— (படுவான் பாலகன்) —
‘நம்மளும் சோளம் பயிருட்டுத்தான் இருக்கம் இப்படி புழு சாப்பிட்டு, சோளம் செய்கையை கைவிட்ட நிலை வரவில்லை. இப்போ ஓரிரு வருடங்களாகத்தான் படைப்புழு என்ற புழு வந்து சோளம் செய்கை வீழ்ச்சியடைந்து போகுது. நம்மட சனங்களும் சோளன் செய்கை செய்வதற்கு பயப்படுதுகள்’ என வேலப்பன் குமாரசாமியிடம் கண்டியநாற்று குளக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
‘கொரோனா என்ற நோயினால் வெளியிடங்களுக்கு தொழிலுக்கு செல்ல முடியாது. யாரிடத்தில் கொரோனா இருக்கும் என்று தெரிவதற்கு பெரிய பொருளும் இல்லை. கண்ணுக்கு தெரியாத உயிர், இந்த மனித குலத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்குது. இதனால் மில்லியன் கணக்கான சனங்கள் செத்தும் போயிட்டு. நம்மட நாட்டிலையும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நம்மட நாடு என்று சொல்லும்போது தூரம்போல இருக்கு, நம்மட வீடு என்றுதான் சொல்லணும். வீட்டுக்குள்ள கொரோனா நுழைந்ததினால் வீட்டினை விட்டு போகவும் முடியாம இருக்கிற நிலைமையாச்சு. அப்படித்தான் வீட்டுக்குள்ள குந்தியிருந்தா வீடும் சோறு போடாது. நமக்கென்ன மாதம் முடிய சம்பளமா? வருகு. அண்டைக்கு அண்டைக்கு உழைத்தால் நம்மட வயிறும் நிரம்பும்.’ என்று முணுமுணுத்த வேலப்பன்,
‘நம்மட தேசத்தில் விவசாயத்தினை செய்திட்டு வாழலாம் என்று நினைத்தா! அதற்குள்ளும் பல பிரச்சினை. வேளாண்மை செய்ய உரிய காலத்திற்கு மழையில்லை. மழை பெய்தால் நோய் இப்படி எல்லாவற்றினாலும் காப்பாற்றி அறுவடை செய்தால் அதனை குறைவிலைக்கு விற்கும் நிலைமை இப்படியெல்லாம் பல சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கு’ என்று கூறினான்.
கேட்டுக்கொண்டிருந்த குமாரசாமியும், ‘என்ன அண்ணன் நம்மட சனங்கள் மேட்டுநில பயிர்செய்கைகளில் சோளம் செய்கையை நல்லமுறையிலதான் செய்திட்டு இருந்தனர். சோளம் உற்பத்தி செய்து இலாபத்தினைத்தான் கண்டனர். இப்பதான் புழுதாக்கத்தினால் சோளன் அழியுது என்று சொல்லுறாங்க. நம்ம வழமையா செய்த சோளன் செய்கைக்கான விதைப்பருப்புக்கள் நம்ம வழமையாக நாட்டின விதைகள் அதனால் நோய் தாக்கம் குறைவு. இப்ப இரண்டு மூன்று வருசமாகதான் இறக்குமதி செய்த சோளன் பருப்பினை நாட்டி அதில் புழு தாக்கி இருக்கு. நம்மட நிலத்திற்கும், இங்குள்ள சோளனுக்கும் அது ஒத்துபோகவில்லை. புழுவைத்தான் உற்பத்தியாக்கிருக்கு’ என்று கூறினான்.
இதில் “எது, உண்மை எது பொய்” என்பதை உரிய ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்து பார்க்கணும். விவசாயிகள் அனுபவத்தில் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.
யார் என்னத்தை சொன்னாலும், நம்மட நாட்டில, நம்மட நாட்டு இனங்கள் பல அழிந்து போயிட்டு. இப்போ வெளிநாடுகளில் இருந்து புது இனங்கள்தான் இறக்குமதியாகி வருகின்றன. இதனால் நம்நாட்டு இனங்களுக்கு மதிப்பற்று போயிட்டு. மாடு, மரம், மீன், விவசாய உற்பத்தி விதைகள் என பலவும் புதிய புதிய வடிவங்களுடன் இறக்குமதியாகுகின்றன. இது குறித்தும் நம்மட விவசாயிகள் கவனமெடுக்க வேண்டும். நம்மட விவசாய விதைகளை தொடர்ச்சியாக பாவிப்பதனை ஊக்கப்படுத்தவேண்டும் என வேலப்பனும் கூற, இருவரும் அவ்விடத்தினை விட்டு அகன்றனர்.