நம்மட மண்முனை வீதியை முழுமையாக செய்து தரமாட்டாங்களா? (படுவான் திசையில்…)

நம்மட மண்முனை வீதியை முழுமையாக செய்து தரமாட்டாங்களா? (படுவான் திசையில்…)

— படுவான் பாலகன் —  

‘படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் கிறவல் வீதிகள்தான். ஒவ்வொரு அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களின் ஊடாக கொங்கிறீட் வீதிகளும், காப்பட் வீதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல வீதிகள் அபிவிருத்தி காணாமலே உள்ளன. சில வீதிகளால் பயணித்தால் முள்ளத்தண்டு நோய் உடனே வந்திடும். அவ்வாறான வீதிகளெல்லாம் இருக்கின்றன. இதையெல்லாம் எப்பதான் சீர்செய்து தருவார்களோ தெரியவில்லை’ என சின்னத்தம்பி தனது நண்பன் சாமித்தம்பியிடம் பேசிக்கொண்டான். 

‘நம்மட மண்முனை பாலம் அமைத்ததில் இருந்து, இன்றைக்கு வரைக்கும், மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரைக்கும் பல தடவை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பாலம் அமைப்பின் போது குறித்த வீதியும் புனரமைக்கப்பட்டு காப்பட் வீதியாக மாற்றப்பட்டிருந்தது.  

அவ்வீதியில் பல குழிகள் அடிக்கடி ஏற்படும். அக்குழிகளை மூடி புனரமைப்பு செய்வர். திரும்பவும் குழி விழும் திரும்பவும் திருத்தம் செய்வர். இவ்வாறு மூன்று நான்கு தரம் திருத்தம் செய்யப்பட்டு, பின்னர் குறிப்பிட்ட அளவுதூரம் கொங்கிறீட் இடப்பட்டது. இப்போது ஒருகிலோ மீற்றருக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.’  எனக்கூறினான் சின்னத்தம்பி.  

‘இவ்வீதியால் நாளாந்தம் கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்வதுண்டு. அதிகளவான மக்களும் பயணிப்பதுண்டு. இவ்வீதி சீரின்மையால் அதிகம் சிரமங்களை இவ்வீதியால் பயணிக்கின்ற மக்கள் எதிர்கொள்வதும் உண்டு. இப்போது புனரமைக்கப்படும் வீதியால் மக்கள் சிரமமின்றி பயணித்தாலும் இன்னுமொரு பகுதி கொங்கிறீட் இடப்படாமல் குழிகளுடனே காணப்படுகின்றது. அக்குழிகளையும் நிரந்தரமாக மூடி, கொங்கிறீட் இடுவதற்கான முயற்சிகளை நம்மட அரசாங்க எம்.பி கள் எடுக்க வேண்டும்’ என்று கூறிய சாமித்தம்பி; ‘மகிழடித்தீவு சந்தியில் இருந்து முனைக்காடு வரைக்கும் செல்லும் வீதி மிக மோசமாக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் உள்ளது. இவ்வீதி புனரமைப்பு வேலைகள் செய்யப்பட போவதாக பதாதையும் மகிழடித்தீவு சந்தியில் இடப்பட்டிருந்தது. போடப்பட்டிருந்த பதாதையும் இப்போது காணவில்லை. வந்த திட்டமும் இல்லாமல் போயிட்டதாக சொல்லுறாங்க உண்மை, பொய் நமக்கு தெரியாது. இவ்வீதியையும் புனரமைப்பு செய்து தந்தால் புண்ணியமாக போயிடும்’ என சின்னத்தம்பியிடம் பேசினான்.  

‘என்னடா தம்பி என்னிட்ட சொல்லி நடக்குமாட நான் என்ன எம்.பியா, நமக்குள்ள நம்ம பேசிட்டே இருக்கிறாம். இந்த வீதியாலதானே நம்மட எம்பிகளும் போய் வாறாங்க அவங்களிட்ட சொல்ல வேண்டாமா? என சின்னத்தம்பி கூற இருவரும் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.