாள்களில் நடையிலேயே பாடசாலை போவோம்.  

பலதும் பத்தும் கதைத்துக் கொண்டு போகும்போது வரும் சுகம் தனித்துவமானது. 

வழியில் அகப்படும் மாங்காய், புளியங்காய், இலந்தைப்பழம், கொட்டங்காய், நெல்லிக்காய், விளாங்காய், ஈச்சங்காய் என அகப்படும் எல்லாமே கொறித்துக் கொண்டு போய் வருவதில் கிடைக்கும் சுகம் எதிலுமே வராது. 

எமது தலைமுறையின் ஆரோக்கியத்துக்கு இயற்கை தந்த காய் கனிகளும் ஒரு காரணம். 

ரியூசன் தெரியாத அல்லது இல்லாத காலம் என்பதால் ஓய்வுப் பொழுதுகள் யாவும் எமக்கே சொந்தமாக இருந்தன.  

பெடி பெட்டையளாகப் போய் வரும் போது விளையாட்டுப் பகிடிகளில் ஆளுக்காள் கொழுவுப் படுவோம். 

சின்னச் சின்னதாய்ச் சந்தோசச் சண்டைகள் வரும்.  

சிலவேளை அது கோபப்பட்டு ஆளையாள் அடிபடும் உண்மையான கோபச் சண்டைகளாக மாறும். பெரிய சண்டைகளாகும். 

அப்போது எமது கைகள் இரண்டினதும் ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் கொழுவி முகத்தைக் கடுப்பாக்கி கோபம் சொல்லுவோம். 

 ”கண்ணைக் கட்டிக் கோவம், பாம்பு வந்து கொத்தும். செத்தாலும் வீட்டுக்கு வர மாட்டேன். ”என்று நாட்டார் பாடல் ஓசையுடன் கூறிக் கோபம் போடுவோம்.. 

சில ஊர்களில் ”கோவம், கோவம், கோவம். கண்ணைக் கட்டிக் கோவம்.பாம்பு வந்து கொத்தும். செத்தாலும் வீட்டுக்கு வர மாட்டன்” என்ற ஓசைநயம் மிக்க பாட்டு வரிகள் இருக்கும். 

”கொய்யாக்காய் என்றால் கோபம். நெல்லிக்காய் என்றால் நேசம்” இது சில ஊர்களின் சிறுவர்களின் கோபம் போடுதல் தொடர்பான சொல் வழக்காக இருந்தது. 

”கோபம், நேசம் என்ற போரும் சமாதானமும்” இவ்வாறான ஊர் வழக்கில் தான் இருந்தது. 

மட்டக்களப்பு பிரதேச வழக்கில் ”சின்னி(சின்ன) விரலைக் காட்டுதல் நேசம் போடுதல் எனவும், பெரு விரலைக் காட்டுவது கோபம் போடுதல்” எனவும் அழைக்கப்பட்டது. 

கோபம் போடுதலை அத்தம் போடுதல் என்ற சொல் வழக்கால் அழைத்தார்கள். 

இதற்காக ஒரு சொல் தொடரும் உண்டு.. ”அத்தம், பித்தம், கோழிப்பீ நாத்தம், செத்தாலும் கதைக்க மாட்டன்” என அது தொடரும். 

இந்திய தமிழகத்தில் கோபம் போடுதலுக்கு ”கா” விடுதல் என்பார்கள்.நேசம் போடுதலைப் “பழம்” என்பார்கள். 

ஆனால் விரல் சைகள் வேறுபடும். கோபம் போடுதலுக்கு உன்னோட “டூ” எனச் சொல்வதாக அறிகிறேன். 

இவ்வாறு சின்னஞ் சிறுபராயக் கோபம் போடுதலில் ஒரு வகை ரசனை இருக்கும். 

கோபம் போட்டு விட்டுக் கதைக்காமல் இருப்பார்கள். பாடசாலைகளில், ஊரில் சேர்ந்து விளையாட வேண்டிய தேவை ஏற்படும்போது ஒரு வகை வெட்கம் வரும். 

நேசம் போட்டுக் கதைக்க வேண்டுமென்ற ஆசை வரும். ஆனால் வலியப் போய் நேசம் போடக் கௌரவம் விடாது. ஆனாலும் நேசத் தூது விடுவோம். இதுவும் ஒரு வகையான காதல் தூது போலத்தான் இருக்கும். 

கோபம் போட்டவரைக் காணும் போது புது மாப்பிளை, பொம்பிளை போல ஒரு வெட்கம் வரும்.  

கமலின் ஔவை சண்முகி படத்தில் மாமி வேசம் போடும் கமலுக்கு வரும் வெட்கம் போல இருக்கும். 

எமது சகபாடிகள் நேசமாக்குவதில் எரிக்சொல்ஹெய்ம் போல நடக்க ஆரம்பிப்பார்கள்.  

எழுத்து உடன்படிக்கைகள் எதுவும் இல்லாமல் நடத்தை உடன்படிக்கை மூலமாக நேசம் வந்து விடும். 

சின்னப் பருவப் பெடியனும் பெட்டையும் கோபம் போட்டால் நேசமாக்குவதற்குச் சோடி கட்டிக் கூறுவார்கள்.  

இந்தச் சோடி கட்டுதல் பதின்ம வயது வர காதலாகக் கூட வளர்ந்தும் விடும். 

ஐந்தாம் ஆண்டு வரை மட்டும் படிக்கக் கூடிய பள்ளிக் கூடங்களில் படித்தோர் தம்முடன் படித்த பெடி பெட்டையளுடன் கோபம் போட்டால், நேசம் போட முன்பு ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக் கூடம் மாறிப் போய் விடுவோம். 

ஆறாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தால் அல்லது ஒரே ஊரில் ஒரே அயலில் ஒன்றாக வாழக் கிடைத்தால் நேசம் போடுதல் நடக்கும். 

பருவ வயதை அதாவது பதின்ம வயதை அடைந்தால் இந்த நேசம் போடுதல் சில வேளை காதலாக மாறி விடும். பலருக்கு சாதாரண நேசத்தில் தான் முடியும். 

காதல் நேசத்தில் இருக்கும் திறில் ஒரு வகை ருசி தான். 

சூர்யாவின் சிங்கம் 1 படத்தில் வருவது போலக் கோபக்காரர்களைக் ‘கையைப் பிடி கட்டிப்பிடி..’ என்று சொல்லி ஒற்றுமையாக்கிய படலம் எமது காலத்தில் காணவில்லை. 

பிறகு சண்டைப்படும் ஆணையையும் பெண்ணையும்  ‘கையைப் பிடி, கட்டிப் பிடி’ எனச் சொல்லி விட்டி கட்டிப் பிடித்த அவர்கள் உணர்ச்சி வேகத்தில் ஓட ”மாயாண்டி பொண்டாட்டியை முனியாண்டி இழுத்துண்டு ஓடுறான் டோய் …” எனச் சொல்லும் நிலை வரக்கூடாதென முன் கூட்டியே நினைத்தோமோ தெரியவில்லை.