இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — இறுதிப்பகுதி

இலங்கையில் அரசியலமைப்பு உருவாக்கம் அ முதல் ஔ வரை — இறுதிப்பகுதி

 — மல்லியப்புசந்தி திலகர் —

இலங்கையில் வரப்போவது புதிய அரசியலமைப்பா? இலக்கமில்லா இன்னுமொரு திருத்தமா? என்ற  கேள்வியுடன் தொடங்கப்பட்ட  இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவு  கட்டத்தை அடைகிறது. ஏனெனில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் பொதுமக்களிடம் கோரிக்கைகளை ஏற்கும் காலம் நிறைவு பெற்றிருக்கிறது. வரைபுக்கான கோரிக்கைகளை பொதுமக்களிடம் ஏற்கும் காலத்தில் சமூகத்தில், குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஓர் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது எனும் எண்ணத்தோடு ‘அரங்கம்’ வாய்ப்பளித்த விவாத அரங்கில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. 

இந்த இரண்டு மாத கால உரையாடல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்த ஒரு விடயம் இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாகும் என்ற நம்பிக்கையோடு இந்த உரையாடல்வெளி நகர்ந்து செல்லாமையாகும். இதில் அவதானங்களைப் பட்டியல் இட்டால், 

  • மலையகத் தமிழ், முஸ்லிம் தரப்பில் உரையாடப்பட்ட அளவுக்கு இலங்கைத் தமிழர் தரப்பில் உரையாடலுக்கு உள்ளாகவில்லை என்பது முக்கியமானது. இதில் அக்கறை இல்லை என்பதற்கு அப்பால் நம்பிக்கை இல்லை எனும் விடயம் மேலோங்கி இருந்தமை முக்கிய காரணம் எனலாம். அதற்கான பல வெளிப்பாடுகளைக் கண்டறியலாம். உதாரணமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தாமல் இருக்க எடுத்த முடிவினையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் வேண்டா வெறுப்பான கடிதம் ஒன்றுடன் அதனை சமர்ப்பித்தமையும். 
  • முஸ்லிம் சமூகத்தில் இந்த காலகட்டத்தில் அரசியல் அமைப்பு உருவாக்க அக்கறையைக் குறைக்கும் வகையில் ஜனாசா எரிப்பு விடயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தமை. 
  • மலையக நிலையில் சிவில் அமைப்புகள் அக்கறை காட்டிக் கொண்ட அளவுக்கு செயற்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த உரையாடல் வெளியில் பங்கு கொள்ளவில்லை என்பது. 
  • சிங்கள மக்கள் தரப்பிலும் கூட கடந்த 2016 – 2018 காலப்பகுதியில் காட்டப்பட்ட அளவு அக்கறை பாரிய அளவில் இடம்பெற்றதை அவதானிக்க முடியவில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஓரளவு உரையாடல் இடம்பெற்றன. அதில் தமிழ், முஸ்லிம் மாணவர்களின் பங்கேற்பு கணிசமாக உணரப்படவில்லை. 
  • இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கிய ஒரு பிரதிபலிப்பை,  இங்கிலாந்தினை மையமாகக் கொண்டு இயங்கும்  ‘இனவாதத்துக்கு எதிரானதும் ஜனநாயகத்துக்கமான மக்கள் அமைப்பின்’ முன்மொழிவுகளில் அவதானிக்க கூடியதாக இருந்தமை. 

    இத்தகைய அவதானிப்புகள்,  இலங்கையில் அடுத்து வரவுள்ளதாக சொல்லப்படும் புதிய அரசியலமைப்பு மீதான நம்பிக்கை இலங்கை மக்களிடத்தில் குறைவாகவே உள்ளது என்பதன் வெளிப்பாடாகவே கொள்ள முடியும். 

    பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெற ‘அ’ முதல் ‘ஒள’  வரை பிரமாணங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் மொழிபெயர்ப்பே சிக்கலானதாகவே அமைந்து இருந்தது. இந்தச் சிக்கல் அரசியல் அமைப்பின் உண்மையான தேவைப்பாட்டுக்கும் பொதுமக்களின் புரிதலுக்குமான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

    எப்படியோ பொதுமக்கள் தமது ஆலோசனைகளை வழங்கும் காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போதைய அரசியலமைப்பில் இருந்து உத்தேச அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வருமா என்பதை ஓர் ஒப்பீட்டு மதிப்பாய்வாக (அனுமானமாக) கொள்வோமாயின் பின்வருமாறு அமையலாம் 

    அ. அரசின் தன்மை – மாற்றமடையாது. (மதச்சார்பு, ஒற்றையாட்சி) 

    ஆ. அடிப்படை உரிமைகள் – மாற்றமடையாது 

    இ. மொழி – மாற்றமடையாது 

    ஈ. அரச கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள் – அரசின் தன்மையை ஒத்தே இருக்கும் 

    உ. நிறைவேற்றுத்துறை (ஜனாதிபதி, அமைச்சரவை,  பகிரங்க சேவை) – ஜனாதிபதி முறைமையோ அமைச்சரவையோ மாற்றமடையாது. பகிரங்க சேவை என்பது பொது நிர்வாகத்தை குறித்து நிற்கிறது. இலங்கையில் பொது நிர்வாக கட்டமைப்பு பாரிய மாற்றத்துக்கு உள்ளாக வேண்டிய ஒரு அம்சம். காலனித்துவ காலத்தில் அவர்கள் ‘கிராம மட்ட‘ நிர்வாகத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவையானது எல்லாம் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதற்கான நிர்வாக ஏற்பாடுகளே. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட இன்றுவரை காலனித்துவ கால நிர்வாக முறைமைகளும் சட்டங்களுமே நடைமுறையில் உள்ளன. 70 சதவீதம் கிராம கட்டமைப்பைக் கொண்டுள்ள இலங்கையில் முறையாக கிராமங்களின் அபிவிருத்தியை இலக்குவைத்த நிர்வாகத் திட்டமிடல்கள் இல்லை. இப்போது அதனையும் தாண்டி 25 நிர்வாக மாவட்டங்களும் கொவிட் 19 சூழல் நிர்வாகம் என்ற பெயரில் இராணுவ உயர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே இலங்கை நிர்வாகம் ஜனநாயகம் சார்ந்த பாதையில் பயணிப்பதற்கான சாத்தியம் குறைவடைந்து கொண்டே செல்கிறது எனலாம். 

    ஊ. சட்டவாக்கத்துறை –  மாற்றமடையாது (உறுப்பினர் எண்ணிக்கையில் மாத்திரம் மாற்றம் ஏற்படலாம் ) 

    எ. வாக்களிப்புத் தத்துவம் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு உள்ளடங்களாக தேர்தல்கள் – மாற்றமடையும். விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றியமைத்து கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும். மாகாண சபை தேர்தல் ஒன்று நடைபெறுமானால் அதுவே இலங்கையில் இறுதியாக நடைபெறும் விகிதாசார தேர்தல் முறையாக இருக்கலாம். 

    ஏ. அதிகாரத்தைப் பன்முகப்படுத்தல் / அதிகார பரவலாக்கம் / அதிகார பகிர்வு –  இருக்கின்ற மாகாண சபை முறைமையை தக்கவைத்துக் கொண்டாலே போதுமானது எனும் மனநிலைக்கு அதிகாரப் பன்முகப்படுத்தல் உணரச்செய்யப்பட்டுள்ளது. எனவே அதனையும் தாண்டிய ஒரு அதிகார பரவலாக்கத்தை,  பகிர்வை எதிர்பார்க்க முடியாது. 

    ஐ. நீதித்துறை – இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாம் திருத்தத்தின் பின்னான நிலைப்பாடே நிலைக்கும் போல தெரிகிறது. 

    ஒ. பகிரங்க நிதி – இந்தத் தலைப்பு பொதுமக்களிடத்தில், சிவில் சமூக மட்டத்தில் பெரும்பாலும் உரையாடப்படவில்லை. அந்த அளவுக்கு ‘பொதுநிதி’ ( Public Finance) எனும் விடயம் இலங்கையில் வெளிப்படைத்தன்மையற்று (Transperency) இருப்பதாகவே தெரிகிறது. கொவிட் 19 க்கு பின்னான சூழ்நிலைகள் அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. பொருளாதார நிலையில் நாடு வங்குரோத்து நிலை நோக்கிப் பயணிப்பதாகவே பலரும் உணர்கின்றனர். 

    ஓ. பொதுமக்கள் பாதுகாப்பு – இந்த விடயம் குறித்தும் பரவலாக உரையாடப்படவில்லை. உண்மையில் இதன் மொழிபெயர்ப்பு தேசிய பாதுகாப்பு என்றே எழுதப்பட்டு இருக்க வேண்டும் (National Security). இந்த முன்மொழிவு இறைமைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்ளல் என்பதாக அணுகப்படவேண்டியது. ஆனால், அரசாங்கங்களிடம் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற நிலையில் சிந்திக்கச் செய்யும் நிலை வேதனைக்குரியது. 

    ஒள. மேலே குறித்துரைக்கப்படாத அக்கறையுள்ள வேறு ஏதேனும் விடயம்  

    ‘அ’ முதல் ‘ஔ’ வரையான பிரமாணங்களில் முன்மொழிவாளர்களுக்கு வாய்ப்பைத் தந்த ஓர் பகுதியாக ‘ஔ’ அமைந்தது எனலாம். மேலே ‘அ’ முதல் ‘ஓ’  வரையாக தங்களால் முழுமையாக சொல்லிக் கொள்ள முடியாத சகலதையும் ‘மேலே குறித்துரைக்கப்படாத அக்கறையுள்ள’ விடயங்களாக கொட்டித் தீர்க்க வாய்ப்பளித்த பகுதி. ஆனால், அரசியலமைப்பு உருவாக்க நிபுணர் குழு இந்த  ‘ஔ’ பகுதியை எந்தளவுக்கு உள்வாங்கிக் கொள்ளும் என்பது கேள்விக்குறி. இந்தக் குழு தொடர்பான வெளிப்படையான விமர்சனம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் இரா.ரமேஷ் முன்வைத்துள்ளார் . 

    இத்தனையையும் தாண்டி இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று வருமா? என்றால் அதற்கு இல்லை ! என்றே பதிலளிக்க நேரிடும். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு மாறாக “தேர்தல் முறைமையில்” மாத்திரம் திருத்தத்தைச் செய்து அரசியலமைப்பை மாற்றிவிட்டதான தோற்றப்பாடு காட்டப்படலாம். அப்படியாயின் அது, இப்போதைய அரசியலமைப்பின் ஒரு ‘திருத்தம்’ மாத்திரமே. முழுமையான மாற்றம் அல்ல. 

    இலங்கையில் முழுமையான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமெனில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
  • காலனித்துவ முறைமையை அடியொற்றிய பிரித்தானிய தழுவல் முறையில் இருந்து விடுபட்ட அரசியல் அமைப்பு ஒன்று குறித்தான சிந்தனையைப் பெறுதல். 
  • ஐக்கிய அமெரிக்க தழுவல் முறையிலான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை விடுத்த அரசியல் அமைப்பு ஒன்று குறித்தான சிந்தனையைப் பெறுதல். 
  • ஆசிய நாடுகளில் சுதந்திரத்துக்குப் பின்னான நாடுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகள் குறித்த படிப்பினைகளைப் பெறுதல். (உதாரணம் : நேபாளம் – மன்னராட்சியில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு, சிங்கப்பூர் – இலங்கையின் புவியியியல், குடியியல் கட்டமைப்பை ஒத்த நாடு) 

    இவற்றுக்கு அப்பால் இலங்கை சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை ஒன்றிணைத்து ஆய்வுக்குட்படுத்தி, அவற்றில் பொதுப்பண்புகளை அடையாளம் காணுவதும் அதில் முரண்படக்கூடிய இடங்களில் உள்ளார்ந்த தீர்வைக் காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளுதலும். அவற்றுள் இணக்கப்பாடு எட்டப்படுமிடத்து அதனைப் பொது ஆவணமாக்கி இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயுமாக ‘புதிய அரசியலமைப்பு’ ஒன்றுக்கான கோரிக்கையாக முன்கொண்டு செல்லல். இதன்போது முற்போக்குச் சிங்கள சக்திகளின் இணக்கப்பாட்டினை ஆரம்ப கலந்துரையாடல்களில் இருந்தே இணைத்துக் கொண்டு செல்ல முடியுமெனில் அது மேலும் வலிமை பெற்றதாக இருக்கும்.  

     (முற்றும்)