காசி ஆனந்தன்:  மோடிக்கு பூவும் தண்ணியும்: (காலக்கண்ணாடி – 16)

காசி ஆனந்தன்: மோடிக்கு பூவும் தண்ணியும்: (காலக்கண்ணாடி – 16)

— அழகு குணசீலன் —

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்று பயணத்தில் தற்போது ஐம்பது வயதுகளை தொட்டும்,  தாண்டியும் நிற்கின்ற எவருக்கும் காசி அண்ணர் புதுமுகம் அல்ல. ஆனால் இன்றைய இளைய தலைமுறை அவரைப்பற்றி குறைவாகவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  

அண்மையில் காசி அண்ணர் எழுதிய மட்டக்களப்பின் மண்வாசனையைச் சுமந்து வீசும் மீன்மகள் பாடுகிறாள்….., வாவிமகள் ஆடுகிறாள் …. என்ற பாடலை முகப்புத்தகத்தில் பதிவிட்டு இந்த பாடலை எழுதியவர், பாடியவர் பற்றி தகவல் தெரியாது என்று இன்றைய இளைய தலைமுறையினர் பதிவிட்டிருந்தார்கள். (இத்தனைக்கும் அந்தப் பாடலின் 50 ஆண்டுகள் குறித்து அரங்கத்தில் ஒரு வீடியோவும் வந்திருந்தது. அதில் காசி அண்ணனின் செவ்வியும் இருந்தது) 

இது இன்றைய இளைய தலைமுறை காசி ஆனந்தன் பற்றி அறிந்து  கொள்வதற்கு நிறையவே உள்ளது என்பதற்கு ஒரு குறிகாட்டி. 

காசி ஆனந்தன் தமிழ்த்தேசிய அகிம்சை அரசியலிலும்,  ஆயுதப்போராட்டகால சமாந்தர அரசியலிலும் பயணித்தவர். இதனால் அவர் கொண்டிருந்த வகிபாகம் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்கது என்று கூறலாம். 

எனது பார்வையில் இந்த பங்களிப்பானது உணர்ச்சிக் கவிஞரின் தமிழர் அரசியல் சார்ந்த உணர்வு பூர்வமான படைப்புக்கள். 

தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றுகின்ற உணர்ச்சி உரைகள், சட்டமறுப்புக்களை மேற்கொண்டு பல தடவைகள் சிறைசென்றமை. அரச கரும மொழித்திணைக்களத்தில் வகித்த மொழிபெயர்ப்பாளர் பதவியை சிங்களத் திணிப்புக்கு எதிராக துறந்தமை உள்ளிட்ட பல செயற்பாடுகளை பட்டியல் இட முடியும். 

காசி அண்ணர் குறித்து இங்கு ஆய்வு செய்யப்படுகின்ற விடயம்  தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த அவரது பார்வை. 

விடுதலை என்ற அதிஉயர்ந்த,  விரிந்த, பரந்த, ஆழம்மிக்க அந்த வார்த்தையை அவர் விளங்கிக் கொண்டுள்ள கற்பிதம். 

தேசிய விடுதலைப்போராட்டங்கள் குறித்த அவரின் வர்க்கப் பார்வை. 

பிராந்திய, சர்வதேச ஆதிக்க சக்திகளின் அரசியல் இலாப – நட்ட ஐந்தொகைக்கணக்கு குறித்த காசியின் கருத்தியல். 

பூகோள அரசியலில் தேசிய,  பிராந்திய, சர்வதேச போக்குகள் குறித்த குறுங்கால, நீண்டகால அல்லது கிட்ட, தூர நோக்குகள். 

சர்வதேச சமகால சமூக, பொருளாதார, அரசியலின் திசை அதற்கு ஏற்றாற் போன்று நகர்த்தப்படவேண்டிய இராஜதந்திர, சந்தர்ப்ப வாதமற்ற அணுகுமுறைகள். 

சர்வதேச நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் இருந்து அவரும் தமிழர் அரசியலும் இதுவரையும்  கற்றுக் கொண்ட பாடம். 

இந்த விடயங்கள் பற்றிய ஒரு விரிவான பல்கோண பார்வையே காலக்கண்ணாடியின் விம்பங்களாகும். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்தது  கீழ் வரும் அரசியல் திரைப்பட காட்சிகள்.  

கதைச் சுருக்கம் : கதாநாயகன் சம்பந்தன் ஐயா இந்திய அதிகாரிகளை சந்தித்த பின் விட்ட ஊடக அறிக்கை. அதற்கு எதிராக வில்லன் காசி ஆனந்தன் அண்ணா வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள். 

பொலிவூட் சினிமா : பூவும் தண்ணியும். 

டைரக்டர் : உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன். 

கதைவசனம் & மேளம் தாளம் & கூத்தும் வாழ்த்தும்  : 

 தமிழ்த் தேசியகூட்டமைப்பு &  ஈழத்தமிழர் நட்புறவு மையம்.(இது ஒரு இணைத்தயாரிப்பு) 

 கதாநாயகன் : சம்பந்தன்( ஐயா) 

வில்லன் : காசி ஆனந்தன்( அண்ணா) 

சண்டை, சமாதான  காட்சிகள் : இந்தியா 

திரையரங்குகள் : தமிழர் தாயகம்தமிழகம்புகலிடம். 

பிரவேசம் : இலவசம்.  

விசேட சலுகை : மூக்குக்கவசம்,  சமூக இடைவெளி விலக்கு. 

************************************************************************************* 

கதா நாயகன் கனிவு ! 

இந்திய அதிகாரிகளை  கொழும்பில் இந்திய இல்லத்தில் கதாநாயகன் சம்பந்தன் ஐயா சந்தித்த பின்,  இந்திய அதிகாரிகள் தமிழீழத்தை கைவிட்டு அபிவிருத்தி பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் என்று  அறிக்கை விட்டார் என்பது ஊடகச் செய்தி. அதற்கு பதிலடி கொடுக்கிறார் வில்லன் காசி அண்ணர். 

வில்லனின் வீராவேசம் ! வெறுப்பும் விருப்பும்!! 

1. கதாநாயகன் சம்பந்தன் கூறுவது பச்சைப் பொய். 

2. இந்திய அதிகாரிகள் சம்பந்தனிடம் கூறினரா? அல்லது சம்பந்தன் இந்திய அதிகாரிகளிடம் கூறினாரா? என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம். 

3. தமிழீழ மீட்புக்கு இந்தியாவின் துணை தேவை என்று தமிழீழ மக்கள் ஏங்கி நிற்கும் காலச்சூழலில் சம்பந்தன் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. அதை அறிந்து கொள்ளும் உரிமையும் எமக்கு உண்டு. 

4. சம்பந்தன் தம்மைத்தாமே சுயபரிசோதனை செய்ய வேண்டும். தமிழர்களின் 70 வருட போராட்டத்தையும் அரசியல் உரிமையையும் காவு கொடுக்க அவருக்கு யார் உரிமை கொடுத்தது? 

5. இரு தேசக் கொள்கையை வலியுறுத்தும் கஜேந்திரகுமார், முன் தோன்றிய மூத்த தமிழ் என்று பாராளுமன்றத்தில் இடித்துரைத்த விக்கினேஸ்வரன், இவர்களோடு சம்பந்தன் இணைந்து வட்டுக்கோட்டை கோட்டை மாநாடு போன்று ஒன்றைக் கூட்டி தமிழீழமீட்பு அல்லது தமிழீழ காப்பு என்றாவது ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 

6. இந்திய அரசு முழு அளவில் உதவ வேண்டும் என்னும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் தமிழ் தலைவர்கள் அத் தீர்மானத்தில்  நிறைவேற்ற வேண்டும். 

என்று கோருகிறார் காசி ஆனந்தன்.   

பூவும் தண்ணியும் விமர்சனம்: 

கதாநாயகன் குறித்த பார்வை! 

இந்த திரைக்கதையில் கதாநாயகன் பாத்திரத்தையும் விடவும் வில்லன் பாத்திரம் காத்திரமானது. 

இதனால் பொலிவூட் தயாரிப்புக்களில் இது வித்தியாசமான புதிய யுக்திகளையும், வியூகங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கொள்ளலாம். 

கதாநாயகன் பாத்திரம் ஏற்று நடிக்கும் சம்பந்தன் ஐயா ஒரு தமிழ் மரபு சார் பாராளுமன்ற அரசியல்வாதி. 

இந்தியாவுக்கு தலைவணங்குவதும், இந்தியா சொல்வதை வேதவாக்காக நம்புவதும் அவரின் அரசியல். அல்லது தொடரும் அமிர் அண்ணர் கால அரசியல் மரபு. 

சிறிலங்கா அரசை பூதம் வரும், பூதம் வரும் என்று இந்தியப் பூதத்தைக் காட்டி நிலாச்சோறு தீர்த்துகின்ற சிறுபிள்ளை அரசியல். 

அதை மிகைப்படுத்தி தமிழ் ஊடகங்கள் ஒற்றைச் சுட்டுவிரலைக்காட்டி எச்சரிக்கும் பாணியில் கதாநாயகன் ஐயாவின் படத்தை பிரசுரிப்பது இந்திய சினிமாவின் கட்அவுட் கலாச்சாரத்தினையும் விஞ்சி நிற்கிறது. 

இதை கதாநாயகன் சம்பந்தன் ஐயா சொன்னாரா? இந்தியா சொன்னதை கிளிப்பிள்ளை அரசியலாக்கினாரா என்றெல்லாம் வாதிடுவது காலவிரயம். 

ஏனேனில் இந்த  நீண்ட பழைமையான அரசியல் வரலாற்றில் இன்று அவர் இந்தப் பாத்திரத்தை ஏற்றுள்ளார்.  

நேற்று பலர் வரிசையாக ஏற்று நடித்தார்கள். 

நாளை இந்த பாத்திரத்திற்காக திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கின்ற  மற்றவர்கள் ஏற்று நடிப்பார்கள். 

எந்தப் பலமும் அற்று, மக்கள் ஆதரவும் அற்று, உட்கட்சி பூசல்களால் நிரம்பியிருக்கின்ற  கதாநாயகனின் கட்சி அரசியலில் இருந்து வேறு எதை காசி ஆனந்தன் எதிர்பார்க்கிறார். 

காசி ஆனந்தனின் எதிர்பார்ப்பு விரலுக்கு ஏற்ற வீக்கமாக இல்லை. 

வழி தவறி நடுக்கடலில் தத்தளிக்கும் இவர்களிடம் இருந்து அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடே அவரின் ஆதங்கம். கதாநாயகன் மீதான அவரின் புலிப்பாய்ச்சல். 

இனி இடம்பெறுவது வில்லனின் கருத்தாடல் குறித்த பார்வை

இங்கு தான் இந்த திரைக்கதையின் மையப்புள்ளி உள்ளது. 

காசி அண்ணர் வில்லனாக  கதாநாயகன் மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுக்கள், விடுத்துள்ள கோரிக்கைகள், இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு போர்த்தியுள்ள பொன்னாடை என்பன இந்த மையப்புள்ளியின் முக்கிய அம்சங்கள். 

ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் பாத்திரம் ஏற்றுள்ள காசி ஆனந்தன் பேசுகின்ற அரசியலும் அதன் பின்னணியும் இங்கு முக்கியமானது, ஆராயப்பட வேண்டியது. 

அவரது அறிக்கையானது கதாநாயகன் சம்பந்தன் ஐயாவை பொய்யன் ஆக்குகிறது. நம்ப முடியாத ஒருவராக்குகிறது. 

இதற்கு மாறாக இந்திய அதிகாரிகள் மீதான காசி ஆனந்தனின் அதீத நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது. 

சம்பந்தன் ஐயாவைவிடவும் கஜேந்திரகுமாரிலும்,  விக்கினேஸ்வரனிலும் காசி ஆனந்தன் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. 

இதற்கு காசி ஆனந்தன் சொல்லுகின்ற காரணங்கள் வேடிக்கையானவை. ஒருவர் இரு தேசங்கள் கொள்கையாளர் என்றும் மற்றவர் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று பாராளுமன்றத்தில் இடித்துரைத்தவர் என்றும் கூறுகிறார். 

இவை காசி ஆனந்தனின் ஐம்பது ஆண்டுகால காலாவதியான அரசியல் பாணி. உள்ளடக்கம் எதுவும் இல்லாமல் வெறும் வாயை மெல்லுவது. 

அடுக்கு மொழியும், உணர்ச்சி வார்த்தையாடல்களும் கொண்ட அரசியல். 

சம்பந்தன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் மூவருமே மேல்தட்டு வர்க்க மேலாதிக்க அரசியல் சக்திகள். பாராளுமன்ற கதிரைகளில் இடம்பிடிக்க முண்டி அடிக்கும்  தரகு முதலாளிகள்.  

இவர்கள் இணைந்து வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு சமமாக தமிழீழமீட்பு அல்லது தமிழீழ காப்பு என்று மாநாடு நடாத்தி தீர்மானம் நிறைவேற்றினால் தமிழீழம் வானத்தில் இருந்து பொத்தென ஈழத்தில் விழும் என்று நினைக்கிறாரா காசி ஆனந்தன்? 

அப்படியானால் வட்டுக்கோட்டை தீர்மானம் இன்னும் ஏன்? தமிழீழத்தை பெற்றுத் தரவில்லை. 

இலங்கைத்தீவில் இரு தேசங்களை உருவாக்குவதற்கான கஜேந்திரகுமாரின் திட்டம் என்ன? பாராளுமன்றத்தில் எழுதி வாங்கலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஒரு துண்டை பிரித்து எடுப்பதற்கு இது என்ன பக்கத்து வீட்டுக்காரருக்கும் உங்களுக்கும் உள்ள காணித்தகராறா? 

விடுதலைப்புலிகள் பெற்றிருந்த அரசியல் இராணுவப் பலத்தினால் கூட சாதிக்க முடியாததை வெறும் தேர்தல்கால வாக்கு திருட்டு வார்த்தையாடல்களால் பெறலாம் என்று இவர்கள் மூவரையும் விடவும் அரசியல் அனுபவம் நிறைந்த காசி ஆனந்தன் கருதுவது வேடிக்கையாக உள்ளது. 

மோடிக்கு பூவும் தண்ணியும்! 

ஈழத்தமிழர்களுக்கு காதிலே பூ!! 

இந்த பூவும் தண்ணியும் திரைப்படத்தில் காசி ஆனந்தன்  இந்திய தலைமை அமைச்சர் மோடியை வாய்க்கு வந்தவாறு எந்த அரசியல் சாணக்கியமும் அற்று உச்சி முகர்ந்து பாராட்டித் தள்ளுகிறார். 

இதன் தேவை என்ன? இதன் அவசியம்தான் என்ன? எந்த இந்திய தலைமை அமைச்சர்களும் செய்யாததை மோடி செய்திருக்கிறாராம். 

மோடி யாழ்ப்பாணம் வந்து மக்களின் துயரைக் கண்டு கொண்டவராம். 

இதனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷையில் என்ன தாக்கத்தை மோடி ஏற்படுத்தி இருக்கிறார்?  என்றால் எதுவும் இல்லை. தனது அதிகாரிகளை அனுப்பி அபிவிருத்தியில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார்.  

மோடி அரசாங்கம் சொன்னதை சம்பந்தன் திருப்பிச் சொன்னார். நிலைமை இப்படியிருக்க, மோடியின் காலை பூவும் தண்ணியும் கொண்டு கழுவுவதன் அடிமைத்தனம் ஏன்? சம்பந்தனுக்கு சவுக்கடி தண்டனை கொடுக்கும் மர்மம் என்ன ? 

“1833 இல் கோலாபுறூக் ஆணைக்குழு குறிப்பிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  தமிழர் தாயகம் வரலாற்றுக் குறிப்பு மாண்பு மிகு மோடி அவர்களின் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்கிறது”. இது காசி ஆனந்தனின் நெஞ்சில் இருந்து மோடிக்கு போடப்படும் மற்றொரு புகழாரம். 

உண்மையில் இந்திராகாந்தியும்,  ராஜீவ் காந்தியும் ஈழத்தமிழர்களுக்கு செய்ததை விஞ்சி மோடி எதைச் செய்துள்ளார்? இது பிராந்திய மேலாதிக்கம் தொடர்பான விமர்சனங்களுக்கு அப்பால் ஒப்பீட்டளவில் எழுப்பப் படுகின்ற கேள்வி என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

தமிழீழ மீட்புக்கு இந்தியாவின் துணை தேவை என்று தமிழீழ மக்கள் ஏங்கி நிற்கும் ஒரு காலச்சூழலில்….. என்று காசியின் அறிக்கை தொடர்கிறது. வங்கதேசம் தனிநாடான கதையை காசி ஆனந்தன் அறியாமல் இருக்க முடியாது. வேண்டுமானால் உமாமகேஸ்வரனின் வங்கம் தந்த பாடத்தை அவர் மீள் வாசிப்பு செய்வது நல்லது. 

ஆக, காசி ஆனந்தன் இந்தியாவில் தன் இருப்பை மீட்க அல்லது காக்க ஈழத்தமிழர்களுக்கு காதிலே பூச்சூடுகிறாரா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. 

இந்திய மேலாதிக்கமும் ஈழப்போராட்டமும்

இது இந்திராகாந்தியில் தொடங்கி இன்று மோடிவரை தொடரும் ஆதிக்க அரசியல்.  

திம்பு பேச்சுவார்த்தையில் ரேலோ பிரதிநிதி சத்தியேந்திராவை பைத்தியக்காரன் என்று ரொமேஷ் பண்டாரி திட்டிய பிறகும்,  பிரபாகரனை கரும்பூனைகள் டெல்லியில் சிறைப்பிடித்த பிறகும், இந்தியப் படைகள் வந்து செய்வதெல்லாம் செய்து விட்டுச் சென்ற பிறகும், 

முள்ளிவாய்க்காலுக்கு தோள்கொடுத்த பிறகும், காசி ஆனந்தன் ஈழத்தமிழரின் பேரால் இந்தியாவின் காலில் விழுவதன் காரணம் என்ன? 

காசி ஆனந்தன் “விடுதலை” என்பதை தவறாக விளங்கிக் கொண்டுள்ளார். 

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை?” 

அவரது இந்த வார்த்தைகள் விடுதலையை தவறாக கற்பிதம் செய்கின்றன. காசி ஆனந்தன் கருத்துப்படி ஆட்சி அதிகாரம் கைமாறினால் அது விடுதலையாகிறது. 

சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையை அவர் கருத்தில் கொள்ளவில்லை. 

தமிழீழ சமதர்ம அரசு என்று ஒரு மேடையிலும், இன்னொன்றில் தனித்தமிழீழம் என்று இனச்சுத்திகரிப்பின் அர்த்தத்தில் அவர் பேசியும் எழுதியும் வந்துள்ளார். 

ஈழப்போராட்டத்தை புலிகளோ அல்லது அவர்களின் பினாமிகளோ ஒரு வர்க்கப் போராட்டமாக பார்க்கவும் இல்லை, காட்டவும் விரும்பவில்லை. இது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இராஜதந்திர போர்வையை வழங்குவதாக இருந்தது. 

ஸ்பானிஷ் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கியூபாபரட்சியில், ரஷ்யப் புரட்சியில், மாவோவின் நவசீனப்புரட்சியில், அமெரிக்காவிற்கு பாடம் படிப்பித்த ஹோசிமினின் வியட்னாம் புரட்சியில் இருந்து எல்லாம் காசி ஆனந்தன் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே அவரின் கருத்தாடல் காட்டி நிற்கின்றது. 

ஆகக் குறைந்த பட்சம் கேரள,  மேற்குவங்க, நாகலாந்து இடதுசாரிகளிடமும்,  நக்சலைட்டுகளிடமும் கூட நிறைய கற்க இருக்கிறது. 

இதனால்தான் சம்பந்தன் தடுமாறுகிறார் என்று சொல்லி உண்மையில் காசி ஆனந்தன் தடுமாறுகிறார். 

#. ஜம்மு – கஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அந்தஸ்தை மோடியின் அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது. இது இலங்கையில் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு அந்தஸ்தை பிரித்ததற்கு சமமானது. 

#. மேற்கு வங்காள முஸ்லீம்கள் வந்தேறு குடிகள் என்று மோடி அரசாங்கம் அவர்களுக்கான குடியுரிமையை மறுக்கிறது. இது மலையக மக்களின் வாக்குரிமையை கஜேந்திரகுமாரின் பாட்டன் ஜீ .ஜீ. யும் சேர்ந்து பறித்ததற்கு சமமானது. 

#. சீக்கியர்களின் காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையை பொற்கோவிலுக்குள் புகுந்து இந்திராகாந்தியின் அரசாங்கம் பஞ்சாப்பில் ஒரு முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை கொடுத்தது. 

#. காஷ்மீர் போராட்டத்தை இந்திய ஆக்கிரமிப்பு படைகள்  அழிப்பதற்கும். ஈழத்தில் இந்தியப் படைகள் நடந்து கொண்டதற்கும் என்ன வேறுபாடு? 

இப்படி பிராந்திய பூகோள அரசியல் மேலாதிக்கம் இருக்கையில் காசி ஆனந்தன் இந்திய அரசு ஈழவிடுதலைக்கு ஆதரவளிக்கும் என்று நம்பலாமா?  

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா?