— ஏ.பீர் முகம்மது —
சுவாமி விபுலாநந்தர் தமிழின் முதற் பேராசிரியர் என்று அழைக்கப்படுபவர். உலகளாவிய இராம கிருஸ்ண மிஷன் மடப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி ஆன்மீகவாதியாக உயர்ந்தவர். இனமத வேறுபாடுகளுக்கப்பால் எல்லோராலும் அவர் நேசிக்கப்பட்டார். அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர்தான் அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் அவர்கள்.
அறிஞர் அஸீஸ் அவர்கள் இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் உத்தியோகத்தர். யாழ்ப்பாணம் வைதீஸ்வராக் கல்லூரி உருவாக்கிய சிறந்த மனிதர்களில் ஒருவர். இவர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக இருந்தவேளையில் அக்கல்லூரியை முஸ்லிம்களின் கலாபீடமாக மாற்றியமைத்தார். தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் அருகருகே அமர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கி இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்கு களம் அமைத்துக் கொடுத்தார்.
தனது வாழ்நாளில் 13 வருடங்களை அரசு சேவையிலும் அதற்கடுத்த 13 வருடங்களை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபராயும் அதற்கடுத்த 13 வருடங்கள் பொதுச் சேவையிலும் இலக்கியப் பணியிலும் செலவிட்டார். அரசியலில் சிலகாலம் அக்கறை கொண்டு செனற்சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
சுவாமி விபுலாநந்தருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த முஸ்லிம்களில் அறிஞர் அஸீஸ் முக்கியமான ஒருவர். ‘நானும் அவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்திருந்த போதிலும் எனக்குச் சிக்கலான நிலைமைகள் ஏற்படும்போது சுவாமிகளின் ஆலோசனையை வேண்டி நின்றவன்‘ என்று பகிரங்கமாகத் தெரிவித்தவர்.
அடிகளாரை அஸீஸ் அவர்கள் 1939 இல் முதன் முதலாகச் சந்தித்தார். அஸீஸின் பிரதேசமான வண்ணார்பண்ணைக்கு வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக சுவாமிகள் வந்தபோது இச்சந்திப்பு நிகழ்ந்தது. ஏற்கனவே சுவாமிகள் பற்றிய நல்லெண்ணம் அஸீஸின் மனதில் இடம் பிடித்திருந்த நிலையில் இச்சந்திப்பு அவரை புளகாங்கிதம் கொள்ளச் செய்தது. பின்வந்த காலங்களில் அறிஞர் அஸீஸ் அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றங்களுக்கும் திருப்பங்களுக்கம் இச்சந்திப்புத்தான் வழிகோலியது.
இரண்டாம் உலக மகாயுத்தம் ஏற்பட்ட காலகட்டத்தை அடுத்து இலங்கை முழுவதும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசினால் கல்முனையில் அவசரகாலக் கச்சேரி ஒன்று நிறுவப்பட்டது. இதற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபராக அஸீஸ் அவர்கள் 1942 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார்.
அதே காலப்பகுதியில் ஒரேயொரு பல்கலைக்கழகமான இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார்கள். அக்காலப்பகுதியில் சுவாமிகள் அடிக்கடி தனது பிறந்தகமான காரைதீவுக்கு விஜயங்களை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பங்களிலெல்லாம் அஸீஸ் அவர்கள் காரைதீவில் சுவாமிகளைச் சந்திக்கும் வழமையினைக் கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரினதும் நட்புறவு தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையான வாழ்வுமுறையை ஏற்படுத்தியது. வேறுபட்ட இன மதங்களைச் சேர்ந்த தலைமைகள் வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு வாழும்நிலையில் அவர்களைப் பின்பற்றிய மக்களுக்கிடையிலும் இனமத வேறுபாடுகள் தலைதூக்காது என்பது சமூக விஞ்ஞானமாகும். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தமிழ் பழமொழி அதனை எண்பிக்கும். காரைதீவில் நடைபெற்ற முத்தமிழ் விழா அதனை நிறுவும்.
அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் வாடிவீட்டில் அஸீஸ் அவர்கள் 1943இல் விபுலாநந்தரைச் சந்திக்கின்றார். முத்தமிழ் விழா ஒன்றினை ஏற்பாடு செய்வதுபற்றியும் பேசுகின்றனர். குறிப்பிட்ட விழா காரைதீவு இராம கிருஷ்ணமிஷன் பாடசாலையில் நடைபெற்றது. அஸீஸ் அவர்கள் மேற்படி தமிழ் விழாவுக்கு தலைமை தாங்க அடிகளார் சிறப்புரையாற்றினார். கூட்ட முடிவில் இருவரும் ஆற அமர இருந்து பேசினார்கள். இச்சந்திப்பு தனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் கல்வியைப்பற்றிய பல விடயங்களை அறியும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததாகவும் அஸீஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அடிகளாரும் அஸீஸூம் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்விழா என்பதால் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து வேறுபாடுகள் மறந்து பணியில் ஈடுபட்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
அஸீஸ் அவர்கள் விபுலாநந்த அடிகளாருடன் கொண்டிருந்த நட்பின் இறுக்கத்தை இன்னுமொரு சம்பவமும் எடுத்துக் காட்டுகின்றது
விபுலாநந்த அடிகள் 1944 இல் அம்மை நோய் கண்டபோது அவர்களை எ.எம்.எ.அஸீஸ் கண்டியில் அமைந்திருந்த ‘மௌண்ட் எய்றி‘ என்னும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நோய் குணமாகும்வரை வைத்துப் பராமரித்தார். அக்காலத்தில் அம்மை நோய் என்பது உயிர் கொல்லி நோயாகும். விரைவாகத் தொற்றும் தன்மை கொண்டதுமாகும். இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையிலும் அடிகளாரை தன்னருகில் பன்னிரெண்டு நாட்கள் வைத்திருந்தமைக்கு அவர்களுக்கிடையிலான இறுகிய நட்பே காரணமாகும்
கண்டியில் இடம்பெற்ற உரையாடல்களின்போது அரசாங்க சேவையிலிருந்து விலகி, கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் பதவியைப் பொறுப்பெடுக்குமாறு சுவாமி அவர்கள் அஸீஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் இக்கல்லூரியின் அதிபர் பதவியை 1948இல் பொறுப்பெடுத்தபோது விபுலாநந்த அடிகள் உயிரோடில்லை என்பது கவலை தரும் நிகழ்வாகும்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வரலாற்றில் அஸீஸ் அவர்களின் அதிபர் பதவிக் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது. தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்று நாட்டுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
யாழ்.பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி போன்றவற்றின் தமிழ் மாணவர்கள் கொழும்பு வந்து ஸாஹிறாக் கல்லூரி மண்ணில் முஸ்லிம் மாணவர்களோடு உதைபந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு, இனங்களுக்கிடையே உறவுக்கு அணி சேர்த்தனர். நாட்டின் தலைநகரிலிருந்து இன உறவின் சின்னமாக ஸாஹிறாக் கல்லூரி ஒளி வீசிப் பிரகாசித்தது. அறிஞர் அஸீஸ் அவர்களின் மனதில் முளைவிட்டிருந்த கருத்துக்களும் விபுலாநந்தரின் ஆலோசனைகளும் இன நல்லுறவுத் தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்தமைக்கு ஸாஹிறாக் கல்லூரி தக்கதொரு சான்றாகும்.
ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் பதவிபற்றி மட்டுமல்லாமல் அறபு-தமிழ் அகராதி ஒன்றின் தேவையை வற்புறுத்தியும் அதை ஆக்குவதற்கு தான் உதவியளிக்க முடியுமென்றும் அஸீஸ் அவர்களிடம் விபுலாநந்தர் கூறியுள்ளார். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவும் வகையில் புலமைப் பரிசில் நிதியமொன்றினை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்களிடையே வழக்கில் இருந்துவரும் வாய்மொழி இலக்கியத்தின் சிறப்பினை விலாவாரியாக எடுத்துக் கூறியுள்ளார்.
விபுலாநந்த அடிகளுக்கும் அறிஞர் அஸீஸ் அவர்களுக்குமிடையிலான நெருக்கம் போன்று இன்றைய முஸ்லிம் தமிழ் அறிஞர்களுக்கிடையேயும் அரசியல் தலைமைகளுக்கிடையிலும் சந்தேகமற இருக்குமாயின் தமிழ்மொழிப் பிரதேசம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.