— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இலங்கையின் உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சம்பந்தமான நிபுணர் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இம் முன்மொழிவுகளில் முன்பு சந்திரிக்கா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா அவர்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அவருடைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுப்பொதியில் அடங்கியிருந்த விடயங்களும் குறிப்பிட்டுக் கோடிட்டுக் கூறப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இப்பத்தி எழுப்பும் கேள்வி என்னவென்றால், அப்போது சந்திரிக்கா அரசாங்கம் அரசியல் தீர்வுப் பொதியை முன்வைத்த போது தமிழர் விடுதலைக் கூட்டணி (தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஆதரவளிக்க விரும்பாதது ஏன்? அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இரா. சம்பந்தன் அவர்களே விளங்கினார்.
சந்திரிக்கா அரசாங்கம் அப்போது சமர்ப்பித்த அரசியல் தீர்வு யோசனைகளில் பின்வரும் முன்னேற்றகரமான விடயங்கள் அடங்கியிருந்தன.
* இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாக இருக்கும். இவற்றில் ஒரு பிராந்திய சபை நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
* பிராந்தியமொன்றின் முதலமைச்சரே பிராந்திய ஏனைய அமைச்சர்களை நியமிப்பதுடன் ஆளுநரை நியமிப்பதிலும் பங்கு வகிப்பார்.
* ஆளுநர் முதலமைச்சரினதும் பிராந்திய அமைச்சரவையினதும் ஆலோசனையின் பேரில் செயல்படுவார். முதலமைச்சரின் இணக்கத்துடன் ஜனாதிபதியினால் ஆளுநர் நியமிக்கப்படுவார்.
* பிராந்திய நிரலில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகச் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களைப் பிராந்திய சபையே கொண்டிருக்கும். கொழும்புப் பாராளுமன்றம் இதில் தலையிட முடியாது.
* காணிகள் பிராந்திய சபையிடம் ஒப்படைக்கப்படும். குடியேற்றத் திட்டங்களின் போது பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* பிராந்திய முதலமைச்சரினால் நியமிக்கப்பெறும் பிராந்திய பொலிஸ் ஆணையாளரின் தலைமையில் பிராந்திய பொலிஸ் சேவை இயங்கும். பிராந்திய பொலிஸ் ஆணையாளர் முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ்ச் செயற்படுவார்.
* பிராந்தியத்திற்குப் போதிய அளவு நிதி உண்டு என்பதை உறுதிப்படுத்த அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் உண்டு. உள்ளூரில் அறவிடப்படும் வரிகளுக்கு உதவியாக மத்திய அரசாங்கம் பிராந்திய சபையுடன் இணைந்து வருமானத்தைப் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்குத் தேசிய நிதி ஆணைக்குழுவொன்று பொறுப்பாக இருக்கும். பிராந்தியங்கள் சர்வதேச கடன்களைப் பெற்றுக் கொள்வதுடன் வெளிநாட்டு உதவி,மூலதனம் ஆகியவற்றையும் கோரலாம்.
* பிராந்திய நீதிச் சேவை ஆணைக்குழு ஒன்று நீதி நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும். பிராந்தியத்தின் கீழ் நீதிமன்றங்களில் இருந்து பிராந்திய மேல்நீதிமன்றம் வரை நீதிபதிகளை இந்த ஆணைக்குழு நியமிக்கும்.
* பிராந்திய அரசாங்க சேவை ஆணைக்குழுவொன்று பிராந்தியத்தில் அரசாங்க சேவைக்குப் பொறுப்பாக இருக்கும். பிராந்திய அரசாங்க சேவையுடன் தொடர்புபட்ட சகல விடயங்களுக்கும் இந்த ஆணைக்குழுவே பொறுப்பாக இருக்கும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் உண்மையிலேயே 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விடவும் முன்னேற்றகரமானவை. இதனை ’13+’ என்று கூட வர்ணிக்கலாம்.
ஆனால், இந்த யோசனைகள் சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தினால் சட்டமூலமாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை திரு. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் இவற்றைக் கிழித்தெறிந்தும் எரித்தும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி இந்த யோசனைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனைச் சட்டமாக்க அதற்கான அரசியல் வியூகங்களை கச்சிதமாக வகுத்தும் வைத்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் இழுத்து இதற்கு ஆதரவாக வாக்களிக்கவைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தும் வைத்திருந்தார். இதனைத் தெரிந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை இந்த ஒன்பது உறுப்பினர்களையும் முதல் நாள் மது போதை ஊட்டி அவசரம் அவசரமாக இலங்கையில் இருக்காவண்ணம் இரவோடிரவாக விமானத்திலேற்றிச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துச் சதி செய்தமை அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்றாகும்.
இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் கூக்குரலிட்டும் யோசனைகளைக் கிழித்தெறிந்தும் எரித்தும் எதிர்ப்புத் தெரிவித்தபோது அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் (தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலவே செயற்பட்டனர். இரா. சம்பந்தன் அமைதியாக இருந்து புதினம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விடயத்தில் சந்திரிகாவின் கரத்தைப் பலப்படுத்தாது அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி (தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) வரலாற்றுத் தவறை இழைத்தது.
ஒப்பீட்டளவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் உண்மையும் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் நெகிழ்வுப் போக்கும் உடையவராகக் கருதப்பட்டவர். அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி (இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உறுதியாகவும் பொறுப்புணர்வுடனும் தமிழர் பிரச்சனை தீர வேண்டும்– அவர்களுக்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டுமென்ற உளப்பூர்வமான எண்ணம் கொண்டிருந்தால் சந்திரிக்கா அம்மையாரால் கொண்டு வரப்பட்ட இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் 2000ஆம் ஆண்டிலேயே சட்டமாக்கப்பட்டிருக்கும். தமிழர்களின் இன்றைய துன்பியல் நிகழ்வுகளும் இல்லாதுபோயிருக்கும். இலங்கைத் தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கு முற்று முழுதாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரே (இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்).
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி (இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) பயன்படுத்தாமல் பாராமுகமாக இருந்தது ஏன்?
அன்று யுத்தம் நடந்து கொண்டிருந்தது. புலிகள் போரிட்டுத் தனிநாட்டைப் பெற்றுத் தருவார்கள். அதில் தாங்களும் தங்கள் பரிவாரங்களும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு குளிர் காயலாம் என்ற நப்பாசையிலா தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இவ்வாறு நடந்து கொண்டனர்?
அன்று ஜனாதிபதி சந்திரிகாவின் கரத்தைப் பலப்படுத்தாமல் தமிழர்களுக்குச் சாதகமான யோசனைகளை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சியினரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மறைமுகமாக ஆதரித்து நின்றது ஏன்?
கடந்த (2015–2019) நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இராஜபக்ஷக்களை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியையும் நீதிமன்றம் வரை சென்று காப்பாற்றிய’தமிழ்த் தேசிய அரசியல்’ தலைமை (?) அன்று தமிழ் மக்களின் நலன்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்துச் சந்திரிகா அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மறுத்தது ஏன்?
இந்த வினாக்களுக்கெல்லாம் அரசியல் பொதுவெளியில் பகிரங்கமாக விடையளித்துத் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்பதை இப்பத்தி வலியுறுத்தி நிற்கிறது.
உண்மையிலேயே தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கும் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ என்பது தமிழர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதைவிட ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறது. இந்த வர்க்கக் குணாம்சத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் விடுபடாத வரை தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.