— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
‘இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை
எனது அம்மாவின் தந்தை சா.வ. வீரக்குட்டி அவர்கள் ஒரு விவசாயி. எனது அம்மப்பாவான அவரை நான் அப்பப்பா என்றுதான் அழைப்பேன். களுவாஞ்சிகுடி ஆலய பரிபாலன சபையின் செயலாளராகவும், வண்ணக்கராகவும் நாற்பது ஆண்டுகளுக்குமேல், அவர் இறக்கும்வரை பணியாற்றியவர். வட்டை விதானையாகவும் கடமை புரிந்தவர்.
மட்டக்களப்பு மாவட்டரீதியாக நடைபெற்ற கலாசாரப் போட்டியொன்றில் வில்லிசைக்கான முதற்பரிசு எங்கள் இளம் நாடக மன்றத்திற்குக் கிடைத்தது. விவசாயத்தின் சிறப்பு, முக்கியத்துவம், அபிவிருத்தி என்பவை சம்பந்தமான அந்த வில்லுப்பாட்டை எழுதி, வில்லிசைத்த என்னை விவசாயத் திணைக்கள உதவிப்பணிப்பாளராக இருந்த தேவதாசன் அவர்கள் மிகவும் பாராட்டினார். அப்போது விவசாயப் போதனாசிரியராக இருந்தவரும், பின்னாளில் உதவிப் பணிப்பாளராக உயர்ந்து, அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான திரு.த.கனகசபை அண்ணன் இப்போதும் அடிக்கடி அந்த வில்லுப்பாட்டைப்பற்றிச் சிலாகித்துக் கதைப்பார். அப்பப்பாவை மனதில் வைத்தே அந்த வில்லுப்பாட்டின் கதையை அமைத்திருந்தேன். அதில் ஒரு பாடல் பின்வருமாறு:
“வண்ணக்கராயும் இருந்தார் – அவர்
வட்டைவிதானை யாயும் இருந்தார்
மண்ணுக்குள் பொன் விளைவித்தார் – வீட்டு
வாசல் எல்லாம் நெல்லு மூட்டை குவித்தார்”
அப்பப்பாவுக்கும், அவரின் மனைவியான பூபதிப்பிள்ளை ஆச்சிக்கும் ஆறு பிள்ளைகள். அம்மா அவரின் மூன்றாவது பிள்ளை. கடைசிப்பிள்ளையாக ஆறாவதாகப் பிறந்தவர், ஊரிலே, அந்தக்காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருள் ஒருவராகத் திகழ்ந்தார். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான அவர் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்.
அவரை நான் இளைய அம்மாச்சி என்றுதான் அழைப்பேன். பெற்ற தாயுடன் கூடப்பிறந்த பெண்களைக் குஞ்சாத்தை என்றும், தாயின் ஆண் சகோதரர்களை அம்மாச்சி என்றும் அழைப்பது அப்போது வழக்கமாக இருந்தது.
அம்மாவுக்கு நான் ஒரேயொரு பிள்ளை. ஊர் மருத்துவர் ஒருவரின் கவலையீனத்தினால் சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த எனது தந்தை எனக்குப் பதின் மூன்று வயதாகும்போது இறையடி சேர்ந்துவிட்டார்.
எனக்கு 1970 ஆம் ஆண்டு, கல்லடி, சிவானந்த வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பிற்கு அனுமதி கிடைத்திருந்தது. அந்த அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு அங்கே சென்றபோது இளைய அம்மாச்சியும் என்னுடன் வந்திருந்தார். என்னுடன் வந்திருந்தார் என்பதைவிட என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார் என்பதே பொருந்தமானது. வித்தியாலயத்தில் சேர்வதற்கும், விடுதியில் தங்குவதற்குமான அனுமதி அது. அம்மாவால் ஒருநாள்கூட என்னைப் பிரிந்திருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு வரலாம் என்றாலும், ஐந்து நாட்கள் என்னைப் பிரிந்து இருக்க வேண்டியுள்ளதே என்பது அவவிற்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருந்தது. ஆனாலும், என்னைப் படிப்பிக்கவேண்டும் என்பதற்காகத் தன் கவலையை அடக்கிவைத்துக்கொண்டார்.
விடுதியில் தங்கிப் படிப்பதற்கான அந்த அனுமதியின்படி, விடுதிக்கட்டணமாக மாதாந்தம் நாற்பத்தி ஏழு ரூபாய் ஐம்பது சதம் செலுத்த வேண்டும். 1970 ஆம் ஆண்டு அந்த அனுமதியின்பேரில் சிவானந்தா வித்தியாலயத்தில் நான் சேரவேண்டியிருந்த நாளுக்கு முதல்நாள், அம்மா, அம்மாச்சியிடம், “தம்பி நாளைக்கு இவன் பள்ளிக்குப் போகோணுமாம். அங்க காசும் கட்டோணுமாம்” என்று சொன்னா. உடனே அவர், என்ன சிந்தனையில் இருந்தாரோ தெரியவில்லை, “நாளைக்கா?….. இப்ப உன்ர மகன் கட்டாயம் படிக்கோணுமா?” என்று கேட்டுவிட்டு விருட்டென்று கிளம்பிவிட்டார்.
என்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற கவலையைவிட, அவர் கூறிய அந்த வார்த்தை அம்மாவுக்குச் சொல்லொண்ணா வேதனையைக் கொடுத்தது. அப்பா உயிரோடிருந்தபோது, தன் தம்பி படிப்பதற்குத் தான் உதவியதுபோல தன்மகன் படிப்பதற்குத் தம்பி உதவுவான் என்று நம்பிய அம்மாவுக்குத் தம்பியாரின் சொல்லைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தத் தருணத்தில்தான் எங்கள் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்திலேயே உயர்வகுப்பு வைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டது. அதனாலும், அம்மாச்சியின் துரோகத்தாலும், எனது சிவானந்தா வித்தியாலயக் கனவு கானல் நீரானது.
இதுபோன்ற நிலைமை எனக்கு மட்டுமல்ல, எனது நண்பர்கள் பலருக்கும் இருந்தது. இந்த விடயங்களை இங்கு பதிவிடுவதற்கான காரணம், அந்தக்காலத்தில் கல்வியைப் பெறுவதில் எத்தனை தடைகள் இருந்திருக்கின்றன என்பதையும் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருந்திருக்கிறது என்பதையும் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளவேண்டும் என்பதே.
இப்போது ஏறத்தாழ எல்லா மகாவித்தியாலயங்களிலும் க.பொ.த. உயர் வகுப்புக்கள் உள்ளன. ஆனால், அன்று, பட்டிருப்புத் தொகுதியில் விஞ்ஞான உயர்வகுப்பு கற்பிக்கப்படும் ஒரு பாடசாலைகூட இருந்ததில்லை. மட்டுநகரில் மூன்று பாடசாலைகளிலும், வந்தாறுமூலை மத்திய கல்லூரி மற்றும் கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆகியவற்றிலுமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் மட்டுமே ஆண்கள் உயர்தர விஞ்ஞானக் கல்வியைப் பெறக்கூடிய பாடசாலைகளாக இருந்தன.
எனக்கு மட்டுமல்லாமல், எனது நண்பர்களுக்கும் எங்கள் உயர்கல்வியைப் பொறுத்தவரை 1970 ஆம் ஆண்டு வீணாகக் கழிந்துவிட்டது.
எங்கள் ஊரில் விஞ்ஞான உயர்வகுப்பு ஆரம்பிக்கப்படும் என்று இனியும் காத்திருந்து காலத்தை வீணடிக்க விரும்பாமல், 1971 ஆம் ஆண்டு முதல் நானும், நண்பர்கள் ச.நடேசன், சு.அரசரெத்தினம் மூவரும் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் (தற்போது இந்துக்கல்லூரி) சேர்ந்துகொண்டோம்.
அங்கு சேர்ந்த முதல்நாளே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. நாங்கள் அரைக்காற் சட்டைதான் அணிந்திருந்தோம். எங்களுக்கு ஆங்கில ஆசிரியராக வந்திருந்த லோகிதராஜா அவர்கள் எங்கள் மூவரையும் நன்றாக உற்றுப் பார்த்தார். அருகே வந்து ஊரையும் பெயரையும் கேட்டார். “ஓ அப்படியா, கெட்டிக்காரங்கள்தான்” என்று சொல்லிவிட்டு, நீங்கள் இப்ப பெரிய வகுப்பு மாணவர்கள். இனிமேல் இப்படி சோட்ஸ் எல்லாம் நீங்கள் போடக்கூடாது. முழுக்காற்சட்டைதான் போடவேணும்…” சரியா என்று சொன்னார். அத்துடன் மட்டும் விடாமல், எங்கள் தொடைகளைத் தனது ஆட்காட்டிவிரலால் தொட்டுக்காட்டி, “இதெல்லாம் வெளியில தெரியக்கூடாதுடா……” என்று சொன்னார்.
எங்களுக்கு மிகவும் கூச்சமாயிருந்தது. ஆனால் அதன் பின்னர், அவர் மிகவும் சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல், நகைச்சுவையாக மாணவர்களோடு உரையாடும் நல்ல மனிதராகவும் இருந்ததை உணர்ந்துகொண்டோம். அவரை எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது.
எங்களுக்கு தாவரவியல் ஆசிரியராக இருந்த கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் மொழியில் மிகுந்த புலமை உள்ளவராக இருந்தார். அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் பாலசுப்ரமனியம் அவர்கள், சுபத்திரா பத்மனாதன் அவர்கள், சந்திரசேகரம் அவர்கள் ஆகியோர் முறையே பௌதிகவியல், இரசாயனவியல், விலங்கியல் ஆகிய பாடங்களின் ஆசிரியர்களாக இருந்தார்கள். எங்களுக்குப் படிப்பித்த ஆசிரியர்கள் எல்லோருக்கும் எங்களைப் பிடித்திருந்தது.
அரும்பு மீசைப் பருவத்தில் இருந்த எங்களுக்கு, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி கல்வியை மட்டுமல்லாமல், பல்வேறு வெளியுலக அனுபவங்களையும் கற்றுத் தந்தது. கல்விக்குப் புறம்பான ஆளுமைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் மட்டுநகர் அரசினர் கல்லூரி எனக்குக் களமாக அமைந்தது. முதன் முதலில் பட்டிமன்றம் ஒன்றில் பேச்சாளராக என்னை அறிமுகப்படுத்தியதும் அந்தத் கல்லூரியே!
களுவாஞ்சிகுடியில் இருந்து பாசாலைப் பேருந்து(ஸ்கூல் பஸ்) காலையில் புறப்படும். குருக்கள்மடத்தில் பஸ்சின் அரைவாசி நிரம்பிவிடும். புதுக்குடியிருப்புடன் இருக்கைகள் எல்லாம் காலியாகிவிடும். ஆரையம்பதி முதல் கல்லடிவரையிலும் இருந்து ஏறுகின்ற மாணவர்கள் நின்றுகொண்டுதான் பயணம் செய்வார்கள். அவர்களில் பெண்பிள்ளைகள் எங்களுக்குப் பக்கத்தில் வந்து நிற்கும்போது ஏற்படும் இதயத்துடிப்புக்களை எடுத்து இயம்ப முடியாது. காலப்போக்கில், கண்களால் மட்டும் அவர்களுடன் அறிமுகமான பின்னர், நமக்குப் பக்கத்தில் வந்து, தங்கள் புத்தகங்களை அல்லது புத்தகப் பைகளை நம்மிடம்வைத்துக்கொள்ளும்படி தந்துவிட்டு நமக்குப் பக்கத்திலேயே, பட்டும் படாமலும் நின்றிருப்பார்கள், அந்த நேரம் நமக்கு பஸ்ஸில் இருப்பதே மறக்கும். மனதிற்குள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்.
தேர் ஊர்ந்து போவதுபோலத் தினமும் பாடசாலைப் பேருந்து நகர்ந்தது. திருவிழாவுக்குச் செல்வதுபோலத் தினமும் எங்கள் பாடசாலைப் பயணமும் மகிழ்வாகத் தொடர்ந்தது. அதேவேளை கற்பித்த ஆசிரியர்களின் உள்ளங்களை விருப்புடன் ஈர்க்கும் அளவிற்கு எங்கள் கல்விச் செயற்பாடுகள் அமைந்தன. அவை அதிபரின் கவனம் வரை எட்டியிருந்தன.
(நினைவுகள் தொடரும்)