— கலாநிதி.சு.சிவரெத்தினம் —
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள்ளிருக்கும் கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா ஆகிய பிரதேசங்கள் மேற்கே மட்டக்களப்பு வாவியையும் கிழக்கே கடலையும் கொண்டிருக்கின்றன. இரு பக்கமும் நீர் வடிந்தோடக்கூடிய புவியியல் அமைவு காரணமாக இப்பிரதேசம் குளங்கள் உடைப்பெடுத்தாலொழிய சாதாரணமாக வெள்ளப்பாதிப்புக்கு உட்படமுடியாது. ஆயினும் வருடாவருடம் இந்தப்பிரதேசம் வெள்ளப்பாதிப்புக்கு உட்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு பின்வரும் மூன்று காரணங்களைக் கூறமுடியும்,
- பொதுமக்கள் இயல்பாக நீர் வடிந்தோடும் தோணாக்கள், வாய்க்கால்களை மறித்து மண்நிரப்பி வீடுகள் கட்டியிருக்கின்றமை.
- சரியான வடிகால் அமைப்பு உருவாக்கப்படாமை.
- கட்டப்பட்ட வடிகான்களை சரியாகப் பராமரிப்பதில்லை.
முதலிரண்டு காரணங்களையும் நிவர்த்தி செய்து சரியான வடிகால் அமைப்பினை உருவாக்க நீண்டகால செயற்திட்டமும் சட்ட நடவடிக்கைகளும் தேவை என்றாலும் கட்டப்பட்ட வடிகான்களை சரியாகப் பராமரிப்பற்கு எவ்வித காரணங்களையும் கூறமுடியாது. அது பொதுமக்களினது பொறுப்பற்ற தன்மையும் தொடர்புபட்ட நிர்வாக அமைப்பினது வினைத்திறன் அற்ற நடவடிக்கைகளுமே காரணமாகும்.
சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு அண்மையாகச் செல்லும் வடிகான், அதற்கு எதிரேயுள்ள மாதர் வீதி வடிகான் என்பன பொதுமக்களால் மூடப்பட்டுள்ளது. என்பதனை சென்ற மாதம் மாநகர மேயர் திரு.சரவணபவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்
அவர் உடனடியாக குறித்த இடத்திற்கு சமூகமளித்து, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கு அண்மையாகச் செல்லும் மூடப்பட்டிருந்த வடிகானை தனது ஊழியர்களைக் கொண்டு வெட்டுவித்தார்.
நான் முறையிட்டவுடன் உடனடியாக களத்திற்கு சமூகமளித்து அவர் ஆற்றிய கடமைக்காக அவரைப் பாரட்டுகின்றேன். இருந்த போதும் மாதர் வீதி வீதியின் வடிகான் தொடர்பாக சுட்டிக்காட்டியபோது அதனை அவர் பொருட்படுத்தாததோடு அவ்வீதி தங்களுடைய வீதி இல்லை என்றும் அது வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்றும் அதனை பராமரிப்பது அவர்கள்தான் என்றும் கூறினார். அவ்வாறிருந்தாலும் வடிகான்களைப் பராமரிப்பது மாநகரசபையினுடைய பொறுப்பு என்பதை அவருக்கு நினைவூட்டிய போது அவ்வடிகானினால் வாவிக்குள் நீர் ஓடுவதில்லை. அடுத்த வடிகானினூடாகத்தான் இந்தப்பிரதேச நீர் ஓடுவது அதனைப் பராமரிக்கின்றோம் எனக் கூறி அவ்வடிகான் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது அங்கிருந்து சென்றுவிட்டார். முறைப்பாடுகளை உடனுக்குடன் களத்துக்குச் சென்று கவனித்து நடவடிக்கைகள் எடுக்கும் மாநகர மேயர் இவ்விடயம் தொடர்பாக இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் இருந்தது.
அதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திரு.கருணைநாதன் அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்படி வீதி யாருடையது என வினவியபோது, அது தங்களுடையது அல்ல என்றும் அது மாநகரசபையினுடையது என்றும் கூறினார். உண்மையில் இது யாருடைய வீதி என்பதை சரியாக அறிந்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னர் சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் உட்பட நொச்சிமுனையை வெள்ளம் மூழ்கடித்திருக்கின்றது.
தற்போது இந்த நிலமையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனை ஒரு பாடமாகக் கொண்டு அடுத்த ஆண்டில் இப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்காதிருப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.