கருக்கலைப்பிற்கான உரிமை – இன்று ஆர்ஜன்டீனா- நாளை இலங்கை?

கருக்கலைப்பிற்கான உரிமை – இன்று ஆர்ஜன்டீனா- நாளை இலங்கை?

  — விஜி பிரான்ஸ் — 

பெண்களுக்கான உரிமைகளில் கருக்கலைப்பிற்கான உரிமை மிகவும் முக்கியமானது. பெண்களது உடல் பெண்களுக்கே சொந்தமானது. தனது உடலினுள் விரும்பிய போது கருத்தரிக்கும் உரிமையும், விரும்பாத போது கருக்கலைக்கும் உரிமையும் அவர்களுக்கே உண்டு.  

உறவுகளோ, சமூகமோ அல்லது மதமோ பெண் உடல்மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது. மேலும் பெண்களை அவர்களது விருப்பத்திற்கு முரணாக குழந்தை பெற வைப்பதும், கருக்கலைக்க வைப்பதும் மிகவும் மோசமான வன்முறையாகும். இதுவேதான் உண்மையில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். மாறாக கருக்கலைப்பு அல்ல.   

உலக நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட தொடங்கியதில் இருந்து கருக்கலைப்புக்கான உரிமைப் போராட்டமும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றது. அப்போராட்டங்களின் ஊடாக பல நாடுகளில் கருக்கலைப்புக்கான உரிமை பெண்களால் வெற்றிகொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

எனினும் இன்றுவரை உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் இதற்கான உரிமையை மறுத்தவண்ணமே இருக்கின்றன. கருக்கலைப்பு செய்வதனை ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும், கலாச்சார சீரழிவாகவும், பாவச்செயலாகவும் கருதுகின்ற வழக்கமே இன்றுவரை பல நாடுகளில் காணப்படுகினறன. இதன் காரணமாக இத்தகைய நாடுகளில் இரகசிய கருக்கலைப்புகளை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தொடர்கிறது. சட்டத்திற்கு மாறான முறையில் மிகவும் ஆபத்தான, எந்தவித மருத்துவ, சுகாதாரப் பாதுகாப்பற்ற இரகசிய கருக்கலைப்பை செய்வதன் மூலம் உடல்நலச் சீர்கேடுகளும், உயிராபத்துக்களும், மரணங்களும்கூட ஏற்படுகின்றன.  

இந்த நிலையில்தான் ஆர்ஜன்டீனாவில் கடந்த டிசம்பர் 30 திகதியன்று கருக்கலைப்புக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனாவின் செனட்சபையில் 29 திகதி தொடங்கி மறுநாள் அதிகாலை 5 மணிவரை இடம்பெற்ற நீண்ட அமர்வின்போது கருக்கலைப்பிற்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

நீண்டதும், காரசாரமானதுமான வாதப்பிரதிவாதங்களின் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இவ்வேளை இவ்வாக்கெடுப்பையும், முடிவையும் ஆவலோடு எதிர்பார்த்தவண்ணம் ஆயிரக்கணக்கான பெண்களும், சமூக ஆர்வலர்களும் விடிய விடிய பல இடங்களில் கூட்டமாக காத்துக்கிடந்தனர். இறுதியில் தீர்மானத்திற்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டு, 11 மேலதிக வாக்குகளால் ஆர்ஜன்டீன பெண்களின் ‘கருக்கலைப்புக்கான உரிமை’ சட்ட அங்கீகாரம் பெற்றது.   

ஆர்ஜன்டீன பின்னணி

இதுவரைகாலமும் அதாவது 1921 இல் இருந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களது கருக்களையும், உயிராபத்தில் இருக்கும் பெண்களது கருக்களையும் மட்டுமே கலைப்பதற்கான உரிமை ஆர்ஜன்டீனாவில் நடைமுறையில் இருந்து வந்தது. இதன்காரணமாக 44 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 370,000 தொடக்கம் 520,000 இரகசிய கருக்கலைப்புகள் நடைபெற்றுக்கொண்டு வந்தன. அதில் இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சிகளால் பல்வேறு விதமான உயிராபத்து உட்பட்ட உடலியல் உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்த பெண்களின் எண்ணிக்கை வருடாந்தம் 38,000 வரையாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கருக்கலைப்புக்கான பூரண உரிமைகோரி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆர்ஜன்டீன பெண்ணிய அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வந்தன. 

ஆர்ஜன்டீனாவானது மரபார்ந்த கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டுள்ள நாடு என்பதும், கீழைத்தேய கலாச்சாரங்களை ஒட்டிய கருக்கலைப்பிற்கு எதிரான ஒழுக்கவியல் சிந்தனை முறைகளை கடைபிடித்து வருகின்ற ஒரு நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி கருக்கலைப்பை ஒருபோதும் அங்கீகரிக்கக்கூடாது என்கின்ற கிறிஸ்தவ மரபினை நிலைநாட்டி வருகின்ற வத்திகானில் இன்று இருக்கின்ற பாப்பாண்டவரான பிரான்சுவா ஆர்ஜன்டீனாவை பிறப்பிடமாகக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

ஆனபோதிலும் இதுவரை இருந்துவந்த பாப்பாண்டவர்களைவிட இவர் முற்போக்கானவராக கருதப்பட்டு வருபவர். குறிப்பாக ஆர்ஜன்டீனாவில் 2010 இல் ஓரே பாலினத்தாரின் திருமணம் சட்டரீதியாக்கப்பட்டபோது அதனை வரவேற்று கருத்துத் தெரிவித்தவர். இருந்தபோதிலும் கருக்கலைப்புக்கான உரிமைப் போராட்டதின் உச்சகட்ட நிலையில் அவரது கருத்துக்கள் கருக்கலைப்புக்கு எதிராகவே வெளிவந்திருந்தன.  

அதாவது ‘நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் கடவுளின் குழந்தையே. அதை நிரூபிக்கவே நிராகரிக்கப்பட்ட குழந்தையாக தேவனின் குமாரன் பிறந்தார்’ என்றும் ‘குறித்த பிரச்சனையொன்றின் தீர்வுக்காக ஒரு உயிரை கொல்லுவது என்பது நியாயமாகுமா?’ என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். 

எனினும் அனைத்தையும் தாண்டி மதநம்பிக்கையும், கலாசார இறுக்கமும் கொண்ட ஆர்ஜன்டீனாவில் கருக்கலைப்பிற்கான உரிமை வெற்றிபெற்றுள்ளது.  

இச்செய்தியானது லத்தீன் அமெரிக்க நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். பெண்ணிய அமைப்புக்களின் அயராத உரிமைப்போராட்டமே இந்த வெற்றியினை சாத்தியமாக்கியுள்ளது. அதேவேளை நாடுதழுவிய வகையில் 300இற்கும் மேற்பட்ட பெண்ணிய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டமையானது கருக்கலைப்பிற்கான உரிமை அற்ற நாடுகளில் உள்ள பெண்ணியவாதிகளுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கின்றது.  

லத்தின் அமெரிக்க நாடுகளில் இவ்வுரிமையை அங்கீகரித்திருக்கும் நாடுகளான கியூபா, கயானா, உருகுவே போன்றவற்றைத் தொடர்ந்து நான்காவது நாடாக ஆர்ஜன்டீனா இடம் பிடித்துள்ளது. ஆகவே ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கக்கூடிய இத்தகைய பெண்களின் போராட்டங்களிலும் இவ்வெற்றியானது நிச்சயம் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்சட்டத்தின் பிரகாரம் ஆர்ஜன்டீனாவில் 16 வயதிற்கு மேற்பட்ட (இந்த வயதிற்கு குறைந்தவர்களுக்கு சில நிபந்தனைகளுடன்)  கர்ப்பிணிப் பெண்கள் தாம் விரும்பும் பட்சத்தில் கற்பம் தரித்த 14 வாரங்களுக்குள் (இக்காலம் பிரான்சில் 12 வாரங்களுக்குள்) கர்ப்பத்தை கலைக்க முடியும் என்றும், மருத்துவமனைகளில் (அரச, தனியார்) இச்சேவை நூறு வீதம் இலவசமாக செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது இதுவரை காலமும் நாள்தோறும் நடைபெற்று வந்த ஆபத்தான இரகசிய கருக்கலைப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்களை காப்பாற்றியுள்ளது. அத்தோடு ‘பெண்களது உடல் பெண்களுக்கே உரிமை’ என்கின்ற சுலோகத்தின் பின்னால் உள்ள பெண்களது அரசியல், சுயமரியாதை கோரிக்கைகளையும் வழங்கி நிற்கின்றது. 

இலங்கை மற்றும் இந்திய நிலை 

இலங்கையை பொறுத்தமட்டில் தாயின் உயிருக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் மாத்திரமே கருக்கலைப்பு செய்யமுடியும் என்கின்ற சட்டத்தை மட்டுமே அந்த நாடு கொண்டுள்ளது. இந்தியா இதனுடன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களும் கருக்கலைப்பை மேற்கொள்ள முடியும் என்கின்ற வரையறையையும் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள பெண்ணிய அமைப்புகள் நீண்ட காலமாக கருக்கலைப்பு உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்ற போதிலும் பெரிய தீவிரமான போராட்டமாக அது முன்னெடுக்கப்படவில்லை. இத்தகைய பெண்ணுரிமைசார் போராட்ட சிந்தனைகள் சமூக, கலாச்சார, மத நம்பிக்கைகளைத் தாண்டி ஆழமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். எது எப்படியிருந்தபோதும் கருக்கலைப்புக்கான உரிமை சட்டரீதியாக இலங்கையிலும் கொண்டுவரப்பட வேண்டும். அதைநோக்கி இலங்கையில் உள்ள பெண்ணிய அமைப்புக்களிடையேயான இன, மத எல்லைகளைக் கடந்த பரஸ்பர உறவுகளும், புரிந்துணர்வுகளும் விரிவடைய வேண்டியுள்ளது.