முஸ்லிம்களின் மற்றும் தேசத்தின் நலன்களை ஒன்றாக நோக்கிய ஒரு முஸ்லிம் தலைவர்

முஸ்லிம்களின் மற்றும் தேசத்தின் நலன்களை ஒன்றாக நோக்கிய ஒரு முஸ்லிம் தலைவர்

(மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்களால் ஆங்கில ஊடகமொன்றுக்காக எழுத்தப்பட்ட ஆக்கத்தை தமிழில் தருபவர் சீவகன் பூபாலரட்ணம்.) 

இலங்கையில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கான இயக்கத்தின் அடிக்கல்லை நட்டவர் டாக்டர் துவான் புர்ஹானுதீன் ஜாயா. அந்த இயக்கத்தில் ‘வகுப்புவாத, பிரிவினைவாத ஆர்வங்கள்’ என்றும் ஒட்டுமொத்த தேசிய நலன்களுக்கு குந்தகமாக அமைந்துவிடாத மாதிரியும் அவர் அதனை வழி நடத்தினார். அதனால்தான் ரி.பி.ஜாயா என்று அழைக்கப்பட்ட அந்தத் தலைவர் ஒரு சமூகத்தலைவராகப் பார்க்கப்படாமல், ஒரு தேசியத் தலைவராக பார்க்கப்பட்டார். 

1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கலகெதர என்னும் இடத்தில் மத நம்பிக்கை மிக்க மலாய் இன பொலிஸ்காரர் ஒருவரின் மகனான ரி.பி.ஜாயா அவர்கள், தனது இளவயதிலேயே புனித குரானில் நல்ல அறிவுகொண்டவராக திகழ்ந்தார்.  

வழமையாக பாரம்பரியத்தை பின்பற்றும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நவீன கல்வியைக் கொண்டுசென்ற ஒரு சிறந்த செயற்பாட்டாராகவும், இலங்கையின் பல் சமூக சூழலில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கான இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பில், பெரிதும் அரசியல் மயப்படுத்தப்படாத முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு அரசியல்வாதியாகவும் அவர் திகழ்ந்தார். ஆனால், இவற்றின் பின்னணியில் அவர் இஸ்லாமிய விழுமியங்களை பின்பற்றும் ஒருவராகவே செயற்பட்டார். 

மிதவாத மற்றும் கொஞ்சம் பழமைவாத பின்னணியை கொண்டிருந்தவராக இருந்த போதிலும் ரி.பி.ஜாயா அவர்கள் ஐரோப்பிய நாகரீகம் குறித்த கல்வியை கற்க புனித தோமஸ் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதனையடுத்து, சிங்கள-பௌத்த தேசியவாத கோட்டையாகத் திகழ்ந்த ஆனந்தா கல்லூரிக்கு அவர் மேற்கத்தைய நாகரீகத்தை கற்பிக்கச் சென்றார். இந்த பரந்த நோக்கம் கொண்ட, பெருநகரம் சார்ந்த பின்னணியுடன், முஸ்லிம்கள் மத்தியில் நவீன தாரளவாத கல்வியை அறிமுகம் செய்ய அவர் முனைந்தார். அந்தக்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் வணிகம் செய்பவர்களாகவும், நவீன தாராளவாத கல்வியின் தாக்கம் குறித்து அச்சம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். 

சாஹிரா கல்லூரி 

ஆனால், முன்னைய காலங்களில் இஸ்லாம் புதிய கொள்கைகளை எவ்வாறு ஊக்குவித்தது என்பது குறித்தும், இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் எந்த அளவுக்கு அறிவியல் உலகில் முன்னணியில் திகழ்ந்தனர் என்பது குறித்தும் ரி.பி. ஜாயா முஸ்லிம்களுக்கு எடுத்துக்கூறினார். நவீன இந்தியாவின் இஸ்லாமிய தலைவர்களான சேர். சயிட் அஹ்மட் கான் மற்றும் பதுறுதீன் தைப்ஜி ஆகியோரால் கவரப்பட்ட ஜாயா அவர்கள் சாஹிரா கல்லூரியை அமைத்ததுடன் அதன் அதிபராக சிரமங்கள் நிறைந்த 6 வருடங்களுக்கு கடமையாற்றினார். இஸ்லாமிய பெறுமானங்களின் கீழ் தாராளவாத கல்விக்கான ஒரு மையமாக ஜாயா அவர்களின் கீழ் சாஹிரா செயற்பட்டது. அதில் ஜாயா அவர்களின் பங்களிப்பானது இந்திய தேசியத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோரின் பண்புகளைப் பின்பற்றியதாக இருந்தது. கொழும்புக்கு வெளியே முஸ்லிம்களுக்கான கல்வியைக் கொண்டு செல்வதற்காக பல கிளைகளையும் ஜாயா திறந்தார்.  

ஒரு முஸ்லிம் தலைவராக இருந்தாலும் அரசியலில் ஜாயா அவர்கள் ஒரு தேசியமட்ட தலைவருக்குரிய பங்களிப்பையே வழங்கினார். தம்மை உரிய வகையில் கட்டமைத்துக்கொள்ளாத சமூகங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் அல்லது கிட்டத்தட்ட அழிந்தே போகக்கூடிய ஜனநாயக மற்றும் போட்டி மிக்க இலங்கையில், தமது வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்களும் தமது உரிமைகளுக்காக போராட ஒன்றுபட வேண்டும் என்று அவர் விழிப்புணர்வை வழங்கினார்.  

ரி.பி. ஜாயா அவர்கள் அரசியலில் நுழைந்த கதை, முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த அவரது சிந்தனை மற்றும் அவரது ஒன்றுபடுத்தப்பட்ட செயற்பாடு ஆகியன என்வர் சி அஃலிப் அவர்களின் “A life serene: A life sketch of Al Haj. Dr. T.B. Jayah” என்ற நூலில் விரிவாக பேசப்பட்டுள்ளது. அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்கா அவர்கள் அதற்காக எழுதிய குறிப்பு ஒன்றில், “சுதந்திரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் இந்த நாட்டின் குடிமக்களை ஒன்று திரட்டுவதற்கு ரி. பி. ஜாயா அவர்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம்களுக்கான போராட்டம் 

இலங்கையின் அப்போதைய சட்டவாக்கப் பேரவையில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று ஆசங்களில் ஒன்றுக்காக ரி.பி.ஜாயா அவர்கள் போட்டியிட விரும்பிய போது அவரது மலாய் சமூகம் அதனை விரும்பவில்லை. அரசியல் ரீதியாக கொஞ்சம் தனிமைப்பட்டிருந்த அந்த சமூகத்தினர் அது ஒரு மடத்தனமான முடிவு என்று நம்பினார்கள். ஆனால், இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையான சோனகர்கள் அதனை விரும்பினார்கள். ஜாயா அவர்களுக்கு அதில் போட்டியிடுவதற்கான தகமையை ஏற்படுத்தும் வகையில் இலங்கை முஸ்லிம் சங்கத்தின் தலைவரான கமர் காசிம் அவர்கள் தனது பதவியை அவருக்காக துறந்தார். 

இலங்கை அரசாங்க முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வதற்கு அனுமதி பெறும் முயற்சிகளில் இறங்கியதன் மூலம் ஜாயா தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இது வெறும் தொழுகை மாத்திரமல்ல முஸ்லிம்கள் அனைவரும் கூடிப் பிரார்த்திக்கும் நிகழ்வாகும். இந்த கோரிக்கை மிகவும் எளிமையானதும் எவருக்கும் பாதகம் இல்லாததுமாக இருந்த போதிலும் அதற்கான அனுமதியைப் பெற நீண்ட காலம் பிடித்தது. இதற்கான முதல் கோரிக்கையை 1923 இல் அகில இலங்கை மலாய் சங்கம் முன்வைத்த போதிலும், எவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால், 1925இல் இதனை கையில் எடுத்த ஜாயா அவர்கள் தொடர்ந்து அதற்கான அழுத்தங்களை கொடுத்து வந்தார். 

இந்த விடயங்கள் ஜாயா அவர்களின் மனதில் ஒரு விடயத்தை உணரவைத்தது. அதாவது, முஸ்லிம்கள் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான உரிமைகளை உரிய தருணத்தில் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டால், அரசாங்க அதிகாரிகள் சிறுபான்மையினரின் நலன்களை, அவர்களின் எண்ணிக்கை பலம் போதாது என்ற காரணத்துக்காகவே தகர்த்துவிடுவதுடன், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களை இலகுவாகவே செய்துவிடுவார்கள் என்பதே அதுவாகும். 

சிறுபான்மை குறித்த கலந்துரையாடல் 

சிறுபான்மையினரை இலகுவில் பாதிக்ககூடிய அனைத்து சட்டங்களையும் உருவாக்கும் முன்னதாகவும் சிறுபான்மையினரிடம் அவை குறித்து கலந்துரையாட வேண்டும் என்ற ஒரு பலமான கோரிக்கையை ஜாயா அவர்கள் முன்வைத்ததாக என்வர் அஃலிப் அவர்கள் எழுதுகிறார். “அப்படியான பாரபட்சங்கள் பெரும்பான்மை சமூகத்துக்கு தெளிவற்றதாக இருக்கிறது” என்று அவர் உணர்ந்தால், அது குறித்து முடியுமான வழிகளில் அவர்களுக்கு அறிவூட்டவும் ஜாயா முயற்சித்தார் என்கிறார் அஃலிப். 

“ஒரு சட்டத்தை வடிவமைக்கும் போது, அது சில சமூகங்களை பாதிக்குமாக இருந்தால், அவ்வளவு ஏன், அவர்களின் மதம் குறித்த பார்வைகளை பாதிக்குமாக இருந்தாலும், அந்த விடயங்களில் அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது” என்று 1925 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அவர் சட்டவாக்க பேரவையில் பேசியுள்ளார். சில சமூகங்களில் காணப்படுகின்ற துஸ்பிரயோகங்கள் திருத்தப்பட வேண்டும், சமூகங்களின் கரிசனைகள் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

“அரசாங்கம் நல்ல நோக்கங்களின், சிந்தனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்காக, மக்களின் கருத்துக்களை கேட்காது விட்டுவிடக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முஸ்லிம் திருமணச்சட்டம் 

1941 ஆகஸ்டு 27 ஆம் திகதி இலங்கை அரச சபையில் ‘முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட ஜாயா அவர்கள், முன்னணி நீதிபதியான ஜஸ்டிஸ் அக்பர் உதவியில், முஸ்லிம்கள் திருமணச் சட்டம் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாதா என்று கேள்வி எழுப்பினார். அவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அவருக்கு அப்போது பதில் கூறப்பட்டது. ஆனால், 1945 இல் அவர் அதே கேள்வியை மீண்டும் கேட்டபோதும், “அவற்றை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்” என்றே பதில் கூறப்பட்டது. 

டொனமூர் ஆணைக்குழு 

இலங்கையின் எதிர்கால அரசியலமைப்புக்கான டொனமூர் ஆணைக்குழு 1927இல் இலங்கை வந்த போது, ஜாயா தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் லீக், கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய இடங்களில் தமது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. வயதுவந்த அனைத்து இலங்கையருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்த முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு போதுமான உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியது. 

முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றாக தமது கோரிக்கைகளை ஆணுக்குழுவின் முன்பாக வைக்க வேண்டும் என்ற ஜாயாவின் கோரிக்கையை முஸ்லிம் தலைவர்கள் செவிமடுக்க மறுத்ததால், முஸ்லிம் விவகாரம் அங்கு பாதிக்கப்பட்டதாக அஃலிப் கருதுகிறார். தாம் இலங்கையின் பூர்வகுடிகள் என்பதால், தாம் சிறப்பு கவனத்தை பெறத் தகுதியானவர்கள் என்று சோனகர்கள் கூறிய அதேவேளை, தாம் தனித்துவமானவர்கள் ஆகவே தமக்கு பிரத்தியேகமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று மலாய் முஸ்லிம்கள் கூறினார்கள். அத்துடன், அனைவரும் இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயன்றனர். இந்திய முஸ்லிம்களும்கூட, தமக்கிடையே மொழியாலும், இந்தியாவில் தமது பூர்வீக இடத்தாலும் வேறுபட்டு பிரிந்து நின்றனர். 

இதன் விளைவுகள் மோசமானவையாக இருந்தன. முற்றாக குழம்பிப்போன ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக சமூக ரீதியான பிரதிநிதித்துவத்தை நீக்கிவிட்டனர். அதனை ஒரு புற்றுநோயாக அவர்கள் வர்ணித்தனர். 

இது ரி.பி. ஜாயாவுக்கும் அவரது முஸ்லிம் லீக்குக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. முஸ்லிம்கள் இலங்கைத்தீவு எங்கிலும் சிதறி அங்காங்கு வாழ்ந்ததால், அவர்களுக்கு சட்டவாக்க பேரவைக்கு ஒரு உறுப்பினரைக் கூட தெரிவு செய்ய முடியாது என்ற காரணத்தால், அவர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஜாயாவும் முஸ்லிம் லீக்கும் பலமாக உணர்ந்தனர். ஐம்பதினாயிரம் பேரின் கையெழுத்துக்களை சேகரித்த அகில இலங்கை முஸ்லிம் லீக், தமது கோரிக்கை தொடர்பாக பேச இங்கிலாந்துக்கு சென்றது. அங்கு இங்கிலாந்தின் காலனித்துவ நாடுகளின் அரசுத்துறைச் செயலரைச் சந்திப்பது அவர்களது நோக்கம். அந்த குழுவுக்கு ரி. பி. ஜாயா தலைமை தாங்க, எம். மஃரூப், மட்டக்களப்பின் சி. அப்துல் காதர், வணிகரான சுலாம் ஆகியோரும் அதில் இடம்பெற்றனர். இருந்தபோதிலும் அரசுப் பேரவை டொனமூர் அரசியலமைப்பை நிறைவேற்றி விட்டதால், தன்னால் அது தொடர்பில் எதுவும் செய்ய முடியாது என்று அரசுத்துறை செயலர் கூறிவிட்டார். (இரு மேலதிக வாக்குகளால்தான் இத்தனைக்கும் அது நிறைவேற்றப்பட்டிருந்தது.) 

காலனித்துவ நிர்வாகிகளின் போக்குக்கு பெரும்பான்மை சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்று ஜாயா குற்றஞ்சாட்டினார். சிறுபான்மை சமூகம் தமக்கு சிறப்பான முன்னுரிமைகளை பெறுவதற்காக சமூக ரீதியிலான பிரதிநிதித்துவத்தை கோருவதாக பெரும்பான்மை சமூகம் காண்பிக்க முனைந்தது. சிறுபான்மையினர் பெரும்பான்மையினருடன் ஒருங்கிணைந்து வாழ மறுப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 

“ஒட்டுமொத்த சமூகமே தமது சுய பாதுகாப்புக்கான சிந்தனையின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கும் போது, நாட்டின் மீது அபிமானமும், சிறுபான்மையினருக்கும் இங்கு இடம் உண்டு என்ற நம்பிக்கையும் கொண்ட பெரும்பான்மை சமூகத்தவர், சரியோ பிழையோ, எமது போராட்டத்தை தவறாக வியாக்கியானப்படுத்துவதும், எமது பாதைக்கு இடையூறாக இருப்பதும் சரியா?” என்று ஜாயா கேள்வி எழுப்பினார். 

பெரும்பான்மைச் சிந்தனை 

ஆனால், ஜாயாவின் கோரிக்கையை எவரும் செவிமடுக்கவில்லை. “சிறுபான்மையினரின் கோரிக்கைகள் தமது தேசிய அரசாங்கத்துக்கான கோட்பாட்டை குறைத்து மதிப்பிடச் செய்துவிடும்” என்று அன்றைய சிங்கள தலைவர்கள் எண்ணினார்கள் என்கிறார் அஃலிப். அவர்களைப் பொறுத்தவரை பெரும்பான்மை பார்வை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கான எந்த சலுகைகளும் தேசிய அரசாங்கத்தை இல்லாது செய்துவிடும் என்பதே கருத்தாக இருந்தது. 

“சிறுபான்மையினரின் நலன்கள் குறித்த எந்தவிதமான முன்வைப்புகளும் தேசிய நலனுக்கு முரணானது என்று பெரும்பான்மை சமூகம் நினைத்தது” என்கிறார் அஃலிப். “சிறுபான்மையின மக்கள் குறித்த சிங்கள மேட்டுக்குடியின் கடும்போக்கு மனோபாவத்தின் ஆரம்பம் இது” என்றும் “இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து சேர். பொன். இராமநாதன் “உவப்பற்ற” வகையில் அகற்றப்பட்டதும் இதற்கு ஒரு உதாரணம்” என்றும் அஃலிப் கூறுகிறார். 

இலங்கை என்ற தேசத்தில் முஸ்லிம்கள் முற்றாக பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு பாகம் என்றும், நாட்டின் அனைத்து மக்களின் பங்களிப்பும் இன்றி நாடு முன்னேற முடியாது என்றும் ரி. பி. ஜாயா வாதிட்டார். ஆனால், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் சார்பில் ரி.பி. ஜாயா அவர்கள் மீண்டும் சோல்பரி ஆணைக்குழு முன்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்தார். அதுவும் சமூக ரீதியிலான பிரதிநிதித்துவத்துக்கான கோரிக்கையை நிராகரித்தது.  

எப்படியிருந்த போதிலும், இவ்வளவு கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும், இலங்கையின் சுதந்திரத்துக்கான உறுதியான ஆதரவாளராகவே ரி.பி. ஜாயா திகழ்ந்தார். பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தேசத்தின் உருவாக்கத்துக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார், ஆனால், இலங்கை பிரிவுபடுவதை அவர் என்றும் விரும்பியதில்லை. வெறும் சமூக நலன்களைவிட, இலங்கைக்கான சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது என்று அரசுப்பேரவையில் அவர் கூறியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தனது 70வது வயதில் ரி.பி ஜாயா காலமானார்.